பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/02/2021

தேடப்படும் சமுதாய சமநீதி


-சி.ரத்தினசாமி


ஜனாதிபதியிடம் தனது அறிக்கையை அளிக்கிறார்
திரு. பி.பி.மண்டல்


(உலக சமூகநீதி நாள்: 20/02/2021)


“பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’’ என்பது வள்ளுவரின் சமூதாய சமநீதிக் கோட்பாடு. அவர் மனித இனத்தை மட்டுமே குறித்து சொல்லாமல் இந்த உலகில் தோன்றும் எல்லா ஜீவராசிகளுக்குமே இந்த பூமிப்பந்து மட்டுமே அல்லாமல் அண்டம் முழுதும் சம உரிமைகள் உண்டு எனச் சொல்கிறார்.

ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதே சமூகநீதி. சமூகநீதி என்பது ஒரு அரசியல் மற்றும் தத்துவக் கோட்பாட்டினை உள்ளடக்கியது. இது குடிமையியல் அல்லது குற்றவியல் சட்டம், பொருளாதார வழங்கல் மற்றும் தேவை அல்லது பாரம்பரிய தார்மிகக் கட்டமைப்பின் கொள்கைகளையும் தாண்டி நீதி என்ற கருத்துக்கான பரிமாணங்களை வலியுறுத்துகிறது. சமூகநீதி என்பது தனிநபர்களின் நடத்தை அல்லது தனிநபர்களுக்கான நீதிக்கு மாறாக சமூகத்திற்குள் உள்ள குழுக்களுக்கு இடையிலான நியாயமான உறவுகளில் அடிப்படை அவசியமானது.

சமூகநீதியின் ஐந்து முக்கிய கொள்கைகள்: வளங்கள், சமபங்கு, பங்கேற்பு, பன்முகத்தன்மை, மனித உரிமைகளுக்கான அணுகல் ஆகியவை. நாம் காணும் சமூகநீதி யாவையும் சமத்துவத்தைப் பற்றியது. சமூகரீதியாக, நீதியாக இருக்க, ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தால் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, உலகெங்கிலும், இந்த கற்பனாவாத லட்சியமானது நிதர்சனத்தில் வெகு தொலைவில் உள்ளது. சமூக அநீதிகள் சிறிய மற்றும் உலகளாவிய அளவீட்டைப் பொருத்த வரை, பள்ளிகளிலும், முழு மாறுபட்ட குழுக்களாலும் நிகழலாம். சமூகநீதி என்பது சோஷலிச பொருளாதார அமைப்புகளுக்கு அடிப்படையாக அமைவதுடன் சில மத மரபுகளிலும் கற்பிக்கப்படுகிறது.

பொதுவாக, சமூகநீதி என்பது குடிமக்களுக்கான பல்வேறு வகையான முன்முயற்சிகள் மூலம் சம உரிமைகளை ஆதரிக்கும் ஒரு பரந்த கருத்தாக உருவானது. சமூக நீதி என்பது மோதல் கோட்பாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையது. குழுக்கள் மற்றும் சமூகத்தின் சில பகுதிகளுக்கு இடையிலான கடந்த காலங்களில் நடந்த அல்லது தற்போது நடந்துகொண்டிருக்கும் மோதல், கருத்து வேறுபாடுகளை, தவறுகளைச் சரிசெய்தல்.பெரும்பாலான நேரங்களில் அந்த மோதல்களின் ஆதரவாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கருதப்படுகின்றனர் அல்லது அவர்கள் ஒருவிதத்தில் ஒடுக்குமுறையாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.

சமுதாயம் என்பது மனித இனத்தை மட்டுமே கொண்டதாக நாம் பொருள் கொள்கிறோம். சமுதாய சமநீதி என்பதன் கருத்தாக்கம் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்குமுள்ள சமமான உறவைக் குறிப்பது. இதன் வேறுபாட்டினை, தனிநபரின் பொருளாதாரம், அதனால் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், சமூகச் செல்வாக்கு இவற்றைக் கொண்டு கணக்கிடலாம். ஆனால், இன்றைய காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களினால் இந்த ஏற்றத் தாழ்வுகளை மாற்றுவதிலும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை தகர்ப்பதிலும் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு தற்கால சமுதாயம் மேலே சென்று கொண்டுதான் இருக்கிறது. இதனால் ஓரளவிற்கு சமுதாயப் பாதுகாப்பும் அதிகரித்துக் கொண்டும் வருகிறது. ஆனாலும், வேலைவாய்ப்பின்மை, இதனால் ஏற்பாடும் வறுமை போன்றவை சமூகநீதிக்கு எதிர்க் காரணிகளாக உள்ளன. இந்த எதிர்க் காரணிகளை ஒழித்து சம உரிமைளையும் ஒழுங்காற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசு மற்றும் அரசு சாரா சமூக அமைப்புக்களின் முதன்மைப் பணியாக இருத்தல் வேண்டும். உடல்நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகக் காப்பீடு (Social Security), தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள், சந்தை வாய்ப்பு போன்ற உரிமைகள் இந்த சமூகநீதி கட்டமைப்பின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தப் பகிர்ந்தளிப்பில் சமூகம் என்ற ஒன்றைத் தவிர மற்றவற்றை எந்த நிலையிலும் பொருட்படுத்தப்படாமல் இருத்தலே சமூகநீதி.

சமூகம் என்பதே பரஸ்பரம் இணக்கத்துடன் வாழ்வதுதான். அந்த இணக்கம், ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், உடை தற்போதைய காலகட்டத்தில் அதனுடன் உடல் ஆரோக்கியமும் சேர்த்து இவை யாவும் தடையின்றி, தட்டுபாடின்றிக் கிடப்பதை உறுதி செய்வதில் இருத்தல் வேண்டும். இன்றைய காலத்தில் மனித இனத்திற்குள்ளேயே, இனம், மொழி, சாதி, சமயம், இவற்றால் தனித்துக் கொண்டு, சொல்லப் போனால் ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஒற்றுமை பிறழ்ந்தும் வாழ்கிறோம். தனது அடிப்படைக்கும் மிக மேலான, அதீதத் தேவைகளுக்காக வலிமை கொண்டவர்கள் மற்றவர்களின் தேவைகளைப் பறிப்பதோடு சமூக நீதியினை முற்றிலும் அலட்சியம் செய்கிறார்கள். இதுவும் சமூக நீதிக்கு எதிரானதுதான். இந்தக் கட்டத்தில்தான் சமூகநீதி தன் கடமையைச் செய்ய வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நாடும் தனக்கென அந்தந்தக் குடிமக்களின் வாழ்க்கைச் சூழலுக்குகேற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் பொதுவான உறவு முறைகளையும் கணக்கில் கொண்டு அந்நாட்டின் இறையாண்மை சொல்லும் நெறிப்படி சட்டம் இயற்றிக் கொள்கிறது. அனைத்து நாடுகளுமே அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சமூகநீதிக்கான சட்டத்திற்கு உட்பட்டே தங்களது சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். ஆனாலும், மேற்சொன்ன அடிப்படைத் தேவைகளை நுகர்வதில் பங்கம் இல்லாமல் இருப்பதுதான் பன்னாட்டு சமூக நீதி சட்டம். உலகளாவிய சமூகநீதியைப் பார்க்கும்போது, ​​அது எல்லாமே சமத்துவத்தைப் பற்றியதுதான். இனம், வயது, மொழி, மாற்றுத் திறனாளர்கள், பாலியல் மற்றும் பாலினம், குழந்தைகள் நலன், வறுமை மற்றும் பொருளாதார அநீதி, அனைவருக்கும் மனித உரிமைகள் போன்றவற்றின் மீதான சம நோக்கான பார்வையும் நடைமுறைப்படுத்தலுமே பன்னாட்டு சமூகநீதி.

சமச் சீரின்மைகள் அனைத்தையும் களைந்திட சட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைபடுத்திடும் தீர்க்கம் பெரிய அளவில் உதவிடும். ஆனால், வறுமை மற்றும் பொருளாதார அநீதியைப் போக்கிட அரசியல் மற்றும் பொருளாதார மட்டத்தில் கையாளுதல்தான் பயனளித்திடும். காரணம், வறுமையினால் ஒரு சமூகம் தனக்கான பொருட்தேவைகள் மற்றும் சேவைகளைப் பெற இயலாத நிலையில் இருக்கும்போது, அது ஒரு நாட்டில் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கி, சமூகக் குற்றங்கள் உருவாகவும் காரணமாகி விடுகிறது. இதுவே, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் மாறுகிறது. எனவே வறுமையும் சமூகத்தின் சமத்துவமின்மையின் பிரதானக் காரணியே. சமூகநீதியின் இன்னொரு பிரதானப் பரிமாணம், மனித உரிமை. சமூகநீதி என்பது ஒரு சமமான சமுதாயத்தை நோக்கி இயங்குவதாகும். மனித உரிமைகளின் முக்கிய குறிக்கோளான பொது அதிகாரம் உள்ளவர்களால் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்வதே இதன் பிரதானப் பகுதியாக மனித உரிமைகள் சட்டத்தில் வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது. மேலும் தனிநபர்களை அரசும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான விதிகளையும் வரையறுத்துள்ளது.

ஓரளவிற்கு வளர்ந்து விட்ட சமுதாயம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் இன்றைய உலக சமுதாயத்தில் இன்றும் ஒழிக்க இயலாமல் இருக்கும் பெரிய சமுதாயக் குறைபாடு இனப் பாகுபாடு. இன சமத்துவமின்மை என்பது உலகில் மிகவும் பொதுவான, குற்றங்களுக்கு இட்டுச் செல்லும் சமூக நீதி பிரச்னைகளில் முக்கியமான ஒன்றாகும். இன்றும் பல முன்னேறிய நாடுகளிலும் கூட இன பாகுபாடும் ஒருவித தப்பெண்ணத்தின் வரலாறும் உள்ளது. இந்தப் பாகுபாடு அந்த இனத்தினர் வேலை, சுகாதாரத்துக்கான தேவைகள், சமமான கல்வி போன்றவற்றை அடைவதில் பாதிப்புக்களை உருவாக்குகிறது.

பெரும்பாலான முன்னேறிய உலக நாடுகள் அனைத்துமே பாலினப் பாகுபாடுகளிருந்து ஓரளவிற்கு வெளியேறிவிட்டன என்று சொல்லலாம். ஒரு சில நாடுகளில் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவ உரிமைகள் கீழ் நிலையிலேயே இருக்கின்றன. இதைப் போன்றே மாற்றுத் திறனாளிகளுக்குமான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தற்பொழுது தான் ஏற்பட்டு சமூகம் மெல்ல ஓரளவிற்கு மட்டுமே ஏற்றுக் கொண்டும் வருகிறது.

அமெரிக்காவைப் பொருத்த வரை, வரலாற்றைப் பார்த்தோமானால், 1950-களில் மார்ட்டின் லூதர் கிங்க் ஜூனியர் தனது தலைமையில் முன்னெடுத்த சிவில் உரிமைகளுக்கான இயக்கம் சமூகநீதிக்கான போராட்ட இயக்கத்தின் முன்னோடி இயக்கம் எனச் சொல்லலாம். இந்த இயக்கம், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இன சமத்துவம் மற்றும் நலன்களை பிரதானமாகக் கொண்டு போராடியது. இந்த முயற்சிகள் அடுத்தடுத்த தசாப்தங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. இதில் சிவில் உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதனால் வணிக ரீதியாக சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட குழுக்களுக்கு பாகுபாடு காட்டுவதையும் தடைசெய்கிறது.

நமது நாட்டில், சமூகநீதிக்கானஅரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவான, உண்மையான சமூகநீதிக்கான ஷரத்துகளைக் கொண்டது. பழமையிலும், பல சமுதாய நம்பிக்கைகளிலும் ஊறிப் போயிருந்த அன்றைய சமூக அமைப்பில் இச்சட்டங்களை அமல்படுத்துவதில் சில மாநிலங்களில், வட்டார அளவில், குறிப்பிட்ட சமுதாய நிலையில் கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்றளவும் மிகச் சொற்ப அளவில் இருந்து கொண்டும் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் சம நீதியினை- சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம், சமுதாய கெளவரம் மற்றும் இவை அனைத்திலும் சமமான வாய்ப்பு, மற்றும் சகோதரத்துவம், தேசத்தின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த சமூகநீதிச் சட்டத்தில் உள்ள மாறுபாடுகளை மேலும் சீர் செய்திடவும் நாட்டின் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமவாய்ப்பினை ஏற்படுத்திடும் பொருட்டு, 1979-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அன்றைய பிரதம அமைச்சர் மொரார்ஜி தேசாயால், பிகார் முதலமைச்சராக இருந்த பி.பி.மண்டல் அவர்களின் தலைமையில் ஐந்து நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை 1980 டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கை, நாட்டில் நிலவும், சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, நாட்டின் மக்கள் தொகையில் 52% பிற்படுத்தப்பட்டோர் எனக் கண்டறிந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அதிகபட்ச ஒதுக்கீடு 50% எனும் தீர்ப்பினைப் பின்பற்றி பட்டியல் இனத்தவர்க்கு 22.5 % மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 % எனப் பரிந்துரையினை சமர்ப்பித்த நிலையில் மொரார்ஜி தேசாய் அரசு பதவியிழந்தது. 

அதன் பின்னர் அமைந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு அந்தப் பரிந்துரையை அரசியல் காரணங்களுக்காகக் கிடப்பில் போட்டது. பின்னர் சுமார் 10 ஆண்டுகள் கழித்து 1990-இல் பிரதமர் வி.பி.சிங் இதை நடைமுறைப்படுத்திட முனைந்தபோது இந்திரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்ட்கீடை விரிவுபடுத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது, ஒருவர் பிற்படுத்தப்படுவதற்கு சாதி காரணம் இல்லை, இந்த செயல் பொது கல்விக் குழுமங்களின் செயல் திறனைப் பாதிக்கும் என்பது போன்ற வாதங்களை முன்வைத்து தடை வாங்கினார்.

இந்த நேரத்தில், இன்னொரு நிகழ்வினையும் சொல்ல வேண்டியது அவசியம். இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை மேல்கொணர முடியும் என எண்ணி சட்டத்தினைக் கொண்டுவந்த அதே நேரத்தில் தங்களது சமுதாயத்தினை பிற்படுத்தப்பட்ட வரையரையில் கொண்டு வருவதால் சமுதாய கெளரவம் பாதிக்கப்படுகிறது என்று ஒரு பிரிவினர் அச்சட்டத்தினை எதிர்த்துப் போராடவும் செய்தனர். இரண்டாண்டு விசாரணைகளுக்குப் பின்னர், 1992-இல் சமூகநீதியினைப் பெறுவதில் சாதியும் ஒரு தடையான காரணிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி 1992-இல் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு 27% பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தியது. இன்றளவும் அது தொடர்கிறது.

நமது தமிழ்நாட்டில் இதன் விளைவு வேறு வடிவமாக இருந்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுதான் சமூகநீதியை நிலைநாட்டும் என்று போராட்டம் நடந்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்துமே வாக்கு வங்கி அரசியலாக மாறியது. அதிலும் குறிப்பாக வன்னியர்கள் போராட்டம் ஆட்சியாளர்களைத் தடுமாறச் செய்தபோது 1989-இல் கருணாநிதி முதல்வரான பின் சாதி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 % ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனும் பிரிவைக் கொண்டு வந்து வன்னியர் உள்பட 108 சாதியினரை இணைத்து அவர்களுக்கு 20 % அறிவித்தார்.

1992-இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 69% ஒதுக்கீட்டிற்கு பங்கம் வந்திடாத வகையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டப்பேரவையையும் தனியே கூட்டி சட்டத்தை நிறைவேற்றச் செய்தார். இதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு சேர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76- வது சட்டத்திருத்தம்.

ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50 %-த்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 20 %ம், பிற்படுத்தப்பட்டவருக்கு 30 % என்று பிரிக்கப்பட்டது. பின்னர் 2008-இல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5% வழங்கப்பட்டது. அதேபோல தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள பிரிவில், அருந்ததியினருக்கு 3 % தனியே மாநில அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மலைவாழ் இனத்தவர்க்கு 1 % தொடர்ந்தது. அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்கு பரவலாக சமூகநீதி கிடைத்தது. இதன் பின்னரும் தமிழ் நாட்டைப் பொருத்த வரை இடஒதுக்கீடு பிரச்னைகள் முடிந்தபாடில்லை.

கிராமப் புற மாணவர்களுக்கான் 15 % ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கு தகுதித் தேர்வினை தற்போது மைய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதனால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சம அநீதி ஏற்படுவதாக குமுறல்கள் எழுந்த நிலையில், அவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக இந்த ஒதுக்கீடுகளினால் தொழில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திறமை வாய்ந்த முற்படுத்தப் பட்டோர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்பதும், நியாமான இதனால் செறிவுமிக்க மனித வளம் வீணாகிறது என்பதும் விவாதத்திற்குரிய நேர் கருத்தே.

சமநீதி என்பது மனித இனத்துக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதே. அது அனைத்து உயிர்வாழ் இனங்களையும் உள்ளடக்கியதுதான். ஆனால், எல்லா உயிரினங்களிலும் மனித இனம் ஆறறிவு படைத்த இனமாகவும் இருப்பதால், அந்த சமுதாய நீதியினைப் பரிபாலனம் செய்யும் வாய்ப்பும் பொறுப்பும் மனித இனத்திடம் இருக்கிறது. நமது மனித இனக் கட்டமைப்பில் நீதி மன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் என்னவிதமான சம நோக்கு கோட்பாடுகள் உள்ளனவோ அதே போன்று, ஒவ்வொரு மனிதனுக்கும் மற்ற உயிரினங்கள் பால், தன் சக இனத்தின் பால் சமுதாய சம நோக்குப் பார்வை என்பது கட்டாயம். ஆனால், நடைமுறையில் மிக மோசமாக நம் மனித இனம், பிற உயிரினங்களின் மீது அநீதியினை திணிக்கின்றது..

மைய அரசு 1998-ல் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கென கேபினட் அந்தஸ்தில் அமைச்சகத்தினை (முன்பு பெண்கள், குழந்தைகள் சமூகநலத் துறை என ஒன்றாக இருந்தது) ஏற்படுத்தியதும் தற்போது அத்துறையில், மாற்றுத் திறனாளிகள் நலன், பெண்கள் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் என மூன்று ராஜாங்க அமைச்சர்கள் பணியாற்றுவதும் குறிப்பிடத் தக்கது. இன்னும் நம்மிடையே சமூகநீதி சென்றைடைய வேண்டிய தூரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்பதைக் நாம் உணர வேண்டும். நம் தமிழ்நாட்டில் இத்துறை சமூகநலத் துறையின் கீழ் வருகிறது.

சமூகநீதி என்பது சட்டங்களினால் மட்டுமோ அல்லது ஆளுகின்ற அரசாங்களினால் அவற்றை நடைமுறைப்படுத்திடுவதால் மட்டுமோ பெற்றுவிடக் கூடிய ஒன்றல்ல. ஒவ்வொரு தனிமனிதனிடத்திலும் அந்த கருத்துகள் இயல்பான ஒன்றாக இருப்பதுடன், தன்னார்வ முனைப்புடன் அவற்றை மற்றவர்களிடத்தில் பயிற்றுவிப்பதற்கான நேரம் ஒதுக்கி, ஓரிடத்தில் அந்த நீதி மறுக்கப்படும்போது அதை எதிர்ப்பதும், சமூகத்தை இணைத்துப் போராடிப் பெறுவது போன்ற செயல்பாடுகளும் அவசியம்.

”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற தமிழ் முழக்கத்தை, உலக மக்கள் யாவரும் நம் உறவினர்கள் என்ற சிந்தனையை ஒவ்வொருவரும் உள்ளார்ந்த உணர்வுடன் கடைபிடிக்கும்போது தான் சமூகநீதி முழுமையாக நிலைநாட்டப் பெறும். இல்லாவிடில், சமூகநீதியினை தேடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.




கட்டுரையாளர் குறிப்பு:


 

சி.ரத்தினசாமி, ‘சக்‌ஷம்’ எனப்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர்.

அலைபேசி எண்: 94422 25500.









.

No comments:

Post a Comment