பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

17/07/2020

கணித மேதையின் கதை - 4

-ஆதலையூர் த.சூரியகுமார்


ஸ்ரீனிவாச ராமானுஜன்
(டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)

கணித மேதையின் கதை
(ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்கள்)



76. குளிரின் கணக்கு:

ராமானுஜன் பயந்தது போலவே லண்டன் குளிரை அவரால் தாங்க முடியவில்லை.
கல்லூரி முடிந்து வந்ததும் தீ மூட்டி நெருப்பு அருகே அமர்ந்து கொள்வார். ஆனாலும்
அங்கே உட்கார்ந்து கொண்டே கணித ஆராய்ச்சிக் குறிப்புகளை எல்லாம் எழுதத் தொடங்குவார். அந்தக் கட்டுரைகளை எல்லாம் உடனடியாக ஹார்டியின் பார்வைக்கு
அனுப்பி வைப்பார். ஹார்டி அதனை சரிபார்த்து லண்டன் கணித சங்கத்துக்கு
அனுப்பிவிடுவார்.

77. மொழிகளின் கணக்கு:

 1914 ஆம் ஆண்டுதான் ராமானுஜன் லண்டன் போய் சேர்ந்தார். ஆனால் அதே ஆண்டு
முதல் உலகப்போர் தொடங்கியது. லண்டனிலிருந்து வெளிநாட்டவர்கள் எல்லாம்
அவரவர் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ராமானுஜனும் தாய்நாடு திரும்பி
விடலாம் என்று நினைத்தார். ஆனால் ஹார்டி ராமானுஜனுக்கு நம்பிக்கையும்
ஆறுதலும் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் லண்டன் பத்திரிகையில் வரக்கூடிய
கணக்குகளைப் புரிந்து கொள்வதற்காக லத்தீன், ஜெர்மனி மொழிகளையும் ஹார்டி கற்றுக்
கொடுத்தார். 

78. உணவுப் பிரச்னை: 

முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததால் ராமானுஜனின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
பத்திரிகைகளில் வெளிவருவதில் தாமதமானது. ஆனாலும் ராமானுஜனுடன் இணைந்து
ஹார்டி அவர்களும் சில கணிதப் புதிர்களை உருவாக்கினார். அப்போது கணிதத்தில்
ராமானுஜனின் அசுர வேகத்தைப் பார்த்து ஹார்டி ஆச்சரியப்பட்டுப் போனார். அதேசமயம்
இங்கிலாந்தின் உணவு வகைகள் அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையை
ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் கும்பகோணத்தில் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது
“இங்கு என்னுடைய பணி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பற்றி நீங்கள்
கவலைப்பட வேண்டாம். நான் மிகவும் நன்றாக உள்ளேன்’ என்று தனது சிரமங்களை
எல்லாம் மறைத்துவிட்டு கடிதம் எழுதுவார்.

 79. கடிதங்களின் கணக்கு:

மகனிடமிருந்து ஒரு மாதமாக கடிதம் எதுவும் வராததால் பதறிப் போனார் ராமானுஜனின்
தாயார் கோமளத்தம்மாள். ஆனால் முதல் உலகப்போரின் காரணமாகத்தான் தன்னால்
கடிதம் எழுத முடியவில்லை என்பதை ராமானுஜன் குறிப்பிட்டிருந்தார். 'முதல்
உலகப்போரின் காரணமாக இங்கு ஏராளமான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இந்தியர்களும் போருக்காக நிறைய பேர் வந்து இறங்குகிறார்கள், நிலைமை மிகவும்
மோசமாக உள்ளது' என்று ஒருமுறை கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்
ராமானுஜன். அதைப் படித்தவுடன் மிகவும் வருத்தப்பட்டார் தாயார். யாருக்கும் எந்த
ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று நாமகிரித் தாயாரிடம் வேண்டிக்கொண்டார்.

 80. மேதைகளுக்கெல்லாம் மேதை: 

ஹிங்ஸ் கல்லூரிப் பேராசிரியர் ஆர்தர் பெர்ரி ராமானுஜத்தின் கணக்குகளை எல்லாம்
பார்த்து ஆச்சரியப்பட்டார். இங்கிலாந்திலேயே மிகப் பெரிய கணித மேதை எல்.ஜே.ரோஜர்
என்பவர்தான். ஆனால் அவரது கணக்குகளை எல்லாம் மிக எளிமையான முறையில்
போட்டுக் காட்டினார் ராமானுஜன். இதனால் பேராசிரியர் பெர்ரி ஏதாவது ஒரு வகையில்
ராமானுஜனை கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்தச் சமயத்தில் லண்டன்
கணித சங்கத்தினர் ராமானுஜனின் கணிதக் குறிப்புகளை வைத்து விவாதம் நடத்திக்
கொண்டிருந்தார்கள்.

81. கௌரவப் பட்டம்:

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1916 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி பி.ஏ. பட்டம் வழங்கி
ராமானுஜனை கௌரவப்படுத்தியது. அது மிகப் பெரிய கௌரவம். எஃப்.ஏ. தேர்வில்
மூன்று முறை ராமானுஜன் தோல்வியடைந்திருந்தார். ஆனால் அவருடைய கணிதத்
திறமையினால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் கௌரவப் பட்டம் கொடுத்தது என்பது
அவருடைய கணிதத் திறமைக்குச் சான்று. ஒருவருக்கு எந்தத் திறமை இருக்கிறதோ
அந்தத் திறமையில் அவர் வெற்றி கொள்ள முடியும் என்பதற்குச் சான்று. ராமானுஜம் பி.ஏ.
பட்டம் செய்தியை அறிந்த தாயாரும் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
தங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் அதைச் சொல்லி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்
கோமளத்தம்மாள்.

82. கும்பகோணத்தில் கொண்டாட்டம்:

ராமானுஜனுக்கு கௌவரப் பட்டம் வழங்கப்பட்ட செய்தி கும்பகோணம் வந்தடைந்தது.
மக்கள் வீதி எங்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். கல்வி நிலையங்கள்
ராமானுஜனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தன. சென்னையிலுள்ள கல்வியாளர்கள்
பாராட்டு விழா எடுத்தார்கள். ராமானுஜன் படித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவருக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்திருப்பதை
நினைத்து பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்து விழா எடுத்துக் கொண்டாடினார்கள். 

83. புதிய பறவை:

கௌரவப் பட்டம் பெற்ற பிறகு ராமானுஜனிடம் புதிய ஆற்றல், புதிய உற்சாகம்,
பிறந்திருந்தது. தனது ஆய்வுகளை மேலும் தீவிரப்படுத்தினார். நிறைய ஆய்வுக்
கட்டுரைகள் எழுதினார். 1914 ஆம் ஆண்டு முதல் 1917ஆண்டுக்குள்  21 ஆராய்ச்சிக்
கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருந்தார் ராமானுஜன். இங்கிலாந்திலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளிவந்த பத்திரிகைகளில் இந்த கணித ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன. உலகில் உள்ள கணித மேதைகளால் இந்தக் கட்டுரைகள் பெரிதும்
பாராட்டப்பட்டன.

84. மகலோநோபிஸ் மலைப்பு!

பிரசாந்த சந்திர மகலநோபிஸ் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கணித மேதை. அவர்
ராமானுஜனை லண்டனில் நேரில் சந்திக்க விரும்பி ஒரு முறை வந்திருந்தார். இருவரும்
நண்பர்களாகி விட்டார்கள். அதுபோல ஒருமுறை ராமானுஜன், பி.சி.மகலநோபிஸ்
வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது 'லோன்' என்பவருடைய கோண சாஸ்திர
(முக்கோணவியல்) நூலை அங்கே பார்த்தார் ராமானுஜன். அப்போது மகலநோபிஸ்
"அதில் உள்ள விஷயங்களை எல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.

அதற்கு ராமானுஜன் "அது அப்படி ஒன்றும் கடினமான நூலே இல்லை. நான் எட்டாம்
வகுப்பு படிக்கும்போதே இந்த நூலை முழுவதுமாகப் படித்து முடித்துவிட்டேன்" என்றார்.
சொன்னதோடு இல்லாமல் அந்த திரிகோணமிதி புத்தகத்தில் இருந்த கணக்குகளை
எல்லாம் தெளிவாக விளக்கிச் சொன்னார் ராமானுஜன். மகாலநோபிஸ் ராமானுஜனைப்
பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் ஆரத்தழுவிக் கொண்டார். 

85. உடல்நிலையில் சிக்கல்:

ராமானுஜன் புகழ்வாய்ந்த மனிதராக வளரத் தொடங்கியிருந்தார். அந்தச் சமயத்தில்தான்
அவருக்கு சோதனையாக உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சின்ன இருமலில்
ஆரம்பித்து நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. பேச முடியாத அளவுக்கு
சிரமப்பட்டார். இதனைத் தெரிந்துகொண்ட ஹார்டி அவரை மருத்துவமனையில் சேர்த்து
சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். சிகிச்சை பலனளிக்கவில்லை. ராமானுஜனை தனது
வீட்டிலேயே அழைத்துச்சென்று தங்கவைத்து தரமான மருத்துவ சிகிச்சைகளை
மேற்கொண்டார். ஆனாலும் ராமானுஜனின் உடல்நிலையில் எந்தவிதமான மாற்றமும்
இல்லை. மேலும் மேலும் அவர் இளைத்துக் கொண்டே போனார்.

86. ராமானுஜனின் ஆசை! 

தாயாரையும் மனைவியும் பிரிந்து வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுவே
ஒருவிதமான தனிமை உணர்வை ராமானுஜனுக்கு ஏற்படுத்தியிருந்தது. உடல்நிலை
வேறு சரியில்லை. இந்தச் சமயத்தில் மனைவி ஜானகி அருகில் இருந்தால் நன்றாக
இருக்குமே என்று நினைத்து கடிதம் எழுதினார். ஆனால் தன் மருமகளை லண்டன்
அனுப்ப கோமளத்தம்மாள் விரும்பவில்லை. ‘உன் மனைவி லண்டனுக்கு வந்தால் உனது  ஆராய்ச்சி பணிகளில் இடையூறு ஏற்படும்’ என்று சொல்லி அனுப்ப மறுத்து விட்டார்.
ராமானுஜனும் அதற்குமேல் வற்புறுத்த விருப்பமில்லாமல் விட்டுவிட்டார். 

87. பாராட்டும் பரிதவிப்பும்:

லண்டன் ராயல் சொஸைட்டி ராமானுஜனின் கணிதத் திறமையைத் தெரிந்துகொண்டு
அவரை கௌரவிக்க முடிவு செய்திருந்தது. அதற்கான பாராட்டு விழா 1918 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது மனதிற்கு மிகுந்த மனமகிழ்ச்சியை
ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் அவர் உடலால் சோர்ந்து போயிருந்தார். உடல்நலம் பற்றி
விசாரித்தபோது ராமானுஜன் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தார்.

88. மோதாமல் நின்ற ரயில்:

இங்கிலாந்தில், லண்டனில் பாதாள ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின்
தற்போதைய பேருந்துகள் மாதிரி அந்த ரயில்களில் தானியங்கி கதவுகள் இருந்தன.
ஒருநாள் ரயில் வந்து நின்றபோது கதவுகள் சரியாக மூடவில்லை.  ரயிலை நிறுத்தி விட்டு
கதவுகளை சரி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது தூரத்தில் தண்டவாளத்தில் ஓர்
உருவம் உட்கார்ந்து இருந்ததைப் பார்த்தார்கள். அங்கே போய்ப் பார்த்தால் அவர்
ராமானுஜன். 'ஏன் அவர் தண்டவாளத்தில் வந்து அமர்ந்திருந்தார்' என்பது கடைசிவரை தெரியவில்லை. ஆனால் இப்படி தண்டவாளத்தில் அமர்ந்திருப்பது  இங்கிலாந்து நாட்டு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அவர் விசாரணைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார். ராமானுஜன் வாழ்க்கையில் நடந்த ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் இது.
இல்லை, இல்லை. இது அதிர்ஷ்டமான சம்பவம்தான். ரயில்களில் தானியங்கிக் கதவு
மூடிக் கொள்ளாமல் போவது இங்கிலாந்தில் அதுதான் முதல் முறை. ராமானுஜன்
காப்பாற்றப்பட்டது தெய்வீகச் செயல்தானே? 

89. ஹார்டியின் போராட்டம்: 

ஹார்டி காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கே ராமானுஜன் மரியாதையுடன் நடத்தப்
பட்டிருந்தார். “இவரை எதற்கு இங்கு அழைத்து வந்தீர்கள்? இவர் யார் தெரியுமா?
உலகத்தின் மிகச் சிறந்த கணித மேதை” என்று ஹார்டி போலீசாரிடம் கடுமையான
வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாராக இருந்தாலும் தண்டவாளத்தில் அமர்வது குற்றம்,
நாங்கள் எங்கள் கடமையைத் தான் செய்கிறோம் என்று காவல் னர்சொன்னார்கள்.
'ராமானுஜனை நீங்கள் தவறாக புரிந்து கொள்கிறீர்கள், அவர் குற்றவாளி அல்ல. இவர்
டிரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்’ என்று ஹார்டி சொன்னார்.
இறுதியாக லண்டன் ராயல் சொஸைட்டி  இவருக்கு விருது கொடுத்து கௌரவித்து இருக்கிறது என்றும் சொன்னார். ராமானுஜனைக் காப்பாற்றுவதற்காக இனிமேல் வழங்கப்போகும் விருதை, ஏர்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவே சொன்னார் ஹார்டி. அதற்குப் பிறகுதான் ராமானுஜனை காவல் நிலையத்திலிருந்து அனுப்பினார்கள். 

90. காவல் துறையின் கண்ணியம்:

ராமானுஜனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் துறை அதிகாரி, பின்னர்
ஒருமுறை பேராசிரியர் ஹார்டி அவர்களைச் சந்தித்து ஒரு விளக்கம் கொடுத்தார். நீங்கள்
“ராமானுஜன் ராயல் சொஸைட்டியில் கௌரவிக்கப்பட்டார் என்று சொன்னதற்காக அன்று
விடுவித்தேன். ஆனால்  அந்த விருது அப்போது அவருக்கு வழங்கப்படவில்லை என்று
எனக்குத் தெரியும். மேலும் அப்படி விருது வழங்கி இருந்தாலும்கூட தண்டனைக்குரிய
குற்றங்களிலிருந்து ஒருவருக்கு விலக்கு இல்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால்
உலகப் புகழ்பெற்ற ஒரு கணிதமேதை களங்கத்துக்கு உள்ளாகி விடக்கூடாது என்றுதான்
அவரை விசாரணையில் இருந்து விடுவித்தேன்” என்று சொன்னார் காவல் துறை
அலுவலர். அந்த அதிகாரியை கட்டிக் கொண்டு நன்றி தெரிவித்தார் ஹார்டி.

91. பேரும் புகழும்:

 1918 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி லண்டன் ராயல் சொஸைட்டி ராமானுஜனுக்கு
கௌரவப் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியர்
என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆண்டு ஒன்றுக்கு 3,750 ரூபாய் சன்மானமாக ஆறு
ஆண்டுகளுக்கு கொடுப்பதற்கான உத்தரவு அடங்கியது அந்தப் பட்டம். அதைத்தொடர்ந்து
லண்டன் மக்களிடையே ராமானுஜனின் புகழ் வேகமாகப் பரவியது. பல்வேறு இடங்களில்
அவர் சிறப்பு ரைக்காக அழைக்கப்பட்டார். எங்கெல்லாம் அழைக்கப்பட்டாரோ
அங்கெல்லாம் அவர் கௌரவிக்கப்பட்டார்.

92. சென்னையிலும் கௌரவம்:

லண்டன் ராயல் சொஸைட்டி பாராட்டிய பிறகு சென்னையிலும் அவருக்கான
பாராட்டுகள்  தொடங்கின. (வெளிநாட்டுக்காரர்கள் பாராட்டிய பிறகுதானே நம்மூரில்
மதிக்கிறார்கள்?) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர்
என்பதற்காக சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு சிறப்புச் செய்தது. தங்கள்
பல்கலைக் கழகம் சார்பாகவும் ஆண்டுக்கு 3,750 ரூபாயை ஐந்தாண்டுகளுக்குத் தர
முன்வந்தது. அதற்கான உத்தரவையும் ராமானுஜனுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக்
கடிதம் கிடைத்ததும் ராமானுஜன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனக்குத் தர இருக்கும்  உதவித்தொகையில் இருந்து மாதம் 60 ரூபாயை கும்பகோணத்தில் இருக்கும் தன்
குடும்பத்துக்கு அனுப்பும்படி அவர் கேட்டுக்கொண்டார். 

93. உடல்நலம் குன்றிய ராமானுஜன்:

 ராமானுஜன் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத்
தொடங்கியபோதுதான் அவருடைய உடல்நலம் மிகவும் சரியத் தொடங்கியிருந்தது.
லண்டனின் சூழல்கள் ஒத்துக் கொள்ளாமல் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். மருத்துவர்கள்
அவருக்கு காசநோய் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஹார்டி மிகவும் வருத்தப்பட்டார்.
இந்தச் சமயத்தில் அவருக்கு மிகவும் உதவியாகவும் இருந்தார். அதேசமயம்
ராமானுஜனை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுவதே மிகச் சரியான முடிவாக
இருக்கும் என்று நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். 

94. ராமானுஜன் இந்தியா புறப்படுதல்:  

1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி இந்தியாவுக்குப் புறப்பட்டார் ராமானுஜன். ஹார்டி
உட்பட அங்கிருந்த கணிதமேதைகள் பலரும் அவரை வழியனுப்ப வந்திருந்தார்கள்.
எஸ்.எஸ்.நகோயா என்ற கப்பலில் ராமானுஜன் இந்தியாவுக்குக் கிளம்பினார். மார்ச் 26ஆம்
தேதி அவர் மும்பை வந்து சேர்ந்தார். பல முக்கியப் பிரமுகர்கள் ராமானுஜனை
வரவேற்றார்கள். ராமானுஜனின் தாயாரும் மும்பைக்கு வந்திருந்தார். ராமானுஜனின்
உடல்நிலையைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார் கோமளத்தம்மாள். அந்த அளவுக்கு
ராமானுஜன் உடல் மெலிந்திருந்தார். தாயாரைப் பார்த்த ராமானுஜன் மிகவும் மகிழ்ச்சி
அடைந்தார். 

95. சென்னையில் ராமானுஜன்: 

மும்பையில் இருந்து ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார் ராமானுஜன்.
ஆனால் தன்னை வரவேற்க அப்போது தன்னுடைய மனைவிக்கு வரவில்லை என்பது
வருத்தமாகவே இருந்தது. ஜானகிக்கு உடல்நிலை சரியில்லை என்று தாயார் செய்தி
சொல்லி இருந்தார். சென்னையில் ராமானுஜனுக்கு பிரமாண்டமான வரவேற்பு
வழங்கப்பட்டது. எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் உள்ள பிரபல வழக்கறிஞர் ஆதி
நாராயண செட்டியார் பங்களாவுக்கு அழைத்துச் சென்று அங்கே சகல வசதிகளுடனும்
ராமானுஜனைத் தங்க வைத்தார்கள்.

96. மனைவி  ஜானகி வருகை: 

ராமானுஜன் தன் தாயாருடன் அந்த பங்களாவில் தங்கியிருந்தார். தான் சென்னைக்கு
வந்து விட்ட செய்தியைச் சொல்லி சென்னைக்கு வரும்படி மனைவிக்கு கடிதம்
எழுதியிருந்தார் ராமானுஜன். ஜானகி தன்னுடைய தந்தையை அழைத்துக்கொண்டு
சென்னைக்கு வந்து விட்டார். கணவர் உடல்நலமில்லாமல் வந்திருக்கிறார் என்ற செய்தி
கேட்டு துடித்துப் போனார் ஜானகி. தன் கணவரைப் பார்த்து ஜானகி கண்கலங்கினார். அவர்
உடல் மெலிந்திருந்தது கண்டு வருந்தினார். ‘இனிமேல் நீ என்னுடன்தானே இருக்கப்
போகிறாய், வருத்தப்பட வேண்டாம்’ என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னார் ராமானுஜம்.

 97. நண்பர்களின் வருகை: 

ராமானுஜன் சென்னையில் தங்கி இருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் நிறைய
வி.ஐ.பி.க்கள் சென்னையில் வந்து ராமானுஜனைச் சந்தித்தார்கள். ராஜாஜி, கஸ்தூரிரங்க
ஐயங்கார், பி.எஸ்.சிவசாமி ஐயர், ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், திவான்பகதூர் ராமசந்திர ராவ்,
ஸ்ப்ரிங் போன்றவர்கள் அடிக்கடி வந்து சந்தித்துச் சென்றார்கள். ராமானுஜனுக்குச்
செய்யப்படும் மருத்துவச் சிகிச்சைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
மருத்துவர்கள் ராமானுஜனை  நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று
அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால் ராமானுஜன் அவற்றை எல்லாம் கேட்டுக்
கொள்ளவில்லை. கணித ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருந்தார்.
அந்த நேரத்திலும்கூட தனது பெரும்பாலான நேரத்தை கணித ஆராய்ச்சிகளுக்காகச்
செலவிட்டார். 

98. இடமாற்றம்:

சென்னையில் ராமானுஜனுக்கு நிறைய தொந்தரவுகள் இருந்ததால் அமைதியான இடம்
வேண்டும் என்று அவருடைய நண்பர்கள் கருதினார்கள். எனவே ஈரோட்டுக்கு
அருகிலுள்ள கொடுமுடி என்ற ஊருக்கு அவர் அழைத்து வரப்பட்டார். ஆனால்
கொடுமுடியில் ஒரு மாதம் மட்டுமே இருந்தார். திரும்பவும் சென்னைக்கு வந்து விட்டார்.
1920 ஆண்டு ஜனவரி மாதம் சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள நம்பெருமாள்
செட்டியாரின் புகழ்பெற்ற பங்களாவில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மருத்துவச் செலவுகள் கூடிக் கொண்டு போனதே தவிர, அவரது உடல் நிலையில் எந்த
முன்னேற்றமும் இல்லை.  'என் ஜாதகப்படியும் கைரேகைப்படியும் நான் 33 வயதுக்கு
மேல் உயிர் வாழ மாட்டேன் என்பது எனக்கு மிக தெளிவாகத் தெரியும்' என்று
நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராமானுஜன்.

99. இறுதி நாள்:

நம்பெருமாள் செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார் ராமானுஜன். நம்பெருமாள் செட்டியார்
சென்னையில் உள்ள பிரபலமான சென்னை ஹைகோர்ட் கட்டடம், ஜெனரல் போஸ்ட்
ஆபீஸ், மெட்ராஸ் மியூசியம், ஜார்ஜ் டவுனில் உள்ள ஒய்எம்சிஏ கட்டடம்
போன்றவற்றைக் கட்டிய பொறியியல் நிபுணர். அவர் வீட்டில்தான் ராமானுஜனுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் ராமானுஜனின் உடல்நிலை மிகவும் மோசம்
அடையத் தொடங்கியது.1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி ராமானுஜன் இயற்கை
எழுதினார். அப்போது அவருக்கு வயது 33 தான். 

100. நினைவுகள்:

ராமானுஜன் மறைந்ததும் ஹார்டி இப்படி எழுதினார்:  ''விலைமதிப்பில்லாத ஒரு
பொக்கிஷத்தை நான் இழந்துவிட்டேன். ஐரோப்பாவின் தலைசிறந்த கணித
மேதைகளாகப் போற்றப்பட்ட சிலருக்கு இணையான மாமேதை ராமானுஜன்.
என்னிடமிருந்து அவர் கற்றதை விட அவரிடமிருந்து நான் கற்றதுதான் அதிகம்” என்றார்.
பேராசிரியர் நெவில் குறிப்பிடும்பொழுது, ‘கணிதம் உள்ளளவும் ராமானுஜனின் புகழ்
இருக்கும்’ என்று உள்ளம் நெகிழ்ந்தார்.

ராமானுஜன் எழுதிய கணிதக் குறிப்புகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு 'ராமானுஜனின்
குறிப்புகள்' என்ற பெயரில் இன்று வரையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ராமானுஜ
நிலையம் என்ற ஓர் அமைப்பை கொடை வள்ளல் அழகப்ப செட்டியர் நிறுவினார்; உலகில்
வெளியிடப்பட்டுள்ள அத்தனை கணித நூல்களையும் அங்கு இடம் பெறச்
செய்திருக்கிறார். ராமானுஜன் நினைவாக தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடற்படைக் கப்பல் ஒன்றுக்கு ‘ஸ்ரீனிவாச ராமானுஜன்’ கப்பல் என்று பெயர்சூட்டி
நம்முடைய அரசாங்கம் கௌரவித்திருக்கிறது. அவர் படித்த கும்பகோணம் நகரவை
மேல்நிலைப் பள்ளியில் 'ராமானுஜன் ஹால்' என்று ஒரு அரங்கத்துக்குப் பெயர்
சூட்டியிருக்கிறார்கள்.

(நிறைவு)

காண்க:ஆதலையூர் த.சூரியகுமார்
கணித மேதையின் கதை

No comments:

Post a Comment