பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/04/2020

தமிழ் வளர்த்த பௌத்தர்கள்

-சேக்கிழான்

அமுதசுரபியால் அன்னமிடும் மணிமேகலை.


தமிழின் தொன்மையிலும் செழுமையிலும் வைதீக சமயத்தினரும் சமணரும் பெரும் பங்களித்தது போலவே பௌத்தர்களும் பாடுபட்டுள்ளனர். இன்றைய நமது பாரதப் பண்பாடு இந்த மூன்று சிந்தனை பள்ளிகளிடையிலான உரையாடலின் விளைவே.

கௌதம சித்தார்த்தரால் (பொ.யு.மு. 500) உருவாக்கப்பட்ட பௌத்த சமயம், அசோகப் பேரரசின் காலத்தில் (பொ.யு.மு. 300) தமிழகத்துக்கு அறிமுகமானது. காஞ்சிபுரமும், நாகப்பட்டினமும் பௌத்தர்களின் முக்கிய மையங்களாக விளங்கின.

ஆயினும் பௌத்தர் சங்கத்தில் வீற்றிருந்த பல முனிவர்கள் பிராகிருதம், பாலி மொழிகளிலேயே அதிக நூல்களை எழுதினர். அதனால் தான் சமணர் அளவுக்கு பௌத்தர்களின் நூல்களை தமிழில் காண முடியவில்லை. ஆயினும், தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் பௌத்தர்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல.

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, ஒரு முழுமையான பௌத்தக் காப்பியமாகும் இளங்கோ அடிகளின் சமகாலத்தவரான சீத்தலைச்சாத்தனாரால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான கதையாகவே மணிமேகலை எழுதப்பட்டது. இது மகாயாண பௌத்த சிந்தனையை பிரசாரம் செய்யும் நூலாகும். 


மாதவி- கோவலனின் மகளான மணிமேகலையின் பெயரால், அவள் வளர்த்த பௌத்த தருமம் பற்றி உரைப்பதே இந்தக் காப்பியம் ஆகும். இதன் காலம் பொ.யு.பி. 150 ஆக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் முடிவு.

அதேபோல கிண்டலகேசி என்ர மற்றொரு காப்பியமும் (பொ.யு.பி. 1000) நாகுதத்தனார் என்ற பௌத்தப் புலவரால் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் பெரும்பகுதி நமக்குக் கிடைக்கவில்லை.

பொ.யு.பி. 900களில் எழுதப்பட்ட விம்பிசார கதை என்னும் நூல் பிம்பிசார மன்னனின் வரலாறு கூறும் நூல் என்பர். இந்நூலும் முழுமையாக கிடைக்கவில்லை.

பொ.யு.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தமித்திரர் என்ற பௌத்தப் புலவரால் எழுதப்பட்ட ‘வீர சோழியம்’ நூலும் மொழி வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பரவலாகப் புழங்கிய சமஸ்கிருத மொழியின் கலப்பால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப புதிய இலக்கண விதிகளை அளித்தவர் இவர். கந்தபுராண அரங்கேற்ரத்தில் எடுத்தாலபட்ட நூல இது.

சித்தாந்தத் தொகை என்ற பௌத்த நூல் ஒன்று அச்சமயத்தின் சாத்திரக் கருத்துகளைக் கூறுவதாக அமைந்தது. 'நல்வாய்மை அறிந்தவரே பிறப்பறுப்பார்' என்று இந்த நூல் கூறுகின்றது. ‘திருப்பதிகம் ’ என்ற நூல் புத்தர் மீது இயற்றப்பெற்ற தோத்திர நூலாகும். இந்நூலில் தானம், சீலம் முதலான நல்ல குணங்களை உடைய பெருமானாகப் புத்தர் பேசப்படுகிறார். இவ்விரு நூல்களும் இன்று கிடைக்கவில்லை.

பாலி மொழி இலக்கியங்கள்:

தமிழகத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவிகள் பௌத்தமத மொழியான பாலி மொழியைப் பயின்று, அந்த மொழியிலேயே பல பௌத்த சமய இலக்கியங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே நிலவிய பௌத்த கலாச்சாரத் தொடர்புகளை எடுத்துரைக்கும் ‘உபாசக ஜனலங்கார’ என்ற பாலி நூலில் தமிழகத்தின் பௌத்த துறவிகளைப் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாலி இலக்கியங்களைப் பற்றிய விவரங்களும் தரப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்ற பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்து பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இலங்கையை மகாநாமன் (பொ.யு..பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாலி மொழியில் இயற்றினார்.

உறையூரைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர், தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ’மதுரத்த விலாசினி, வினய வினிச்சயம், உத்தர வினிச்சயம், ரூபாரூப விபாகம்’ ஆகிய பௌத்த நூல்களை எழுதியுள்ளார். பின்னர் இவர் இலங்கைக்கு சென்று தங்கி இருந்த காலத்தில் ‘ஜினாலங்காரம், தந்ததாது, போதிவம்சம்’ ஆகிய நூல்களை இயற்றியபின் திரும்பி காவிரிப்பூம்பட்டினம் சென்றடைந்தார். பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் காளிதாசரின் பௌத்தப் பெரும்பள்ளியில் தங்கி ‘அபிதம்மாவதாரம்’ என்ற காவியத்தை உருவாக்கினார். புத்ததத்தரின் நூல்கள் இன்று இலங்கையின் பௌத்த சங்கத்தினரால் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பொ.யு.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் பௌத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்தவர் ஆச்சாரிய தருமபாலர். இவர் இலங்கைக்கு சென்று அநுராதபுரம் மகாவிகாரையில் தங்கியிருந்த பொழுதில் தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகள் வைத்திருந்த பழைய தமிழ் உரைகளையும் இலங்கையிலிருந்த பாளி உரை நூல்களையும் ஆராய்ந்து, திரிபிடகத்திற்கு பதினான்கு உரைகளை எழுதியுள்ளார். ஆச்சாரிய தருமபாலர் பல்லவ அரச வம்சத்தைச் சேர்ந்தவராவார். கந்தவம்சம் என்னும் நூல் இவர் இயற்றிய பௌத்த நூல்களை பட்டியலிட்டுச் சொல்கிறது.

பாண்டிய நாட்டில் மதுரையிலிருந்த சோம விகாரையின் தலைவராக இருந்தவர் அநிருத்த தேரர். இவர் எழுதிய ‘அபிதர்மார்த்த சங்கிரகம்’ என்ற பாலி நூல் இலங்கைப் பௌத்த சங்கத்தினராலும், பர்மா பௌத்த சங்கத்தினராலும்; படித்துப் பேணப்பட்ட பிரபல பௌத்த காவியம். ‘பரமத்த வினிச்சயம், காமரூபப் பரிச்சேதம்’ ஆகியன இவர் எழுதிய மற்ற நூல்களாகும்.

சோழநாட்டில் காவிரிப் பட்டினத்தைச் சேர்ந்த காஸ்யப தேரர் விமதிவிச்சேதனி, விமதிவிநோதின், மோகவிச்சேதனி, அநாகத வம்சம் ஆகிய பௌத்த தர்ம உரை நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களும் இலங்கையின் பௌத்த சங்கத்தினரால் பேணப்பட்ட இலக்கியங்களே.

தமிழ் இலக்கியங்களில் பௌத்தர்களின் பங்களிப்பு குரைவே எனினும், அவர்களது சமயப் பிரசாரத்தால் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதுவும் ஹிந்துத் தமிழ்ப் பண்பாட்டில் பாலுடன் சர்க்கரையாகக் கலந்துள்ளது எனில் மிகையில்லை.

(நன்றி: பசுத்தாய் பொங்கல் மலர்- 2020)

No comments:

Post a Comment