பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

25/01/2020

அன்றே சொன்னார் அண்ணல்!

-டி.எஸ்.தியாகராசன்


 
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவர் அடையாளப்படுத்திய ஏழு பாவங்களை விலக்கி வாழ சற்றே வரலாற்றை திருப்புவோம். அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30-இல் புது தில்லியில் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானார்.

அப்போது பத்திரிகைகளுக்கு ஒருவர் விடுத்த செய்தி. “பாபு நமக்கு விட்டுச் சென்றுள்ள பணியை இனிது நிறைவேற்ற நாம் பகீரத முயற்சி செய்ய வேண்டும். பாபு வாழ்ந்ததும், இறந்ததும் நம் அனைவருக்காகவுமே. ஆண், பெண், குழந்தை ஒவ்வொருவருக்குமாக.

பகைமை, பேராசை, வன்முறை, பொய்மை என்னும் தீய வழியிலிருந்து நம்மைத் திருப்பும் பொருட்டும் பாபு தன் வாழ்நாளில் ஓயாது உழைத்தார். அதற்காகவே மரணத்தையும் தழுவினார்.
நாம் பாவங்களுக்காகப் பிராயசித்தம் செய்து, பாபுவின் புனிதக் குறிக்கோளுக்காகத் தொண்டாற்ற வேண்டுமானால், வகுப்புவாதம் எந்த வடிவில் தோன்றியிருந்தாலும் அது ஒழிய வேண்டும்.

அத்துடன் கள்ள வணிகம், லஞ்ச ஊழல், நியாயமற்ற சலுகைகள், பொறாமை, பகைமை உணர்வு, பொய்மை, வன்முறை ஆகியவற்றின் இருள் தோற்றங்கள் அனைத்தும் அகல வேண்டும். உறுதியான மனத்துடனும், தயங்காத கையுடனும் அவற்றை எதிர்க்க வேண்டும்.

பாபு அன்பே உருவானவர். மென்மையே அவர் பண்பு. ஆயினும் தீயவற்றுடன் போராடுவதில் அவர் தயங்கவில்லை. தன்னிடம் இருந்த தீமையை வென்றதால்தான், புறத்தே தலைதூக்கிய தீமையுடன் பாபுவால் போராட முடிந்தது. நம் முன்னுள்ள மகத்தான பணிக்கு நம்மை அருகதையாக்கும் வகையில் இறைவன் நம்மை தூய்மைப்படுத்துவாராக’.

-இப்படிச் சொன்னவர் பண்டித ஜவாஹர்லால் நேருவோ சர்தார் வல்லபபாய் படேலோ இல்லை. பல ஆயிரம் கல் தொலைவில் உள்ள இங்கிலாந்து நாட்டில் பிறந்து, தனது அறிவின் மேன்மையால், தனது ஆன்ம கடைத்தேற்றத்திற்கு சரியான “குரு’ பாரத நாட்டின் அண்ணல் காந்தியடிகள்தாம் என்பதை உணர்ந்த “மிஸ் ஸ்லோடு’ என்கிற மிஸ் மீரா விடுத்த செய்திதான் மேற்சொன்னவை.

பிரிட்டிஷ் கடற்படையின் கிழக்கிந்திய தலைமைத் தளபதியின் மகளான இவர் எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து எழுதிய காந்திஜி பற்றிய நூலால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளை தனது மானசீக குருவாக வரித்துக் கொண்டவர்.

சபர்மதி ஆசிரமத்தில் சேர விரும்பிய அவருக்கு அண்ணல் ஓராண்டு ஆசிரம வாழ்க்கைக்கு தயார் செய்து கொண்ட பின்னர் அவர் வர விரும்பினால் வரலாம் என்று அனுமதி வழங்கினார்.

ஓராண்டு காலம் தன்னை ஒரு பாரத ஆசிரமவாசியாக மாற்றிக் கொள்ள இங்கிலாந்தில் தானாகவே பயிற்சி மேற்கொண்டார். நடை, உடை, உணவு மற்றும் பாரதத்தின் ஆன்மிக பனுவல்கள் இவற்றில் தேர்ச்சியுற்றார். பின்னர் கப்பலேறி இந்தியா வந்தார்.

சபர்மதி ஆசிரமத்தில் தன் வாழ்வை அர்ப்பணித்தார். 23 ஆண்டுகள் அண்ணலின் அன்பைப் பெற்று அவரது மகளாக “மீரா’வாக வாழ்ந்தார். அவர்தான் அண்ணல் சொல்லிய ஏழு பாவங்களை விலக்கும் விதமாக ஒரு இரங்கற் செய்தியை பத்திரிகைகளுக்கு அளித்தார்.

அந்த ஏழு பாவங்கள் 1. ஒழுக்கம் இல்லாத கல்வி 2. கொள்கையில்லாத அரசியல் 3. உழைப்பு இல்லாத ஊதியம் 4. நேர்மை இல்லாத வணிகம் 5. மனசாட்சி இல்லாத இன்பம் 6. மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் 7. தியாகம் இல்லாத வழிபாடு.

1. ஒழுக்கம் இல்லாத கல்வி: 

இன்றைய நாளில் மாணவர்களின் ஒழுகலாறுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஊடகங்கள் வாயிலாக கவனித்தால் மனம் அழுகிறது. கல்விக் கருவிகளான எழுதுகோல், ஏடுகள், நூல்கள் தூக்க வேண்டிய கரங்கள் கம்புகளையும், கத்திகளையும் ஏந்துகின்ற காட்சிகள் கண்களில் உவர்நீரை பெருக்குகின்றன.

ஒழுக்கம், நல்ல பழக்கம் பேண ஆசிரியர் அறிவுறுத்தினால் மாணவரின் அரிவாள் வெட்டுக்கு பலியாகிறார். மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவர்தம் வகுப்பறைகளிலேயே மது அருந்தி மகிழ்வதும் வழக்கமாகி வருகிறது. இந்த கொடிய சீர்கேட்டினைத்தான் காந்தி அன்றே ஒரு பாவமாக கருதினார்.

2. கொள்கை இல்லாத அரசியல்: 

ஆளுக்கொரு கட்சி, அவரவர்க்கு ஒரு கொள்கை, ஒரு கொடி. ஆனால் தேர்தல் களத்தில் நிறம் மாறும் பச்சோந்தி போலவும், மானத்தை விற்கும் மனிதர் போலவும், தனது லட்சியங்களுக்கு முரண்பட்ட கட்சிகளோடு உடன்பாடு கொண்டு அரசு கட்டிலில் அமரத் துடிக்கும் சில கட்சிகளைத்தான், கொள்கையில்லா அரசியல் என்று சொன்னார் தேசப் பிதா.

3. உழைப்பு இல்லாத ஊதியம்: 

போராட்டக் களமாகட்டும், கொள்கை விளக்கக் கூட்டமாகட்டும், கொடி பிடிக்கும் நேரமாகட்டும், எப்போதாவது நமது தொழிற்சங்கத் தலைவர்கள் யாரேனும் தொழிலாளர்களைப் பார்த்து உழைப்பின் உன்னதத்தை உணருங்கள். உற்பத்தியை பெருக்குங்கள், உழைக்காமல் ஊதியம் பெற எண்ணாதீர்கள். உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்யாதீர்கள்.

வேலைநிறுத்தம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. உழைப்போம், ஊதியம் பெறுவோம். பிரச்னை எதுவாயினும் சரி உற்பத்தி கெடாமல் உயர்வு பெற சிந்திப்போம் என்று சொன்னதுண்டா? நாம் கேட்டதுண்டா? உழைப்பு நல்கா ஊழியம் பெறுதலை அண்ணல் ஒரு பாவமாகவே எண்ணினார்.

4. நேர்மை இல்லாத வணிகம்: 

வணிகச் சந்தையில் மக்கள் பெருமளவில் விரும்பி வாங்கும் ஒரு பொருளை அதன் வடிவமைப்பிலே போலியாக மற்றொரு பொருளை புழக்கத்தில் விடும் நேர்மையற்ற வணிக முறை இந் நாளில் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.

இயற்கை பேரிடர் காலங்களில், இன்னபிற நெருக்கடியான நேரங்களில் இன்றியமையாத பொருள்களை அதிக விலைக்கு விற்கும் வணிகர்களைக் காண்கிறோம். இப்படி நேர்மையற்ற வணிக முறையைத்தான் பாவம் என எச்சரிக்கிறார்.

5. மனசாட்சி இல்லாத இன்பம்: 

இன்றைய நாளில் பாலுணர்வு வக்கிரங்கள் நாடெங்கிலும் நடக்கிறது. பச்சிளம் குழந்தைகள் கூட முதிய ஆடவர்களின் காமப் பசிக்கு இரையாவதை கேட்கும்போது மனிதக் கட்டத்தில்தான் நாம் வசிக்கிறோமா என்ற ஐயமே மேலிடுகிறது.

பழங்காலம் தொட்டு கடைப்பிடிக்கின்ற மரபுகள் மீறப்படுகின்றன. வேலியே பயிரை மேய்வதைப் போல கொடும் பாவிகள் வாழும் இந்த சமூக அவலத்தைத்தான் பாபுஜி மனசாட்சி இல்லாத இன்பம் எனக்கூறி தன் வேதனையை கொட்டுகிறார்.

6. மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம்: 

தாவரங்கட்கும் உயிர் உண்டு என்றார் இந்திய விஞ்ஞானி. எவ்வுயிரும் பேதமுறா என்கிறார் வள்ளல் பெருமான்.

ல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கிறார் ஈசன். ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் பல்லாயிரக்கணக்கில் எலி, முயல், தவளை, குரங்கு என பல வகை உயிரியினங்களை, விஞ்ஞான அறிவின் மேன்மைக்காக சித்திரவதை செய்து, கொல்லவும் தயங்குவதில்லை.

பல்கோடி மக்களை கொல்லவும் விஞ்ஞான வளர்ச்சியாக ரசாயன கொலைக் கருவிகளை கண்டுபிடிக்கத் தவறுவதில்லை. மானுடம் பால் இவர்கட்கு சற்றேனவேயாயினும் அபிமானம் இருக்குமானால் பல்லூயிர் அழிக்க படைக்கலன் எதற்கு? எனவேதான் அடிகள் இதனை வெறுக்கிறார்.

7. தியாகம் இல்லாத பிரார்த்தனை: 

ஆண்டுதோறும், திங்கள்தோறும், வாரந்தோறும், நாள்தோறும் இறைவனை தரிசிக்க, பிரார்த்தனை செய்து முடிக்க யாத்திரைச் செல்லும் மக்கள் கூட்டம். இல்லந்தோறும் வழிபாடு, வீதிதோறும் இறைவன் திருவுலா, ஊர்தோறும் உற்ஸவ பெருவிழா. எனினும் பிறர்வாழ தன்னையே அர்ப்பணிக்கும் அற்புத மனிதர் தொகை பெருகிறதா? இல்லையே!

பொது நன்மை கருதி எதையும் இழக்கத் துணியும் தியாக மனப்பான்மை வளருகிறதா? இவை பெருகாத நிலையில் நமது பிரார்த்தனைக்கு பொருள் உண்டா? தியாகமற்ற வெற்று சடங்குகளுக்கு இறைவன் காது கொடுப்பாரா? இதனை கருத்தில் கொண்டுதான் காந்தியடிகள் தியாகம் இல்லாத பிரார்த்தனை ஒரு பாவம் என்றார்.

பாரதத்தை ஆண்ட ஆங்கிலேயர்கூட அண்ணலை நன்றாக புரிந்து கொண்டு அவரின் சொற்களை கவனமாக செவிமடுத்தனர் என்பதற்கு ‘மிஸ் ஸ்லோடு’ விடுத்த பத்திரிகை செய்தி ஓர் உதாரணம்.

இணையற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் “இப்படி எலும்பும், சதையும், குருதியும் கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை பின்வரும் சந்ததியினர் நம்ப மறுப்பர்’ என்று கூறியது மிகவும் சரி. பாரதத்தில் வாழும் நாம் அவரது போதனைகளை இதுநாள் வரை கற்றோம் இல்லை.

தன் இளமையைத் துறந்து, தன் அன்பிற்குரிய பெற்றோரை பிரிந்து, தன் நாட்டை மறந்து பாரதத்தை புண்ணிய பூமியாக கருதி, அண்ணலின் நிழலாக வாழ்ந்த அந்த இங்கிலாந்து காரிகையின் மொழிகளை காந்தி பிறந்த இந்த நன்னாளில் ஏற்று வாழ்வோமாக!

வாழ்க நீ எம்மான்!

No comments:

Post a Comment