பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

14/06/2020

நெகிழச் செய்யும் தாயின் கடிதம்

-ஆசிரியர் குழு

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி
(பலிதானம்: ஜூன் 23)



ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே என்று நிலைநாட்ட காஷ்மீர் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார், பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி. சிறைக் காவலில் வைக்கப்பட்ட அவர், அங்கு மர்மமான முறையில் 1953, ஜூன் 23இல் மரணம் அடைந்தார். அவரது உயிர்த் தியாகத்தால் தான் காஷ்மீர் இன்றும் இந்தியாவின் பகுதியாக நீடிக்கிறது.

டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் தாயார் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தை ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும். பிரதம மந்திரி நேரு அவர்களுக்கு, டாக்டர் எஸ்.பி. முகர்ஜியின் தாய் திருமதி ஜோக்மயா தேவி அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம் இதோ:

***

ஜோக்மயா தேவி
77, ஆஷுதோஷ் முகர்ஜி சாலை,
கல்கத்தா,
1953, ஜூலை, 4.

அன்பான திரு. நேருவுக்கு,

30, ஜுன் தேதியிடப்பட்ட உங்கள் கடிதம், எனக்கு திரு. பிதான் சந்திர ராய் மூலமாக ஜூலை 2ஆம் தேதி கிடைத்தது. உங்கள் அனுதாபச் செய்திக்கும் அனுதாபத்திற்கும் நன்றி.

என் அன்பு மகன் இறந்ததற்கு இந்த தேசமே துக்கம் அனுஷ்டிக்கிறது. அவர் ஒரு தியாகியாக இறந்துள்ளார். அவரது தாயான எனக்குள்ள துயரம் மிகவும் ஆழமானது; வெளிப்படுத்தப்பட முடியாத அளவு புனிதமானது. 

எனக்கு ஆறுதல் தேடுவதற்காக இதை நான் உங்களுக்கு எழுதவில்லை. ஆனால், உங்களிடம் நான் வலியுறுத்திக் கேட்பது நீதியைத்தான்.

என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது இறந்திருக்கிறார் - அதுவும் நீதி மன்றத்தில் எந்த வழக்கும் தொடரப்படாமல் சிறை வைக்கப்பட்டபோது. உங்கள் கடிதத்தில் நீங்கள் காஷ்மீர் அரசு தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தது என்று கூற முற்பட்டுள்ளீர்கள். உங்களின் இந்தக் கூற்று, உங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் உறுதி அளிப்புகளின் அடிப்படையில் இருக்கலாம். ஆனால், யார் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுமோ, அவர்களிடமிருந்து வந்த தகவல்களுக்கு எப்படி மதிப்பளிக்க முடியும் என்பதுதான் என்னுடைய கேள்வி. என் மகன் சிறை வைக்கப்பட்டிருந்தபோது காஷ்மீர் சென்றிருந்ததாகக் கூறியுள்ளீர்கள். அவர் மீது நீங்கள் கொண்டிருந்த நேசத்தைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அப்படியானால், அவரைச் சிறையில் சென்று சந்தித்து, அவரது ஆரோக்கியம் மற்றும் சிறையில் அவருடைய சௌகரிய ஏற்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விடாமல் உங்களைத் தடுத்தது எது?

அவரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளது. அவர் அங்கே சிறை வைக்கப்பட்ட பிறகு அவரது தாயான எனக்கு காஷ்மீர் அரசிடமிருந்து வந்த முதல் தகவலே அவர் மரணச் செய்திதான். அதுவும் இரண்டு மணி நேரம் கழித்தே வந்தது என்பது மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்று தோன்றவில்லையா? அதுவும் மர்மமான, கொடுமையான முறையில் அந்தத் தகவல் எனக்கு வழங்கப்பட்டது! தான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக என் மகன் அனுப்பிய தந்தி அவரது மரணச் செய்திக்குப் பிறகுதான் இங்கே வந்து சேர்ந்தது. என் மகன் கைது செய்யப்பட்டதிலிருந்தே அவர் சரியாக நடத்தப்படவில்லை என்றும், அவர் பலமுறை தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்தார் என்றும், எனக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது. எனக்கோ என் குடும்பத்தாருக்கோ அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் அளிக்கப்படவில்லை என்று நான் காஷ்மீர் அரசிடம் அல்லது உங்களிடம் கேட்கிறேன்.

அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகுகூட, அவர்கள் அந்தத் தகவலை உடனடியாக எங்களுக்கோ அல்லது டாக்டர் பிதான் சந்திர ராய்க்கோ தெரிவிக்க வேண்டும் என்பது அவசியமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. காஷ்மீர் அரசு சியாம் பிரசாதின் உடல்நிலை குறித்த முந்தைய மருத்துவ வரலாறு பற்றியோ, அவருக்குத் தேவைப்படும் சிகிச்சை ஏற்பாடுகள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியோ சிறிதுகூட அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை ஒரு எச்சரிக்கையாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இந்தக் கொடுமை. ஜூன் 22ஆம் தேதியன்று அவர், “மூழ்குவதைப் போன்ற உணர்வு” ஏற்படுவதாகக் கூறியதை என்னால் நிரூபிக்க முடியும். இதற்கு அரசு என்ன செய்தது? மருத்துவ உதவி அளிப்பதில் அளவுகடந்த தாமதம், மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற சட்டத்துக்குப் புறம்பான- மோசமான விதம், அவருடன் சிறை வைக்கப்பட்ட இரண்டு சகாக்களைக்கூட அவருடன் அருகில் இருக்க அனுமதிக்காத கொடுமை, இவை அனைத்துமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மோசமான, இரக்கமற்ற நடத்தைக்கான உதாரணங்கள்.

சியாம் பிரசாத்தின் கடிதங்களிலிருந்து- தான் நன்றாக இருக்கிறேன் என்று அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய பொறுக்கி எடுக்கப்பட்ட சில வரிகளைக் கொண்டு- தகவல் அளித்துவிட்டதால், அரசாங்கமும் அதன் மருத்துவர்களும் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட வரிகளின் மதிப்புதான் என்ன? தனக்கு நெருக்கமான, நேசத்துக்குரியவர்களை விட்டு வெகு தொலைவில் சிறையில் இருக்கும் ஒருவர் – அதுவும் என் மகன் – தன் துயரங்களைக் கடிதம் மூலம் வெளிப்படுத்துவாரா, அல்லது தன் சொந்த ஆரோக்கியப் பிரச்சினையைக் கண்டறிவாரா? அரசாங்கத்தின் பொறுப்பு மகத்தானது மற்றும் தீவிரமானது.

அவர்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய தங்கள் கடமைகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சௌகரியங்களையும் வசதிகளையும் பற்றி நீங்கள் கூறினீர்கள். அவை விசாரித்து அறியப்பட வேண்டியவை. குடும்பத்தினரிடம் எளிதாகக் கடிதத் தொடர்பு கொள்வதைக்கூட அனுமதிக்கும் நாகரிகம் இல்லாததுதான் காஷ்மீர் அரசு. கடிதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன; மற்றும் சில மர்மமான முறையில் காணாமல் போய்விட்டன.

நோய்வாய்ப்பட்டிருக்கும் அவரது மகள் மற்றும் என்னைப் பற்றிய செய்திகளுக்கு அவர் ஏங்கித் தவித்தது அவரது கடிதங்களில் வெளிப்பட்டது. ஜுன் 24ஆம் தேதி, ஒரு பாக்கெட்டில் காஷ்மீர் அரசு அனுப்பிவைத்த 15ஆம் தேதியிடப்பட்ட அவரது கடிதங்கள் எங்களுக்கு 27ஆம் தேதி ஜூன் இறுதிவாக்கில், அதாவது அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்ட பிறகு கிடைத்தன என்பதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? அந்த பாக்கெட்டில், இங்கே நானும் மற்றவர்களும் சியாம் பிராசத்துக்கு எழுதி அனுப்பிய கடிதங்களும் இருந்தன. இவை ஜுன் 11 மற்றும் 16ஆம் தேதிகளிலேயே ஸ்ரீநகருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன, ஆனால் சியாம் பிரசாத்துக்கு அளிக்கப்படவில்லை. இது மனரீதியான சித்திரவதைக்கு ஒப்பானது. அவர் மீண்டும் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்ளத் தேவையான இடத்தைக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இட வசதி இல்லாமல் பெரும் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால், தொடர்ந்து இது அவருக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதை உடல் ரீதியான சித்ரவதை இல்லையா?

“அவர் எந்தச் சிறையிலும் அடைத்து வைக்கப்படவில்லை, பிரபல தால் ஏரி அருகில் ஒரு தனியார் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தார்” என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து நான் ஆச்சரியமும் அவமானமும் அடைகிறேன். மிகச் சிறிய வளாகம் உள்ள மிகச் சிறிய ஒரு மாளிகையில், மிகத் தீவிரமாக இரவும் பகலும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் கண்காணிக்கப்பட்டுவந்தார். இதுதான் அவர் இருந்த நிலை. தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு கைதி சந்தோஷமாகவா இருப்பார்? இப்படிப்பட்ட தவறான பிரசாரத்தைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிறேன். அவருக்கு எந்த வகையான மருத்துவ சிகிச்சை மற்றும் உதவி அளிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. எனக்குக் கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானவை. இது மிகவும் மோசமான, அப்பட்டமான கவனக் குறைவு என்பதுதான் மிகவும் பிரபலமான மருத்துவர்கள் இந்தத் தகவல்களின் அடிப்படையில் தெரிவித்த கருத்து. இந்த விஷயம் குறித்து, முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை தேவை.

நான் இங்கே என் பிரியமான மகனின் மரணம் குறித்துப் புலம்பவில்லை. சுதந்திர இந்தியாவின் ஓர் துணிவுமிக்க மகன், வழக்கு- விசாரணை எதுவும் இன்றி காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மிகவும் சோகமான, மர்மமான முறையில் மரணத்தைச் சந்தித்திருக்கிறார். மகத்தான பேரிழப்பில் உள்ள ஒரு தாய், சுதந்திரமான மற்றும் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு முற்றிலும் பாரபட்சமற்ற, பகிரங்கமான விசாரணை தாமதம் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்கிறேன். இறந்துவிட்ட ஒருவரின் உயிரை எதனாலும் திருப்பிக் கொண்டுவர இயலாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நமது சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியில்,  அதுவும் உங்கள் அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்ட இந்த மாபெரும் சோக நிகழ்ச்சிக்கான உண்மையான காரணங்களை அறிந்துகொண்டு, அதன் நியாய, அநியாயங்களைத் தாங்களாகவே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

ஒரு தவறை எங்காவது, யாராவது செய்துவிட்டால் - அவர் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்து உடையவராக இருந்தாலும் சரி - சட்டம் அதன் கடமையைச் செய்ய, அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். எனக்கு ஏற்பட்ட சோகம் இனி எந்தத் தாய்க்கும் ஏற்பட்டு கண்ணீர் சிந்தும் நிலை ஏற்படக் கூடாது.

உங்கள் மூலமாக எனக்கு எதாவது சேவை தேவைப்பட்டால் தயங்காமல் அதை வெளிப்படுத்தலாம் என்று நல்ல உள்ளத்தோடு தெரிவித்துள்ளீர்கள். இதோ என் சார்பிலும் இந்தியாவில் உள்ள அன்னையர் சார்பாகவும் உங்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். உண்மை வெளிச்சத்திற்கு வர அனுமதிக்கும் துணிவை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்.

இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன், ஒரு முக்கியமான உண்மையைக் கூற விரும்புகிறேன். சியாம பிரசாத்தின் டைரியையும் அவர் கையால் எழுதிய விஷயங்களையும் அவருடைய மற்ற உடமைகளுடன் சேர்த்து காஷ்மீர் அரசாங்கம் எனக்கு அனுப்பிவைக்கவில்லை. பக்க்ஷி குலாம் முகம்மது மற்றும் என் மூத்த மகன் ராம்பிரசாத் ஆகியோருக்கு இடையேயான கடிதங்களின் நகல்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் அரசாங்கத்திடமிருந்து இந்த டைரி மற்றும் கையெழுத்துப் பிரதிகளை மீட்டுத் தந்தால் நான் ஆழ்ந்த நன்றி பாராட்டுவேன். இவை அவர்களிடம்தான் இருக்கும்.


என் நல்லாசிகளுடன்.


துயரத்துடன்
உங்கள் உண்மையான,
ஜோக்மயா தேவி

No comments:

Post a Comment