பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2020

அருளின் வடிவம் அன்னை சாரதாதேவி

-தஞ்சை வெ.கோபாலன்

அன்னை சாரதா தேவி
(பிறப்பு:  1853 டிசம்பர் 22- மறைவு: 1920 ஜூலை 20)


நமது தேசத்தில் பண்டைய காலந்தொட்டு பெண்களில் பல யோகியர் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். சங்க காலத்தில் ஒளவையார், இராமாயணத்தில் சபரி, சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள், திருத்தொண்டர் புராணத்தில் மங்கையர்க் கரசியார், காரைக்கால் அம்மையார் போன்ற எத்தனையோ பெண் அடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 

இவர்களெல்லாம் இந்தத் தேசத்தின் பெண்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கு இலக்கணமாகவே வாழ்ந்து வழிகாட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த மாதரசிகளின் வழியில் வந்தவர் அன்னை சாரதா தேவி. 

கல்கத்தாவில் காளிகோயில் பூசாரியாக இருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்க்கையையே இறையுணர்வில் ஆழ்த்தி, தன்னை மறந்து உலகத்துக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவர். அவருடைய குடும்பச் சூழ்நிலை காரணமாக அவருக்குத் திருமணம் ஆனது. அப்படி அந்த மகானைத் திருமணம் செய்து கொண்ட மங்கையோ, இந்த உலக வாழ்க்கைக்கு எனப் பிறந்தவர் அல்ல, மனிதர்களை உய்விக்க வந்த மகாத்மா என்பதை, திருமணமாகியும் துறவியாக வாழ்ந்து காட்டி மறைந்தவர் அன்னை சாரதா தேவியார்.

மக்கள் மனங்களை மயக்கி மாயா ஜாலங்களையோ, மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களையோ செய்து பிறர் மனங்களை கவர்ந்தவர் அல்ல இந்தத் தாய். உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் ஓர் அன்னை இவர்தான் என்று நினைக்கும் வகையில், அன்பே ஒரு தாயின் உருவெடுத்தது போல, பிறரது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, ஆறுதல் வழங்கி, வழிகாட்டிக் கொண்டு வாழ்ந்தவர் அன்னை. அந்த அன்னை சாரதா தேவியாரின் வாழ்க்கைச் சரிதத்தையும், அவர் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளையும் இப்போது பார்க்கலாம்.

பாரத தேசத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்தது வங்காள தேசம்; அங்கு கல்கத்தா நகரத்துக்கு அருகில் அமைந்த ஜெயராம்பாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 1853 டிசம்பர் 22-ஆம் நாள் அன்னை சாரதா தேவியார் அவதரித்தார். தந்தையார் பெயர் ராமச்சந்திர முகர்ஜி, தாயார் ஷ்யாமாசுந்தரி தேவி. பெற்றோருக்கு இவர்தான் முதல் குழந்தை.

கிராமத்தில் பிறந்த பெண் குழந்தை, அதுவும் பிற்போக்கான பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த இந்தப் பெண்ணின் இளம் வயது எப்படி இருந்திருக்கும்? கிராமத்தில் இதர குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல், ஆடு, மாடுகளை மேய்த்து, குளிப்பாட்டி அவற்றுக்கு தீனி கொடுத்து கவனித்துக் கொள்ளுதல், வீட்டில் மற்றவர்களுக்கு உதவியாக இருத்தல், அக்கம்பக்கத்தாருக்குத் தேவையான பணிகளைச் செய்தல் என்று மிகச்சாதாரண கிராமத்துப் பெண் குழந்தைகளைப் போலத்தான் இவரும் வளர்ந்தார்.

அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் படிக்க, பள்ளிக்கூடம் செல்ல அனுமதிப்பதில்லை. அத்தனை பிற்போக்கான காலம். அன்னையும் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பள்ளிக்கூடப் பாடம்தான் படிக்கவில்லையே தவிர, தாய் தந்தையரிடமும், அக்கம் பக்கத்தாரிடமும் வாழ்க்கைக் கல்வியை மிக நன்றாகப் பயின்றவர். இளமையில் கல்வியைத் தவறவிட்ட அன்னை, பின்னர் வயது வந்ததும் தானாகவே முயன்று கற்று, படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். பண்பாட்டில் சிறந்த குடும்பச் சூழ்நிலை, மிக உயர்ந்த ஜீவனாக விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மனைவியாக அமைந்த சூழ்நிலை, இயல்பாகவே பண்பாட்டில் தோய்ந்த உயர்ந்த உள்ளம் ஆகியவற்றால் அன்னை தொடக்கம் முதலே மிக உயர்ந்த ஆன்மிக வாழ்க்கையைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றார்.

அந்தக் காலத்தில் பிறந்த ஒருசில ஆண்டுகளுக்குள்ளாகவே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. அன்றைய பெரியவர்கள் அதற்கும் ஒரு காரணம் அழகாகச் சொல்லி வந்தார்கள். கொடி இளசாக இருக்கும்போதுதான் கொழுகொம்பில் ஒட்டி உறவாடி வளருமாம்; முதிர்ந்து போனால் கொழுகொம்பில் அது ஒட்டாதாம். குழந்தைப் பருவத்திலேயே கணவன் வீட்டாரைத் தன் உறவாகக் கருதும் எண்ணம் வளருமாம்; இல்லையேல் அவர்களை அன்னியமாகப் பார்க்கும் குணம் வந்துவிடுமாம். அன்றைய நிலைமை அப்படி! குழந்தைகள் மண்வீடு கட்டி விளையாடும் பருவத்தில் மணமேடை கண்டு, அருகில் ஒரு சிறுவனைக் காட்டி இவன் தான் உன் கணவன் என்றால், அந்தக் குழந்தை விளையாட்டை நினைப்பாளா, கணவன் மனைவி என்ற உறவை உணர்வாளா? ஆம்! சாரதா தேவியாருக்கு ஐந்து வயதாகும்போதே குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அவரைத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் அவருக்குக் கணவராக அமைந்த ராமகிருஷ்ணருக்கோ அப்போது வயது இருபத்தி மூன்று. பதினெட்டு வயது வித்தியாசத்தில் திருமணம். அன்றைய இந்தியாவின் நிலைமை அது! என்ன செய்ய முடியும்?

ஐந்து வயது குழந்தைக்குத் திருமணம் ஆயிற்றே தவிர, பெண் அவள் பெற்றோருடன் தான் இருந்தாள். அவருக்கு 19 வயது ஆனபோதுதான் விவரம் புரிந்து, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது, கணவர் இருக்கிறார், அவருக்கு அப்போது வயது 37 என்பதையெல்லாம் உணர முடிந்தது. பெற்றோர்கள் பெண்ணை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஐந்து வயதில் திருமணம் ஆன காலம் முதல், 19 வயதில் கணவன் இல்லம் சென்றது வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஓரிரு முறை குடும்ப நிகழ்ச்சிகளையொட்டி அன்னை ஜெயராம்பாடியிலிருந்து புறப்பட்டு குருதேவரின் ஊரான காமார்புகூருக்குச் செல்ல நேர்ந்திருக்கிறது.

1872-இல் கணவன் வீடு வந்த அன்னை அதன் பிறகு 13 ஆண்டுகள் அதாவது 1885 வரையில் கணவனை சிறிதுகூட பிரியாமல் தட்சிணேஸ்வரத்திலேயே கணவனுடன் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் அன்னையின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருந்திருக்கிறது. கணவனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளை முறையாகச் செய்வார். கணவனுக்கு மட்டுமல்லாமல், அவரைக் காண வருகின்ற பக்தர்களுக்கெல்லாம் உணவு தயாரிப்பது, பரிமாறுவது, இல்லற தர்மம் குறைவு படாமல் ஒரு ஆதர்ச இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார் அன்னை. கணவன் ஒரு சக்தி உபாசகன் என்பதால் அவருக்கு சேவை செய்யும் அன்னையும் தன்னை ஒரு தலைசிறந்த ஆன்மீக சாதனையாளராக ஆக்கிக் கொண்டார்.

கல்கத்தா நகரத்தின் ஒரு பகுதியில் இருந்தது தட்சணேஸ்வரம். அங்கு இருந்த காளி கோயிலில் பகவான் ராமகிருஷ்ணர் பூசாரியாக இருந்தார். அவருக்கு அந்த ஆலயத்திலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அறையிலிருந்து சிறிது தூரத்தில் நகபத் என்றொரு கட்டடம். மிகச் சிறிதான அந்த இடத்தில் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் அன்னை சாரதா தேவியார். மிகச் சிறிய அந்த இடத்தில்தான் உணவு தயாரித்தல், விருந்தினர்களை உபசரித்தல் போன்ற அனைத்தையும் பொறுமையும், புன்னகையுமாக செய்து வந்தார் அன்னை.

மற்ற பெண்களைப் போல வண்ண வண்ண ஆடைகள், விலை உயர்ந்த பட்டாடைகள், தங்க அணிகலன்கள் போன்ற எதையும் அணியாமல், அன்னை துறவு நிலைக்கேற்ப அகலமான சிவப்பு நிறக் கரையுடன் கூடிய வெண்ணிற ஆடை அணிவார். இப்போதெல்லாம் நம் தமிழ்நாட்டுப் பெண்களும் நெற்றியில் தலைமுடியை வகிடு எடுக்கும் இடத்தில் பெரிய குங்குமப் பொட்டு அணிவதைப் பார்க்கிறோமல்லவா? அது தமிழ்நாட்டு வழக்கம் அல்ல. அது வங்காளத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது நம் பெண்களும் அதை பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். அன்னை தன்னுடைய தலை வகிட்டில் மிகப் பெரிதான் குங்குமப் பொட்டை அணிவார்.

அவர் தலையில் நீண்ட கூந்தல், பிரித்து விட்டால் தரையைத் தொடுமளவுக்கு நீளம். அதை இன்றைய நாகரிக மங்கையர் தலைமுடியை அப்படியே பிரித்து விட்டுக் கொண்டிருக்கிறார்களே அதுபோல, முடியைப் பின்னாமல், கொண்டையிடாமல் பிரித்துப் பின்புறமாக விட்டு, தன் புடவையால் தலையை மூடிக் கொண்டிருப்பார்கள். காதிலும், கழுத்திலும் கைகளிலும் ஒருசில தங்க நகைகளும் மின்னும்.

அன்னை தினமும் காலையில் மூன்று மணிக்கு எழுந்து விடுவார். சூரியோதயத்துக்கு முன்னமேயே குளித்து முடித்து பளிச்சென்று நெற்றியில் குங்குமத்தோடு மங்களகரமாக விளங்குவார். அதன் பின்னர் தியானத்தில் அமர்ந்து நன்றாக பொழுது விடியும் வரை இறைவனை தியானித்து கண்ணை மூடிக்கொண்டிருப்பார். அதன் பிறகுதான் குடும்ப வேலைகள், உணவு தயாரித்தல் போன்றவை. பிற்பகல் ஒரு மணி வரை அவருடைய பணிகளை அவரே செய்து முடிப்பார். அந்த வெயில் நேரத்தில் வீட்டுக்கு வெளியே மக்கள் நடமாட்டமே இருக்காது. வீட்டின் வாயிலில் வந்து தன்னுடைய நீண்ட முடியை வெயிலில் உலர்த்திக் கொள்வார். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சிலர், இந்தப் பகுதியில் சாரதாமணி தேவியார் வாழ்வதாகச் சொல்லுகிறார்களே, ஆனால் நாங்கள் அவரை இதுவரை கண்ணால் கண்டதே இல்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு அன்னை பிறர் கண்களில் படாமலே தனித்து வாழ்ந்து வந்தார்.

குருதேவர் இருப்பதோ தட்சிணேஸ்வரம் காளி கோயிலில். அங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டமும், அவர்கள் பேச்சும், பாட்டும் ஆனந்த பரவசமாய் குருதேவருடன் இருப்பார்கள். அன்னை அந்தப் பக்கம் போகவே மாட்டார். தான் வசித்த நகபத் இல்லத்திலிருந்தபடியே தட்சிணேஸ்வரத்தைப் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பார். அப்படி அவர் ஒரேயிடத்தில் இருந்தபடியால் காலில் கீல் வாத நோய் வந்துவிட்டது. அதன் காரணமாக ஒருசில அக்கம்பக்கத்துப் பெண்களோடு பழகும் வாய்ப்பும் அன்னைக்கு ஏற்பட்டது.

குருதேவர் உணவுப் பிரியர் அல்ல. பசிக்கு உணவு அவ்வளவுதான். ஆனால் காளிகோயில் பிரசாதம் அவர் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகையால் ராமகிருஷ்ணருக்கு அன்னையே உணவு தயாரித்து பரிமாறுவார். கணவருடைய அறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த அறையை சுத்தம் செய்து, துணிமணிகளைச் சரிசெய்து வைத்துவிட்டு வருவார். குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தாய் தனது இறுதிக் காலத்தில் மகனுடைய அறையில் வந்து தங்கினார். மாமியாருக்கும் பணிவிடைகளை அன்னை அன்போடு செய்தார். குருதேவரை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடவே அவர்களுக்கெல்லாம் உணவு தயாரிக்கும் பணி அன்னைக்கு அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நாளும் நாலைந்து கிலோ கோதுமை மாவு பிசைந்து சப்பாத்தியும் அதற்கான சப்ஜியும் செய்வார். உணவு உண்டபின் விருந்தினர்களுக்கு தேவையான வெற்றிலைச் சுருள்களையும் தயாரித்து வைத்திருப்பார்.

ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிக்க வரும் பெண் பக்தர்கள் அன்னையுடன் வந்து தங்கிக் கொள்வார்கள். அப்படி வரும் பக்தைகளுக்கு வேண்டிய செளகரியங்களை அன்னை செய்து தருவார்; உணவு பரிமாறுவார். அப்படி அன்னையோடு வந்து தங்கும் பக்தைகளில் சிலர் கடைசி வரையில் அன்னையுடன் நல்ல நட்போடு பழகினார்கள். அவர்களில் கோலாப்மா, யோகின்மா என்ற இரு பெண்மணிகளைக் குறிப்பிடலாம்.

1874-இல் அன்னையின் தந்தை காலமானார். தாயும், சகோதரர்களும் வறுமையின் பிடியில் துன்புற்றனர். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பும் அன்னைக்கே வந்து சேர்ந்தது. அன்னையின் தாயார் ஷ்யாமாசுந்தரி, நெல் குத்தி புடைத்துக் கொடுத்து அதில் வரும் கூலியில் வாழ்ந்து வந்தார். அவர் இப்போது அன்னையுடன் வந்த பின்னர், அன்னையும் தன் தாயாருக்கு உதவியாக நெல் குத்துதல் புடைத்தல் ஆகிய பணிகளைச் செய்யலானார். செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ன? பிறருக்குப் பயன்படும் செயல் என்றால் அதில் அன்னை ஏற்றத் தாழ்வு பார்த்ததில்லை.

அன்னை சொல்லுவார்: "பிறரை நேசிப்பதும், பிறருக்காக சேவை செய்வதும், மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று. அவற்றையே, பிரதிபலன் எதிர்பார்க்காமல் இறைவனுக்குச் செய்யும்போது, அது ஒரு அற்புதமான ஆன்மீக சாதனையாக ஆகிறது. தமக்கென்று ஏற்பட்ட பிறருக்கு உழைத்தல் என்னும் தர்மத்தை அன்னையும் தன்னுடைய தர்மமாக ஏற்று நடத்தி வந்தார்.

அன்னையின் வாழ்க்கையில் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், விருந்தினர்களைப் பேணி உபசரித்தல், உணவு பரிமாறுதல், குடும்பத்தை அனுசரித்து பாதுகாத்தல் இவைகளைத் தவிர அவருடைய இதர வேலைகள், குணங்கள் பற்றியெல்லாம் எதுவும் தெரியவில்லை. ஆனால் இவர் காலையில் நெடு நேரமும், இரவில் அதிக நேரமும் ஆழ்ந்த தியான நிலையில் இருந்து இறைவனை வழிபட்ட செய்தி மட்டும் நமக்குக் கிடைக்கிறது.

ஒரு முறை, இவர் தன்னுடைய தம்பி மகளிடம் சொன்னார்: "குழந்தாய்! எனக்கு உன் வயதிருக்கும்போது நான் எவ்வளவு வேலைகள் செய்வேன் தெரியுமா? இருப்பினும் அத்தனை வேலைக்கிடையிலும் நான் தினமும் ஒரு லட்சம் நாம ஜபம் செய்யும் பணியையும் செய்து வந்தேன்" என்றார். இதிலிருந்து இவர் வாழ்க்கை எப்பதியிருந்திருக்கிறது என்பது தெரிகிறது அல்லவா?

அன்னைக்கு யோகப் பயிற்சியும் இருந்திருக்கிறது. ஆறு சக்கரங்கள், குண்டலினி போன்றவற்றை தானே வரைந்து அன்னைக்கு பயிற்சி அளித்தார் குருதேவர். ஆகவே தட்சணேஸ்வரத்தில் அன்னை குருதேவருடன் இருந்த காலம் முழுவதும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன், தியாக வேள்வியை செய்துகொண்டு துறவறத்தில் வாழ்ந்தார் என்பது தெரிகிறது.

1886 ஆகஸ்ட் 16-இல் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜீவன்முக்தி சமாதியடைந்தார். அதுமுதல் அன்னை தன் உடலில் இருந்த மங்கல நாண்களை நீக்கினார். புடவையில் இருந்த சிவப்புக் கரையை நீக்க முற்பட்டபோது, குருதேவரின் ஆன்மா பேசுவதைப் போல உணர்ந்தார். அவர் சொன்னார், "என்ன செய்கிறாய்? நான் எங்கே போய்விட்டேன். ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்குப் போவது போலத்தானே நான் போயிருக்கிறேன்" என்றாராம். ஆகையால் அவர் விதவைக் கோலம் பூணாமல் விட்டு விட்டார்.

கணவரின் குரல் சொன்ன செய்தியின்படி அவர் நித்திய ஜீவனாக இருக்கிறார் என்பதை உணர்ந்த அன்னை அதுமுதல் விதவைக் கோலம் பூணாமல், தான் நித்திய சுமங்கலி என்பதை உணர்த்த மெல்லிய கரையுடைய புடவை, தங்க வளையல் ஆகியவற்றை அணிந்திருந்தார்.

குருதேவர் சமாதியடைந்த பின்னர் அன்னை சில உறவினர்கள், பக்தர்கள் புடைசூழ பிருந்தாவனம் சென்றார். அங்கிருந்து அயோத்தி போன்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று அங்கெல்லாம் சிலகாலம் தங்கினார்.

குருதேவரின் வழிகாட்டுதல் 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது இறுதிக் காலத்தில் அன்னைக்குச் செய்த உபதேசம் முக்கியமானது. அவர் சொன்னார்: "என் காலத்துக்குப் பிறகு நீ காமார்புகூருக்குச் சென்றுவிடு. எப்போதும் சாதமும் கீரையும் மட்டுமே கிடைத்தாலும் அதை உண்டு வாழ்க்கையை நடத்து. சதா சர்வ காலமும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டே இரு." என்று சொல்லியிருந்தார். பிருந்தாவனத்திலிருந்து திரும்பியபின் காமார்புகூருக்குச் சென்று அங்கிருந்த நெல்லைக் குத்தி, தோட்டத்தில் தானே பயிரிட்ட கீரையைப் பறித்து உண்டு வாழ்ந்தார். உணவுக்கு உப்பு வாங்கக்கூட அன்னையிடம் பணம் இருந்ததில்லை. அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் குருதேவர் சொன்னபடி கைக்குத்தல் அரிசியோடு வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரையைச் சேர்த்து உப்பு இல்லாமல் உணவருந்தும் யோகினியாகவே வாழ்ந்தார் அன்னை.

குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் குடும்பத்தார் அல்லவோ அன்னையைப் பாதுகாத்து வரவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. குருதேவரின் பணிக்காக தட்சணேஸ்வரம் கோயிலில் இருந்து மாதாமாதம் ரூ.7 அளித்து வந்தனர். அதை இப்போது அன்னையிடம் கொடுத்து வரத் தொடங்கினர். ஆனால் குருதேவரின் அண்ணன் மகனான ராம்லால் என்பவர் அதை அன்னைக்குக் கொடுக்க விடாமல் தடுத்து விட்டார். தங்கள் வீட்டிலேயே ஒரு தடுப்பு அமைத்து அன்னை வாழும் பகுதியைத் துண்டித்து எந்த உதவியையும் செய்யாமல் ஒதுங்கிவிட்டார் அந்த ராம்லால். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் கூட அன்னைக்கு எந்த உதவியையும் செய்வதில்லை. குருதேவரின் அண்ணன் மகன் ராம்லால் தட்சிணேச்வரம் கோயிலில் இப்போது அர்ச்சகராக ஆகிவிட்டதால், அனைவரும் அவருடன் சென்றுவிட, அன்னை மட்டும் தனிக்குடிசையில் தனித்துவிடப்பட்டார்.

குடும்பத்தாரின் நிந்தனை ஒரு பக்கம் இருந்த நிலையில், அந்த கிராமத்தாரும் இவரை கேலி செய்தும், தூற்றிக்கொண்டும் அவர் மனதை புண்படுத்தி வந்தனர். கணவனை இழந்த பெண் விதவைக் கோலம் பூண்டு வெள்ளாடை உடுத்துவதற்கு பதிலாக சிவப்பு கரை உள்ள புடவை அணிந்து கொண்டு, கையில் வளையல் அணிவதை கிராமத்தார் ஏற்கவில்லை. அன்றைய சமுதாய அமைப்பு அத்தனை பிற்போக்கானது. அப்படியிருக்க அறியாமையில் மூழ்கிய அந்தக் கிராமத்து மக்களை நொந்து என்ன பயன்?

ஆனால் இவைகள் பற்றியெல்லாம் அன்னை கவலைப்படவில்லை; மனம் வாடவும் இல்லை. யாரையும் அவர் குறை சொல்லவுமில்லை. இப்படி ஆகிவிட்டோமே என்று தன் விதியையும் நொந்து கொள்ளவில்லை. கடவுள் மீது பழிபோடவுமில்லை. யாரிடமும் போய் தன் நிலைமையைச் சொல்லி வருந்தவுமில்லை. பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் தான் ஒரு தவசி, ஏனையோரைப் போல தானும் ஒரு சாதாரணப் பெண் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தார் அன்னை.

இத்தனைக்கும் இடையில் ஒரே ஒரு பெண், பெயர் பிரசன்னமயி என்பது; அவர் மட்டும் அன்னையிடம் பரிவும் ஆறுதலும் காட்டி அரவணைத்து வந்தார். தாங்கமுடியாத துயரம் அன்னையின் மனத்தை வாட்டும் போதெல்லாம், குருதேவரின் காட்சி அவருக்குக் கிடைத்தது, ஆறுதல் தந்தது.

அன்னை தனித்து கிராமத்துச் சூழ்நிலையில் படும் பாட்டை அறிந்த குருதேவரின் பக்தர்கள் அவரை கல்கத்தா வந்து தங்கும்படி வேண்டினர். ஆனால் அதற்கு முதலில் இணங்காத அன்னை, பின்னர் வேறு வழியின்றி பக்தர்கள் தரும் ஆதரவில் கல்கத்தா நகரம் வந்து தங்கத் தொடங்கினார்.

கல்கத்தாவில் ஆன்மிகப் பணி.

குருதேவருடன் தட்சணேஸ்வரத்தில் இருந்த காலத்திலேயே குருதேவரைச் சந்திக்க வரும் பெண்கள் பலரும் வந்து அன்னையுடன் தங்குவது வழக்கம் அல்லவா? அப்ப்டிப்பட்ட பக்தர்கள் இப்போதும் அன்னையை நாடி வரத் தொடங்கினர். குருதேவரின் புகழ் பரவப் பரவ அன்னையை நாடி வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது. அவரை நாடி வரும் பக்தைகளுக்கெல்லாம் அன்னை மந்திர தீட்சை கொடுத்து வரத் தொடங்கினார். இந்த மந்திர தீட்சை எனும் அருட்பிரசாதத்தை துறவிகள் என்றில்லை, இல்லறத்தில் இருப்போரும் பெறும் வழக்கம் உண்டு. இப்போதும் ராமகிருஷ்ண மடத்தில் மந்திர தீட்சை பெற்ற இல்லறத்தார் ஏராளம்.

அன்னையின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இடங்கள் நான்கு மட்டுமே. அவை தட்சணேஸ்வரம், உத்போதன், ஜெயராம்பாடி, கோயல்பாரா ஆகிய ஊர்கள். தட்சிணேஸ்வரத்தில் இருந்த காலம் வரை அன்னையை எவரும் அறியவில்லை. குருதேவரின் நெருக்கமான சீடர்களுக்கு மட்டுமே இப்படியொருவர் இருப்பது தெரியும்.

அன்னை மிகக் குறைந்த அளவே ஆகாரம் உட்கொள்வார். அதுபோலவே அளவோடுதான் உறக்கமும். இரவு 11 மணிக்குப் படுக்கச் சென்றால், மூன்று மணிக்கு எழுந்து விடுவார். மாலை வேளைகளில் ஆண் பக்தர்கள் அன்னையை தரிசிக்க வருவது வழக்கம். ஒரு கட்டிலும் அமர்ந்த வண்ணம் உடல் முழுதும் போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பார் அன்னை. மிகத் தாழ்ந்த குரலில் பேசுவார். சில சமயங்களில் சைகைகள் மூலம் சொல்ல வந்ததை உணர்த்துவார்.

இப்படி அவர் மக்களுக்காக அருள் பாலித்து வரும் காலகட்டத்தில் 1919ஆம் ஆண்டின் இறுதியில் உடல் நலம் குன்றத் தொடங்கியது. அது தொடங்கி 1920 ஜூலை 20 வரை அவர் நோயினால் சிரமப்பட்டார்.

அன்னை தன் பக்தர்களைப் பார்த்து சொன்னார்: "உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறரது குற்றங்களைப் பார்க்காதீர்கள். அதற்கு பதிலாக உங்களிடம் உள்ள குற்றங்களைப் பாருங்கள். உலகம் முழுவதையுமே உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். உலகில் யாருமே உங்களுக்கு அன்னியர் இல்லை. உலகம் முழுதும் உங்களுக்கு சொந்தம்" என்றார்.

1920 ஜூலை 20 நள்ளிரவு 1.30 மணிக்கு அன்னை மகாசமாதி அடைந்தார். மறுநாள் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கங்கைக் கரையில் தகனம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒரு அழகிய சிறு கோயில் அமைக்கப்பட்டது.


காண்க: 
நன்றி: பாரதி பயிலகம் வலைப்பூ


No comments:

Post a Comment