பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/02/2021

நாணமும் வெட்கமும்

-முரளி சீதாராமன்



நாணம் - வெட்கம் இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருந்தாலும் மிக நுட்பமான வித்தியாசம் உண்டு!

இந்த நுட்பமான வித்தியாசத்தை மிக லாகவமாக இரண்டே வரிகளில் விளக்கித் தூக்கி எறிந்து விட்டுப் போய்விடுவார் கண்ணதாசன்!

அசந்து போனேன் நான் - கவியரசரின் வல்லமையைப் பார்த்து! ஆழந்த தமிழ்ப் புலமையும் தொட்டவுடன் கொட்டிவரும் தமிழ் ஊற்றும் வாய்க்கப் பெற்றாலே இது சாத்தியம்!

வெட்கம் என்பது வெளியாரோடு தொடர்பு உடையது - வெளியாரின் பரிகசிப்பால் வருவது!

"வெளியில் சொன்னால் வெட்கக் கேடு - வெளியில் தெரிந்தால் வெட்கக் கேடு"- என்கிறோமே தவிர...

"வெளியில் தெரிந்தால் 'நாணக்' கேடு "- என்று சொல்வதில்லை!

வெளியுலகம் நமது செயலைக் கண்டு பரிகசிப்பதால் - அல்லது அப்படி வெளியாரின் பரிகசிப்புக்கு ஆளாகிவிடுவோமோ என்ற கூச்சத்தால் வருவது 'வெட்கம்'!

நம்முடைய செயல் நமக்கே நம்முள் தூண்டிவிடும் தன்னுணர்வால் விளைவது நாணம்!

ஆண் - பெண் சம்பந்தமுடையதாகப் பெரும்பாலும் அமைவது நாணம்!

ஆணிடம் பெண்ணுக்கும் ஏற்படலாம் - பெண் குறித்து ஆணுக்கும் ஏற்படலாம்!

அது மெல்லிய 'வளைதலை' - வளைவது போன்ற நுண்ணுணர்வை இருவருக்கும் ஏற்படுத்தும்.

வளைவதாலேயே - நாணுவதாலேயே-அது நாணல்!

'கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாரி அருங்கதலித் துண்டுக்கு நாணுகிறதே'- என்பார்கள்!

நளினமான வளைதல் நாணம் - அவமானத்தால் கூனிக் குறுகுதல் என்பது வேறு!

ராவணன் கூட 'நாணினான்' என்பான் கம்பன்.

"வாரணம் பொருத மார்பும், வரைவினை எடுத்த தோளும், 
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும், 
தார் அணி மௌலி பத்தும்..." 

.. அத்தனைப் பெருமையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கிறான் ராவணன்!

ராமன் அவனை அப்போதே வீழ்த்தி இருக்கலாம்!

ஆனால் அவனைப் பெருந்தன்மையாலேயே "நாண" வைத்தான்!

மன்னிப்பது தாய்மை குணம் - அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல! எனவேதான் வள்ளுவர் கூட தண்டிப்பது என்ற ஆண்மை குணத்துடன் மன்னிப்பது என்ற பெண்மை குணத்தை இணைக்கும் போது...

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் 'நாண' நன் நயம் செய்துவிடல்"- என்றாரே அது போல...

"இன்று போய் நாளை வா!"- என்று ராவணனுக்கு விடை கொடுத்தான் ராமன்!

அப்போது ராவணன் 'நாண'ப்பட்டானாம்! கம்பன் மிக நுட்பமாகச் சொல்வான்!

பொதுவாகப் பெரும்பாலும் 'நாணம்' என்றாலே ஒரு ஆணும் பெண்ணும் இடம் பெற வேண்டுமல்லவா?

ராவணன் எதற்காக 'நாணினான்'?

வானம் சிரிக்குமே என்பதற்காகவா? வையகம் சிரிக்குமே என்பதற்காகவா? வயிரம் பாய்ந்த தோள் கொண்ட ராமன் சிரிப்பானே என்பதற்காகவா? இல்லை இல்லை ராமன் 'நாணியது' அதற்காக இல்லை!

மின்னலைப் பார்த்து சிரிக்கும் மெல்லிய இடை கொண்ட சீதை (ஜானகி) சிரிப்பாளாம்!

அவள் எங்கோ அசோக வனத்தில்தானே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்? அவள் எப்படி இதை அறிந்து சிரிக்க முடியும்?

இல்லை இல்லை - அவள் எப்போதும் ராவணனின் இதயத்துக்கு உள்ளேயே அல்லவா இருக்கிறாள்!

சீதையை சதா சர்வகாலமும் ராவணன் தன் உள்ளத்தின் உள்ளேயேதானே வைத்து இருந்தான்!

அதனால் அவன் உள்ளே இருந்து அவள் தூண்டிவிட்ட உணர்வு - உள்ளிருந்து தூண்டிவிட்ட உணர்வு நாணம்!

ராவணன் மனதில் சதா சீதை குடியிருந்தாளா? ஆமாம்! கம்பனே சொல்லுவான் ராவணன் வதம் முடிந்த பின் மண்டோதரியின் புலம்பலில்!

"கள் இருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!"

- எனப் புலம்புவாள் மண்டோதரி.

அதுவும் எப்படி? "வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திருமேனி மேலும் கீழும் - எள் இருக்க இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி"- சீதை அவன் உள்ளத்தில் எங்கு இருக்கிறாள் என்று தேடித் துளைத்ததாம் ராமனின் அம்பு!

அது பிறகு!

இப்போது நிராயுதபாணியாக நிற்கும் ராவணன் நாணுகிறான்!

வானம் சிரிக்கும் - வையம் சிரிக்கும் எல்லாம் வெளியில் இருந்து வருவது - அதனால் வருவது வெட்கம்!

ஆனால் ராவணனின் உள்ளிருந்து சிரிக்கிறாளே சீதை அதனால் ராவணன் அடைவது 'நாணம்'!

"வான் நகும் - வையகம் நகும் - மணி வயிரத் தோளனும் நகுவன் என்பதற்கு 'நாணான்'- மின் நகு மெல்லிடை சானகி நகுவள் என்றே.."

எனவே உள்ளிருந்து எழும் உணர்வு ஊற்றால் பொங்கி வருவது நாணம்!

வெளிச் சூழலால் - வெளியாரின் பரிகசிப்பால் வருவது வெட்கம்!

அடேயப்பா எத்தனை நீண்ட விளக்கம்!

என்னைப் போன்ற சராசரிப் பாமரனால் இவ்வளவு விளக்கமாகத்தான் 'வெளியே'- 'உள்ளே' என்று நீட்டி முழக்கி 'வெட்கம்'- 'நாணம்' இரண்டையும் வேறுபடுத்த முடியும்!

கண்ணதாசன் அசகாய சூரன்! மகா கவிஞன்! தமிழில் ஆளுமையும் வல்லமையும் பெற்ற பேராளுமை!

இரண்டே வரியில் அப்படியே 'அலேக்' காகத் தூக்கி வீசி எறிந்து விட்டுப் போய்விட்டார்! இன்னும் எத்தனை யுகமாகுமோ இப்படி ஒரு கவிஞன் பிறக்க!

"கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல"- என்ற 'வெண்ணிற ஆடை' படப்பாடல் அண்மையில்  டி.வி.யில் வைத்தார்கள்! (ஜெயலலிதா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி)

அந்தப்பாடலில் இரண்டே வரியில் வெட்கம் - நாணம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அநாயாசமாக சொல்லியிருப்பார்!

"அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்!"

"அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்!"

அபாரமான கவியரசர் கண்ணதாசன்!


குறிப்பு: 
கட்டுரையாளர் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்; சேலத்தில் வசிக்கிறார்.


No comments:

Post a Comment