பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

14/06/2020

கணித மேதையின் கதை - 3

-ஆதலையூர் த.சூரியகுமார்

ஸ்ரீனிவாச ராமானுஜன்
(டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)


கணித மேதையின் கதை
(ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்கள்)


51. இங்கு இருக்க வேண்டியவர் இல்லை:

சி எல் டி கிரீஃபித் என்பவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். அவர் ராமானுஜனின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்தார். அதனால் போர்ட் டிரஸ்ட் தலைவர் ஸ்பிரிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ' அதில் 'ராமானுஜம் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகச் சிறப்பான மேதைமை உள்ளவராக அவர் இருக்கிறார். அவர் அங்கு பணிபுரிய வேண்டியவர் அல்ல. மேலும் ஃபோர்ட் டிரஸ்டில் பணிபுரிந்தால் அவரால் நிச்சயமாக பிரகாசிக்க முடியாது. அவர் வறுமையில் வாடுவதாகவும் கேள்விப்பட்டேன். அவருக்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும். நானும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்' என்று ஒரு கடிதம் எழுதினார். ராமானுஜனின் வாழ்க்கையில் மாற்றத்தை மட்டுமல்ல, ஏற்றத்தையும் கொண்டு வந்த கடிதம் இது.

52. இன்னொரு மாற்றம்:

இந்த நேரத்தில் இன்னொரு உயர்வான சம்பவமும் ராமானுஜன் வாழ்க்கையில் நடந்தது. இந்தியாவில் உள்ள கணிதப் பேராசிரியர்கள் பலர் ராமானுனுடன் தொடர்பு கொள்ள விரும்பினார்கள். நேரில் வந்து ராமானுஜனுடன் கலந்துரையாடினார்கள். கணித ஆராய்ச்சியைப் பற்றிய தகவல்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். வெளிநாட்டில் உள்ள கணித மேதைகள் கூட ராமானுஜனுடன் கணிதத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

53. அசத்திய ராமானுஜன்:
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜி.ஹெச். ஹார்டி ஒரு கணித மேதை. அவர் ஒரு கணித பத்திரிகையில் மிகக் கடினமான கணிதப் புதிர்கள் சிலவற்றை வெளியிட்டு அவற்றுக்கான விடைகளைக் கண்டுபிடிக்குமாறு தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த ராமானுஜன் உடனடியாகச் செயல்பட்டார். அந்தக் கணக்குகளை எல்லாம் பார்த்து அதற்கு எளிய முறையில் ஒரு சில படிநிலைகளில் (ஸ்டெப்களில்) கணக்குக்கு தீர்வு கண்டு அதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த பேராசிரியர் ஹார்டி அவர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் மயக்கமே வந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரம் எப்படி இந்த கணங்களுக்கு எல்லாம் இவர் தீர்வு கண்டுபிடித்தார் என்று அவர்கள் தங்களுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தினார்கள்!

54. அயல்தேசம் அழைத்தது:
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜி.ஹெச். ஹார்டி அவர்களுக்கு கணக்குப் புதிர்களுக்கான விடைகளை அனுப்பும்போது தன்னைப்பற்றிய குறிப்பையும் அனுப்பியிருந்தார் ராமானுஜன். அதைப் பார்த்த ஹார்டி. 'ஒரு பெரிய கணித மேதை துறைமுகத்தில் சாதாரண கிளார்க் வேலை செய்வது கொடுமையாக இருக்கிறது. எனவே அவருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்று தன்னுடைய சக பேராசிரியர்களுடன் விவாதித்தார். ராமானுஜனுக்கு அயல்தேசம் செல்வதற்கான வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருந்தது.

55. துறைமுகத்துக்கு வந்த தூது:

ஹார்டி, ராமானுஜன் விஷயத்தில் தாமதிக்கவில்லை. சென்னை போர்ட் டிரஸ்ட்டின் தலைவர் ஸ்ப்ரிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'ராமானுஜன் மிகச் சிறந்த கணித மேதை. கணித உலகத்துக்கு அவர் நிறைய வழிகாட்ட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் வரை அவரால் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது. அவரை நீங்கள் தான் முயற்சி செய்து லண்டனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவருடைய திறமைகள் எல்லாம் வெளிக்கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.

56. அடுத்த வாய்ப்பு:
வாய்ப்புகள் வந்தால், அடுத்தடுத்து வரும் அல்லவா? அதுபோலத்தான் ராமானுஜனுக்கும் வந்தது. சென்னையில் இருந்த கணிதப் பேராசிரியர்கள் சிலர், ராமானுஜனை எப்படியாவது உயர்த்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவரை ஒரு ஆராய்ச்சி மாணவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சென்னைப் பல்கலைக்கழகமும் ராமானுஜனை ஆராய்ச்சி மாணவராக ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தது. மேலும் அவரது ஆராய்ச்சிக்கு மாதம் 75 ரூபாய் உதவித்தொகை வழங்க முன்வந்தது.

57. வேலையை விட்டார் ராமானுஜன்:

போர்ட் டிரஸ்ட்டில் தனது வேலையை ராமானுஜனால் தொடர முடியவில்லை. அது தனது கணித ஆய்வுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ராமானுஜன் நினைத்தார். அதனால் பணி விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து கொண்டார். இன்னொன்றும் செய்தார்; இந்த சமயத்தில் மனைவியும் அம்மாவும் தன்னுடன் இருந்தால் அது ஆராய்ச்சிப் பணிக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து அவர்களை கும்பகோணத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த அளவுக்கு கணிதத்தைக் காதலித்தார் ராமானுஜன்.

58. சாப்பாட்டுக் கணக்கு:

எல்லா நேரங்களிலும் கணக்கு பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார் ராமானுஜன். அவர் மனம் எப்போதும் கணக்கு, கணக்கு என்று சுற்றி வந்து கொண்டிருந்தது. உணவகங்களில் சாப்பிடப் போகும்போதும்கூட தனக்குப் பரிமாறும் சர்வர்களிடம் வேடிக்கையான கணக்குகளை ராமானுஜன் போடுவார். அவர்களுக்கு விடை தெரியாமல் விழிக்கும்போது அதற்கான விடைகளைச் சொல்லி அவர்களை சந்தோஷப்படுத்துவார் ராமானுஜன்.

59. நள்ளிரவுக் கணக்கு:

போர்ட் டிரஸ்டில் மேலாளராக வேலை பார்த்த நாராயண ஐயர் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தார். ராமானுஜன் இரவு நேரங்களில் நாராயண ஐயரைத் தேடிச் சென்று விடுவார். அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருவரும் நீண்ட நேரம் அமர்ந்து கணிதம் பற்றி விவாதம் செய்து கொண்டிருப்பார்கள். சிலசமயம் இருவருக்கும் கணக்குகளில் சர்ச்சை வரும். ஆனால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு மறுநாள் மீண்டும் விவாதத்தில் ஈடுபடுவார்கள். சில நேரங்களில் விடியும் வரை கூட விவாதம் நீண்டது உண்டு.

ஒருமுறை நாராயண ஐயரின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது விவாதம் நள்ளிரவைத் தாண்டி நீண்டது. நாராயண ஐயருக்கு தூக்கம் வரவே அவர் எழுந்து சென்றுவிட்டார். இரவு மிக நீண்ட நேரமாகியும் மொட்டைமாடியில் விளக்கு எரிவதைப் பார்த்த நாராயண ஐயர் மொட்டை மாடிக்குச் சென்றார். அங்கே கணக்கு எழுதிக்கொண்டிருந்தார் ராமானுஜன். 'ராமானுஜன், உனக்கு தூக்கம் வரவில்லையா?' என்று கேட்டார். ‘தூங்கிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் கனவில் ஒரு கணக்கு வந்தது, அதற்குத் தான் இப்போது விடை எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்றார் ராமானுஜம். இந்தப் பதிலைக் கேட்டு மிரண்டு போனார் நாராயண ஐயர்.

60. இரவு நேரக் கணக்கு:

ராமானுஜன் தூங்குவதற்காகச் செல்லும்போதும்கூட ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டுதான் தூங்கப் போவார். எப்போதும் அவரது தலையணைக்குக் கீழே ஒரு நோட்டுப் புத்தகமும் பேனாவும் இருக்கும். தூக்கத்தின்போதும் கணக்கு பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்; நல்ல தீர்வு கிடைக்கும். உடனடியாக எழுந்து அந்தக் கணக்குக்கான விடையை எழுதி வைத்துவிடுவார் ராமானுஜன். இப்படி தூக்கமும் விழிப்பும் அவருக்கு கணக்காகவே இருந்தது.

61. கடல் கடந்து போகலாமா கணிதமேதை?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட கணித மேதை ராமானுஜன் தனது முடிவுகளை எல்லாம் லண்டனிலுள்ள ஹார்டிக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். அதையெல்லாம் பார்த்து ஹார்டி ஆச்சரியப்பட்டார். அவரை எப்படியாவது உடனடியாக லண்டனுக்கு அழைத்து வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ராமானுஜன் தான் கொஞ்சம் குழம்பினார். அன்றைய காலகட்ட விதிகளின்படி ஒரு ஹிந்து கடல் கடந்து போகக் கூடாது. அதுபோல நான்காண்டுகள் தாயாரையும் மனைவியையும் எவ்வாறு பிரிந்திருப்பது என்றும் வருத்தப்பட்டார்.

62. அடுத்தடுத்து அழைப்பு:

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஈ.எச்.நெவில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். நெவில் சென்னைக்குப் போவது தெரிந்ததும் ஹார்டி, நெவில் அவர்களிடம் “எப்படியாவது ராமானுஜனை இலண்டனுக்கு அழைத்து வந்து விடுங்கள்” என்று சொல்லி அனுப்பியிருந்தார். நெவில் அவர்களும் சென்னைக்கு வந்து ராமானுஜனின் கட்டுரைகளை எல்லாம் பார்த்தார். அவரும் ஆச்சரியத்தில் மூழ்கினார். உடனடியாக போர்ட் டிரஸ்ட்டின் தலைவரையும் ராமானுஜனையும் சந்தித்துப் பேசினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ராமானுஜத்துக்கு அழைப்பு விடுத்தார் அழைப்பு விடுத்தார்.

63. குடும்பமும் குலதெய்வமும்:

கேம்பிரிட்ஜ் அழைப்பு குறித்து ராமானுஜன் போர்ட் டிரஸ்டின் தலைவர் ஸ்ப்ரிங் அவர்களுடன் கலந்து ஆலோசித்தார். ‘எனது குடும்பத்தின் அனுமதியும் குலதெய்வ உத்தரவும் இருந்தால் நான் லண்டனுக்கு செல்கிறேன்’ என்று அவர் சொன்னார். குடும்பத்தின் அனுமதி சரி. அது என்ன குலதெய்வத்தின் உத்தரவு? குலதெய்வம் எப்படிப் பேசும் என்றும்கூட ஸ்ப்ரிங் கேட்டார். ஆனால் ராமானுஜன் குலதெய்வத்தின் உத்தரவு இல்லாமல் என்னால் நிச்சயமாக வர இயலாது என்று சொல்லிவிட்டார்.

64. குலதெய்வத்தின் உத்தரவு:
ராமானுஜன், நாராயண ஐயருடன் சேர்ந்துகொண்டு நாமக்கல் சென்றார். நாமக்கல்லில் உள்ள நாமகிரித் தாயார்தான் ராமானுஜனின் குலதெய்வம். முதல் இரண்டு நாள் ராமானுஜனின் குலதெய்வமான நாமகிரித் தாயாரின் உத்தரவு கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் நள்ளிரவில் திடீரென விழித்துக் கொண்டார் ராமானுஜன். தனது கனவில் ஒரு பிரகாசமான ஒளி தோன்றியதாகவும், அது நாமகிரித் தாயார் தனக்கு அளித்த உத்தரவு என்றும் நாராயண ஐயரிடம் சொன்னார். நாராயண ஐயர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்தத் தகவலை ஸ்ப்ரிங் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அதேசமயம் ராமானுஜனின் தாயாரும் தன் மகனுக்கு லண்டனில் மாலை மரியாதை கிடைப்பது போல கனவு கண்டாராம். மகிழ்ச்சியோடு அவரும் அந்தச் செய்தியை ராமானுஜனுக்கு அனுப்பினார்.

65. ஆளுநரின் உதவி:

ஸ்ப்ரிங் சென்னையில் கவர்னராக இருந்த ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு ராமானுஜன் பற்றிய செய்திகளை ஒரு கடிதமாக எழுதினார். அந்தக் கடிதத்தில் ராமானுஜனின் லண்டன் பயணத்திற்காக பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொண்டார். அதை ஏற்றுக்கொண்டு கவர்னரும் பத்தாயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். சென்னைப் பல்கலைக்கழகமூம் ஆண்டு ஒன்றுக்கு 250 பவுன் கொடுத்து உதவ முன்வந்தது.

66. மாமனாரின் மறுப்பு:

ராமானுஜம் சென்னை செல்வதால் கும்பகோணத்தில் இருந்த நண்பர்கள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமானுஜனின் தாயார் உறவினர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். ஆனால் ராமானுஜனின் மாமனார் மட்டும் அவர் லண்டன் செல்வதை விரும்பவில்லை. பலவழிகளில் தடுத்துப் பார்த்தார். கடல் கடந்து போகக் கூடாது என்றார். லண்டனில் உள்ள காலநிலை உங்களுக்கு ஒத்து வராது என்றார். ஆனால் ராமானுஜன் “நோயும் மரணமும் எங்கிருந்தாலும் வரும், அதனால் வாழ்த்தி வழி அனுப்புங்கள்' என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்.

67. தாயாரின் தயக்கம்:

ராமானுஜன் லண்டன் செல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே இருந்தது. கப்பல் மூலமாகத்தான் லண்டன் செல்ல வேண்டும்; அப்போது விமானப் போக்குவரத்து எல்லாம் கிடையாது. ஸ்பிரிங் அவர்களின் ஆங்கிலேய நண்பர்கள் ராமானுஜன் லண்டனில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். பலர் ராமானுஜனை நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள். படித்த பெண்களும் ராமானுஜனைச் சந்தித்து கைகுலுக்கிப் பேசினார்கள். ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவரான ராமானுஜனின் தாயாருக்கு மற்ற பெண்கள் தொட்டுப் பேசுவது பிடிக்கவில்லை. ஆனால் இது அந்த நாட்டு நாகரீகம் என்று சொல்லி அம்மாவை ஆறுதல் படுத்தினார் ராமானுஜன்.

68. மனைவியின் ஆசை:

தன் கணவர் லண்டன் செல்லும்பொழுது அவருடன் செல்ல வேண்டும் என்று நினைப்பது மனைவி நியாயமான ஆசை தானே! ராமானுஜனின் மனைவி ஜானகி, தானும் லண்டன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கணவரிடம் சொல்வதற்குத் தயக்கமாகவே இருந்தது. இதைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட ராமானுஜன் 'லண்டனில் நான் ஆராய்ச்சிக்காக அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருக்கும். நீ தனிமையில் கஷ்டப்பட முடியாது' என்று சொல்லி மனைவியையும் ஆறுதல் படுத்தினார்.

69. இங்கிலீஷ் ஸ்டைல்:
லண்டன் கிளம்பும்போது ராமானுஜன் இந்திய பாரம்பரிய உடைகளில் இருந்தார். ஆனால் அவரது நண்பர்கள் லண்டன் செல்லும் பொழுது ஆங்கிலேயர்களின் உடைக்கு மாறினால் அங்கு பழகுவதற்கு வசதியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ராமானுஜன் தன்னை மாற்றிக்கொண்டார். பலத்த எதிர்ப்புக்கிடையே தனது குடிமியை நீக்கிக்கொண்டார்; கோட் சூட் அணிந்து கொண்டார்; ஷு அணிந்து கொண்டார். புதிய ராமானுஜனாக மாறியிருந்தார்.

70. நினைவுப் பரிசு:

தன்னை புதிய தோரணையில் மாற்றிக்கொண்டு நேராக நாராயண ஐயர் வீட்டுக்குச் சென்றார் ராமானுஜன். புதிய தோற்றத்தில் ராமானுஜனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார் நாராயண ஐயர். 'உன் பயணம் சிறக்கட்டும்" என்று வாழ்த்தினார் ஐயர். பிறகு ராமானுஜன் ஐயரிடம் நினைவுப் பரிசாக ஐயர் பயன்படுத்திய சிலேட்டுப் பலகையைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.

71. வழியனுப்பு விழா:

1914 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் எஸ்.எஸ்.மேவாஷா கப்பலில் ராமானுஜன் தன் கப்பல் பயணத்தைத் தொடங்கினார். உறவினர்கள் யாருமே வராத நிலையில், நண்பர்கள் நிறைய பேர் வழியனுப்ப வந்திருந்தார்கள். ராமானுஜன் முதன்முதலாக கப்பல் பயணத்தைத் தொடங்கியிருந்தார். சிலருக்கு பேருந்துப் பயணம் பிடிக்காது அல்லவா? அது போல ராமானுஜனுக்கு கப்பல் பயணம் ஒத்துக்கொள்ளவில்லை. கடுமையாக கஷ்டப்பட்டார். உப்புக்காற்று அவரை சிரமப்படுத்தியது. சரியாக சாப்பிட முடியவில்லை.

72. ‘ஆப்ட்’டான கேப்டன்: ஒரு கணிதமேதை கப்பல் பயணம் செய்கிறார் என்று தெரிந்தவுடன் அந்தக் கப்பலின் கேப்டன் ராமானுஜனைப் பார்க்க வந்திருந்தார். அப்போது ராமானுஜன் கடற் பயணம் ஒத்துக்கொள்ளாமல் படும் சிரமங்களைப் பார்த்து இரக்கப்பட்டார். அவருக்கு நல்ல ஆரோக்கியமான, சத்தான உணவுகள் கிடைப்பதற்கு அவர் ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்லாமல் பயணத்தில் இன்னும் பல வசதிகளைச் செய்து கொடுத்தார். கப்பலின் கேப்டன் ராமானுஜனுக்கு தொடர்ந்து உதவுவதைப் பார்த்த மற்றவர்கள் பொறாமைப்பட்டார்கள்.

73. கப்பல் நண்பர்கள்:

கப்பல் பயணிகள் கேப்டனிடமே கேட்டுவிட்டார்கள். ‘இவர் யார்? இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். 'இவர்தான் உலகத்தின் மிகச் சிறந்த கணித மேதை ராமானுஜன். அவர் நமது கப்பலில் பயணம் செய்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவருக்கு வசதிகளை செய்து கொடுப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்' என்றார் கேப்டன். இதையடுத்து ராமானுஜனிடம் பலர் நண்பர்களாகப் பழக நெருங்கி வந்தார்கள். ராமானுஜன் கப்பலிலேயே மிகுந்த புகழடைந்தார். முக்கியமாக கப்பலின் கேப்டன் நெருங்கிய நண்பரானார். அப்போதும்கூட கப்பலின் கேப்டனுக்கு ஜாமெண்டரி (ஜியோமிதி) கணக்குகளை சொல்லிக்கொடுத்தார் ராமானுஜன்.

74. லண்டனில் வரவேற்பு

27 நாட்கள் பயணத்துக்குப் பின்னர் லண்டன் போய் இறங்கினார் ராமானுஜன். லண்டன் துறைமுகத்தில் ஏராளமான கணிதப் பேராசிரியர்களும் வல்லுநர்களும் ராமானுஜனை வரவேற்கக் காத்திருந்தனர். சென்னையில் ராமானுஜனைச் சந்தித்து லண்டன் வரும்படி அழைப்பு விடுத்திருந்த நெவிலியும் வந்திருந்தார். மிகச் சிறந்த மரியாதையுடன் ராமானுஜனை அவர்கள் வரவேற்றனர். இதற்கிடையில் ராமானுஜன் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. கப்பலில் பயணம் செய்த டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்ததால் அவர் குணமடைந்திருந்தார்.

75. ஹானஸ்ட் ஹார்டி:

ஹார்டி மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு ராமானுஜனுக்கு எல்லா உதவிகளையும் செய்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கல்லூரியான டிரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவனாக ராமானுஜனைச் சேர்த்தார். அதற்கான கட்டணத்தையும் ஹார்டியே செலுத்தினார். ராமானுஜன் டிரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் நாள் சேர்ந்தார். அதுமட்டுமல்லாமல் ராமானுஜனின் ஆராய்ச்சிக்கு உதவிப் பணமாக வருடம் ஒன்றுக்கு 50 பவுன் கிடைக்கவும் ஹார்டி ஏற்பாடு செய்து கொடுத்தார். ராமானுஜன் தங்குவதற்கு அறை ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.


(தொடரும்)

காண்க:
ஆதலையூர் த.சூரியகுமார்
கணித மேதையின் கதை

No comments:

Post a Comment