பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

15/03/2021

பத்திரிகை துறையின் வழிகாட்டி!

-முத்துவிஜயன்

ராம்நாத் கோயங்கா
(1904 ஏப். 18 – 1991 அக். 5) 


இந்திய பத்திரிகை உலகின் பிதாமகர் திரு. ராம்நாத் கோயங்கா (1904 ஏப். 18 – 1991 அக். 5) மக்களாட்சி முறையின் நான்காம் தூண் பத்திரிகைகள் என்பதை தனது செயல்பாடுகள் மூலமாக நிலைநாட்டியவர். அவர் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதிலும், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும் முன்னணியில் நின்று, பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் தில்தர் நகர் என்ற கிராமத்தில் 1904 ஏப். 18 -இல் பிறந்த கோயங்கா, ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டதால், அத்தை வசந்தாலால் கோயங்கா என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். வாரணாசியில் தனது தொடக்கக் கல்வியை முடித்த பின், வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்த கோயங்கா, மூங்கிபாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தொழில் நிமித்தமாக 1926-இல் சென்னை வந்த கோயங்கா, சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டினார். சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார். இவரது செயல்களால் கவரப்பட்ட சென்னை நிர்வாகம் 1926-இல் ராம்நாத் கோயங்காவை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக நியமித்தது.

அரசாங்கம் நியமித்த எம்.எல்.சி. பதவியை ஏற்றுக்கொண்டாலும், அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டினார். தவிர, மேலவை உறுப்பினர்கள் சேர்ந்து தொடங்கிய 'இண்டிபெண்டன்ட் பார்ட்டி' என்ற குழுவுக்கு ராம்நாத் கோயங்காவைச் செயலாளராக நியமித்தனர்.

தேசிய சிந்தனை கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதை தன்னுடைய கடமையாகவே கோயங்கா கருதினார். 1932-இல் சதானந்தம் சென்னையில் நடத்திய ‘தி பிரீ பிரஸ் ஜர்னல்’ இதழ் சரிவடைந்ததை ஒட்டி, தனது சொந்த ஊர்தி மூலம் தானே அவ்விதழை ஒவ்வொரு இடங்களுக்கும் சேர்ப்பித்தார். மேலும் டி.பிரகாசத்தின் 'ஸ்வராஜ்யா'வுக்கும் எஸ்.சதானந்தத்தின் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும் உதவிகளைச் செய்துவந்தார்.

1936 அக். 26-இல், 'இந்தியன் எக்ஸ்பிரஸ், 'தினமணி ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார். 1941-இல் தேசிய இதழாசிரியர் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942-ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இந்தியாவில் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், இதழியல் சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்டன. இந்திய இதழாசிரியர்கள் கூடி, ஆங்கிலேயரின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாக நாட்டிலுள்ள எல்லா இதழ்களையும் காலவரையின்றி மூடிவிடத் தீர்மானித்தனர். மகாத்மா காந்தி, தமது ‘ஹரிஜன்’ முதலிய இதழ்களையும் நிறுத்தினார். பிற இதழ்கள் ஒரு நாள் அடையாள நிறுத்தம் செய்தால் போதுமெனத் தீர்மானித்தன. ஆனால், ராம்நாத் கோயங்கா மகாத்மா காந்தியின் விருப்பப்படி நடப்பதே சிறந்ததென தமது பத்திரிகைகள் அனைத்தையும் காலவரையின்றி நிறுத்தினார்!

ஆனாலும், நாடெங்கும் நடந்து வந்த அரசு அராஜகங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். நாட்டில் நடந்து வந்த அரசு அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். அவற்றைத் திரட்டி ஒரு நூலாக உருவாக்கினார். தனது அச்சகத்தில் ரகசியமாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சான அந்த ஆங்கில நூலுக்கு ‘இந்தியாவில் படுகொலை" (India Ravaged) என்று தலைப்புத் தந்தார். இந்த நூலின் பிரதிகளை, ரகசியமாக பிரிட்டன் நாடாளுமன்ற அங்கத்தினர்களுக்கு அனுப்பியும் வைத்தார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும் அந்த நூலை அனுப்பி சாதனை புரிந்தார்.

பின்னாளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக கோயங்கா உயர்ந்தபோது, இந்திய பத்திரிகை உலகில் மாபெரும் புரட்சிகளை நிகழ்த்தினார்.

பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையின்போது (1975 ஜூன் 26 - 1977 மார்ச் 21) நாடு முழுவதும் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன; எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர் கோயங்கா.

அரசாங்கத்திற்கு எதிரான சிறு அசைவுகள் கூட கவனித்து ஒடுக்கப்பட்ட காலகட்டத்தில், நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்தும், சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாகவும் செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிட்டார். அரசுக்கு எதிரான செய்திகள் தணிக்கை செய்யப்பட்டபோது, அந்த இடங்களை வெற்றிடமாக வெளியிட்டு அரசுக்கு தனது எதிர்ப்பை அவர் பதிவு செய்தார்!

அதனால் அரசு, இந்தியன் குழுமப் பத்திரிக்கைகளின் நிர்வாகத்தைத் தன் கைவசம் கொண்டுவந்தது. அப்போது உடல்நிலை சரியில்லாத கோயங்காவும், அவரது மகனும் மருமகளும் மிசாவில் கைது செய்யப்படுவதாக மிரட்டப்பட்டனர். உடல்நிலை தேறிய கோயங்கா சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அரசாங்கம் நியமித்த நிர்வாகக் குழுவைக் கலைத்தார். அந்தக் காலகட்டத்தில் சிவில், கிரிமினல் மற்றும் தனிப்பட்ட முறையில் என இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் கோயங்காவின் மீது அரசால் கிட்டத்தட்ட 250 வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அவற்றை எல்லாம் மீறி, நெருக்கடி நிலையிலிருந்து நாடு மீள்வதற்காக ஜனதா கட்சியை நிறுவியதிலும் கோயங்கா பெரும் பங்கு வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நடத்திய அரசுக்கு எதிரான தலைமறைவுப் போராட்டத்துக்கு பல வகைகளிலும் அவர் உதவினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், நானாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, சரண் சிங், மது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற அரசியல் தலைவர்களுடனான தனது நட்புறவைப் பயன்படுத்தி, ஜனதா கட்சியை நிறுவத் தூண்டியதிலும், அக்கட்சி ஆட்சியைப் பிடித்ததிலும் கோயங்காவின் பங்களிப்பு அபரிமிதமானது.

தமிழில் 'தினமணி'க்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த கோயங்கா, பிற இந்திய மொழிகளிலும் இதழ் தொடங்க விருப்பம் கொண்டு தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். அனைத்திலும் அவரது எக்ஸ்பிரஸ் குழுமம் வெற்றிநடை இட்டது. அரசியலில் ஊழலுக்கு எதிரான போர்க்குரல் எழுப்புவதில் எக்ஸ்பிரஸ் குழுமம் முன்னின்றது.

பத்திரிகை உலகின் சுதந்திரத்திற்கும் நடுநிலைமைக்கும் சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991, அக். 5-இல் மறைந்தார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மட்டுமின்றி, சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராகவும் போராடிய ஒரே பத்திரிகையாளர் ராம்நாத் கோயங்கா. அரசியலில் ஊழலுக்கு எதிரான அவரது தொடர் போராட்டம், இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. போஃபர்ஸ் ஊழலுக்கு எதிராக வி.பி.சிங் நடத்திய போராட்டத்துக்கும் கோயங்காவின் ஆதரவு இருந்தது. அதனால்தான் 1989-இல் அவர் பிரதமர் ஆனார்.

அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் ராம்நாத் கோயங்கா உறுதியாக இருந்தார். நாட்டின் நலனே தனது பத்திரிகையின் லட்சியம் என்பது அவரது உறுதியான தீர்மானமாகும். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத தற்போதைய ஊடகத்தினருக்கு கோயங்காவின் வாழ்க்கை மிகச் சிறந்த திசைகாட்டி.

அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அறச் சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினருடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த போதும் தனது இதழில் இடம்பெறும் செய்திகள் விஷயத்தில் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ, வாய்ப்பையோ அவர் என்றும் அளித்ததில்லை.

தனது பத்திரிகைகளுக்கு அருண் ஷோரி, சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன் போன்ற அற்புதமான ஆசிரியர்களை நியமித்தார்; அவர்களை சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதித்தார். அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமே பத்திரிகைகள் என்ற நிலையை மாற்றிக் காட்டியவர் கோயங்கா. அரசு விளம்பரம் இல்லாவிட்டாலும்கூட, மக்களின் பிரச்னைகளை எழுதுவத மூலமாக, பத்திரிகைகளுக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதை நிரூபித்த்துக் காட்டினார்.

குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உரிமைப் போரில் பத்திரிகைத் துறைக்கு வழிகாட்டியாகவும், ஊழலுக்கு எதிரா போராட்டத்தில் மூத்த தளபதியாகவும் ராம்நாத் கோயங்கா என்றும் திகழ்வார்.

 






No comments:

Post a Comment