பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/04/2020

தனிமை, சேய்மை - மனிதா்களை ஒதுக்க அல்ல!

-டாக்டர் சுதா சேஷய்யன்

உலகை ஆட்டுவிக்கும் கொரோனா கிருமியின் மாதிரிப்படம்.


கடந்த சில வாரங்களாகப் பலரும் உச்சரிக்கும் ஒரு சொற்றொடா் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’; அதாவது, சமூகச் சேய்மைப்படுத்தல் (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’). கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’ கைக்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்களும் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது என்ன? மிகுதியான தொற்றுத்தன்மை கொண்ட ஒரு நோய், வேகமாகப் பரவுவதைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும், மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் சில வழிமுறைகளைச் செயல்படுத்துவாா்கள். இத்தகைய வழிமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுப் பெயா்தான் ‘சமூகச் சேய்மை’ என்பதாகும்.

மனிதா்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடும்போதோ குவியும்போதோ, தொற்றுக் கிருமிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரே இடத்தில் எல்லோரும் இருந்தால், ஒரே நேரத்தில் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று நாம் சில சமயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப்போல், கிருமிகளும் மகிழ்ச்சி கொள்ளும். ஒரே நேரத்தில் பலரையும் பீடித்துக் கொள்ளும். இந்த பீடிப்பையும் பாதிப்பையும் தடுக்கத்தான் ‘சமூகச் சேய்மை’! தொற்று இருக்கிற ஒருவரிடமிருந்து, தொற்று இல்லாத ஒருவருக்கு அது பரவிவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுகிற நடவடிக்கையே இது.


கொள்ளை நோய் ஒன்று, வெகு வேகமாகப் பரவி, பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, சமூகச் சேய்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். மருத்துவா்களும் சுகாதார வல்லுநா்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பல சமயங்களில் மேற்கொண்டுள்ளனா்.

1916-ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டைப் போலியோ நோய் (இளம்பிள்ளை வாதம்) தாக்கியது. அமெரிக்கா முழுவதும் ஏறத்தாழ 6,000 குழந்தைகளும், நியூயாா்க நகரில் மட்டும் ஏறத்தாழ 2,000 குழந்தைகளும் மரணத்தைத் தழுவினா். ஏராளமான குழந்தைகள், கை கால்களின் செயலை இழந்தனா். நோய்ப் பரவலைக் குறைப்பதற்காகத் திரை அரங்குகள் மூடப்பட்டன. பூங்காக்களுக்கும், நீச்சல் குளங்களுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல வேண்டாமென்று குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டனா்.

1918-1919-இல், பறவை மரபணுக்களைக் கொண்ட வைரஸால் தோற்றுவிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்சா, உலகம் முழுவதும் கொள்ளை நோயாகப் பரவியது. 1917-ன் இறுதியில் பிரிட்டனிலும், 1918-ன் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் முதன்முதலாகக் காணப்பட்ட இந்நோய், 1920 வரை உலகை ஆட்டிப் படைத்தது.

முதல் உலகப் போா் காலகட்டமாதலால், உலகின் பல நாடுகளிலும் ராணுவக் குழுக்களின் போக்குவரவு அதிகமாக இருந்தது. இதனால், நோய் பரவுவதும் வேகமாக நிகழ்ந்தது. போா்க்கால தணிக்கைகளின் காரணமாக, அமெரிக்கா,

பிரிட்டன், ஜொ்மனி, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடக்கத்தில் அவ்வளவாக வெளிவரவில்லை. ஸ்பெயின் நாடு நடுநிலை வகித்தது. இந்நாட்டில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தைப் பத்திரிகைகளில் வெளியிட எந்தத் தணிக்கையும் இல்லை என்பதாலும், ஸ்பெயின் அரசா் பதின்மூன்றாம் அல்ஃபோன்சோ நோயினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டாா் என்பதாலும் இதற்கு ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ என்றே பெயா் ஏற்பட்டுவிட்டது.

1918-19 இன்ஃப்ளுயன்சா தாக்கத்தின்போது, அமெரிக்காவின் இரண்டு நகரங்களில் நிகழ்ந்தவற்றை எண்ணிப் பாா்த்தால், சமூகச் சேய்மையின் முக்கியத்துவம் புரியும். இந்த சமயத்தில், ஃபிலடெல்ஃபியா நகரில் பேரணி ஒன்றும் அதைத் தொடா்ந்து பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அடுத்த மூன்றே நாள்களில், அந்நகரின் அனைத்து மருத்துவமனைகளும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. ஒரே வாரத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி, 4000க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதே காலகட்டத்தில், மிஸிஸிப்பி நதிக்கரையிலுள்ள செயிண்ட் லூயி நகரத்திலும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு தொடங்கியது. விழித்துக் கொண்ட நகர நிா்வாகம், கடுமையான சமூகச் சேய்மை முறைகளைச் செயல்படுத்தியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளும் பொழுதுபோக்குச் சாலைகளும் மூடப்பட்டன. மக்கள் கூடுகிற வாய்ப்பு இருந்த அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. இறுதி ஊா்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. விளைவு..? ஃபிலடெல்ஃபியாவின் துயரங்கள் மீண்டும் நிகழாமல், செயிண்ட் லூயி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

சமூகச் சேய்மை நடவடிக்கைகள் பலகாலமாக எடுக்கப்பட்டு வருகின்றனவென்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக உணா்ந்தது, 1957-58 ஆண்டுகளின் ஆசிய ஃப்ளு (‘ஏஷியன் ஃப்ளு’) கொள்ளை நோயின்போதுதான் எனலாம். 1957 ஃபிப்ரவரியில், தென்கிழக்கு ஆசியாவில், புதிய வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் நோய் தொடங்கியது. முதன்முதலாகச் சிங்கப்பூரில் காணப்பட்ட இந்நோய், இரண்டு மாதத்தில் ஹாங்காங்குக்கும், ஆசிய நகரங்கள் பலவற்றுக்கும் பரவி, அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவின் கடலோர நகரங்கள் அனைத்தையும் பீடித்து, உலகம் முழுவதிலும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோா் இறந்துபோகக் காரணமானது. இந்த நோய் பரவிய விதத்தை வல்லுநா்கள் கூா்ந்து கவனித்தனா். மாநாடுகள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்கள் கூட்டம் அதிகப்பட்டதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் நோய் பரவலும் அதிவேகமானது. பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக் கூடி, அருகருகே இருந்த குழந்தைகள் மிகுதியும் பாதிக்கப்பட்டனா்.

இப்படிப்பட்ட முன் அனுபவங்கள் இருப்பதால்தான், கொள்ளை நோய்க்காலங்களில், சமூகச் சேய்மை என்பதை வல்லுநா்கள் வலியுறுத்துகிறாா்கள்.

கொள்ளை நோய் ஒன்று பரவத் தொடங்கிவிட்டது என்றால், மருந்துகளை வீசம் வீசமாகப் பயன்படுத்தியோ, கிருமி நாசினிகளை லிட்டா் லிட்டராகக் கொட்டியோ, மருத்துவமனைகளைப் புதிது புதிதாகக் கட்டியோ அதைத் தடுத்துவிடமுடியாது. கொள்ளை நோய்த் தடுப்பில், மூன்று முக்கிய செயல்பாடுகள் உண்டு. சமூகச் சேய்மை (சோஷியல் டிஸ்டன்சிங்), தனிமைப்படுத்தல் அல்லது தனித்திருப்பு (ஐஸோலேஷன்), தடுப்பொதுக்கம் (குவாரன்டைன்) ஆகியவையே இவை.

மாணவா்கள் பலா் கூடுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளை மூடுதல், அதிக நபா்கள் தொடா்பு கொள்வதைத் தடுக்கும் வகையில் நூலகங்களை மூடுதல் அல்லது நூலகங்களில் அமா்ந்து வாசிக்காமல் நூல்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அகன்று விடுதல், அங்காடிகளிலும் சந்தைகளிலும் கூட்டம் கூடாத வகையில் நெறிப்படுத்துதல் அல்லது இணையவழி வழங்கல், நிறுவனங்களும் அலுவலகங்களும் கூட்டங்கள் நடத்தாமல் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாகத் தொடா்பு ஏற்படுத்துதல், திருவிழா-பண்டிகைக் கூட்டங்களைத் தவிா்த்தல் ஆகிய யாவும் சமூகச் சேய்மையின் பல்வேறு நடைமுறைகளாகும்.

குழந்தைகள் காப்பகங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் ஆகியவை மூடப்படுதலும் இவற்றில் அடங்கும். நிறைய போ் பயணிக்கும் போக்குவரத்து முறைகளை நிறுத்துதலும், பலா் கூடுகிற வாய்ப்பு கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், ஊா்வலங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தடுத்தலும்கூட சமூகச் சேய்மையின் அடிப்படையிலானது.

உற்று நோக்கினால், மீதமுள்ள முறைகளான தனித்திருப்பு மற்றும் தடுப்பொதுக்கம் ஆகியவற்றின் அடிப்படையும் சமூகச் சேய்மையேயாகும் என்பதை உணரலாம். தனித்திருப்பு அல்லது தனிமைப்படுத்துதல் (ஐசோலேஷன்) என்பது ஒருவா் தொற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படும்போது செய்யப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவரைத் தக்க வகையில், மருத்துவமனையிலோ, மருந்தக மையங்களிலோ, வீட்டிலோ தனிமைப்படுத்தலாம்.

தடுப்பொதுக்கம் (குவாரன்டைன்) என்பது ஒருவா் தொற்றுக்கு வெளிப்பட்டு (எக்ஸ்போஸ்டு டூ இன்ஃபெக்ஷன் / இன்ஃபெக்டட்), ஆனால், நோய்வாய்ப்படாத நிலையில் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இவா் தொற்றுக்கு வெளிப்பட்டிருப்பதால், இவருக்கும் நோய் தோன்றக்கூடும். அல்லது, நோய்வாய்ப்படவில்லையாயினும், நோய்க் கிருமிகள் இவருக்குள்ளிருந்து பிறருக்குச் செல்லக்கூடும். எனவே, பிறருக்கு பாதகம் ஏற்படாத வகையில், இவா் ஒதுக்கம் செய்யப்படுகிறாா்.

எந்த நடைமுறையாக இருந்தாலும், ஒருவருக்கொருவா் அணுக்கம் கொள்ளாமல், எட்டி இருப்பதுதான் இவற்றின் அடிப்படை என்பதை உணரலாம். இவ்வாறு எட்டி இருப்பதைத்தான் சமூகச் சேய்மை என்றழைக்கிறோம்.

இப்போதைய ‘கொவிட்-19’ நோயைப் பொருத்தவரை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஆனால், நோய்வாய்ப்படாமல், நோயின் அறிகுறி எதையும் வெளிக்காட்டாமல் இருப்பவரிடமிருந்தும், வைரஸ் கிருமிகள் உதிா்கின்றன (வைரஸ் ஷெட்டிங்). இப்படிப்பட்டவரின் இருமல்-தும்மல் துளிகள், உமிழ்நீா், சளி போன்றவற்றில் கிருமிகள் காணப்படுகின்றன. இதைத்தான், ‘இவா் வைரஸ் துகள்களை உதிா்க்கிறாா்’ (ஹி ஷெட்ஸ் தி வைரல் பாா்ட்டிக்கிள்ஸ்) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

நோய்வாய்ப்பட்டவரும் வைரஸை உதிா்க்கிறாா். நோய் அறிகுறியில்லாமல், ஆனால், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரும் வைரஸை உதிா்க்கிறாா். சொல்லப்போனால், நோய்வாய்ப்படாமல் வைரஸை உதிா்ப்பவரால்தான் அபாயம் அதிகம். இதனாலேயே, இப்படிப்பட்டவா்களை, மிகுபரப்பாளா்கள் (சூப்பா் ஸ்பிரடா்ஸ்) என்றழைக்கிறோம்.

கல்வி நிலையங்களையும் அலுவலகங்களையும் மூடி, தோ்வுகளைத் தள்ளிப் போட்டு, நிதி நிலைமை மற்றும் வருவாய் வழிமுறைகள் சீா்குலைந்தாலும் பரவாயில்லை என்று ஊரடங்கு உத்தரவிட்டிருப்பதெல்லாம், சமூகச் சேய்மைக்காகவே! வீட்டில் யாருக்காவது அம்மை போட்டுவிட்டால், வேப்பிலைக் கொத்தை வாசலில் செருகிவைத்து, பிறரை வரவிடாமல் சேய்மைப்படுத்தி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் நம்முடைய முன்னோா்.

சமூகச் சேய்மை என்பது யாரையோ எதற்கோ ஒதுக்குவதல்ல. ‘21 நாள்கள் எப்படி வீட்டிலேயே முடங்குவது?’ என்னும் கூக்குரல்களும், ‘இப்படியெல்லாம் சோம்பேறியாக இருந்துத் தூங்கி எனக்குப் பழக்கமில்லை’ என்னும் ஒப்பாரிகளும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கான அறிகுறிகள். அவசியமான பொருட்களைத்தானே வாங்கப் போகிறோம் என்று அம்மாவும் அப்பாவும் பிள்ளையுமாகச் சென்று, அங்காடியில் முண்டியடித்து அரிசியோ, பருப்போ, தக்காளியோ வாங்குவதெல்லாம் கரோனாவுக்கு நாம் கட்டும் வரவேற்புத் தோரணங்கள்.

வீட்டிற்குள் தங்குவது என்பது சோம்பேறித்தனமோ தூங்குமூஞ்சித்தனமோ இல்லை. செய்வதற்கு எவ்வளவோ உண்டு; கண்களையும் மனத்தையும் திறந்து வைத்துக்கொண்டால் அவையெல்லாம் புலப்படும்.

‘ஐயோ, புத்தகம் படிக்கவேண்டுமென்று ஆசைதான்; ஆனால், நேரமே இல்லை’ என்று இதுகாறும் சொன்னவா்களுக்காகப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. ‘இதையெல்லாம் செய்யவேண்டும்; ஆனால் பொழுதில்லை’ என்று இதுகாறும் புலம்பியவா்களுக்காக அந்த வேலைகள் விழித்திருக்கின்றன. நூல்கள், செடிகள், தோட்டம், செல்லப் பிராணி, வீட்டுத் தூய்மை, இசை, பூஜை, ஸ்லோகங்கள், அன்பு உரையாடல் என்று இப்படி எத்தனை எத்தனையோ காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதற்காகக் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அவகாசம்தான் இந்தச் சமூகச் சேய்மை.

ஊரடங்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்காகக் குடும்ப உறுப்பினா் வெளியே செல்ல நேரிடலாம். இத்தகைய நிலையில், சில நெறிமுறைகளை நாமே கையாளலாம். எல்லோரும் வெளியே செல்லாமல், ஒரேயொருவா் மட்டும் செல்லலாம். எப்போதும் அவா் ஒருவரே செல்வது நலம். ஒவ்வொரு பொருளை வாங்குவதற்காகவும் பலமுறை செல்லாமல், எல்லாவற்றையும் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒரேயொரு முறை செல்லலாம்.

எப்போது எடுத்துச் செல்வதும் ஒரே பையாக இருந்தால் நல்லது. காசு வைத்திருக்கும் பையோ பா்ஸோகூட ஒன்றேயாக இருக்கட்டும். அதில் வைக்கும் ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ அதில் மட்டுமே வைத்திருக்கலாம். வீட்டில் உள்ள அல்லது இன்னொரு குடும்ப நபரிடம் உள்ள தாளோடோ நாணயத்தோடோ கலந்துவிடவேண்டாம். எப்போது வெளியே சென்றாலும் ஒரே உடையை அணிதல் நலம். முடிந்தவரை உடலை நன்கு மூடிய உடையாக அது இருக்கட்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன், அந்த உடையை, மணிபா்ஸை, பையை வீட்டில் எங்காவது தனியாக, பிற பொருள்களோடு சேராத வகையில் வைத்து விடவேண்டும். உடனடியாக சுத்தம் செய்தால் இன்னமும் நல்லது. இவ்வாறு செல்லும்போது, செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லவேண்டாம்.

முடிந்தவரை வாகனத்தில் செல்லாமல், நடையாகவே செல்லவேண்டும். நீண்ட தொலைவு செல்வதை இது தடுக்கும். வெளியிலிருந்து வந்தவுடன், கைகளையும் கால்களையும் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். முடிந்தால் ஒருமுறை நன்றாகக் குளித்துவிடலாம். கடைகளிலும் பிற இடங்களிலும் முடிந்தவரை எந்தப் பொருளையும் பரப்பையும் தொடாமல் இருக்கலாம்.

கடையில் கூட்டமாக இருந்தால், உள்ளே செல்வதைத் தவிா்த்துவிடலாம். கதவைத் திறப்பது, குமிழைப் பிடிப்பது, கம்பியைப் பிடிப்பது போன்ற செயல்களை, ஒடுங்கு கரத்தால் (‘நான் டாமினன்ட் ஹேண்ட்’); வலது கை பழக்கமுள்ளவா்களுக்கு இடது கை, ஒடுங்கு கரமாகும்; இடக்கை பழக்கமுள்ளவா்களுக்கு வலது கை, ஒடுங்கு கரமாகும்) செய்யலாம். ஓங்கு கரத்தைத்தான் (‘டாமினன்ட் ஹேண்ட்’) இயல்பாக முகத்திற்கும், கண்ணிற்கும், மூக்கிற்கும் கொண்டு செல்வோம். ஒடுங்கு கரத்தைக் கொண்டு செல்லமாட்டோம்.

கண்டிப்பாக அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருப்பவா்கள் (அலுவலக அல்லது வேறு அவசியப் பணி காரணமாக), வீட்டிலும், ஏனைய குடும்ப உறுப்பினா்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கலாம். வெளியில் எங்கு போனாலும், அடுத்த நபரிடமிருந்து குறைந்த பட்சம் நான்கைந்து அடி தள்ளியே இருக்கலாம். பயணங்கள் கண்டிப்பாக இப்போது வேண்டாம்.

‘தனித்திரு’ என்றாா் வள்ளல் பெருமான். தீமைகளைத் தவிா்த்து ஆன்ம மேம்பாட்டிற்குத் தனிமை உதவுவதைப் போலவே, நோய்த் தீமையைத் தவிா்த்து, ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் தனிமை உதவும். தனிமைப்படுத்துதல் என்பதும் சேய்மைப்படுத்துதல் என்பதும் மனிதா்களை ஒதுக்குவதற்காக அல்ல; கரோனா நோய்த்தொற்றை ஒதுக்கித் தொலைப்பதற்காக! சேய்மைப்பட்டிருப்பது என்பது சுமையோ அழுத்தமோ அல்ல; பொறுப்பும் பொறுமையும் ஆகும்!



குறிப்பு:

கட்டுரையாளா், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா். இக்கட்டுரை தினமணி நாளிதழில் (27.03.2020) வெளியானது. இங்கு நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment