பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

14/06/2020

தேசிய முரசாய் ஒலித்த தமிழர்!

-முத்துவிஜயன்


ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம்

(பிறப்பு: ஜூன் 26, 1906 – மறைவு: , அக்டோபர் 3, 1995)

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பொன்னுசாமி கிராமணியார்- சிவகாமி அம்மாள் தம்பதியாருக்கு  மகவாக 1906, ஜூன் 26 ல் பிறந்தார் சிவஞானம். பிற்காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்தபோது, மயிலாப்பூர்   பொன்னுசாமி சிவஞானம் என்பதே சுருக்கமாக ம.பொ.சி. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரபலமான பெயராயிற்று.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த சிவஞானம், மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிவந்தது. குலத் தொழிலான நெசவுத்  தொழிலில் குழந்தையாக இருந்தபோதே ஈடுபட்ட அவர், பிற்பாடு  அச்சுக்  கோர்க்கும் தொழில் ஈடுபட்டார். டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் தான் அவரது அச்சுப்பணி (1927-1934) துவங்கியது. அதுவே அவரது இலக்கிய தாகத்திற்கும்,  தேசிய  வேகத்திற்கும்  ஊற்றாக அமைந்தது.

31  வயதில் திருமணம் நடந்தது; ஒரு மகன், இரு மகள்கள் பிறந்த நிலையில்,  நாட்டு விடுதலைப் போரில்  சிவஞானமும் ஈர்க்கப்பட்டார். அவரது அரசியல் ஈடுபாடு காங்கிரசில் அவரைச் சேர்த்தது. மகாத்மா காந்தியின் ஹரிஜன முன்னேற்றப் பணிகளில் ம.பொ.சி. இணைந்தார். சென்னை ஹரிஜன சேவா சங்கத்தின் பிரசாரகராகவும் செயலாளராகவும் (1934) பணியாற்றிய ம.பொ.சி, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணை செயலாளர் ஆனார் (1936). 1947 ல் அதன் செயலாளராக உயர்ந்தார். 1928  முதல் 1947  வரை, பல முறை விடுதலைப்போராட்டங்களில் பங்கேற்ற ம.பொ.சி, ஆறு முறை  சிறைவாசம் அனுபவித்தார்.
700  நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ள ம.பொ.சி, தனது சிறைக்காலத்தை  தமிழின் முதல்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தைக் கற்பதில் செலவிட்டார். அந்த அனுபவமே ‘சிலம்புச்செல்வர்’ என்ற பட்டப்பெயர் கிடைக்கும் வகையில் அவரை உயர்த்தியது. இந்தப் பட்டத்தை  ம.பொ.சி.க்கு வழங்கியவர்  சொல்லின் செல்வர் ரா.பி.சேது பிள்ளை!  சிலப்பதிகாரத்தைக் கொண்டே,  தனித்தமிழ்நாடு கோரிய பிரிவினைவாதிகளை தனது அறிவுத்திறமான வாதத்தால் முடக்கியவர் ம.பொ.சி.

தேசிய இயக்கமான காங்கிரசில் இருந்தபோதும், தமிழகத்தின் உயர்வே ம.பொ.சி.க்கு நோக்கமாக இருந்தது. இது தனது மொழி மீதான பற்றின் காரணமாக விளைந்தது. அதன் காரணமாக 1946  ல் ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன் வாயிலாக, மொழியின் அடிப்படையில் தமிழகம் தனி மாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். அப்போது தென் மாநிலங்கள் இணைந்து சென்னை மாகாணமாக  இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எல்லைப் பிரச்னைகள் ஏற்பட்டன. அப்போது திருப்பதியை தமிழகத்தில் இணைக்கப் போராடிய ம.பொ.சி.க்கு வெற்றி கிடைக்கவில்லை; ஆயினும் திருத்தணி தமிழகத்தில் சேர அவரது போராட்டம் வழி வகுத்தது. திருப்பதி ஆந்திராவில் இணைந்தது. அதேபோல, குமரி மாவட்டம், பீர்மேடு, செங்கோட்டை, தேவிகுளம் பகுதிகள் கேரளாவில் சேராமல் தமிழகத்தில் இணைய பாடுபட்டார். கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை, நேசமணி, டி.வி.ராம சுப்பையர், தாணுலிங்க நாடார் ஆகியோருடன் இணைந்து அதற்காக குரல் கொடுத்தார்.  இப்போராட்டத்தால் குமரி மாவட்டத்தையும் செங்கோட்டை பகுதிகளையும் மட்டுமே பெற முடிந்தது. ஆயினும் ம.பொ.சி.யின் போராட்டம் காரணமாக தமிழ் பேசும் பல பகுதிகள் தமிழகத்திற்கே கிடைத்தன.
தவிர, சென்னை நகருக்கு ஆந்திரா தலைவர்கள் உரிமை கொண்டாடிய போது,  ‘தலையைக்  கொடுத்தேனும் தலைநகரைக்  காப்போம்’ என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் செய்யவைத்து, சென்னை தமிழக  தலைநகராகத்  தொடரக் காரணமானார்.  புதிய மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என பெயர்சூட்ட வேண்டும் என்றும்  ம.பொ.சி. வலியுறுத்தி போராடினார். இந்தக் கோரிக்கை 1969 ல், தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்தால் நிறைவேறியது.
இடைக்காலத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட வேறுபாட்டால், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் (1954) ம.பொ.சி. ஆயினும் தனது தமிழரசுக் கழகம் மூலமாக அரசியல் பணிகளைத் தொடர்ந்தார். அக்காலத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய திராவிடர் கழகம் உமிழ்ந்த வெறுப்பூட்டும் தேசவிரோத, சமயவிரோத பிரசாரங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
காங்கிரஸ் ஆட்சியை இழந்து  திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தேசிய ஒருமைப்பாட்டிற்கான ம.பொ.சி.யின் குரல் ஓங்கி ஒலித்தது. தனது வாழ்வின் இறுதிவரை, தமிழ் மொழி  தேசியத்தின் ஓர் அங்கமே என்று அவர் முழங்கி வந்தார். மாநிலங்கள் தேசிய உணர்வுடன் வலிமையாக தேசமாகப் பிணைந்திருக்க மாநில சுயஆட்சி வழங்கப்பட வேண்டும் என்று ம.பொ.சி. குரல் கொடுத்து வந்தார்.
சிறந்த மேடைப் பேச்சாளரான ம.பொ.சி. சிலப்பதிகாரம் குறித்து மணிக் கணக்கில் பேச வல்லவர். பேச்சாளராக மட்டுமல்லாது சிறந்த  எழுத்தாளராகவும்  அவர் விளங்கினார். தவிர தேர்ந்த பத்திரிகையாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். மாதமிருமுறை இதழான ‘கிராமணி குலம்’ (1934-1937),  தமிழக எழுத்தாளர் சங்கத்தின் மாத இதழான ‘பாரதி’ (1955-1956), ‘தமிழ் முரசு’ (1946-1951), ‘தமிழன் குரல்’ (1954-1955), வார இதழான ‘செங்கோல்’ (1950-1995) ஆகிய பத்திகைகளின் ஆசிரியராக திறம்பட இயங்கிய ம.பொ.சி, அவற்றில் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் மதிப்பற்றவை.
அவரது எழுத்துகள்  பல நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர தனியே பல நூல்களையும் ம.பொ.சி. எழுதியுள்ளார். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற அவரது நூல், சாஹித்ய அகாதமி விருது (1966) பெற்றது. வ.உ.சி,  கட்டபொம்மன்,  பாரதி,  சிங்காரவேலர்   போன்றவர்களது  வாழ்க்கை வரலாறுகளை   எழுதியுள்ள ம.பொ.சி,  ‘விடுதலைப்போரில் தமிழகம்’ , ‘விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’, ‘எனது போராட்டம்’ ஆகிய நூல்களின் வாயிலாக விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை அரிய ஆவணமாகப் பதிவு செய்தார். தனது வாழ்நாளில் 140 க்கு மேற்பட்ட நூல்களை ம.பொ.சி. எழுதினார்.
– இவ்வாறு இலக்கிய உலகிலும் எழுத்துலகிலும் முத்திரை பதித்த ம.பொ.சி,  கல்விப்பணிகளிலும் சமூகப் பணிகளிலும், தொழிலாளர் சங்கப் பணிகளிலும்  இடையறாத   ஆர்வத்துடன் ஈடுபட்டார். சென்னை, மதுரை, தஞ்சை, சிதம்பரம் பல்கலைக்கழகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த ம.பொ.சி, நூலக ஆணைக்குழுவுக்கென தமிழகத்தில் தனித்துறை நிறுவவும் காரணமானார்.
இத்தனைக்கும் அவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. தனது தொடர்ச்சியான இலக்கிய நாட்டத்தாலும், பட்டறிவாலும், தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொண்ட ம.பொ.சி, தனது அனுபவங்கள் எதிர்கால தலைமுறையும் பெற வேண்டியே அற்புதமான நூல்களை ஆக்கித் தந்துள்ளார். அவரது பல நூல்கள் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
தமிழிசையைப்  பரப்புவதிலும் ம.பொ.சி. முன்னின்றார்; 1982 -83 ல் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை விழாக்குழுத் தலைமையேற்று திறம்பட நடத்தினார். சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தை (1948-1955), சட்ட மேலவை உறுப்பினர் (1952-1954 மற்றும் 1978-1986), சட்டமன்ற உறுப்பினர் (1972-1978) ஆகிய பதவிகளில் மக்கள் பிரதிநிதியாகவும் ம.பொ.சி. விளங்கினார். தமிழக சட்ட மேலவையின் தலைவராக (1978-1986) ம.பொ.சி. இருந்த காலகட்டம், மேலவையின் பொன்னான காலம் என்று போற்றப்படுகிறது. 1986 ல் மேலவை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனால் கலைக்கப்பட்டது.
தனது வாழ்வின் இறுதிக்காலகட்டத்தில், அரசியல்ரீதியாக துறவு மேற்கொண்ட ம.பொ.சி, 1995, அக்டோபர் 3 ல் மண்ணுலகை நீத்தார்.
பாரதத்தின் அடித்தள ஒற்றுமையில் தமிழின் பங்களிப்பையும் தமிழர்களின் ஒத்துழைப்பையும் பதிவு செய்ததே ம.பொ.சி.யின் மகத்தான சாதனை. தமிழும் தேசியமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரின் பிறந்த நாளன்று அவரது அமரத்துவமான வாழ்வை நினைவுகூர்வோம்.

காண்க:
முத்துவிஜயன்


No comments:

Post a Comment