பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

14/06/2020

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் தீருமா?

-ராதிகா மணாளன்



மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, போன்ற ரயில் நிலையங்களில் காலை வேளைகளில் ஒரு காட்சியை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். அதிகாலை வந்து செல்லும் விரைவு ரயில்களில் இருந்து கொத்துக்கொத்தாக இறங்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள்- கண்களில் கனவுடனும், முதுகில் சுமையுடனும், உடலில் விரைவுடனும், செல்வதைக் காணமுடியும். தினசரி இந்த நகரங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக இருந்தது. சில விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில்கூட பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்து அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். எல்லாம் மார்ச் 23 வரை. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்விலும் விளையாடிவிட்டது.

எதிர்காலத்தை நாடி எங்கிருந்தோ வந்த அந்த பிற மாநிலத் தொழிலாளர்களுடைய நிலை இன்று கவலைக்கிடம். வேலை தேடி வந்த இடத்தில் கொரோனா தொற்றுக் காலத்தில் கிடைத்த கொடிய அனுபவங்களும் ஆதரவற்ற சூழ்நிலையும் அவர்களில் பெரும்பாலோரை தங்கள் சொந்த ஊருக்கே தற்போது துரத்தியிருக்கின்றன.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பல நாட்டு மக்களை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா (கொவிட் -19) வைரஸ் இதுவரை உலகின் அனைத்து நாடுகளிலும் தாண்டவமாடி பல லட்சம் மக்களைக் காவுகொண்டிருக்கிறது. அத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிர்ப் பலி குறைவு என்பது நிம்மதியளிக்கிறது. (ஜூன் 12 நிலவரம்: உலக அளவில் கொரோனா பாதிப்பு: 74.97 லட்சம், பலி: 4.20 லட்சம்; இந்தியாவில் பாதிப்பு: 2.94 லட்சம், பலி: 8,143) எனினும் இதற்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம்.


கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவல் கிடைத்தவுடனேயே உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி இந்தியாவில் ஊரடங்கு மற்றும் பொதுமுடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 23ஆம் தேதி பிரதமரே நேரடியாக இதனை அறிவித்தார். அன்றுமுதல் ஐந்து தவணைகளில் பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டது. தற்போது ஐந்தாவது பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் அமலில் இருக்கிறது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் முடக்கப்பட்டன. அதன்மூலமாகத்தான் இந்தியாவில் கொரோனாவினுடைய தீவிரப் பரவல் தடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இந்தியா இருந்திருக்கும். சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு வலுவாக இல்லாத நமது நாட்டில் நோய் வராமல் தடுப்பதே மிகச்சிறந்த தீர்வு என்பதை உணர்ந்த அரசு சரியான நடவடிக்கையை எடுத்தது.

எனினும் எந்தவொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது போல, இந்த ஊரடங்கு உத்தரவால் ஒரு பின்விளைவு ஏற்பட்டிருக்கிறது. அதுதான் பொருளாதார வீழ்ச்சி மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை. நாடு முழுவதும் தொழிலுக்காகப் புலம்பெயர்ந்து வாழும் பிற மாநிலத் தொழிலாளர்கள் இந்த கொரோனா வைரஸ் காலத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நிலையை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்திருக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு.


உதாரணமாக பாஜக தலைவர் சுப்பரமணியன் சுவாமி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு 10 நாட்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனால் ஏற்படும் பீதி, அவசரச் செயல்பாடுகளால் கொரோனா வைரஸ் மேலும் பரவிவிடும் என்று அரசு அஞ்சியது. இருப்பினும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில்களை முன்கூட்டியே இயக்கியிருந்தால் பல சிரமங்களைக் குறைத்திருக்கலாம்.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் தடுமாற்றத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. இரண்டு அம்சங்களில் மத்திய அரசு தவறிழைத்தது. முதலாவதாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலையளித்த நிறுவனங்களே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யும் என அரசு நம்பியது தவறு. ஊரடங்கு துவங்கியபோது ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலையளித்த நிறுவனங்களும் ஒப்பந்ததாரர்களும் உதவியது உண்மை. ஆனால், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது அந்தத் தொழிலாளர்களுக்கு வேலையளித்த நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் அவர்களைக் கைவிட்டன. இதனை அரசு எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவதாக நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதற்கான எந்தவொரு அடிப்படைத் தரவுகளும் புள்ளிவிவரங்களும் மத்திய அரசிடமும் இல்லை; மாநில அரசுகளிடமும் இல்லை. தொழில் நிமித்தமாக தினசரி லட்சக்கணக்கானோர் விரைவு ரயில்களில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கக் கூடிய சூழலில் அவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள் ஏதுவும் இதுவரை தொகுக்கப்படாதது மாபெரும் பிழை. இதன்காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கும் பிறமாநிலத் தொழிலாளர்களுடைய எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலும் அவர்களுக்கான திட்டங்களைத் தீட்டுவதிலும் அரசுகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்?

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 4 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் புண்யா சலைலா ஸ்ரீவத்சவா கூடியிருக்கிறார். அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அண்மை ஆண்டுகளில்தான் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. அநேகமாக தற்போதைய நிலவரத்தில் நாடுமுழுவதும் சுமார் 10 கோடி தொழிலாளர்கள் இருக்கக்கூடும்.

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 45 கோடி என்று இஷ்டத்துக்கு அடித்து விடுவோரும் இருக்கின்றனர். பெரும்பாலான தன்னார்வ அமைப்புகள் இவ்வாறுதான் எந்த ஆதரமும் இன்றி வக்கனையாக அரசைக் குறை கூறிக் கொண்டிருக்கின்றன.

இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் கல்வியறிவு குறைந்தவர்கள். உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிற மாநிலங்களுக்குப் பயணிப்பவர்கள். குறிப்பாக கட்டுமானத் தொழில், உப்பளத்தொழில், ஜவுளித்தொழில், கூலித் தொழில்களில் ஈடுபடுவதற்காக அந்தத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வேற்று மண்ணுக்கு இடம் பெயர்கிறார்கள். இவ்வாறு வருபவர்களுக்கு ஏற்கனவே இங்கு வந்து தொழிலில் நிலைத்துள்ள அந்தந்த மாநிலத் தொழிலாளர்களே ஒப்பந்ததாரர் போலச் செயல்படுகிறார்கள்.

உதாரணமாக திருப்பூரில் இயங்கும் ஒரு பனியன் தொழிற்சாலைக்கு பத்தாண்டுகளுக்கு முன் பிகாரிலிருந்து வந்த ஒரு இளைஞர் இன்று அந்த நிறுவனத்தில் முக்கிய பணியாளராக மாறியிருப்பார். அவருடைய அழைப்பின் பேரில் அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை நாடி திருப்பூருக்கு வருவார்கள். அவர்களுக்கு உண்ண உணவும் இருக்க உறைவிடமும் அளிக்கும் ஏற்பாட்டை அந்த பிகார் இளைஞரே செய்துவிடுவார். அதற்கான தரகுத் தொகையை தான் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் பெற்றுக்கொள்வார். இவ்வாறுதான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்ததாரர்கள் உருவாகிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் மாநிலத்திலும் இதுவே நிலை.

கொரோனா காலம் போன்ற ஒரு கொடிய சூழ்நிலையை அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா ஊரடங்கு தொடர்ந்து இரண்டு மாததங்களுக்கு மேல் நீடித்தபோது பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை அளித்த நிறுவனங்கள் அவர்களுக்கு உதவ முடியாமல் தவித்தன. ஏற்கனவே தொழில் முடக்கத்தால் அந்த நிறுவனங்களுடைய பொருளாதார நிலை ஆட்டம் கண்ட நிலையில், மிக எளிதாக புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் கைவிட்டனர். அவர்களை அழைத்து வந்த இடைத்தரகர்களும் எதுவும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்தனர்.

பொது முடக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் சேவாபாரதி போன்ற சேவை அமைப்புகள் அளித்த அன்னதானமும் நிவாரண உதவிகளும் சுமார் ஒரு மாத காலத்திற்கு அவர்களை சற்றே அமைதிப் படுத்தியிருந்தன. சில தொழில் நிறுவனங்கள் தங்கள் பணக்கஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல் தங்களை நம்பிவந்த பிற மாநிலத் தொழிலாளர்களை ஓரளவு காப்பாற்றின. இருப்பினும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்ததும், ஊரடங்கு உத்தரவுகள் மீண்டும் மீண்டும் நீடிக்கப்பட்டதும் புலம்பெயர் தொழிலாளர்களிடையே பொறுமையிழப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் சில எதிர்கட்சிகளும் சுயநல ஊடகங்களும் பரப்பிய வதந்திகள்கூட புலம்பெயர் தொழிலாளர்களை அச்சத்திற்கு உள்ளாக்கின. வேலை தேடி வந்த இந்த இடத்தில் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் கிட்டாத சூழல்; ஊடகங்களில் பரப்பப்பட்ட நச்சுக் கருத்துக்கள்; கொரோனா அச்சம் ஆகியவற்றால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்பிச் சென்றுவிட புலம்பெயர் தொழிலாளர்கள் தீர்மானித்தனர். மே 15ஆம் தேதிக்கு மேல் அவர்களது இடப்பெயர்வு துவங்கிவிட்டது. 

வீக்கமும் வளர்ச்சியும்:

ஒரு நாடு சீராக வளர்ச்சியடைகிறது என்பதன் அடையாளம் அதன் அனைத்து மாநிலங்களும் சீராக வளர்ச்சியடைவதாகும். ஆனால் இந்தியாவைப் பொருத்த வரை மூன்று விதமான வளர்ச்சி நிலைகளைக் காண்கிறோம். 

தமிழகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், மஹாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களாக உள்ளன. உத்தர பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியிருக்கின்றன. 

வடகிழக்கு மாநிலங்களோ தேசிய வளர்ச்சிப் பாதையில் இணையாமல் தனித்துவிடப்பட்டே காட்சியளிக்கின்றன. தற்போதைய பாஜக ஆட்சியில்தான் வடகிழக்கு மாநிலங்களுக்கு போதிய கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறாக சில மாநிலங்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்தும், சில மாநிலங்கள் பொருளாதார ரீதியாகத் தாழ்‌ந்தும் காணப்படுகின்றன. இந்த சமச்சீரற்ற வளர்ச்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாநிலங்கள் விவசாயத்தை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறிப்பிடவேண்டும். தொழில் மயமான மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கின்றன. இதன்மூலம் விவசாயத்தைவிட தொழில்துறை மேன்மையானது என்ற தோற்றம் உருவாகிறது. இந்நிலை மாற வேண்டுமானால் விவசாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முதன்மையும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும். 

இரண்டாவதாக, கிராமங்களுடைய வளர்ச்சியைவிட நகரங்களுடைய பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதேபோல தலைநகரங்களுடைய பொருளாதார வளர்ச்சி, பிறநகரங்களுடைய பொருளாதார வளர்ச்சியைவிட சிறப்பாக உள்ளது. இந்த வேறுபாடுகள் காரணமாகவே நகரமயமாதல் அதிகரிக்கிறது. இது ஒருவகையில் வீக்கமே. 

சென்னையிலும் மும்பையிலும் தில்லியிலும் கொரோனா தொற்று பல்கிப் பெருகுவதற்கு இந்த நகரமயமாதலால் விளைந்த வீக்கமே காரணம். எனவே நகரமயமாதலைக் கட்டுப்படுத்துவதும் கிராமங்களை தன்னிறைவு கொள்ளச்செய்வதும் உடனடித் தேவையாகும். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாநிலங்களை மேம்படுத்த சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அவசியம். 

உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது மாநிலத் தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் பணி அமர்த்தப்பட வேண்டுமானால், தங்கள் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறி இருகிறார். அவரது கருத்து, தொழிலாளர்களின் அவலத்தால் விளைந்த கோபத்தின் பிரதிபலிப்பே. அதேசமயம், தனது மாநிலத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் வேலைவாய்ப்புகளையும் அளித்து இனி புலம் பெயராமல் தடுக்கப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட வேண்டும்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்:

தலைநகர் தில்லியில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அண்டை மாநிலமான உ.பி.யை நோக்கி குழந்தைக் குட்டிகளுடன் நடந்தே செல்லத் துவங்கியபோதுதான், புலம்பெயர் தொழிலாலர்களின் வேதனை வெளிப்படத் துவங்கியது. இதுபோன்ற காட்சிகளை நாடு முழுவதும் கண்ட மத்திய அரசு உடனடியாக விழித்துக்கொண்டது. ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக நீடிக்கப்பட்டபோது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக மே 1ஆம் தேதி முதல் ‘ஷ்ரமிக்’ சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு ரயில்கள் மூலமாக சுமார் 65 லட்சம் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அவர்களுக்காக 4,197 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன (ஜூன் 3 வரையிலான நிலவரம்).

இந்த சிறப்பு ரயில்களின் இயக்கச் செலவில் மத்திய அரசு 85 சதவீதமும் மாநில அரசு 15 சதவீதமும் ஏற்றுக்கொண்டன.இவையெல்லாம் நடந்து கொண்டிருந்தபோதுதான், புலம் பெயர் தொழிலாளர்களின் ரயில் போக்குவரத்து கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மே 28ல் உத்தரவிட்டது என்பது தனிக்கதை.

பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு முன்பதிவு செய்வதில் பல சிரமங்கள் இருந்தன. ஏனெனில் அவர்களைப் பற்றிய எந்தவொரு அடிப்படைத் தகவல்களும் அரசிடம் இல்லாததால் ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து முன்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆதார் அட்டை இல்லாத தொழிலாளர்கள் அவ்வாறு பயணிக்க முடியாமல் தவித்தனர். அவர்கள் ரயில்களில் செல்ல வழியில்லாததால் சரக்கு வாகனங்களிலும், சொந்த வாகனங்களிலும், நடந்தும் தங்கள் ஊர்களுக்கு பயணிக்கத் துவங்கினர். இந்த இடப்பெயர்வானது தினசரி ஊடகங்களில் காட்சிப் பொருளானது.


ஏற்கனவே கொரோனா பீதியால் தத்தளித்துக்கொண்டிருந்த தேசத்தை ஊடகச் செய்திகள் மேலும் சீண்டின. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டுவிட்டதாக ஊடகங்கள் ஒப்பாரி வைத்தன. பெரும்பாலும் இடதுசாரி மையமாகிவிட்ட இந்திய ஊடகங்கள் கொரோனாவை திறமையாகக் கட்டுப்படுத்திய இந்திய அரசைக் குறை கூற இயலாமல் காரணங்களை தேடிக்கொண்டிருந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் வேதனை அவர்களுக்கு வரப்பிரசாதமாயிற்று. இதை வைத்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சிகளும் வசைபாடத் துவங்கின.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய அரசாலோ மாநில அரசுகளாலோ திட்டமிட்டுப் பழிவாங்கப்படவில்லை. கொரோனா பீதி போன்ற காலகட்டத்தில் உலகமே செய்வதறியாது திலைக்கும் நிலையில், இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. பிற உலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் வேறுபாடு என்னவென்றால், இங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் பத்து சதவீதம் பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்கின்றனர். இது பல உலக நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். இதனை ஊடகங்களோ எதிர்கட்சிகளோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்த ஷ்ரமிக் சிறப்பு ரயில்களில் (ஜூன் 3 நிலவரம்) குஜராத்திலிருந்து 1027 ரயில்களும் மஹாராஷ்டிரத்திலிருந்து 802 ரயில்களும், பஞ்சாபிலிருந்து 416 ரயில்களும், உ.பி.யிலிருந்து 288 ரயில்களும், பிகாரிலிருந்து 294 ரயில்களும் அதிகபட்சமாக இயக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல இந்த சிறப்பு ரயில்களில் உ.பி.க்கு 1670 ரயில்களும் பிகாருக்கு 1282 ரயில்களும் ஜார்கண்டுக்கு 194 ரயில்களும் இயக்கப்பட்டிருக்கின்றன.

மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே மத்திய அரசு இந்த சிறப்பு ரயில்களை இயக்கியது. ஆனால் சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் நிலவிய தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக மத்திய அரசின் ஷ்ரமிக் ரயில் திட்டத்தை முழுமையாக அவை பயன்படுத்தவில்லை. மத்திய அரசு அறிவித்த ரயில்களில் சுமார் 256 சிறப்பு ரயில்களை மாநில அரசுகள் ரத்து செய்த கூத்துகளும் உண்டு (ஜூன் 4 நிலவரம்).

இவ்வாறாக ஷ்ரமிக் ரயில் மூலமாக 65 லட்சம் தொழிலாளர்களும், சிறப்புப் பேருந்து வசதி போன்ற ஏற்பாடுகள் மூலம் சுமார் 10 லட்சம் தொழிலாளர்களும் அவரவர்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். இவையல்லாது சொந்த முயற்சியாலும் பலர் ஊர் திரும்பியுள்ளனர். மொத்தமாக, சுமார் 1 கோடி பேர் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்த எண்ணிக்கை உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. இது ஒரு மாபெரும் இடப்பெயரல். 

ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடைய அவதிக்கு அவர்களது குடும்ப அட்டைகள் சொந்த ஊர்களில் இருந்ததும் ஒரு காரணம். இந்த நிலை வருவதற்கு முன்னரே, இரண்டாண்டுகளுக்கு முன்னதாகவே ‘ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை’ என்ற திட்டத்தை தற்போதைய நரேந்திர மோடி அரசு முன்னெடுத்தது. அதாவது நாட்டின் எந்தப் பகுதியில் குடும்ப அட்டை பெற்றிருந்தாலும் 
தாங்கள் வசிக்கும் பகுதியில் (பிற மாநிலத்தில்) உள்ள நியாயவிலைக் கடையிலேயே தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ள அந்தத் திட்டம் வழிவகைச் செய்யும்.
2013இல் இயற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் எந்தப் பகுதியில் வேலை பார்த்தாலும் அந்தப் பகுதியில் உள்ள பொது விநியோக - நியாய விலைக் கடைகளில் இருந்து தங்களுக்கு உரிமையான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உதவுகிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசின் சட்டத்தை மேலும் செப்பனிட்டு ‘ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை’ என்ற திட்டமாக மோடி அரசு செயல்படுத்த தயாராகி வருகிறது.

ஆனால் இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தபோது தமிழக அரசியல்வாதிகளில் பலர் (வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர்) இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் மட்டும் தமிழக அரசினுடைய ஒத்துழைப்புடன் நிறைவேறியிருந்தால் தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடைய உணவுக் கவலை கொரோனா காலத்தில் நிச்சயம் ஏற்பட்டிருக்காது.

இந்த ‘ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை எதிர்த்த சில அரசியல்வாதிகள், இன்று புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பரிதாபப்பட்டு கோஷம் எழுப்புவது ஒரு இளிவரல் நகைச்சுவையாகும்.
 
இந்தத் திட்டத்தை 2021இல் நடைமுறைப்படுத்தப்போவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அத்திட்டத்தை முனைப்புடன் மிக விரைவில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். சொந்த ஊருக்குப் போகாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கேனும் இத்திட்டம் பயன்படட்டும். 

நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதங்கள்:

சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் பண நெருக்கடி, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதும், செல்லும் வழியில் விபத்துகளில் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்ததும் வேதனையை அளிக்கும் நிகழ்வுகளாகும். சில இடங்களில் பட்டினிச் சாவுகளும் நேரிட்டுள்ளன. இதுவரை சுமார் 300 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும், புலம் பெயரும் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாகவே தங்கள் சொந்த மண்ணைவிட்டு பிற மாநிலங்களுக்கு பயணிக்கிறார்கள். குறிப்பாக உத்தரபிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிஷா, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பெரும் அளவிலான தொழிலாளர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்கிறார்கள். குறிப்பாக தில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும், குஜராத், ஹரியாணா, மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கும் வேலைதேடி புலம்பெயரும் தொழிலாளர்கள் செல்கின்றனர்.

அவர்களது சொந்த ஊரில் இருந்தால் தினசரி சுமார் 100 ரூபாய் ஈட்டுவதே கடினம் என்ற சூழ்நிலையில்தான் அவர்கள் வெளிமாநிலங்களுக்குப் படையெடுக்கிறார்கள். அவர்களது வேலைக்கான பரிதவிப்பை பிற மாநில மக்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு வழங்குவதைவிட குறைந்த ஊதியத்தைக் கொடுத்தாலும்கூட பிற மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தயாராக இருப்பதை தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்கின்றன.

உதாரணமாக, கட்டுமானத்தொழிலில் கொத்தனார் வேலைக்கு உள்ளூர்த் தொழிலாளி குறைந்தபட்ச ஊதியமாக 800 ரூபாய் எதிர்பார்க்கிறார். அதே வேலையை பிற மாநிலத் தொழிலாளி செய்யும்போது அவருக்கு 400 ரூபாய் கொடுத்தால் போதும். அவர் தங்குவதற்குவதற்கு இடமும் உண்ண உணவும் ஏற்பாடு செய்தால் போதும். இப்படித்தான் கட்டுமானத்தொழிலில் தென்மாநிலங்கள் முழுவதும் பிற மாநிலத் தொழிலாளர்கள் பரவியிருக்கின்றனர். இதேபோன்ற நிலைதான் பிற தொழில்களிலும்.

இது ஒருவகை உழைப்புச் சுரண்டலாகும். இதைப் பற்றி கேள்வி கேட்க எந்த தொழிற்சங்கப் பின்புலம் கொண்ட அரசியல் கட்சிக்கும் துப்பில்லை.

மேலும், பிற மாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து தமிழகம் போன்ற மாநிலங்களில் தங்கிப் பணிபுரியும்போது வேலை நேரம் பார்க்காமல் கடினமாக உழைக்கின்றனர். அத்தகைய கடினமான உழைப்பை உள்ளூர்த் தொழிலாளர்களிடம் எதிர்பார்க்க முடிவதில்லை. இதுவும் பிற மாநில தொழிலாளர்களுடைய புலம் பெயர்தலுக்கு பிரதானக் காரணமாகும்.

இத்தனை இருந்தும், கொரோனா போன்ற ஒரு அவசரக் காலகட்டத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டிய, தொழில் நிறுவனங்களும், ஒப்பந்ததாரர்களும் அவர்களைக் கைவிட்டது ஒரு கொடிய வேதனையான நினைவாகவே நீடிக்கும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளால் ஏதும் செய்ய இயலாது என்பதை புலம்பெயர் தொழிலாளர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். எனவேதான் அரசாங்கங்களை நம்பாமல் சொந்த ஊர்களுக்குக் கிளம்ப கிளம்ப ஆயத்தமாகிவிட்டனர்.

இந்திய அரசு இனி மேலேனும் புலம்பெயர் தொழிலாளர்களுடைய வாழ்க்கைய நிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை, தகுந்த நிபுணர் குழுவுடன் ஆலோசித்து தீட்ட வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இந்தத் தொழிலாளர்களின் உழைப்பினால்தான் சம்பந்தப்பட்ட வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் வசதியாக வாழ்ந்து வருகின்றன. தவிர, தங்கள் சொந்த மாநிலத்தில் வாழும் குடும்பத்தாருக்கு தங்கள் ஊதியத்தை அனுப்பி, அந்த மாநிலங்களையும் புலம்பெயர் தொழிலாளர்கள் முன்னேற்றுகின்றனர். 
வடமாநிலத் தொழிலாளர்கள் என்று அழைக்காதீர்:
புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிப்பிடுகையில் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் வடமாநிலத் தொழிலாளர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த வார்த்தைப் பிரயோகமே தவறானதாகும். பிற மாநிலத் தொழிலாளர்களை ‘வடமாநிலத் தொழிலாளர்கள்’ என்று குறிப்பிடுவதே அப்பட்டமான தவறு.
தமிழகத்துக்கு வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானிலிருந்தும் குஜராத்திலிருந்தும், வட மாநிலங்களான உபி, ம.பி. யிலிருந்தும், வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம் போன்றவற்றிலிருந்தும் தொழில் நிமித்தமாக லட்சக்கணக்கானோர் வருகின்றனர். அவர்கள் அனைவரையும் வடமாநிலத் தொழிலாளர்கள் என்று கூற முடியுமா? இந்த வார்த்தைப் பிரயோகத்தின் பின்புலத்தில் ஒரு பிரிவினை மனப்பான்மை உள்ளது. அதனை அனுமதிக்கக் கூடாது.
இதேபோல, பல்வேறு பிற மாநிலங்களிலும் தமிழகத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவை தொழிலுக்கான தேடலில் விளைந்த பயணங்கள். இதனை பிரதேச எல்லைகள் மூலம் வரையறுக்க முடியாது.
சங்க காலத்திலேயே (பொ.யு.மு. 300 ) தொழில்வயிற் பிரிதல் இருந்ததற்கு தமிழ் இலக்கியங்கள் (பாலைத் திணை) சான்று பகர்கின்றன. எனவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிப்பிடுகையில் ‘பிற மாநிலத் தொழிலாளர்கள்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.

வெளிநாடு வாழ் தொழிலாளர்கள்:

பிற மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டதைப் போலவே, வெளிநாடுகளுக்குச் சென்ற இந்திய தொழிலாளர்களுடைய நிலையும் கொரோனா காலகட்டத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. குறிப்பாக மத்திய தரைக்கடல் (அரபு நாடுகள்) நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் பணிநிமித்தமாகச் சென்ற தொழிலாளர்கள் கொரோனாவால் வேலையிழந்து அங்கு தவித்தனர். அவர்களிலும் உடலுழைப்பு தொழிலாளர்களே மிகுதி.

ஆனால் தாயகத்துக்கு அழைத்துவந்தால் அதன்மூலமாக கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. இதன்காரணமாக ஆரம்பத்தில் அவர்களை தாயகம் திரும்ப அரசு அனுமதிக்கவில்லை. எனினும் பல்வேறு நாட்டு தூதரகங்கள் மூலமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்துவர ‘வந்தேபாரத்’ என்ற விமானசேவை மத்திய அரசால் மே 7 முதல் மூன்று கட்டங்களாக இயக்கப்பட்டது. அதன்படி பல நூறு விமானங்களில் சுமார் 1 லட்சத்து 66ஆயிரம் பேர் தாய்நாடு திரும்பியுள்ளனர் (ஜூன் முதல் வார நிலவரம்).

அவர்கள் அனைவரும் தீவிர கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட பிறகே சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக போக்குவரத்து வசதிகளை விமானம், ரயில், பேருந்து வசதிகள் மூலம் மத்திய அரசு மேற்கொண்டாலும், இன்னும் அவர்களது நிலைமை சீரடையவில்லை.

கடந்த 80 நாட்களுக்கு மேலாக அவர்கள் வேலையை இழந்துள்ளனர். தினசரி கூலி வாழ்க்கையில் ஒருநாள் கூலியை இழந்தாலும், அவர்களின் வாழ்க்கை சிரமம். எனவே அவர்களது வாழ்வாதாரத்துக்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களுடைய நலனுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய ரூ. 11,000 கோடி நிதியை (மே 24 நிலவரம்) ஒதுக்கீடு செய்திருந்தது. இப்பொழுது இரண்டு மாதங்களுக்கு ரூ. 3,500 கோடி மதிப்புள்ள 8 லட்சம் டன் அரிசி, கோதுமையையும், 50,000 டன் பருப்பையும் பொது விநியோக முறையில் இலவசமாக வழங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனினும் இதுபோதாது.

உணவுப்பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களது குடும்பங்கள் பசியாற முடியாது என்பதை அரசு உணர வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரமாக குறிப்பிட்ட தொகையை நிதியுதவியாக அளிப்பது அவசியம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு அளிக்கும் இடைக்கால நிவாரணமான நிதியுதவியானது எவ்வளவு விரைவில் வழங்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது.

ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பலர் மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை அவர்களை ஏளனமாக வசைபாடியவர்கள்தான். மகாராஷ்டிரத்திலிருந்து பிகாரிகள் வெளியேற வேண்டும்; தில்லியில் இருந்து உ.பி.காரர்கள் வெளியேற வேண்டும்; தமிழகத்திலிருந்து வட மாநிலத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும்: இவர்களால் உள்ளூரில் வேலைவாய்ப்பு பாதிக்கிறது என்றெல்லாம் கோஷமிட்ட பலர் இன்று புலம்பெயர் தொழிலாளர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களது கருத்தை அரசு பொருட்படுத்தவேண்டியதில்லை.

அதேசமயம், நாட்டு மக்களின் வாழ்வில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு பெருமளவில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது மத்திய அரசின் கடமை. தற்போதைய சிக்கலான பொருளாதார சூழலில் இந்தக் கோரிக்கை நிறைவேற்ற இயலாததாகத் தோன்றலாம். ஆனால் மத்திய அரசு இதை ஒரு செலவாகக் கருதாமல், மனிதவள முதலீடாகக் கருதி செயல்பட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களது குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாவது உதவித்தொகையாக வழங்குவது அரசின் நம்பகத் தன்மையையும் உயர்த்தும்.

ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த,  ‘மகசேசே விருது’ பெற்ற  சமூகசேவகர் சாய்நாத், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கூறியுள்ள கருத்து நினைவுகூரத் தக்கது.

‘‘மார்ச் 26 வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் நாம். இன்று திடீரென அவர்கள் இல்லாததன் நிலைமையை அனுபவிக்கிறோம். திடீரென லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் சாலைகளில் செல்வதை நாம் பார்க்கிறோம். அவர்களது அத்தியாவசியத்தை நாம் உணர்வதற்கும்கூட அவர்களது சேவை தடைபட்டதுதான் காரணம். அதுவரை நாம் அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தோம். சமமான உரிமை கொண்ட மனிதர்களாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மதிக்கப்பட்டதில்லை’’ என்கிறார் சாய்நாத்.

இது நம் நெஞ்சை உலுக்கும் உண்மை. பிற மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வந்து அவதிப்படுவதைப் போலவே, தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் கேரளம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட், போன்ற மாநிலங்களில் நிச்சயமற்ற கூலி வேலைக்குச் சென்று மிகவும் கஷ்டப்பட்டு ஊர் திரும்பியிருப்பதை நாம் அறிவோம்.

இது ஒரு குறிப்பிட்ட மாநிலம் தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் நாட்டில் வாழ்வின் தேவைகளுக்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு தொழில் நிமித்தமாகவும் கல்விக்காகவும் பயணிப்பதை யாராலும் தடுக்க இயலாது. இனி வரும் காலத்தில் இத்தகைய சூழ்நிலைகளை அனுசரித்து அதற்குத் தேவையான சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும்.

கேட்டிலும் உண்டு நன்மை என்பது போல, கொரோனா வைரஸ் தொற்றினால் நமது அரசு பெற்ற படிப்பினையாக, புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்துக்கு தீர்வு அமைய வேண்டும்.

பொருளாதாரச் சரிவை எப்போது வேண்டுமாயினும் சரிப்படுத்த இயலும், அதற்கான மனிதவளம் இருந்தால். அந்த வகையில், நாட்டின் முக்கிய மனிதவளமான புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய அவலத்தைப் போக்குவது அரசின் தலையாய கடமையாகும்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நலச்சட்டங்கள் தேவை:
மாநிலங்களிடையேயான பெயரும் தொழிலாளர்களுடைய நலனுக்காக 1979ஆம் ஆண்டு ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அப்போதே இந்தப் பிரச்சனை துவங்கிவிட்டதால்தான் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி அளிப்பவர், ஒப்பந்ததாரர் ஆகியோருக்கும், மாநில அரசுகளுக்கும் புலம் பெயர் தொழிலாளர்களின் நலனைக் காக்கும் பொறுப்புகள் உண்டு என்று அந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
1990ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கம், உலக மயமாக்கத்துக்குப் பிறகு நாடு முழுவதும் தொழிலாளர்கள் பரவலாகப் பயணம் செய்வது தொடங்கியது. குறிப்பாக 2010க்குப் பிறகு வரன்முறையற்ற புலம்பெயர்வுகள் அதிகரித்தன. எனவே ஆங்காங்கே தொழிலாளர் தாவாக்கள் ஏற்பட்டன. இதையடுத்து மாநிலங்களிடையிலான புலம்பெயர் தொழிலாளர் சட்டம்- 1979 மீண்டும் 2015இல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனாலும் அது இன்னும் முழுமையாக அமலாகவில்லை. 

தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டத்தில் மேலும் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் (ESI) பயன்கள் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் காங்குவார் கூடியிருக்கிறார். 

அமைப்புசாரா தொழிலாளர் அடையாள அட்டை எண்ணைக் (Unorganised Workers Identification Number: U-WIN) கொண்டுவர 2008ஆம் ஆண்டே பரிந்துரைக்கப்பட்டது. இதனையும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 

அதேபோல ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி குறிப்பிட்ட காலம் பணியாற்றினால் அவருக்கு பணிக்கொடை, சேமநல நிதி வழங்குவதையும் (கிராஜுவிட்டி, பி.எஃப்.) கட்டாயப்படுத்த மத்திய அரசு ஆலோசிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சட்டத் திருத்தங்களை மிக விரைவில் கொண்டுவர வேண்டியது மத்திய அரசின் கடமை. 

“நாடுமுழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற முழுமையான விவரம் நம்மிடையே இல்லை” என்ற வேதனையான உண்மையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தகைய முழுமையான தகவல்கள் நம்மிடம் இருந்திருந்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் பதிவு செய்திருக்கிறார். இது முற்றிலும் உண்மை.

எனவே வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுத்து மாவட்ட தொழிலாளர்நல அலுவலரின் கட்டுப்பாட்டில் அந்தப் பட்டியலை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஒரு புதிய ஊருக்கு ஒரு புதிய தொழிலாளி வந்தால், அவர் எந்த மாநிலத்திலிருந்து வருகிறாரோ அந்த மாநிலத்தினுடைய சான்றிதல் பெற்றுவர வேண்டும்; புதிதாகத் தொழில் அமரும் மாவட்டத்திலுள்ள தொழிலாளர் நல அலுவலரிடம் கண்டிப்பாகப் பதிவு செய்யவேண்டும் என்ற ஒரு கட்டாயச் சூழல் இருந்தால் மட்டுமே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை முழுமையாகக் கணக்கிட முடியும்.

கடந்த மே 30ஆம் தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த ஆணையமும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரங்கள், அவர்களது தேவைகள், குடும்பத்தினுடைய பொருளாதார நிலைகள் ஆகியவற்றை உத்தேசித்து செயல்படக் கூடியதாக விரைவில் அமைக்கப்பட வேண்டும்.


நன்றி: விஜயபாரதம் வார இதழ்.




No comments:

Post a Comment