பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/03/2020

போட்டித் தேர்வுகளின் பொய்முகங்கள்

- ஆதலையூர் த. சூரியகுமார்



டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. தேர்வுகள் மிக நேர்மையாக நடப்பதாக எண்ணிக் கொண்டு ஆங்காங்கே இளைஞர்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். அவர்களை ஏமாற்றுவதாக இந்த முறைகேடுகள் விளங்குகின்றன.

மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சிப் பூங்கா போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் படிப்பதை நீங்கள் பார்க்க முடியும். சிலர் குடும்பத்தோடு வந்து உட்கார்ந்து படிப்பதையும் பார்க்க முடியும். இளம் கணவன் மனைவியர் கூட தங்களது குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்து பூங்காவில் உட்கார்ந்து படிக்கிறார்கள். கணவனும் மனைவியும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்கிறார்கள்.  மதுரையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில் நீங்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடியும்.

தேர்வறைக்கு மனைவியை அனுப்பிவிட்டு தேர்வு மையத்திற்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தில் தூளி கட்டி தன் குழந்தைக்குத் தாலாட்டு பாடுகிற கணவன்மார்களை நீங்கள் கண்டதுண்டா?

நிறைமாத கர்ப்பிணியாக, தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் கனவுகளை சுமந்துகொண்டு போட்டித்தேர்வு எழுத வரும் இளம்பெண்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பால் குடிக்கிற குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு பரிட்சை எழுதச் செல்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

ஒரு சரியான விடைக்கு தேர்வாணையம் மதிப்பெண் வழங்கவில்லை என்பதற்காக நீதிமன்றத்தின் படிகளில் ஏறி இறங்கி, காத்திருந்து கண்ணீர் மல்கி நீதியை நிலைநாட்டி நேர்மையான வெற்றியை அடையத் துடிக்கும் இளைஞர்களின் வேதனையை நீங்கள் உணர்ந்ததுண்டா?

அவர்களுக்கெல்லாம் கண்களில் தெரிவது ஒரே ஒரு லட்சியம்தான் அது: டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். 

இதற்காக பலர் தனியார் பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கில் பணம் கட்டிவிட்டு ஆண்டுக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதையே வேலையாகக் கொண்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்கள். எப்போதாவது ஓர் அரசு வேலை கிடைத்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல இளைஞர்கள் சுக துக்கங்களைத் தொலைத்துவிட்டு தூக்கத்தையும் தொலைத்துவிட்டு, புத்தகமும் கையுமாக அலைந்து கொண்டே இருக்கிறார்கள். 

எப்போதாவது செய்தித்தாள்களில் வரும் சில செய்திகள் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதையும் நாம் பார்க்கமுடியும். ‘தேநீர்க் கடைக்காரரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி’;   ‘பரோட்டா மாஸ்டரின் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்’; ‘ஆட்டோ ஓட்டுனரின் மகள் சிஏ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்று இருக்கிறார்’ என்பது போன்ற செய்திகள்தான் இந்த இளைஞர்களுக்கு நம்பிக்கை டானிக்.

இப்படிப்பட்ட செய்திகளைப் படித்து உத்வேகம் கொண்டு இளைஞர் சமுதாயம் போட்டித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும்போதுதான், டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல் என்ற செய்தி வந்து அவர்களது நம்பிக்கையை ஊனமாக்குகிறது.

அவர்களுடைய கனவுகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெறுகிற முறைகேடுகள் இளைஞர் சமுதாயத்தில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி அவர்களை திசை மாற்றி விடும் ஆபத்து இருக்கிறது.

இது எங்கோ நடப்பதாக நினைத்துக்கொண்டு, அரசும் சமூக ஆர்வலர்களும் வாய்மூடி இருப்பது ஆபத்தான விஷயம்; ஆபத்தான அறிகுறி. திறமை இருந்தும், தான் திறமை இல்லாதவனாக சமூகத்தில் அடையாளம் காட்டப்படும் போது அது இளைஞர்களை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. உண்மையில் வெற்றி பெற வேண்டிய மாணவர்கள் தோற்பது என்பது ஒரு மிகப் பெரிய சமூக அவலம்.

பணம் படைத்தவர்களும், ஊழல் செய்பவர்களும், முறைகேடுகளில் ஈடுபடுவோர்களும்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்; அரசு வேலை வாங்க முடியும் என்றெல்லாம் நிலைமை இருந்தால், பிறகு யார்தான் நேர்மையான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்? அப்படி நேர்மையாக வாழ முயற்சி செய்பவர்களைப் பார்த்து இந்த உலகம் கைகொட்டிச் சிரிக்கிறது என்றால், அந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை என்பது இந்த சமூகத்திற்கு எதிரான பாதையாகத் தானே இருக்கும்?

ஆனாலும் இளைஞர்கள் இதில் ஆறுதல் கொள்ள ஒரே ஒரு விஷயம் உண்டு கிட்டத்தட்ட 8000 இடங்களுக்கு நடந்த போட்டித் தேர்வில் 100 பேர் மட்டுமே மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மீதி 7900 இடங்கள் நேர்மையாகவே நிரப்பப்பட்டிருக்கும். அந்த அளவில் இளைஞர்கள் ஆறுதல் கொள்ளலாம். இந்த மோசடிகளை இளைஞர்கள் இப்படித்தான் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அரசியலை சாக்கடை என்று ஒதுக்கிவிட்டு படித்தவர்கள் சமுதாயம் தள்ளி நிற்பதைப் போல எதிர்காலத்தில் அரசு வேலையையும் சாக்கடை என்று கருதி படித்த இளைஞர்கள் தள்ளி நின்று விட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 

இப்போக்கு இப்படியே தொடர்ந்தால் அரசுப் பணிகளிலிருந்து அறம் விரும்புபவர்கள் அகன்றுவிடவே வாய்ப்புகள் உண்டு. அப்போது அதில் ஆச்சரியப்பட ஒன்றுமிருக்காது. தற்போதைய அரசியலின் போக்கைக் கண்டு பண்பு மிக்க பலர் அரசியலிலிருந்து விலகி நிற்பதைப் போல எதிர்காலத்தில் அரசு வேலையில் இருந்தும் பண்பு மிக்கவர்கள் விலகி நின்றால் அரசு நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது!

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நான் தேர்வு எழுதத் தொடங்குகையில் மிகத் தீவிரமாக தயார் செய்வேன். ஒவ்வொரு முறையும் தோல்விதான் எனக்கு தேர்வு முடிவாக இருந்தது. 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் திரு. நட்ராஜ் ஐபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்புக்கு வந்தபோது ஆங்காங்கே பரவலாக இளைஞர்கள் தேர்ச்சி பெற்றார்கள்.

புதிய புதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளே வந்தார்கள். அப்போது தேர்ச்சி பெற்றவர்களில் நானும் ஒருவன். ஆம் 2011ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களில் நானும் ஒருவன், இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான் தேர்ச்சி பெற்ற அந்தத் தேர்வை மிகச் சாதாரணமாகவே எழுதியிருந்தேன். அந்தத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகளைப் போல மிகச் சிறப்பாக தயார்செய்து செல்லவில்லை. அதற்கு முன்னதாக இன்னும் சிறப்பாக எழுதிய தேர்வுகள் பல இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலெல்லாம் தோல்வியடைந்த நான், ஓரளவு மட்டுமே படித்துச் சென்று சாதாரணமாக எழுதிய ஒரு தேர்வில் வெற்றிபெற்று இருக்கிறேன் என்றால் உண்மையில் நான் அதற்கு முன்பே பலமுறை வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வெற்றிகள் திருடப் பட்டிருந்தன என்பதை 2011 ஆம் ஆண்டில்தான் உணர்ந்தேன்.

திரு நட்ராஜ் போன்ற நேர்மையான அதிகாரிகள் பொறுப்புக்கு வந்தபோது என்னைப் போன்ற பல இளைஞர்களை வெற்றி பெற்று அரசுப் பணிக்கு வந்தார்கள்.

இப்போது மீண்டும் அவ்வப்போது முறைகேடுகள் பற்றிய செய்திகள். முறைகேடுகள் என்றால் கற்பனைக்கே எட்டாத வகையில் திட்டமிடுகிறார்கள். திறமையுள்ள மாணவனை அழைத்து, திறமை இல்லாத தன் மகனுக்காக தேர்வு எழுத வைக்கிறார்கள். இப்போது நடந்திருக்கும் மோசடியின் வடிவம் புதுமையாக இருக்கிறது.

விடைத்தாளையே புதிதாக அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கள்ளத் தனமாக பணம் அச்சடிக்கிறவர்களுக்கு, கள்ளத்தனமாக முத்திரைத் தாள்கள் அச்சடிக்கிறவர்களுக்கு, கள்ளத்தனமாக விடைத்தாள் அச்சடிப்பது எப்படி கஷ்டமாக இருக்கப்போகிறது?

ஆங்காங்கே வரைமுறை இல்லாமல் அதிகரித்துவரும் போட்டித் தேர்வு மையங்களும் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு ஒரு காரணமாக அமைகின்றன. போட்டித் தேர்வுகளை எப்படி எழுதுவது என்று வழிமுறை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வழிகாட்டுவதற்காக சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் போட்டித் தேர்வு மையங்கள் இப்போது பணம் சம்பாதிக்கும் மையங்களாக மாறிவிட்டன.

தங்கள் பயிற்சி மையம்தான் அதிக அளவிலான அரசுப் பணியாளர்களை 'உற்பத்தி செய்து தந்தது' என்று விளம்பரம் செய்து செய்துகொள்வதற்காக குறுக்கு வழியில் சென்று இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கே நிற்கின்றன. சில வருடங்களுக்கு முன்னரே சில போட்டித் தேர்வு மையங்களில் சோதனை நடைபெற்றது. அங்கு பல மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கைப்பற்றப்பட்டதும் நினைவிருக்கலாம். நேர்மையாக, திறமையாக, போட்டித் தேர்வுக்கான பாடங்களைக் கற்பித்து அங்கு பயிலும் மாணவர்களை வெற்றிபெற வைக்காமல் எங்காவது யாரையாவது பிடித்து வெற்றிபெற செய்துவிட்டு அதை விளம்பரமும் செய்துகொள்ள தனியார் பயிற்சி மையங்கள் விரும்புமேயானால் அதுபோன்ற பயிற்சி மையங்களை தடை செய்ய அரசு தயங்கக் கூடாது.

தனியார் பள்ளிக்கூடங்களில் நடக்கிற கூத்துதான் இப்போது தனியார் பயிற்சி மையங்களிலும் நடக்கிறது. ஆம்! தனியார் பள்ளிகளில்தான் தங்கள் மாணவர்களை மாநில அளவில், மாவட்ட அளவில், வட்ட அளவில், என்று ஏதோ ஒரு அளவில் தரம் பெற வைத்துவிட்டு அதை தம்பட்டம் அடித்துக் கொண்டு அட்மிஷனை அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தார்கள்.

இதற்காக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், மிகச் சிறப்பான வகுப்புகள்,  வெகு சிறப்பான வகுப்புகள் என்றெல்லாம் வைத்து மாணவர்களைப் பாடாய்ப் படுத்தினார்கள். இந்த வகுப்புகளுக்குப் பயந்து மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது. 

சமீபத்தில்தான் தமிழகத்தில் தரம் வழங்கும் முறை பொதுத்தேர்வில் ஒழிக்கப்பட்டது. மேலும் மாணவர்களை மதிப்பெண்களை வைத்து எந்த ஒரு பள்ளியும் விளம்பரங்கள் செய்யக் கூடாது என்று ஒரு விதிமுறையும் கொண்டுவரப்பட்டது. பள்ளி நிர்வாகம்தானே விளம்பரம் தரக் கூடாது? மற்றவர்கள் தரலாம் அல்லவா? அதனால் இப்போது மாணவன் தனக்குத்தானே விளம்பரம் தந்து கொள்கிறான். மாணவன் பெயரில் அந்த பள்ளிக்கூடமே விளம்பரம் தருகிறது.

ஆக சட்டங்கள் வருகிறதே தவிர குற்றங்கள் தொடரத்தான் செய்கின்றன. இந்த தனியார் பள்ளிகளின் செயல்களைப் போல போட்டித் தேர்வுக்காக பயிற்சி நடத்தும் தனியார் பயிற்சி மையங்கள் தங்களிடம் பயிலும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக முறைகேடான வழிகளில் ஈடுபடத் தொடங்குகின்றன. எனவே தனியார் பயிற்சி மையங்கள் சரியாக முறைப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மையங்களாகச் செயல்பட வேண்டும். அவற்றை அரசுத் துறைகளின் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். அந்தப் பயிற்சி மையங்களில் சோதனைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் பயிற்சி மையங்கள் வழியாக நடைபெறும் குற்றங்களை, மோசடிகளைத் தடுக்க முடியும்.

முறைகேடாகத் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு வருபவர்கள் முறைகேடான ஒரு தேசத்தைத் தானே கட்டமைப்பார்கள்?

இருக்கிற கொஞ்சநஞ்ச நல்ல இளைஞர்களையும் போதைக்கு அடிமையாக்கி, குடிகாரர்களாக மாற்றி, ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரைகளாக மாற்றி,  ஓட்டுக்கு மட்டும் அவர்களை தீமூட்டிக் குளிர்காயும் மோசமான போக்கு அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பரிமாணம்தான் இதுபோன்ற மோசடிகள். ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனையே தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் நீதி எங்கே? அதே தமிழ் மரபில் வந்ததாக மார்தட்டிக் கொண்டு, தவறு செய்தது தன் கட்சிக்காரன் என்றால் புகார் கொடுக்க வருபவரின் மீதே குற்றம் சுமத்திக் கூண்டில் நிறுத்தும் தற்கால நீதி எங்கே?

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது இறையாண்மை மீதும் நமது பண்பாட்டின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே பொறுப்பின்மையையும், நம்பிக்கையின்மையையும், வெறுப்புணர்வையும் விதைக்கும் இதுபோன்ற முயற்சிகள் நடவாமல் தடுக்க தமிழக அரசு இனிமேலாவது தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

தனக்கு இருக்கும் தகுதிகளையும் திறமைகளையும் விட அதிகமான ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அறப்பண்புகளை புறம்தள்ளி வாழும் தன்மைகளே இதுமாதிரியான குறுக்கு வழிகளைத் தேடிச் செல்வதற்கு அடிப்படையான காரணிகள். சேவை மனப்பான்மை, தியாக மயமான செயல்முறைகள், தன் உழைப்பில் சம்பாதித்த பொருள்களினால் மனநிறைவு-  இவை போன்ற சிந்தனைகளை மையமாகக்கொண்ட வழிமுறைகளும் செயல்பாடுகளுமே நம்மை மேலான வாழ்க்கைக்கு ஊக்குவிக்கும். அதுவே நல்ல மனநிறைவைத் தரும் என்பதை, மோசடி மூலம் வெற்றி பெற நினைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

போதைக்கும் சினிமாவுக்கும் அடிமையாகி சாலையோரங்களில் ‘பான்பராக்’ எச்சிலைத் துப்பிவிட்டு, தியேட்டர்களின் வாசல்களில் பேனர்களைக் கட்டிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் மத்தியில் கொஞ்சநஞ்ச இளைஞர்கள்தான் போட்டித் தேர்வுகளோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள்தான் இந்தத் தேசத்திற்கு நம்பிக்கை அளிக்கும் இளைஞர்கள். அவர்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளில் மண்ணை அள்ளிப்போட்டு இளைஞர்களின் பாவங்களைக் கொட்டிக் கொள்ளாதீர்கள். 

இளைஞர்களை எதிர்காலத் தூண்கள் என்று வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு அந்தத் தூண்களை எட்டி உதைக்கும் இரணியனின் வேலையை செய்யாதீர்கள்! அந்தத் தூண்களிலிருந்து நரசிம்ம மூர்த்திகள் எழுந்து வந்தால் உங்களால் தாங்க முடியாது எச்சரிக்கை!


குறிப்பு:
கட்டுரையாளர்,  ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினர்,  பெரியார் பல்கலைக்கழகம், சேலம். 

No comments:

Post a Comment