பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

14/02/2020

உலகமயச் சூழலில் விவேகானந்தரின் தேவை

-பி.பரமேஸ்வரன்




அடிமை
த் தளையிலிருந்து விடுபட்டு அறுபது ஆண்டுகள் கடந்தும், அரசியல் தடுமாற்றம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமுதாயக் கொந்தளிப்பு, மற்றும் கொள்கைக் குழப்பம் போன்ற பல இக்கட்டுகளில் இந்திய நாடு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மக்கட்தொகை அதிகமுள்ள ஜனநாயக நாடு என்று நம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாலும், நமது குடியரசு உண்மையில் ஆரவாரம் மிகுந்த முடியரசு போலவே இயங்கிக் கொண்டிருக்கிறது.

பலரும் பொறாமைப்படும் அளவிற்கு நாம் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிவிட்டதாக புள்ளிவிவரங்களை அடுக்குகிறோம். ஆனால் உண்மை நிலவரப்படி பொருள் உள்ளோருக்கும், இல்லாருக்கும் இடையே முன்னிருந்த இடைவெளி மேலும் விரிவாகி இருப்பது தான் நமது சாதனை. தேசியப் பார்வை என்பதே மிகவும் நீர்த்துப் போகின்ற அளவிற்கு நமது சமுதாயத்தில் சாதி, மற்றும் சமூகக் குழுக்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன.

சிறப்புக் கல்வியும், பயிற்சியும் அளிப்பதற்காக அமைக்கப்பட்ட பல கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து நமது பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அறிவுத் திறன் கொண்டோரை உலகிலேயே அதிகமான அளவிற்கு உருவாக்கி அளித்தாலும், அவ்வாறு பயின்றவர்கள் நமது தேசம், கலாசாரம், மற்றும் உலகில் நமது நாட்டின் பங்களிப்பு பற்றிய பெருமிதமும், அவற்றின் தாக்கங்களும் குறித்து சரிவரப் புரிந்து கொள்ளாமலும், எதை எப்போது எப்படிச் செய் யவேண்டும் என்று தெரிந்துகொள்வதற்கு வேண்டிய சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் இருக்கிறார்கள்.

அதனால் புராதனக் கலாச்சாரம் என்ற பொக்கிஷம் நம்மிடையே இருந்தும், மக்கட்தொகையில் நாம் அதிக அளவில் இருந்தும், பலதரப்பட்ட இயற்கை வளங்கள் மிகுந்திருந்தும் கூட, தேசிய அளவிலும், உலக அரங்கிலும் நமக்கு உரிய பங்கை ஒரு நாடாக அளிப்பதற்கு இயலாமல் இருக்கிறோம்.

அதனினும் கொடுமை என்னவென்றால், தனிப்பட்ட அளவில் மட்டுமல்லாது ஒரு சமூகமாகவும், நமது நீதி, நேர்மைக் கண்ணோட்டங்கள் மிகவும் தாழ்ந்து பாழ்பட்டு, செல்லரித்துப் போய்க்கொண்டிருகின்றன. உலகிலேயே ஆன்மிகத்தின் அடிப்படையில் சிறந்து வாழ்ந்து வந்த உன்னத நாடு என்ற பெயர் கொண்ட நமக்கு இது ஒரு பெரிய சறுக்கலே. இந்தப் பின்னடைவு நம் வாழ்வின் அடிப்படையையே உலுக்கி ஆட்டிக்கொண்டிருக்கிறது.

சமூக அமைப்பிலும், அரசு நிர்வாகத்திலும் நிலையான, நல்லதொரு முன்னுதாரணமாக நம் நாடு விளங்குவதற்கு முன்னதாகவே வெகு வேகத்துடன் அமலுக்கு வந்த பொருளாதார உலகமயக் கொள்கை, தனது தேவைகளாலும், அழுத்தங்களாலும் நம்மைச் சூழ்ந்து, திக்குமுக்காட வைத்துவிட்டது. அந்தச் சூழ்நிலையில் நாட்டிற்கு வேண்டிய வழிகாட்டுதலைப் புரிவதற்கும், நம் நாட்டை உலக அரங்கில் ஓர் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் வேண்டிய தகுதிகள் இல்லாதவர்களே நமக்கு அரசியல் தலைவர்களாக வாய்த்துவிட்டனர்.

அசைக்க முடியாத தன்னம்பிக்கை, அளவிட முடியாத மனத்திண்மை, மற்றும் செயலாற்ற வேண்டியதைப் பற்றிய ஒரு சீரான தொலைநோக்கு- இத்தனையும் வளமாகக் கொண்ட நமது சுதந்திரப் போராட்டக் காலத்தைய தலைவர்கள் நமக்கு அளித்த வழிகாட்டுதலுடன் ஒப்பிடும்போது, இன்றைய நமது நிலை நேர்மாறாக உள்ளது. இவ்வாறு நிலவும் வேறுபட்ட நிலைமை மாறி, நமது தேசத்தின் தன்னம்பிக்கை மீண்டும் துளிர்த்து வலுவடைந்து, நாம் சாதிக்கப் போவதில் இருக்கும் ஒரு பெருமையையும் நாம் உணராது இருந்தால், இப்போது நமக்கு இருக்கும் குழப்பங்களையும் தீர்க்க முடியாது; நாம் செல்ல வேண்டிய திசையும் நமக்குப் புலப்படாது.

தனது சீரிய சிந்தனைகளாலும், செயற்கரிய செயல்களாலும் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆக்கச் சிந்தனையையும், ஊக்க உணர்வையும் அளித்த சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் பெருவிழாவைக் கொண்டாடும் சமயம், மேலே குறிப்பிட்டது போன்ற துயரமான எண்ணங்களை நாம் எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒவ்வொருவரும், சந்தேகத்திற்கு இடமின்றி சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவையே நாட்டின் சுதந்திரத்திற்குத் தாங்களை அர்ப்பணிக்க வைத்தததாக, தங்களது நன்றி ஒப்புதல்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

மிகவும் சுருக்கமாக, அதே சமயம் மனதில் உருக்கமாகப் பதியும்படி அவ்வாறு சொன்னவர்களில் முதன்மையானவர் மகாத்மா காந்தி. “அவரது எழுத்துக்களை நான் விவரமாகப் படித்து அறிந்தேன். அவற்றைப் படித்து முடித்ததும் எனது தாய்நாட்டின் மேல் எனக்கு இருந்த பாசமும், பக்தியும் ஆயிரம் மடங்கு பெருகியது” என்றார் அவர். காந்தியடிகளைப் போன்ற ஒருவரால் இதற்கு மேல் சுவாமிஜி கூறியதன் தாக்கத்தைப் பற்றி வேறு என்ன சொல்லி விளங்கவைக்க முடியும்?

அறிவுக் கூர்மை மிகுந்த ராஜாஜி என்றழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி மிகவும் பொருத்தமாக இப்படிச் சொன்னார்:

“சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றி, இந்திய நாட்டையும் காப்பாற்றினார். அவர் இல்லாது போயிருந்தால் நமது மதமும் காணாது போயிருந்திருக்கும்; அதனால் நமது நாடும் விடுதலை அடைந்திருக்க முடியாது. அதனால் நாம் அனைவருமே சுவாமி விவேகானந்தருக்குக் கடமைப் பட்டிருக்கிறோம். அவரது நம்பிக்கையும், தைரியமும், அறிவுச் செல்வமும் நீடூழி வாழ்ந்து நம்மை ஊக்குவித்து, அவர் நமக்கு அளித்த பெருஞ்செல்வங்கள் நன்கு காக்கப்படுவதற்கு உதவட்டும்”.

இங்கு நாம் சில கேள்விகளைக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவ்வாறான மகான்களின் கடமை உணர்வு உண்மையாகவே இருந்திருந்து, அவர்கள் தங்களது லட்சியங்களில் உளமார்ந்து ஒன்றியிருந்திருந்தால், நமது தேசம் இன்றிருக்கும் நிலைக்குத் தாழ்ந்திருக்குமா?

அவ்வாறு கூறிய மகான்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும் பொருட்டு, நமது விருப்பு, வெறுப்புகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாம் எதிர்பார்த்ததற்கும் நடைமுறையில் நடந்ததற்கும், செய்வோம் என்று சொன்னதற்கும் இறுதியில் செய்து முடித்ததற்கும் இடையே உள்ள வித்யாசங்களின் உண்மைக் காரணங்களை ஆழ்ந்து அலச வேண்டும். அவ்வாறு செய்தால், நமது சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்கு சுவாமிஜியின் லட்சியங்களில் நமது மனம் தோயவில்லை என்ற முடிவிற்குத் தான் வருவோம்.

நம் நாடு விடுதலை அடைவதற்கும், நாடு இரு கூறாகத் துண்டாடப்படுவதற்கும், துல்லியமாக அறுபது ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் சுவாமிஜி நம் மக்களுக்கு இவ்வாறு ஒரு அறைகூவல் விடுத்திருந்தார்:

“இனி வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே- ஈடிணையற்ற நமது இந்தியத் தாய். அதுவரை மற்ற எல்லா வீண் தெய்வங்களும் நம் மனத்திலிருந்து மறைந்து விடட்டும். நமது சொந்த இனம் – இது மட்டுமே விழிப்புற்ற தெய்வம்; ‘எங்கும் அவரது கைகள், எங்கும் அவரது கால்கள், எங்கும் அவரது செவிகள், அவரே எங்கும் வியாபித்திருக்கிறார். மற்ற எல்லா தெய்வங்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைச் சுற்றிலும் காண்கின்ற விராட் தெவத்தை வழிபடாமல் வேறு வீண் தெய்வங்களை நாம் தேடிச் செல்ல வேண்டுமா? இந்தத் தெய்வத்தை முதலில் வணங்கினால், பிற எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம்…”

(ஞானதீபம் 5- 237) 

அவ்வாறு சுவாமிஜி விரும்பிய அளவிற்கு நமது தாய் மண்ணின் மீது நமக்குப் பாசமும், வேட்கையும் இருந்திருக்குமானால், நம் மக்களில் ஒரு பிரிவினர் செய்த அடாவடித்தனங்களுக்கும், அளித்த அழுத்தங்களுக்கும் நம் நாட்டின் தலைவர்கள் பணிந்து போய் நாட்டைத் துண்டாட சம்மதித்துவிடுவார்கள் என்பதை நம்மால் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியுமா?

துயரமான விளைவுகளை இப்போது கூட நாம் சந்திக்க வேண்டிய வகையில் நம்மை வைத்திருக்கும் அந்த முடிவுகளை நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் அப்போது எடுத்தது, அறிவுக்குப் புறம்பான செயல் அல்லவா? மக்களே மடிந்தாலும் நாட்டைத் துண்டாட விட மாட்டோம் என்று தாங்கள் முன்னர் விடுத்த அறிக்கையில் இருந்தே வெட்கங்கெட்டு வழுவிய நிலை அல்லவா அது? விரைவில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பத்தால், நாடு தழுவிய உன்னதமான ஓர் உறுதிப்பாட்டில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்ட சுயநலம் அல்லாது வேறு என்ன அது?

தற்போது சமூக வாழ்க்கையில் நாம் காணும் வழுக்கல்களுக்கும், சறுக்கல்களுக்கும், தோல்விகளுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் சுவாமிஜியின் அன்றைய அறிவுரையை ஏற்காத அந்த மாபெரும் தவறே காரணம் என்பது தானே உண்மை?

அத்தகைய நமது ஒரே தவறினால், பாரத தேசத்தை பாரத மாதா என்று உருவகப்படுத்த உதவிய அந்தக் கருத்தையும், நமது தேச அபிமானத்தையும் காற்றிலே பறக்க விட்டுவிட்டோம்! நாட்டுப்பற்று வளர்வதற்குத் தேவையான, தாய் மண்ணின் மீதான பாசமே நம் நாட்டு விடுதலை வீரர்களின் மகத்தான பொக்கிஷமாக இருந்தது. அது கைவிடப்பட்டதும் மற்ற லட்சியங்கள் எல்லாமே சந்தைப் பொருட்கள் போல ஆகிவிட்டன. மகிழ்ச்சியுடன் கூடிய ஆக்கப் பூர்வமான எதிர்பார்ப்புகள் இருந்த இடத்தில், சத்தற்ற, சந்தேகப் பார்வைகள் குடி புகுந்தன. சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகள் ஆகியும் அந்த நிலைமை இன்னமும் தொடர்கிறது.

இந்த அறுபதாண்டு காலத்தில் புதிய தலைமுறைகள் உருவாகி இருக்கின்றன. உலகத்திலும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன; அதற்கு இந்தியா மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? அயல்நாடுகளில் உருவாகிய பல சித்தாந்தக் கருத்துகளும், எண்ணப் போக்குகளும் நம் நாட்டையும் தாக்கி இருக்கின்றன. ‘நவீன இந்தியாவின் சிந்தனைச் சிற்பி’ என்ற போற்றுதலுக்கு உரிய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை முறைகளும், வியக்க வைக்கும் அறிவுரைகளும் நம்மை வழி நடத்தப் பயன் தராதவாறு புறந்தள்ளப்பட்டன; ஆனால், அவற்றின் இடத்தைப் பிடிப்பதற்குத் தகுதியாகக் கருதப்படும் வேறெந்தக் கருத்துக்களும் இருப்பதாகவும் தெரியவில்லை.

இவ்வாறு நேர்ந்த ஒரு வெற்றுச் சூழலில், மேன்மைக்குச் சற்றும் ஒவ்வாத பிற எண்ணங்களும், கவைக்கு உதவாத கருத்துக்களும் அந்த இடங்களில் குடி புகுந்துள்ளன. அதன் விளைவாகப் பலரிடம் காணப்படும் சுயநல எண்ணங்கள், செயல்கள், எங்கும் ஊற்றெடுக்கும் ஊழல்கள், ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்யும் அவல முயற்சிகள், மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் கலவரங்கள் போன்றவை பெருகி வளர்ந்திருக்கின்றன.

ஒரு காலகட்டத்தில், அனைவரது கவனத்தையும் கவர்வதற்காக நமது தலைவர்கள் சுவாமிஜியை மறுபடியும் முன்னிறுத்துவதையும், அவரது ஜெயந்தி நாளை ‘தேசிய இளைஞர் தினம்’ என்று அறிவிப்பதையும் தவிர்க்க முடியாது போயிற்று. சுவாமிஜியின் லட்சியங்களை நன்கு உணர்ந்து, அவரது அறிவுரைகளை உள்ளார்ந்து, அதனால் உந்தப்பட்டு தனது வாழும் நெறிகளை அதற்கேற்ப வகுத்து வாழ்ந்து காட்டும் முன்னுதாரண புருஷர்கள் இல்லாவிடில், ஒரு அரசின் அங்கீகாரமும், அறிக்கையும் என்ன தான் சாதித்துவிட முடியும்?

அரசின் மற்ற எல்லா ஆணைகளுக்கும் நடப்பது போலவே, சுவாமிஜியின் ஜெயந்தி விழாவும் வருடாவருடம் ‘தேசிய இளைஞர் தின’மாகக் கொண்டாடப்பட்டாலும், அதன் பின்புலத்தில் இருக்க வேண்டிய ஆன்மிக எழுச்சியும், தேசபக்தியும் அந்தக் கொண்டாட்டத்தில் இல்லாது போவதால், அந்த நாளும், கொண்டாட்டமும் மற்றவை போலவே சடங்காகி, விரைவில் மறக்கப்பட்டு விடுகின்றன. அதனால் முன்னிருந்ததையும் கெடுத்து, மேலும் குழப்பம் வந்தது தான் அந்த அறிக்கையின் பயன் என்பதே, நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் நமக்குத் தோன்றுகிறது. இவை எல்லாமே அரை வேக்காட்டுத்தனமாகத் தான் புலப்படுகின்றன.

சுவாமிஜி ஒரு தேர்ந்த, தீவிர தேசியவாதி. நமது நாடு, மற்றும் அதன் அருமை, பெருமைகளைப் பற்றி அவர் உள்ளார்ந்து, சிலாகித்துப் பேசுவார். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் நமது பங்கைப் பற்றிய அவருடைய தொலைநோக்கையும், கனவையும் அவர் நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார். ஆனால் உலகமயமாக்குதல் எனும் வெறியில் தோய்ந்துள்ள நமது இப்போதைய கண்ணோட்டத்தில், நம் இளைஞர்களுக்கு நாடு, தேசம் எனும் கருத்துக்களை ஒப்புக்கொள்வதே சிரமமாக இருக்கிறது. விரைவாக மாறிவரும் உலகச் சூழலில், ஒரு நாட்டைப் பற்றிய பெருமை கொள்வது என்பதே காலத்திற்கு ஒவ்வாத செயலாக அவர்கள் மனதில் உறுத்துகிறது.

உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பு என்பதே தொழில்நுட்பத்தில் காண வேண்டிய புதுமைகள், மற்றும் தொழில் இயக்கத்தில் அடைய வேண்டிய மேன்மைகள் என்று கருதப்பட்டு, நமது நோக்கங்கள் குறுகிவிட்டன. அந்த இலக்குகளை அடைய வேண்டும் என்பதன் பின்புலமாக பெரியதொரு தேசியப் பற்று இல்லாததால், அவற்றை அடையப் பின்பற்றும் வழிகளில் ஒரு தீவிரமும், ஆழ்ந்த பக்தியும் இல்லாது போகிறது. இப்போது நாம், பரந்த ஓர் உலகின் பிரஜைகளாகி, ‘குடும்ப உறவுகள் உள்பட எதுவும் நமக்குச் சரிவர இல்லை என்று தோன்றினால் கடாசிவிட்டுப் போகலாம்’ என்ற புதிய கலாசாரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அளவில் மிகுந்த, அறிவில் ஒளிர்ந்த இளைஞர்கள் பலரும் இருக்கும் நாடு நம் பாரத நாடு. அவர்களை ஓர் இலக்கை நோக்கிச் செல்ல வைத்து, அதற்கான ஊக்கத்தையும், விடாமுயற்சியையும், உன்னத லட்சியத்தை அடைய வேண்டி அயராது பாடுபட வேண்டிய அவசியத்தையும், யார் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது? அவ்வாறு அவர்கள் செல்லும்போது நோக்கத்தில் பழுது தரக்கூடிய குழப்பங்களை விடுவிப்பது எப்படி? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிய முனையும்போது, சுவாமி விவேகானந்தரின் அருளுரைகளின் தேவை நமக்குப் புரிகிறது.

இன்றைய சூழலில் நமக்கு வரக்கூடிய சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விவரமான, நியாயமான, ஆணித்தரமான வாதங்களை சுவாமிஜி அன்றே எடுத்துக் கொடுத்திருக்கிறார். உலகமயமோ, சர்வதேசமயமோ எதுவானாலும் அது தேசியமயத்தை மறுத்து வருவதில்லை என்கிறார் சுவாமிஜி.

உண்மையில் தேசியம் இல்லாது சர்வ தேசியம் இருக்க முடியாது. சிறிதாகவோ, பெரிதாகவோ நாடுகள் எவ்வாறாக இருந்தாலும், ஒன்றைச் சார்ந்து மற்றவை இருந்து, அனைத்தும் ஒன்றுகூடி இருந்து சமாதானமாய் வாழ்வதே சர்வ தேசியத்தின் உன்னதக் குறிக்கோள். மனித குலத்தின் வளர்ச்சிப் பரிமாணத்தில் தேசியம் என்பது ஒரு முக்கியமான கட்டம் என்பதை இன்னும் வரக்கூடிய பல காலத்திற்கு மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த அமைப்பு என்றதொரு இறுதிக்கட்ட லட்சியக் கனவை நோக்கி நாம் அடி எடுத்து வைக்கும் முயற்சியில் தேசியம் என்பது ஓர் இன்றியமையாத அங்கம் வகிக்கிறது. மேலைநாடுகளில் இருப்பது போலல்லாது, பாரதத்தில் தேசியம் ஓர் ஆக்கப் பூர்வமான கருத்தாகும். ஒவ்வொரு நாடும் ஓர் உயிர்ச் சக்தியின் துடிப்புடன் வளர்ந்து வரும் ஒரு தனிப்பெரும் அமைப்பு என்பதையும், அவ்வாறு இயங்கும் ஒவ்வொன்றுக்கும் தனியானதொரு குறிக்கோள் உண்டு என்பதையும் சுவாமிஜி இவ்வாறு சொன்னார்:

“ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விதி உள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் உலகிற்கு உபதேசிக்க ஒரு விஷயம் உள்ளது. ஒவ்வொரு நாடும் நிறைவேற்ற வேண்டிய செயல்திட்டம் உள்ளது. எனவே நாம் உலகிற்குச் செய்ய வேண்டிய கடமையை, நமது பொறுப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். நாடுகளின் வளர்ச்சியில் நமது பங்கு, உலக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தில் நமது பங்களிப்பின் தேவை ஆகியவற்றை நாம் உணர வேண்டும்”.

அந்தக் குறிக்கோளை அடைவதே ஒவ்வொரு நாட்டின் தனித்துவத்திற்கும் உள்ள இயல்பான காரணம். அது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்பதால், அவை அனைத்துமே இயல்பாய் ஒன்று கூடி, ஒன்றுக்கொன்று சரி செய்துகொண்டு முன்னேற வேண்டும். அவ்வாறு இருப்பதால் வளர்வதே மனித இனத்தின் ஒற்றுமை. பழம்பெரும் ஹிந்து தர்ம வாசகமான “வசுதைவ குடும்பகம்” அதையே குறிக்கிறது. நாடுகள் ஒன்றையொன்று ஆள்வதை விடுத்து ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதே லட்சியம்.

மேலெழுந்தவாரியாகப் பார்ப்போர், சர்வதேச மயத்தை மனித நாகரிக வளர்ச்சியின் இறுதி நிலை என்று நினைக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளும், அவற்றின் கலாசாரங்களும் ஒட்டுமொத்தமாய் ஒன்றாகி ஒரேயொரு நாடாக ஆகிவிடும் என்றும், சில சமயம் அவர்கள் நம்புகிறார்கள். உலகின் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் அவ்வாறு நடக்க முடியாது என்பது தெரியவரும்.

பரிமாணங்கள் பலவும் கொண்ட மனித இயல்பிற்கு, அனைவருமோ, அனைத்துமோ ஒரே மாதிரியாக இருப்பது ஒத்துவராது. அதேபோலச் செயற்கையாக உருவாக்குவதற்கு எடுத்த முயற்சிகள் யாவுமே படுதோல்வி கண்டிருக்கின்றன.

மன்னர்களின் முடியாட்சி, போராளிகளின் பொதுவுடமை எனும் கம்யூனிசம், தொழிலாளிகளின் சமத்துவ சமுதாயம் எனும் சோஷலிசம் என்ற பல வழிமுறைகள் அனைத்துமே முதல்கட்ட வெற்றிகளை அளித்துவிட்டு முடிவில் மறைந்தே போயிருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் “ஆங்கில ஏகாதிபத்தியத்தில் சூரிய அஸ்தமனமே கிடையாது” என்று சொல்லப்பட்டதுண்டு. கம்யூனிசம் துளிர்த்து, தழைத்து, வளர்ந்த காலத்தில் அகில உலகமே அவர்களது செங்கொடியின் கீழ் ஆளுமைக்குள் வந்துவிடும் என்றும் கூறப்பட்டதுண்டு. அதுபோலவே சோஷலிசத்தை வழிபட்டவர்களும் தங்களது இயக்கத்தின் முடிவு நிலையைப் பற்றி அறிவித்ததுண்டு. அவை அனைத்துமே உண்மைக்குப் புறம்பானவை என்று நிரூபிக்கப்பட்டு, உலக சரித்திரம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அத்வைதத் தத்துவத்தின் அடித்தளத்தில் எழும்பிய வேதாந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொள்ளாத எந்தவொரு சமுதாயத்தின் சித்தாந்தங்களோ, சமூக வாழ்க்கை முறைகளோ, அவை எவ்வளவு தான் உன்னதமாக இருந்தாலும், காலத்தில் கரைந்துவிடும் என்று சுவாமிஜி தீர்க்கதரிசனத்துடன் அன்றே கூறினார்.

அனைவருக்கும் சம உரிமை, சமநீதி என்ற உத்தமமான கருத்துக்கள் இருந்தும், கம்யூனிசமும், சோஷலிசமும் மறைந்து போயின. அது போலவே உலகமயமாக்கல் என்று இன்றுள்ள இன்னுமொரு மைல்கல்லும் வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள் கடக்கப்படும். அதற்கு முன் மறைந்த பல நாகரிகங்கள் போல, அதுவும் தனது அடிச்சுவடுகளை ஒருநாள் விட்டுச் செல்லும். ஒன்றை உறுதியாகத் தெரிந்து கொள்ளலாம். முடியாட்சியோ, பொதுவுடைமையோ, சமத்துவ சமுதாயமோ, அல்லது உலகமயமோ எதுவானாலும், தேசியம் எனும் தத்துவத்தை மறைத்து வளரவோ, மறுத்து முன்னேறவோ முடியாது. மனித குலத்தின் வருங்கால நாகரிக வளர்ச்சியில் தேசியம் ஓர் அடித்தளமாக அமையும். இறைவன் அல்லது இயற்கையின் அடிப்படையில் வளரும் கலாசாரப் பன்முகங்களின் நடுவில், நேயத்தால் மனிதர்கள் ஒன்றுபடுவதை தேசியம் உறுதி செய்யும்.

அந்தப் பரிமாண வளர்ச்சியில் பாரதத்தின் பங்கு என்னவாக இருக்கும்? இந்தியாவின் ஆன்மா ஆன்மிகத்தில் தான் உறைகிறது என்பதால், அந்த அடிப்படையில் தானும் வளர்ந்து, உலகின் மனித குலமே அந்த ஆன்மிக வேதாந்தக் கருத்துக்களில் ஊறி வளர உதவுவதே இந்தியாவின் பங்கு என்று எந்தவித மாற்றுக் கருத்துகளுக்கும் இடமின்றி சுவாமி விவேகானந்தர் உறுதியாகச் சொன்னார். அப்படிச் சொன்னவர் ஆன்மிகம் என்பது சாத்திரம் கூறும் சில பல கர்மாக்களைச் செய்வதோ, பிற உலகங்களைப் பற்றி அறிவதோ அல்ல என்றும் கூறி, தான் சொல்வதன் பொருளை உறுதிப்படுத்தினார்.

இங்கே, இப்போது நாம் வாழ வேண்டிய முறையைத் தான் ஆன்மிகம் குறிக்கிறது. அது “ஸர்னுத்கர்ஷ” என்று குறிப்பிடப்படும் ஒருவனது இகலோக சுகங்களையும், “நிஷ்ரேயஷ” எனப்படும் ஒருவன் ஆனந்தத்துடன் அனுபவிக்கும் ஆன்ம அனுபவங்களையும் உள்ளடக்கியே இருக்கிறது. ஆன்மிகத்தில் எழுச்சி பெற்ற, பொருளாதாரத்தில் பெருவளர்ச்சி கண்ட, ஒற்றுமையுடன் கூடி வாழும் பலதரப்பட்ட சமூகங்களைக் கொண்ட சமுதாயம் வளர்த்த, தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் பெற்ற நாடாக இந்தியா தன்னளவில் இருந்து, உலகில் உள்ள மற்ற நாடுகளுடனும் ஒன்றி சமாதானமாக வாழும் நாடாகவும் சுவாமிஜி வருங்கால பாரதத்தைக் கண்டார்.

பொருளாதாரத்தில் முன்னேறிய மேலைநாடுகளில் ஆன்மிக உணர்வைத் தழைக்கச் செய்தும், பாரதத்தின் வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் சீராகவும், முழுமையாகவும் இருப்பதற்குத் தேவையான கட்டுக்கோப்பான செயல்முறைகளையும், ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் மேலைநாடுகளிடம் இருந்து கற்றுக்கொண்டும், இவ்வாறான தருவதும், பெறுவதுமான இரு பொறுப்புகளைபாரதம் ஏற்கும் என்பதில் சுவாமிஜி மிக்க நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியா மேலைநாடுகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்துபவனாகச் செல்லாமல், ஒரு குருவாக, நல்லாசிரியனாகச் செல்ல வேண்டும் என்றார் அவர். அதுதான் நமக்குப் பெருமை சேர்க்கும்.

தன்னளவிலும் சுவாமிஜி ஒரு நல்ல உதாரண புருஷராக இருந்தார். எதையும் விட்டுவிடாமல், எதிலும் குறை வைக்காமல் நமது கலாசாரப்படி நாம் வாழ வேண்டும். நாம் பிற நாட்டவரது கருத்துக்களையும், வழிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை நமது வழக்கத்தில் கொண்டு வந்தாலும், நமது முக்கியமான அடிப்படைத் தன்மைகளில் நாம் நாமாக இருக்க வேண்டும். எதனால் இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த கருத்துக்கள் அகில உலகிற்கும் தேவைப்படுகிறது என்று அவர் தனது புகழ் பெற்ற சிகாகோ உரையில் விளக்கினார். உலகிற்குத் தேவைப்படும் சில பாடங்களை இந்தியா மட்டுமே தரக்கூடிய நிலையில் இருக்கிறது.

சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த உரையை அன்று அவர் நிகழ்த்தியபோது இருந்ததை விட, இன்றைய அதன் தேவை மேலும் பொருத்தமாக இருக்கிறது. மதங்களின் பாராளுமன்றம் என்ற அந்த அவையைக் குறித்து அவர் அன்று சொன்னது:

 “இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.’’


(சிகாகோ முதல் நாள் சொற்பொழிவு) 

மதங்கள் குறித்த பிணக்குகளுக்கோ, சகிப்புத்தன்மை இன்மைக்கோ இதில் எந்த முகாந்திரமும் இல்லை; நிச்சயமாக பயங்கரவாதம் எனும் நம்மைத் துரத்தும் பேய்க்கு அங்கு எந்த இடமும் இல்லை. சுவாமிஜியின் வார்த்தைகள் காலம் கடந்து நிற்பவை. சமகாலத்திற்கேற்ற அவற்றின் பொருத்தம், இப்போதும் சிறந்து விளங்கி, விரைவில் ஏதேனும் செய்யுமாறு நம்மைத் தூண்டுகிறது.

அவர் அனைத்து மதங்களையும் மதிப்பிற்குரியவை என்று ஏற்றுக்கொண்டார். அதேபோல, அவற்றின் பிரதான நூல்கள் சொல்வதையும் ஓரளவிற்கு ஒப்புக்கொண்டார். ஆனாலும் ஒருவனின் ஆன்மிக வேட்கையில், மக்களைப் பிரித்து வைக்கும் மதங்களையும், அவற்றின் நூல்கள் சொல்வதையும் மனிதன் கடந்து செல்வது அவசியமானது என்றார்.

“…வேதங்களோ, பைபிளோ, குரானோ இல்லாத ஓரிடத்திற்கு மனித இனத்தை அழைத்துச் செல்ல நாம் விரும்புகிறோம். ஆனால், வேதங்களையும் குரானையும் சமரசப்படுத்துவதன்மூலம் இது செய்யப்பட வேண்டும். ஒருமைத் தத்துவமான ஒரே மதத்தின் பல்வேறு வெளிப்பாடுகளே உலக மதங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற நெறியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவே இவ்வாறு பல மதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மனித இனத்துக்கு போதிக்க வேண்டும்.”

(ஞானதீபம் 11-152; முகமது சர்ஃபாஸ் ஹுசைனுக்கு எழுதிய கடிதம்) 

இனம், பிரிவுகள் என்ற கட்டுக்குள் ஒருவனை அடக்காது, அறிவு பூர்வமாகவும், அனுபவத்திற்கு உட்படுவதால் சோதித்துப் பார்க்க முடிவதாகவும் இருப்பதால் வேதாந்தக் கருத்துக்கள் ஒன்றே அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய அகில உலக மதம் என்ற தகுதியைப் பெறுகிறது என்றும், சுவாமிஜி தயக்கமின்றி உறுதியாகச் சொன்னார்.

ஒருவன் தன்னை ஓர் இந்து என்று சொல்லிக்கொள்வதே அவமானமாகக் கருதப்படும் என்ற பிரமையைத் தோற்றுவித்த நாட்டின் விடுதலைக்குப் பின்னர் தலைப்பட்ட இந்தியாவின் அறிவுஜீவிகள், சுவாமி விவேகானந்தருக்கு ஒரு பெரிய துரோகம் இழைத்துவிட்டார்கள். இந்து மதத்தைப் பின்பற்றும் நாடு இந்தியா என்ற கூற்றை சுவாமிஜி ஆதரிக்கவில்லை என்றதொரு புரளியை ஆட்சி மற்றும் சமூகத்தின் உயர்மட்டங்களில் அவர்கள் கிளப்பிவிட்டார்கள். அதாவது ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவன் இந்து மதத்தினன் என்ற மாயையை உருவாக்கி, அதனால் அந்தச் சொல்லே பெருமளவு புழங்காதவாறு இருப்பது நல்லது என்று இருந்தனர். உயர்மட்ட அளவில் இருந்தும், மதிப்பிற்கு உரியவர்களிடம் இருந்து இந்தக் கருத்து வந்ததால் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி வளர்ந்தது. அவ்வாறு அவர்கள் ஓர் திட்டமிட்டுச் செய்தது, நேர்மையற்ற முறையில் சுவாமி விவேகானந்தரையும் இந்துத்துவம் என்ற பெயரிலான எதனையும் மோத வைப்பது போல ஆயிற்று.

ஓர் அரசியல் ஆதாயத்திற்காக நடந்த அந்த காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய பிரசாரத்திற்கு ஒரு கொள்கைப் பின்னணி உண்டு. ஓர் உண்மையான பாரம்பரியம் மிக்க நமது நாட்டின் தேசியக் கலாசாரத்தைத் தழைக்கவிடாமல் செய்வதும், வேற்றுமையிலும் ஒற்றுமை கண்ட நமது தேசிய நீரோட்டத்தைக் குலைக்கச் செய்வதும் ‘முற்போக்கு என்று சொல்லிக்கொள்ளும், இடதுசாரி, மதச்சார்பற்ற’ அறிவுஜீவிகளின் நோக்கமாக இருந்தது. அத்தகைய சூழ்ச்சியை, அவர்கள் ஆட்சியில் இருப்போரின் ஆசியுடன் நிறைவேற்றி, இந்து தேசியம் என்ற பாரம்பரியப் பெருமையை வலுவிழக்கச் செய்வதில் பெரும்பாலும் வெற்றி கண்டனர். அது சுவாமிஜியின் நோக்கத்திற்கே முற்றிலும் மாறான ஒன்றாகும்.

இந்து தேசியத்தை ஆதரித்ததிலும், வளர வைத்ததிலும் சுவாமிஜி அனைவருக்கும் முன்நின்று வழிகாட்டிய ஆசான். அவரது காலத்திலும், இந்து மதத்தினரில் சிலர் ‘இந்து’ என்ற வார்த்தையே தகாத அர்த்தம் தருவது என்று நினைத்தவர்களாக இருந்தனர். சுவாமிஜியோ தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமிதம் கொள்பவன் என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொள்வார்.

சுவாமி விவேகானந்தரின் அடியொற்றி வந்த மகரிஷி அரவிந்தர் போன்ற ஆன்மிக குருக்களும், நமது நாடு ஓர் இந்து நாடு என்றும் அதன் ஆன்மா சனாதன தர்மத்தில் தான் நிலைத்து நிற்கிறது என்பதில் உறுதியாக இருந்தனர். அவர்களைப் பொருத்த வரை சனாதன தர்மமும், இந்து தர்மமும் ஒரே பாதையைக் குறித்தன.

அரவிந்தர் தனது உரையாடல்களிலும், கட்டுரைகளிலும் இந்து தேசியம் என்ற பதத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார். தேசியம் என்பதற்கு அவர் அளித்த விளக்கமான “பலதரப்பட்டுப் பிரிந்து நிற்கும் ஆன்மிக உணர்வுகளின் ஒட்டுமொத்த இயக்கமாக இந்தியாவின் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும். இந்திய தேசம் என்பது இசைக்கப்படும் ஒரே ஆன்மிக மெட்டுக்குத் தாளம் போடுவது போல துடிக்கும் ஒன்றுபட்ட இதயங்களாக இருக்க வேண்டும்” என்பதில் இருந்தே, அவர் என்ன சொல்கிறார் என்பது புரிந்திருக்க வேண்டும்.

இந்த விளக்கத்தில் எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களோ, பிற்போக்குச் சிந்தனையோ இல்லை என்பதைச் சொல்லத் தான் வேண்டுமா? ஆனாலும் அந்தச் சொல்லின் மகிமையைக் குறைக்கும் வண்ணம், துரதிர்ஷ்டவசமாக அரசியல் சாயம் பூசப்பட்டு வந்த பிரசாரமோ, நம் நாட்டின் பூர்வீகம், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் உலகத்தின் நம்மைப் பற்றிய பார்வை இவை அனைத்திலும் நமக்கு இருந்த பெருமையைக் குறைத்துவிட்டது.

சுவாமிஜி நம் நாட்டின் உன்னதமான பங்களிப்பு பற்றிக் கொண்டிருந்த கனவை அது சிதைத்து, நமது நாட்டின் தனித்தன்மையையும், ஒற்றுமையையும் வலுவிழக்கச் செய்தது. இதனால் படித்த பல இளைஞர்களையும் தாம் ஒரு தேசிய பாரம்பரியம் இல்லாத வேரற்ற மரங்கள் என்ற மாயையை உண்மை என நம்ப வைத்து, இனிமேல் தான் இந்தியா ஒரு தேசம் என அங்கீகரிக்கப்பட நிலையில் வளர இருக்கிறது என்ற ஒரு தவறான கருத்தையும் அவர்கள் மனதில் பதிய வைத்தது. சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் நீதி, நியாயங்கள் மங்கவும், தொன்றுதொட்டு இருந்து வந்த கலாசாரத்தின் பல அங்கங்கள் மெல்லத் தேய்ந்து போகவும், இந்தத் தவறான பிரசாரமும், அதனால் விளைந்த பார்வையுமே முதன்மையான காரணமானது.

இனியும் அவ்வாறு நடப்பதைத் தவிர்க்க, சுவாமிஜியின் 150வது ஜெயந்தி நாள் கொண்டாட்டத்தைப் பயன்படுத்தி இந்துக்கள் தங்களது பூர்வீக மேன்மையை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலகமயமாக்கலை இந்தியா அல்லாது அனைத்து நாடுகளுக்கும் அது தரக்கூடிய நன்மைக்காகவே, சுவாமிஜி விரும்பி வரவேற்றிருப்பார். ஏனென்றால் அதன்மூலம் எல்லா நாடுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு அது பல வழிகளை ஏற்படுத்தும். அவை எல்லாவற்றையும் செம்மையாகப் பயன்படுத்தி, நுகர்வு கலாச்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் மேலைநாடுகளுக்கு இந்தியா தனது ஆன்மிகச் செல்வங்களை வாரி வழங்கியிருக்க முடியும்.

கடந்த காலத்தில் அது எவ்வாறு அடிக்கடி நடந்தது என்று அவர் தனது பல உரைகளில் பலமுறை நினைவுபடுத்தியிருக்கிறார். மண்ணாளும் ஆசையால் படை திரட்டியோ, மற்றோரை மதம் மாற்ற விரும்பியோ, பொன் திரட்ட திரைகடல் தாண்டி வர்த்தகம் செய்யவோ வந்தவர்கள் அனைவராலும், இரு தேசங்களின் மக்கள் அருகாமையில் வந்துசேர்ந்த போதெல்லாம், தன்னைப் பொருத்த வரை உலகோருக்குத் தனது அரும் பொக்கிஷமான கலாச்சார மற்றும் ஆன்மிகச் செல்வங்களை இந்தியா வாரி வழங்கியிருக்கிறது என்று சுவாமிஜி அடிக்கடி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதுபோன்ற இன்னுமொரு பொன்னான வாய்ப்பு உலகமயமாக்கல் மூலம் இப்போதும் நம் கதவைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறது. அதன் விளைவாக உலகின் பல மூலைகளிலும் இந்தியா தனது உறுதியான, ஆக்கப்பூர்வமான தாக்கங்களைத் தன் ஆன்மிக உணர்வுகள் மூலம் மெதுவாக, அதேசமயம் நிலையாக வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் தன்னம்பிக்கை மிகுந்த இந்தியா இப்போது இருப்பதைவிட இன்னமும் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் தனது பங்களிப்பை நல்கி, உலக அரங்கில் தனது முத்திரையைப் பதித்திருக்க முடியும்.

அதனுடைய ஆக்கம் மிக்க ஆன்மிகத்திற்காகவே உலகம் இந்தியாவைத் தழுவிக்கொண்டு தனக்குரியதை அதனிடம் இருந்து பெற விரும்பினாலும், அதனுடைய ஆன்மிக ஆசான்கள் கடும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு தங்களால் இயன்றதைச் செய்துகொண்டு இருந்தாலும், இந்திய அரசோ நமது ஆன்மிக மற்றும் கலாசாரத் தனித்தன்மையை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து வருகிறது. ‘மதச்சார்பின்மை அரசியல்’ எனும் தவறான வேஷத்தைப் பூண்டிருப்பதால், இந்தியா தனக்கே உரிய, தனது பூர்வீகமான பண்புகள் அனைத்திலும் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக்கொண்டு, அவை எதுவும் தன்னுடையது இல்லாதது போன்றதொரு போலியான நிலையை மேற்கொண்டுள்ளது.

சர்வதேச மயம் எனும் கருத்து கிழக்கு- மேற்கு நாடுகள் இடையே நிலவும் உறவில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. அந்த இரு அமைப்புகளுமே இரு வேறுவிதமான நாகரிகப் பிரிவுகள் வளர்வதற்கு வழி வகுத்திருக்கின்றன. மனிதனால் எவ்வளவு செல்வம் சேர்க்க முடியும் என்பதையும், அதனால் அவனுக்குக் கிட்டும் சுகம் எவ்வளவு என்பதையும் கொண்டு மேற்கத்திய நாகரிகத்தின் மேன்மை அளவிடப்படுகிறது என்று சுவாமிஜி தனது உரை ஒன்றில் கூறியிருக்கிறார். ஆனால் கீழைநாடுகள் கண்ட நாகரிகமோ, மனிதன் மிக்க ஆனந்தமாக வாழ்வதற்கு அவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான செல்வம் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிவதில் இருக்கிறது.

அமெரிக்கா மேலைநாடுகளின் பிரதிநிதியாகவும், இந்தியா கீழைநாடுகளின் பிரதிநிதியாகவும் விளங்குகின்றன. “அபரிக்ரஹா” எனப்படும் வேண்டாமை அல்லது துறவு என்பதன் அடிப்படையில் இந்திய நாகரிகம் மலர்ந்திருக்கிறது. “உபபோகா” எனப்படும் நுகர்தல் என்பதை மையமாகக்கொண்டு மேற்கத்திய நாகரிகம் சுற்றிச் சுழல்கிறது.

இந்த இருவேறு நாகரிகங்களை புராணப் பாத்திரங்களைக் கொண்டு விளக்கும் போது, கீழை நாகரிகத்தை “ததீசி வழி” என்றும் மேலை நாகரிகத்தை “யயாதி வழி” என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. நல்லதொரு குறிக்கோளுக்கு எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்ட ததீசி முனிவர் தேவர்கள் வெற்றியடைவதற்காகத் தனது உயிரைத் துறந்து தனது எலும்பினால் கிடைத்த வஜ்ராயுதம் அவர்களுக்குக் கிடைக்க வழி செய்தார். யயாதி என்ற அரசனோ தான் மேலும் உலக சுகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தனது முதுமையைக் கொடுத்து தனது மகனின் இளமையையே யாசித்துப் பெற்றார்.

முன்னது துறவு, பின்னது போகம் தொடர்புடைய செயல்கள். உலகமயம் ஆனதில் உலகமே ஒரு விரிந்து பரந்த கிராமம் போல ஆகி, நடைபெறும் வர்த்தகத்தால் ஏற்படும் போட்டாபோட்டிகளால் இந்த இரு வேறு நாகரிகங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொன்டாலும், இரண்டு வகை மக்களும் ஒன்றாகக் கூடி வாழவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

இங்கு இந்தியா அதனது துறவு வழியில் வளர்ந்த கலாச்சாரத்தின் மகிமையை, நுகர்வு வழியில் வந்த மேலைநாட்டு மக்களுக்கு உணர வைத்து, உலகை ஒரு பக்கமே சாயாது நடுநிலையில் நிற்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்துக் கலாச்சாரத்தின்படி வந்துள்ள நமக்கு நவீன விஞ்ஞானத்தால் எவ்விதப் பிரச்னையும் கிடையாது என்ற இன்னுமொரு கருத்தை சுவாமிஜி குறிப்பிட்டிருக்கிறார். “காலம் காலமாகத் தங்களது உதிரத்தில் ஊறிவந்த கருத்துக்களை ஆணித்தரமான வாதங்களால் மீண்டும் நிலைநிறுத்தி, தற்காலத்தைய விஞ்ஞானம் காட்டும் வழியில் கண்டறியப்படும் முடிவுகள் என்றதொரு புதிய விளக்கத்துடன், அவை பேசப்படும் என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் மகிழ்வான்” என்று அவர் அன்று கூறினார்.

மற்ற மதத்தினருக்கோ விஞ்ஞானம் கண்ட முடிவுகளையும் ஏற்றுக்கொண்டு, தங்களது மதங்களின் கூற்றுக்களையும் ஒப்புக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருந்ததில்லை. சுவாமி ரங்கநாதானந்தர் சொல்வது போல, “…மேலை நாடுகளிலோ அங்கிருக்கும் கிறிஸ்தவ சமய வழி மேலும் மேலும் ஆழ்ந்து சென்று கண்டுபிடிப்புகளைத் தொடர்வதற்கு விஞ்ஞானத்தை அனுமதிக்கவில்லை.

அச்சமயத்தோர் அதன் முன்னேற்றத்தைத் தடை செய்ததும் அல்லாமல், ஒரு சில விஞ்ஞானிகளையும் கொன்று தீர்த்தனர். நன்கு உறுதியாகக் கண்டறிந்த சில விஞ்ஞான உண்மைகள் மேலைநாட்டில் பரவியிருந்த கிறித்துவ மதக் கோட்பாடுகள் அனைத்தையும் உடைத்தெறிய வல்லதாக இருந்தன”. ஆனால், இந்திய ஆன்மிகமும், நவீனயுக விஞ்ஞானமும் எப்போதும் ஒன்றின் கருத்தை மற்றொன்று உறுதிப்படுத்திக்கொண்டு, எதிர்கால மனித வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

உலகப் புகழ் பெற்ற சரித்திர ஆராய்ச்சியாளர் ஏ.எல்.பாஷம் சுவாமிஜியைப் பற்றிய நம் அறிவைத் தூண்டும் ஒரு விளக்கத்தை இங்கு சொல்லி இந்தக் கட்டுரையை நிறைவு செய்வோம்:

“நரேந்திரநாத் தத்தா என்று முன்பு அறியப்பட்ட சுவாமி விவேகானந்தர் பிறந்து நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் உலகச் சரித்திரத்தில் அவரது பெருமையை அளவிட்டுச் சொல்வது என்பது ஒரு கடினமான காரியமே. அவரைப் பற்றி மேலைநாட்டு சரித்திர ஆராய்ச்சியாளர்களோ, அல்லது பெரும்பான்மையான இந்திய ஆராய்ச்சியாளர்களோ அவர் மறைந்த சமயத்தில் சொல்லியிருக்கக் கூடியதைவிட அது இன்னமும் கடினமானதே. அன்றிலிருந்து இன்று வரை ஆண்டுகள் பல கடந்த பின்பும், நாம் எதிர்பார்த்திராத, வியக்கத் தகுந்த நிகழ்வுகள் பல நடந்த பின்பும், இன்னமும் வரக்கூடிய பல நூற்றாண்டுகளுக்கு நமது நவீன பாரதத்தை உருவாக்கிய நூதனச் சிற்பி என்று அவர் போற்றப்படுவார்”. சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழாவை நாம் கொண்டாடும் இந்தச் சமயத்தில், சர்வதேச மயம் ஆகியுள்ள இந்த உலகம் நமக்கு அளிக்கும் சவால்களை, சுவாமிஜி நமக்குச் சொல்லிச் சென்றபடியே, இந்தியர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

கட்டுரையாளர் அறிமுகம்:

அமரர் பத்மவிபூஷண் ஸ்ரீ பி.பரமேஸ்வரன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவர்; சிந்தனையாளர். திருவனந்தபுரத்தில் இயங்கும் பாரதீய விசார் கேதிரத்தின் நிறுவனர். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராக இருந்தவர். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையை ஸ்ரீ சத்தியப்பிரியன் தமிழில் வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment