பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/04/2021

மறைந்தது நடமாடும் பல்கலைக்கழகம்!

 -தஞ்சை வெ.கோபாலன்

சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் 
(1934 ஆக. 18 - 2021 ஏப். 6)

மூத்த தமிழறிஞர் 

சேக்கிழாரடிப்பொடி தி..ராமச்சந்திரன் 

அவர்களின் மறைவுக்கு அஞ்சலி!

  

                தஞ்சாவூரில் ‘சேக்கிழாரடிப்பொடி’ என்று சொன்னாலே அது முதுபெரும் தமிழறிஞரும், பாரதி ஆய்வாளரும், சைவ சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவரும், திருத்தருமை ஆதீனத்தில் சைவ சிந்தாந்தத்தின் இயக்குனராகவும் இருந்த வழக்கறிஞர் தில்லைஸ்தானம் நடராஜய்யர் ராமச்சந்திரன் அவர்களைத்தான் குறிக்கும்.

                திருவையாற்றில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருவர் பேசுகையில்  சம்ஸ்கிருதம் தேவபாஷை’ என்றார். டி.என்.ஆர். என்றே அறியப்பட்ட தி..ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சொன்னார், “சம்ஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் மகாதேவ பாஷைஎன்றதும் கைதட்டலில் மன்றம் அதிர்ந்தது.

                தஞ்சாவூர், செல்வம் நகரில் உள்ள அவரது வீட்டில் எப்போதும் அறிஞர்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். அவர்கள் கேட்கும் வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் மகிழ்ச்சியோடு விரிவாக பதிலளிப்பார். அவர்களில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இருக்காது, அனைவரின் ஐயப்பாடுகளையும் நீக்குவதில் குறியாக இருப்பார். இவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி, சென்னையில் தனது புதல்வர் இல்லத்தில், 88-ஆம் வயதில் காலமானார்.

                இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றை அடுத்த தில்லைத்தானம் எனும் தலத்தில் வாழ்ந்து வந்தார். சப்தஸ்தானம் எனும் பெரும் திருவிழா நடைபெறும் தலங்களான, திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைத்தானம் என்று சொல்லப்படும் ஊர்களில் கடைசித் தலமான தில்லைத்தானம், இவர் வாழ்ந்த ஊர்.

அவ்வூரிலுலுள்ள பழமை வாய்ந்த ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி, திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, திருச்சி ஜோசப் கல்லூரி இங்கெல்லாம் படித்து சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞராக விளங்கினார் டி.என்.ஆர். இவருடைய வாதங்கள் க் கூறுகையில், “அவர் வாதங்களில் இலக்கிய நயம் நிறைந்திருக்கும் என்பதால் எல்லோரும் அவர் பேச்சைக் கவனிப்பார்கள்” என்று சொல்லியிருக்கிறார் பிரபல வழக்கறிஞர் தஞ்சை வி.சு.ராமலிங்கம் அவர்கள்.

                தனது தமிழ்ப் பற்றின் காரணமாக இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியங்கள், சைவ சித்தாந்தம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு அதில் தலைசிறந்து விளங்கினார். திருத்தருமை ஆதீனம் இவரை உலக சைவ சித்தாந்த சபையின் இயக்குனராக நியமித்திருந்தது. இவருடைய பெரிய புராண உரைகள் பெரிதும் பாராட்டப் பெற்றவை. ஆங்கிலத்தில் இவர் பெரும் புலமை பெற்று விளங்கியதால், பல தமிழிலக்கிய நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார். பாரதியார் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். குயில் பாட்டை The Song of Kukkoo என்ற மிக அற்புதமான மொழிபெயர்ப்பு நூலாக வெளியிட்டிருக்கிறார்.  இவர் மொழிபெயர்த்துள்ள இதர சைவ சித்தாந்த நூல்கள்: ஞானசம்பந்தரின் முதலாம் திருமுறை, நாவுக்கரசரின் ஆறாம் திருமுறை, மணிவாசகப் பெருமானின் எட்டாம் திருமுறை, திருக்கோவையார். இவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

                திருவாசகத்தின் பழைய மொழிபெயர்ப்புகளில் சில பிழைகள் இருப்பதைப் பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் இவர் திருவாசகத்தை பிழையின்றி மொழிபெயர்த்து வெளியிட்டார். இவர் மொழிபெயர்த்த இதர நூல்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை: திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, காரைக்கால் அம்மையாரின் பிரபந்தங்கள், சேக்கிழாரின் பெரிய புராணம்.

                இவரது செல்வம் நகர் இல்லத்துக்கு யார் போனாலும் அன்போடு உபசரித்து அவரிடம் பேச்சுக் கொடுத்து, அவரிடம் அரிய பல செய்திகளை விளக்குவார்; வந்தவர் திரும்பிச் செல்லும்போது இலக்கியத்தின் மீது புதிய ஈர்ப்புடன் திரும்பிச் செல்வர். யார் எத்துணை வினாக்களை எழுப்பினாலும் அவற்றுக்குப் பொறுமையாக பதில் சொல்வார். அவர் இல்லத்தின் வெளி முற்றத்தில் இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து தஞ்சை மாவட்டத்துகே உரிய வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக் கொண்டு அவர் சிரித்த முகத்துடன் விளக்கங்களைக் கொடுக்கும்போது நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

                பல கல்லூரிப் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்று எப்போதும் அவர் இல்லத்தில் ஒரு அறிஞர்கள் குழாம் இருந்துகொண்டே இருக்கும். திருவையாறு பாரதி இயக்கம் எனும் அமைப்பு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கிட, இவரது வழிகாட்டுதலும் உந்துதலும் காரணிகளாக இருந்திருக்கின்றன. இவரும் வழக்கறிஞர் வி.சு.ராமலிங்கமும் அளித்த ஊக்கம் காரணமாகவே, இன்றும் பாரதி இயக்கம் பாரதியைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

                இவருடைய இல்லத்தின் முதல் தளம் முழுவதும், வீட்டின் வாயில் புறத்திலும் இருந்த நூலகத்தில் ஐம்பதாயிரம் நூல்களுக்கும் மேலாக இருந்தன. யார் எந்தத் துறையில் சந்தேகங்களைக் கேட்டாலும் அவரிடம் அதற்கான நூல்கள் உண்டு. பல அரிய நூல்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிறந்த நூல்கள் இவையெலாம் இவரிடம் உண்டு. சமீபத்தில் அந்த நூலகத்தில் இருந்த நூல்கள் அனைத்தையும் தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டார். அந்த வள்ளல் தன்மையைப் போற்றாதார் யார் இருக்க முடியும்? தான் காலமெல்லாம் தேடிச் சேகரித்த நூல்களை இளைய சமுதாயம் பயன்படுவதற்காகக் கொடுத்த பெருந்தன்மை முனைவர் டி.என்.ஆருக்கு உண்டு.

                இலங்கை, யாழ்ப்பாணம் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் இவர் சைவ சித்தாந்தம், பெரிய புராணம் குறித்தெல்லாம் தொடர் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். அவர்கள் இவருடைய பணிகளைப் பாராட்டி  முதுமுனைவர்’ பட்டத்தை வழங்கி கெளரவித்தார்கள். சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவில்லத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதி விழாவின்போது இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் விருதினை அளித்து கெளரவித்தார்கள். பாரதி இல்ல வானவில் பண்பாட்டுக் கழகமும் இவருடைய பாரதி பணிகளைப் பாராட்டி விருது வழங்கியிருக்கிறார்கள்.

                திருவையாற்றைச் சேர்ந்தவரும், திருச்சியில்  சிவாஜி’ எனும் தமிழ் பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திருலோக சீதாராம் அவர்கள் தான் இவருக்கு வழிகாட்டி. புதுச்சேரியில் தமிழாய்வு மையத்தில் இருந்த தி.வே.கோபாலய்யர் எனும் தமிழறிஞரும், அவருடைய இளவல் தமிழ்ப் புலவர் ஒருவரும் இவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள். பல தமிழறிஞர்கள் கூடி தில்லைத்தானத்தில்  தேவசபைஎன்ற பெயரில் மாதாமாதம் கூட்டங்கள் கூட்டி இலக்கியங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். பேராசிரியர்கள் எம்.எஸ்.நாடார், கே.ஜி.சேஷாத்ரி, தஞ்சை சுவாமிநாத ஆத்ரேயர், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு, பேரா. தட்சிணாமூர்த்தி, இசையறிஞர் பி.எம்.சுந்தரம் போன்றவர்கள் தவிர, எந்தத் தமிழறிஞர் தஞ்சைக்கு வந்தாலும் இவருடன் உரையாடாமல் செல்ல மாட்டார்கள்.

                தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இவர் செய்த பெரிய புராண தொடர் சொற்பொழிவு பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. திருவையாறு அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பனிடம் மாறா பக்தியுடையவர். தனது அறுபது, எழுபது வயதிலும், எண்பதாவது ஆண்டிலும் இந்த ஆலயத்தின் சந்நிதியில்தான் வழிபாடுகளைச் செய்து கொண்டார்.  ஈஸ்வரா’ என்று சொல்லிக்கொண்டே, எப்போதும் நெற்றி நிறைய திருநீற்றுடன் காட்சி தருவார். பழகுதற்கு இனியவர். இவரே ஒரு பல்கலைக்கழகம் என்பதால் இவரைச் சுற்றி அறிஞர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

                இவருடைய மாமனார் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆண்டிக்காடு பாலசுப்ரமணிய ஐயர் என்பார் பல பிரபல வழக்குகளில் வாதாடியவர். முதுமுனைவர் டி.என்.ஆர். அவர்களுக்கு வயது காரணமாக உடல்நலம் சரியில்லாமல் போனதால், சென்னை, தி.நகரிலுள்ள தனது மகன் சுரேஷ் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் கடந்த ஏப். 6-ஆம் தேதி பிற்பகல் இன்னுயிர் நீத்து சிவனடி சேர்ந்தார்.

வாழ்க டி.என்.ஆர். புகழ்! ஓம் சாந்தி!         

    

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன், எழுத்தாளர்; தஞ்சையில் இயங்கும் பாரதி இலக்கியப் பயிலரங்கின் இயக்குனர்; தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர்.

காண்க: தஞ்சை வெ.கோபாலன்


***

டி.என்.ஆர்.: தமிழோடு ஒரு வாழ்க்கை

-ரவி சுப்பிரமணியன்

தஞ்சைத் தமிழறிஞர்களில் முதன்மையாக வைத்துப் போற்றத் தக்க பண்பாளர்களில் ஒருவர் டி.என்.ராமச்சந்திரன். தமிழிலும் ஆங்கிலத்திலும் தோய்ந்த புலமை கொண்ட மொழிபெயர்ப்பாளர். ஆழங்கால் பட ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர், அரிய நூல்களின் பதிப்பாளர், பேச்சாளர், கல்வித் தகுதியால் வழக்கறிஞர், இலவச பக்தி இலக்கிய வகுப்புகள் நடத்திய ஆசான், இப்படிப் பன்முக ஆளுமை கொண்டவர் டி.என்.ஆர்.

பக்தி இலக்கிய வகுப்புகளில் நாயன்மார்கள் கதைகளைச் சொல்லி நடத்தும்போது, அந்தப் பாடல்களில் ஆழ்ந்து, லயித்து, உணர்ந்து அவர் சொல்கையில் அவரது கண்களில் கண்ணீர் வழிவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். நாக்குழறி பேச்சு நின்று சில விநாடிகள் மெளனம் விரவி நிற்கும்.

பெரிய புராணம், திருவாசகம், திருக்கோவையார் உட்பட சில பக்தி இலக்கியப் பனுவல்களை மொழிபெயர்த்ததோடு மட்டுமின்றி, 25 நூல்களுக்கும் மேல் எழுதியவர். 15-க்கும் மேற்பட்ட உயரிய விருதுகளைப் பெற்ற அவர் பாரதியின் ஒட்டுமொத்தக் கவிதைகளையும் மொழிபெயர்த்த பெரும் பணியையும் செய்தவர்.

திருவாசகத்தை மொழிபெயர்க்க மட்டும் டி.என்.ஆர். பயன்படுத்திய நூல்களின் எண்ணிக்கை 400. அவருடைய திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு 2001-ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. டி.என்.ஆரின் திருவாசக மொழிபெயர்ப்பைப் படித்த முன்னாள்குடிஅரசுத் தலைவர் .பி.ஜே. அப்துல் கலாம், அவருக்கு எழுதிய கடிதத்தில்எளிமையாக மொழிபெயர்க்கப்பட்ட உங்கள் திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழின் மேன்மையை மேலும் உணர எனக்கு வழிவகுத்ததுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தேனீ மலரிலிருந்து தேன் எடுப்பதைப் போல பூவுக்கு ஆபத்து நேராமல், அலுங்காமல் பின்னும் அது மலருமாறும் செய்வதைப் போல மொழிபெயர்ப்பைச் செய்ய வேண்டும் என்றும் மூலத்தின் கருத்து கசங்காமல் வர வேண்டும் என்றும் சொல்வார் டி.என்.ஆர்.

ஆயிரம் வருஷத்துக்கு முந்தி இருக்கக்கூடிய பாட்டை நவீன ஆங்கிலத்துல மொழிபெயர்க்கக் கூடாது. அப்படிப் பண்ணா துரோகம். அந்த மணத்துல அந்தக் கடந்த காலத்தைக் கொண்டுவரணும். சொற்களின் எளிமை வேறு, எண்ணத்தினுடைய கனம் வேறு. மொழியின் நுட்பம் இருந்தாதான் மொழிபெயர்ப்புக்குள்ள போகணும். இல்லன்னா, மொழிபெயர்ப்பு பண்ண ஆசையே படக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்துஎன்று சொன்ன டி.என்.ஆர். தன் மொழிபெயர்ப்பில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களுக்கும் அதை விளக்கித் தெளிவுபடுத்துவாரே தவிர, கோபம் கொண்டு பேசியோ எதிரியாகப் பாவித்தோ அவர் என்றும் நடந்ததில்லை.

தமிழ்ல சுளைன்னா ஒண்ணுதான். ஆனா, ஆரஞ்சு சுளைக்கு ஒரு சொல், பலாப்பழச் சுளைக்கு ஒரு சொல்னு ஆங்கிலத்தில் வரும்என்று அதை விளக்குவார். மில்டனும் சேக்கிழாரும், ஷேக்ஸ்பியரும் சைவ சித்தாந்தமும் போன்ற தலைப்புகளில் அவர் பேசுவதைக் கேட்கும்போது, பலரும் வியப்பில் ஆழ்ந்துவிடுவார்கள். காட்டாற்று வெள்ளமாக, தெளிந்த நீரோடையாக ஆழ்ந்த சுழலாக, சொல்ல வந்த உள்ளடக்கத்துக்கேற்பப் பல ரூபம் கொள்ளும் அவர் பேச்சு வெறும் பேச்சு அல்ல. பல ரூபத்தில், பல திசைகளில் தன் ஞாபகத்தின் வழியே தேடித் திரிந்து, கருத்துகளை ஒன்றிணைத்து ஒன்றை விளக்க அவர் முற்படும்போது, அதில் ஒன்றிக் கரைந்துவிடுவார். உடலும் மனமும் சிந்தனையும் மொழியும் கூடி நிகழும் ஒரு நிகழ்த்துக் கலை போல இருக்கும் அந்த சொற்பொழிவுகளைக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.

பழக்கத்துக்கும் அவ்வளவு எளியவர் டி.என்.ஆர். அவருடைய பழக்கத்தின் இனிமையை எந்த ராகத்தோடு ஒப்பிட்டுச் சொல்வீர்கள் என்று இசை மேதை டி.என்.சேஷகோபாலனிடம் நான் கேட்டபோது இப்படிச் சொன்னார். ‘‘சிந்து பைரவி. அதான், அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சிந்து பைரவின்னா என்ன, அழகு சிந்தும் பைரவி, எழில் சிந்தும் பைரவி, பாவம் சிந்தும் பைரவி, ரஸம் சிந்தும் பைரவி, அதில் இல்லாதது என்ன? என்னைத் திருப்பித் திருப்பி அவர் சிந்து பைரவி பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த ராகத்தோடதான் நான் ஒப்புமை சொல்வேன்.”

18.08.1934-ல் கோனேரி ராஜபுரத்தில் காமாட்சி அம்மாள், நடராஜ ஐயர் தம்பதியருக்கு 3-வது மகனாகப் பிறந்த டி.என். ராமச்சந்திரன், ஆரம்பக் கல்வியை தில்லைஸ்தானம் பள்ளியிலும் உயர் கல்வியை திருவையாறு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின் மேல்படிப்புக்காக திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். பின் அதே கல்லூரியில் வணிகவியல் பயின்று பி.காம். பட்டம் பெற்றார். பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டமும் பெற்று, 09.08.1956-ல் வழக்கறிஞராகவும் பதிவுசெய்து கொண்டார். 13.09.1956-ல் கல்யாணியம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணத்தின்போது பண்டித கோபாலய்யர் ஒன்பது நாட்கள் கம்பராமாயண உபந்யாசம் செய்தார்டி.என்.ராமச்சந்திரன் - கல்யாணி தம்பதியருக்கு சுரேஷ், கணேஷ், ரமேஷ், மகேஷ் என்று நான்கு மகன்கள் இருக்கிறார்கள்.

சரியான காரியம் என்று ஒன்றை நினைத்து, அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால், எவ்வளவு உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலும் அதைச் செய்தே முடிப்பார் டி.என்.ஆர். நான் அவரைப் பற்றி எடுத்த ஆவணப் படத்துக்காக 2011-ல் தஞ்சை சிவகங்கை பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.

சார், இந்த போட்ல நீங்க பிரயாணம் பண்ற மாதிரி காட்சி எடுத்தா நல்லா இருக்கும் சார்.”

என் வயசென்ன... ஏறுக்குமாறா உள்ள இந்தப் படிகள்ல என்னால ஏறி இறங்க முடியுமா?”

தமிழறிஞர்னா என்ன உக்காந்துட்டே பேசறதா? நடங்க. படில ஏறுங்க... இறங்குங்க. சுறுசுறுப்பாதான இருக்கீங்க சார். பாரதிதாசன்லாம் போட்லயே மெட்ராஸ்லேர்ந்து பாண்டிச்சேரி போயிருக்கார்னு உங்களுக்குத் தெரியாதா? உற்சாகமா வாங்க சார்.”

அவரது ஓட்டுநர் ஜெயப்பிரகாஷ் ‘‘ஐயாவை ஏதும் பண்ணிடாதீங்க. அவங்களுக்கு 77 வயசு. அம்மா என்னை வைக்க மாட்டாங்கஎன்று பதறுகிறார்.

பரமேஸ்வரா... பரமேஸ்வராஎன்று இரண்டு முறை உச்சரித்துவிட்டு, அவரால் இறங்க முடியாத அந்தப் படியில் சிரமப்பட்டு இறங்கி வந்து, படகில் ஏறி ஒரு வலம் வந்தார். அந்தக் காட்சி அந்த ஆவணப் படத்தில் இருக்கிறது. தான் எடுத்துக்கொண்ட எல்லாக் காரியங்களிலும் அதே சக்தியுடன் இயங்கிச் சாதித்த அந்த ஆளுமைக்குப் பெயர்தான் டி.என்.ஆர்.


குறிப்பு:

திரு. ரவி சுப்பிரமணியன், கவிஞர், ஆவணப்பட இயக்குநர்; திரு. டி.என்.ஆர். அவர்களைப் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்தவர்.

நன்றி: இந்து தமிழ் திசை



No comments:

Post a Comment