பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/04/2020

மக்கள் அரசு எது?

-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

"ஜனநாயக அரசு வேண்டுமெனில்  
சமூகம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்"


பல்வேறு வகையான அரசு முறைகளை வரலாறு கண்டிருக்கிறது. முடியாட்சி, பிரபுக்கள் ஆட்சி, மக்களாட்சி என்பவற்றுடன் சர்வாதிகார ஆட்சியையும் இணைத்துக் கொள்ளலாம். தற்காலத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவது ஜனநாயகம். இருப்பினும், ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றிய கருத்தொற்றுமை இல்லை. ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயக முறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்க முடியாது. ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தவிர வேறொன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் மூன்று தவறுகளை செய்கிறார்கள்.


முதல் தவறு: அரசு என்பது சமூகத்திலிருந்து முற்றிலும் வேறானது, தனிப்பட்டது என்று நம்புவது. உண்மையில் அரசு, சமூகத்திலிருந்து வேறானதும், தனிப்பட்டதும் அல்ல. அரசு என்பது சமூகத்தின் பல அமைப்புகளில் ஒன்று. சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளில் சிலவற்றைச் செய்யுமாறு சமூகம் அரசுக்கு குறிப்பிட்டுக் கொடுக்கிறது.

இரண்டாவது தவறு: ஓர் அரசு சமூகத்தின் இறுதி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அரசு வேரூன்றியிருக்கும் சமூகம் ஜனநாயக சமூகமாக இருந்தாலன்றி இது நடவாது என்பதையும் உணரத் தவறுவது. சமூகம் ஜனநாயக முறையில் இல்லையென்றால், ஓர் அரசு ஜனநாயக அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. சமூகம் இரண்டு வர்க்கங்களாக, ஆளுவோர் என்றும் ஆளப்படுவோர் என்றும் பிரிக்கப்பட்டிருந்தால், அரசு ஆளும் வர்க்கத்தின் அரசாகத்தான் இருக்கும்.

மூன்றாவது தவறு: அரசு நல்லதாக இருக்குமா, கெட்டதாக இருக்குமா, ஜனநாயகமாக இருக்குமா, அல்லது ஜனநாயகமற்றதாக இருக்குமா என்பது, சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எல்லா அரசுகளும் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை, குறிப்பாக சிவில் சர்வீஸ் அமைப்பைப் பொறுத்தது என்பதை மறந்துவிடுவதாகும். சிவில் சர்வீஸ் பணியில் உள்ளவர்கள் எத்தகைய சமூகச் சூழலில் வளர்ந்தார்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும். சமூகச் சூழல் ஜனநாயகமற்றதாக இருந்தால், அரசும் ஜனநாயகமற்றதாகவே இருக்கும்.

ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் ஜனநாயக வடிவிலான அரசு ஆபத்தான அரசாக மாறிவிடக்கூடும்.

ஒரு சமூகத்தில் உள்ள தனி நபர்கள் தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தால், ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய விசுவாசம் வேறெதையும் விட, முதன்மையாகத் தன் வகுப்புக்கே அளிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால், தனிமைப்பட்ட தன் வகுப்பில் வாழ்ந்து கொண்டு, வகுப்பு உணர்வு பெற்று, தன்னுடைய வகுப்பின் நலனை மற்ற வகுப்புகளின் நலனுக்கு மேலாகக் கருதினால், தன்னுடைய வகுப்பின் நலனை முன்னேற்றுவதற்காக சட்டத்தையும் நீதியையும் வக்கிரமாகப் பயன்படுத்துவதற்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இந்த நோக்கத்துக்காகத் தன்னுடைய வகுப்பைச் சாராத மற்றவர்களுக்கு எதிராக வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் எப்போதும் பாரபட்சத்துடன் செயல்பட்டால், ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய முடியும்? வகுப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு, சமூக விரோத உணர்வும், ஆதிக்க மனப்பான்மையும் அதிகமாக இருந்தால் அரசு நீதியுடனும் நியாயத்துடனும் ஆட்சி செய்யும் கடமையை நிறைவேற்றுவது கடினம்.

இப்படிப்பட்ட சமூகத்தில், அரசு தன் வடிவத்தில் மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாக இருந்தாலும், ஒருபோதும் மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. அது ஒரு வகுப்பால், ஒரு வகுப்புக்காக நடத்தப்படும் அரசாகவே இருக்கும். ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால் தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும்.

இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர்கள் சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும். நல்ல அரசின் பணி எந்த அளவுக்கு அதன் குடிமக்களின் மனப்பான்மையையும், அறநெறிப்பண்பையும் பொறுத்துள்ளது என்பது உணரப்படாதது வருந்தத்தக்கது. ஜனநாயகம் ஓர் அரசியல் எந்திரம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக அமைப்பு மட்டும் கூட அல்ல; அது ஒரு மனப்பான்மை அல்லது வாழ்க்கைத் தத்துவம் ஆகும்.

ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும் ஜனநாயக ரீதியில் இருந்தால்தான், அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில் ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி, தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால்தான் மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும். இந்த ஜனநாயக மனப்பான்மை, தனி நபர் ஜனநாயக சமூகத்தில் கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது. எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும்.


ஆதாரம்:
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு: 4, பக்கம் : 282.


No comments:

Post a Comment