ஜெயகாந்தன் (1934 ஏப்ரல் 24 - 2015 ஏப்ரல் 8) |
1959-ல், திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தேவர் ஹாலில் நடைபெற்றது. அதன் திறப்பாளரான ஈ.வெ.ராமசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தும், ‘நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசி முடித்து அமர்ந்தார்.
அடுத்துப் பேசிய இளம் எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் பேசியதன் சுருக்கம் இது...
மாநாட்டின் திறப்பாளராய் வீற்றிருக்கிற நாத்திகப் பெரியார் திரு. ஈ.வே.ரா.அவர்களே,
நமது காட்டுமிராண்டித்தனத்துக்கோ, நாம் மூடர்களாய் இருப்பதற்கோ, நமது வறுமைக்கோ பிராமணர்கள் காரணமல்ல; பிராமண தர்மங்களும் காரணமல்ல; நமது மதங்களும் காரணமல்ல; நமது கோயில்களும் புராணங்களும் காரணமல்ல. தெளிவாகச் சொன்னால் இந்தப் பொதுவான வீழ்ச்சிக்குப் பிராமணர்களும் பலியாகியே இருக்கிறார்கள். அதன் காரணமாகப் பலரின் வசைக்கு அவர்களும் ஆளாகியிருக்கிறார்கள்.
பிராமண தர்மங்களிலிருந்து அவர்கள் வழுவிப் போனதனாலேயே நமக்குக் கேடு சூழ்ந்தது என்று பாரதியார் பிராமணர்களைச் சாடுகிறார். எனக்கும் ‘பிராமண எதிர்ப்பு’ உண்டு. அது பாரதியார் வழி வந்தது. ‘பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழ்பட்ட கலியுகம்’ என்று தனது சுய சரிதையில் பாரதி குறிப்பிடுகிறான். அந்நியருக்கு ஏவல் புரிந்த ஆங்கிலக் கல்விமான்களாய், ஆங்கில அரசாங்கத்தின் அதிகாரிகளாய், அறிவற்ற விதேசி மோகிகளாய் வாழ்ந்த பிராமணர்களை மிகக் கடுமையாக எதிர்த்தான் பாரதி.
ஆயினும் பிராமணீயத்தின் சார்பாகவே எதிர்த்தான். நான் பிராமணர்களை எதிர்க்க வேண்டுமெனில், அதற்குக் காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்காக அல்ல; பிராமணத்துவத்தை அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்.
நமது சமூகம் புதுமையுற வேண்டும். அதற்குப் பொருள், ஆங்கில பாணியில் அதனை மாற்றுவது அல்ல. நமது பழமையை நாம் அறிந்து கொள்ளாமல், முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றிப் ‘பின்னர் நாடுறு பெற்றி’யை நாம் உணர முடியாது.
நமது சமூகம் புதுமையுற வேண்டும். அதற்குப் பொருள், ஆங்கில பாணியில் அதனை மாற்றுவது அல்ல. நமது பழமையை நாம் அறிந்து கொள்ளாமல், முன்னர் நாடு திகழ்ந்த பெருமையையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியையும் பிரித்து அறிந்தாலன்றிப் ‘பின்னர் நாடுறு பெற்றி’யை நாம் உணர முடியாது.
வருணாச்ரம தர்மத்தால் இந்நாடு மேன்மையுற்று வாழ்ந்தது. அந்தத் தர்மங்கள் கெட்டதனாலேயே தேசம் கெட்டது. ஆன்மீகத்தால் இந்தியக் கலாசாரமும் இந்திய சமுதாயமும் நாகரிகச் செழிப்புற்று விளங்கியது. அந்நியர் வருகையாலும், அடிமை வாழ்க்கையாலுமே நமது அவலங்கள் உருவாயின.
இந்தியாவின் பெருமையையும், தமிழனின் சிறப்பையும் பேசுகிறபொழுது நமக்குள்ளே பகைமை வளர்த்துக் கொள்கிற வகுப்புவாதியைப் போலவும் பிரிவினைவாதியைப் போலவும் நான் பேசவில்லை. பெரியார் அவர்கள், பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார். இதை ஏற்றுக் கொள்ள எனக்கு எந்த வித முகாந்திரமுமில்லை.
வடக்கே வாழ்கிறவர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்ல; பிராமணர்கள் நமது சமூகத்தின் பிரிவினரேயல்லாமல் அவர்களே ஒரு சமுதாயம் அல்ல. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் ஆந்திரர்களாக அங்கீகரிக்கப்படுகிற பொழுது, வங்காளப் பிராமணர்கள் வங்காளிகளாக அங்கீகரிக்கப்படுகிற பொழுது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் மட்டும் தமிழர்கள் ஆகாதிருப்பது எங்ஙனம்?
அவர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியோடு அதிகம் தொடர்பும் பற்றும் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழர் நலனுக்கு விரோதமான பண்பு என்று நான் குற்றம் சொல்லத் தயாராயில்லை. ஏனெனில், ஸ்ம்ஸ்கிருதம் என்பது இந்தியாவின் பொதுச் செல்வமே தவிர, அது எந்தப் பிரிவினருக்கும் சொந்தமான ஏகபோக மொழியல்ல. ஸ்ம்ஸ்கிருத மொழிக்கென்று ஓர் இனமோ, ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்போ இந்தியாவில் தனியாக ஒன்றுமில்லை. அது ஓர் ஆதிக்க மொழி அன்று.
அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக ஸ்ம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவனாய் இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் ஸ்ம்ஸ்கிருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள்.
மேலும் ஸம்ஸ்கிருதக் கலைச் செல்வங்கள் தமிழர்கள் அருளியது அனந்தம். தமிழர் நாகரிகத்தின் பொற்காலங்களில் ஸம்ஸ்கிருதம் அருமையான போஷாக்குப் பெற்றிருக்கிறது. நாளந்தாவுக்கு இணையான காஞ்சி சர்வகலாசாலையில் ஸம்ஸ்கிருதப் பேரறிஞர்களான தமிழர்கள் ஆசான்களாய் இருந்திருக்கிறார்கள்.
தர்க்க சாஸ்திரத்தின் பிதாமகனாகக் கருதப்படுகிற திங்கநாதன் ஒரு தமிழனே ஆவான். இந்தியாவின் எட்டுத் திக்குகளிலும் இந்து சனாதனத்தின் பெருமையைக் கொடி நாட்டி, பௌத்தர்களையும் நாத்திகர்களையும் தனது ஞான வன்மையால் வென்று உபநிஷத்துச் செல்வங்களை உலகுக்கு அளித்த ஆதிசங்கரன் ஒரு தமிழனே ஆவான்.
கயிலையங்கிரியிலுள்ள சிவாலயத்துக்கு அர்ச்சகராய் இன்றும் தென்னாட்டைச் சேர்ந்த ஒரு “போற்றி”யே போகிறார். நமது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ராமாநுஜரின் பெயரால் வடபுலம் எங்கும் ராமாநுஜ கூடங்கள் நிறைந்து கிடக்கின்றன. இந்து சமயத்தின் இன்னுமொரு செல்வமான வைணவத்தை வடக்குக்கு அருளியது தெற்கே ஆகும். மற்றுமொரு மார்க்கமான மாத்வத்தை வட நாட்டினருக்கு அறிமுகம் செய்ததும் நமது கும்பகோணத்தில் பிறந்த ஒரு தமிழன் தான்.
அந்நியரின் படையெடுப்பிலிருந்து இந்தியாவைப் பாதுகாத்த வடபுலத்து ரஜபுத்திர வீரர்களுக்கு இணையாக இந்தியாவின் சமயத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் காப்பாற்றுவதற்கு ஞான வீரர்களைத் தமிழகமே தந்திருக்கிறது. ஸம்ஸ்கிருதப் பகைமை என்பதே பிரிட்டிஷ்காரர்கள் செய்த சூழ்ச்சியின் விளைவு. அந்த வீழ்ச்சியுற்ற காலத்தில் தோன்றிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையைப் போன்ற தமிழ்ப் புலவர் காலத்திலேதான் இந்த வடமொழிப் பகைமை என்கிற வியாதி நம்மைப் பிடித்தது.
நமது ‘மூடத்தன’த்துக்கு இணையாகவும் அதிகமாகவும் உள்ள மூடத்தனங்கள் கிரேக்கப் புராணங்களிலும் உண்டு.
மனிதர்கள் வாழ்ந்த, பேசிய மொழிகள் எல்லாவற்றிலும் ‘மூடத்தனம்’ உண்டு.
நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத, ஊனமொன்றறியா ஞானமெய்ப் பூமியாய் இந்தியா திகழ்ந்தது. பிராமணர்கள் நமது அறிவுக்கும், ஞானத்துக்கும் தலைமை ஏற்று வழி நடத்திய சமூகத்தில் உயர்வு, தாழ்வு இருந்தது இல்லை.
மனு தர்ம சாஸ்திரத்தில் சமூக நியாயங்கள் பேதப்படுகின்றனவே என்று கேட்கலாம். மனு தர்மம் ஒரு சட்டம். காலத்தின் தேவையால், நிர்ப்பந்தத்தால் உருவான சட்டம் அது. அதனை இக்கால அறிவும் அனுபவமும் கொண்டு பார்த்தல் தகாது. ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை நான் மறைக்க முயலவில்லை. ஆனால் அந்தக் குறைகளுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் சம்பந்தமில்லை என்றே சொல்லுகிறேன். எல்லாக் காலங்களிலும் தோன்றிய ஹிந்துமத மகான்கள் அனைவரும் தீண்டாமையை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
ஹிந்து சமூகத்தில் ஏற்பட்ட குறைகளை அதன் வளர்ச்சியின் மூலமாகவே தவிர்ப்பதற்கான வாய்ப்பு நமக்குத் தடுக்கப்பட்டது. அந்நிய ஆட்சி முறைகளும், இங்கு புகுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளாதார வாழ்க்கை முறைகளும் நம்மை மேலும் அலைக்கழித்துச் சீர்குலைத்தன.
நம்மை விடவும் பலவீனமான ஒரு கலாசாரம் நவீன விஞ்ஞான உதவிகளுடன் பலாத்கார முறைகளினால் நம்மை அடக்கி ஆண்டது. இந்தியாவின் உண்மையான, புராதன கலாசாரங்களைக் ‘காட்டுமிராண்டித் தனங்கள்’ என்று ஆங்கில நாட்டு மூடர்கள் நம்மைப் பற்றிச் சரித்திரம் எழுதினார்கள். அந்தச் சரித்திரத்தை நம் நாட்டு ‘அடிமை அறிவாளிகள்’ கற்றார்கள்.
அந்நியர் மாதிரி ஆடையணிந்து கொண்டு இந்த உஷ்ணப் பிரதேசத்தில் திரிவதற்கு வெட்கப்படாத தமிழர்கள், நமது கலாசாரப் பண்புகளில் ஒன்றாகிய திருநீறு அணிதல், திருமண் இட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு வெட்கப் பட்டதுமல்லாமல் அவற்றைப் பரிகசித்து ஏளனமும் செய்தார்கள். இந்தச் செய்கை பகுத்தறிவின்பாற்பட்டது என்று அவர்கள் நம்பினார்கள். இது சமூக வாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகிற அநாகரிகம் என்று கூட அவர்களுக்குப் புரியவில்லை.
கடவுளை எல்லா மதத்தினரும் நம்புகிறார்கள். கடவுள், மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று எல்லா மதங்களும் ஒப்புக் கொள்கின்றன. மதங்கள் மார்க்கங்களே. அல்லாஹ் என்ற வார்த்தைக்குக் கடவுள் என்றே பொருள். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லுவது ஏதோ பிராமணர்களை மட்டுமே பழிக்கிற சொல் என்று எல்லாருமே நினைக்கிறார்கள்.
ஏசு கிறிஸ்துவும், நபிகள் நாயகமும், காந்தியடிகளும் கடவுளை நம்பியவர்கள்தாம் என்கிற விஷயமே யாருக்கும் ஞாபகம் வருவதில்லை. அந்த விஷயத்தில் எல்லா மதத்தினரும் பெரியார் சொல்லுகிற கடவுளை, ஹிந்துக்களூக்கு மட்டுமே சொந்தமாக்கி விட்டார்கள். ஓர் உண்மையான ஹிந்து இந்த வசைகளுக்காகக் கோபங் கொள்ள மாட்டான். ஏனெனில், இந்த மதத்தைச் சேர்ந்த பல பெரியார்களும், நமது அன்றாட வாழ்க்கையில் பல பாமரர்களும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஹிந்து மதத்தைச் சேர்ந்த பல நாத்திகப் பெரியார்களை நாம் சொல்ல முடியும்.
‘நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம்சாத்தியே
சுற்றி வந்து மொணமொணென்று சொல்லு மந்திரம் ஏதடா’
என்று சொல்லிய சிவவாக்கியரின் கொள்கையின் பாதியே பெரியார் அவர்களின் பகுத்தறிவு வாதம்.
சிவவாக்கியரின் பகுத்தறிவு அதை முழுமை ஆக்குகிறது: ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று.
ஹிந்து தர்மம் இந்த மண்ணில் வாழ்கிறவர்களின் நடைமுறைக்கு ஒத்தது. இதற்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. இதைப் படைத்தவனும் இல்லை; அழிப்பவனும் இல்லை. இந்த மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதுமில்லை; எவரும் விலக்கப்படுவதுமில்லை. ஒரு முஸ்லிமும் ஒரு கிறிஸ்துவனும் ஆக்கப்படுகிறான். ஒரு ஹிந்து மதம் அதற்கெல்லாம் தடையேதும் விதிக்கவில்லை. மற்ற மதங்களுக்கு அவன் மாறிப்போவது ஏதோ உத்தியோகம் பார்க்க உடை மாற்றிப் போவது மாதிரிதான்.
ஹிந்து மதம் அதற்கெல்லாம் தடையேதும் விதிக்கவில்லை. இந்த மதமாற்றங்கள் குறித்து விவேகானந்தருக்குக் கோபம் வந்திருக்கிறது. அது பிற மதங்களின் மேல் அவருக்கெழுந்த கோபமல்ல. அந்த மதங்களைச் சார்ந்த அரசுகள் இந்த நாட்டு மக்கள் விஷயத்தில் செய்த கொடுமைகள் குறித்தும், ஹிந்து மதத்தின் களங்கமான தீண்டாமைக் கொடுமையால், பொருளாதார சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாக ஏற்பட்ட மதமாற்றங்கள் குறித்தும் அவர் கொண்ட கோபமே அது. எனவேதான், ‘எல்லா மதங்களும் , உண்மை என்ற ஒரே சமுத்திரத்தை நாடிச் செல்லும் நதிகள்’ என்று அவர் கூறினார்.
இந்தியாவில் ஆத்திகம் போன்றதே நமது நாத்திகமும். இரண்டும் மிக மிகப் பழைமையானவை. இரண்டுமே அறிவில் விளைந்த இரண்டு கனிகள். நமது அடிமை வாழ்க்கையின் விளைவு தற்காலத்தில் அவை இரண்டுமே மூடத்தனத்தில் முளைக்க ஆரம்பித்து விட்டன. ஒருவன் மூடனாய் இருக்க, அவன் ஆத்திகனாய் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அப்படியிருப்பின் அவன் பேசுகிற ஆத்திகத்துக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை.
அப்படிப்பட்ட மூடர்களுக்கு இணையான நாத்திக மூடர்களையும் நான் அறிவேன். அந்த மூடத்தனத்துக்கும் அவர்கள் பேச விரும்புகிற நாத்திகத்துக்கும் சம்பந்தம் ஏற்பட்டு விடக் கூடாதே என்று நான் கவலையுறுகிறேன்.
பிராமணீயம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாதவர்கள், ஆன்மீகம் என்பது என்னவென்று அறிந்து கொள்ள அக்கறையில்லாதவர்கள், ஹிந்து சமயம் என்பது எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது என்று தேர்ந்து கொள்ளாதவர்கள், அதனை எதிர்த்து அழிக்கக் கிளம்பி இருப்பது விபரீதம்.
பெரியார் அவர்கள் ‘பிராமணீயத்தை எதிர்க்கிறேன்’ என்கிறார். ஆனால், அதற்காக அந்தப் பிராமண தர்மங்களிலிருந்து வழுவிப்போன, வழுவி வருகிற தற்காலப் பிராமணர்களை ஆதரிக்காமல் அவர்களை இவர் பகைப்பானேன்?எனவே, ‘பிராமணன் என்பவன் யார்?’ என்பதை நாம் விளங்கிக் கொண்டாக வேண்டும் என்று அவரது உரையை முடித்தார்.
நன்றி:
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் -ஜெயகாந்தன்
No comments:
Post a Comment