பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

15/05/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 10

 -பொன்.பாண்டியன் 


மாங்குடியில் நிறுவப்பட்டுள்ள
மாங்குடி மருதனார் நினைவுத் தூண்

காண்க: முந்தைய பகுதிகள்


19. மாங்குடி மருதனார்

 பொதுவாக, புலவர்கள் மன்னரைப் புகழ்ந்து பாடுவது வழக்கம். மன்னர்களாலும் சில புலவர்கள் பாடப்பட்டும் புகழப்பட்டும் உள்ளனர். அப்படிப்பட்ட புலவர்களுள் மாங்குடி மருதனார் குறிப்பிடத்தக்கவர்.


தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புறநானூறு 72-2இல், தன்னை மலிவாகக் கருதி ஏளனம் செய்து வெற்றுரை பேசும் வேந்தரை வென்று அழிப்பேன் இல்லையேல்,

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடிமருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை”

என்று தனது அரசவைப் புலவர்களின் தலைவரான மாங்குடி மருதனாரைக் குறிப்பிட்டு சூளுரைத்ததிலிருந்து மாங்குடி மருதனாரின் மகத்துவம் நமக்குத் தெரிய வருகிறது.

மாங்குடி மருதனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளசங்கரன் கோவில் அருகில் மாங்குடியில் தோன்றினார். இவர் வேளாண் மரபினர் ஆவார். கல்வி, கேள்விகளில் சிறந்திருந்தார். இவரை மாங்குடிக் கிழார், மதுரைக்காஞ்சிப் புலவன், காஞ்சிப்புலவன் என்றெல்லாம் அழைப்பர். இவர் அகத்திணையிலும் புறத்திணையிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

இவர்தம் பாடல்கள் தாய்த்தமிழ் மீதும், ஸநாதன ஹிந்து தத்துவங்கள் மீதும் பெருமிதம், நம்பிக்கை, மதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகின்றன.

புறநானூறு 26-ல்,

“அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே”

-என்று பாடி, பாண்டியன் நெடுஞ்செழியனின் அறக்கள வேள்வியைச் சிறப்பிக்கின்றார்.

இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் மறக்கள வேள்வியைப் புகழ்ந்துபாடுவது ஒரு திகில் பேய்ப்படக் காட்சியைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

புறநானூறு 372-இல்அதைப்பின்வருமாறு காணலாம்:

“பொருந்தாத் தெவ்வர் அருந்தலை அடுப்பின்
கூகிள் விறகின் ஆக்குவரி நுடங்க
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடந்துழந் துஅட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க் குஎல்லாம்
வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கஎனப்
புலவுக் களம் பொலிய வேட்டோய்...”

இந்தப் பாடலை, பரணி சிற்றிலக்கியத்திற்கு ஒரு சிறு முன்னோட்டம் போலவும் கருதலாம்.

மாங்குடி மருதனார் பாடல்களோடு 782 அடிகள் கொண்ட ஒரு

தனி நூலையும் இயற்றி உள்ளார். அதற்கு ‘மதுரைக்காஞ்சி’ என்று பெயர் (பத்துப்பாடல் நூல்களுள் ஒன்று).

காஞ்சி எனப்படுவது புறத்திணைகளில் ஒரு திணையாகும். பாட்டுடைத் தலைவனை வாழ்த்தியும், அவனுக்கு அறிவுரை பகர்ந்தும்; பாராட்டியும் பாடப்படுவது ஆகும்.

‘மதுரைக்காஞ்சி’ பத்துப்பாட்டுத் தொகையுள் நெடும்பாடல் ஆகும். இது 782 அடிகளைக் கொண்டது. இதில் மாங்குடி மருதனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் போற்றிப் பாடியுள்ளார். அவர்தம் ஆட்சி,

 “தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில்கேட்ப " (அடிகள்70- 72)

-என்று பாடி, பாண்டியனின் ஆட்சித்திறமையையும் காலங்காலமாக இது இமயம் முதல் குமரி வரை ஒரே தேசம் என்ற தேசிய ஒருமைப்பாட்டு உணர்வையும் உணர்த்துகிறார்.

பாண்டியனுடைய முன்னோர்களைக் குறிப்பிடும்போது, “தொல்முதுகடவுள்பின்னர்மேய” (41) என சிவபெருமானையும்,

தலைச்சங்க கால பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை “பல்யாகசாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோகிய” (759) என்றும்,

கடைச்சங்கக் காலத்தில் பஃறுளிஆற்றை நெறிப்படுத்திய வடிவலம்ப நின்ற பாண்டியனை “பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்” (61) என்றும்,

இடைச்சங்கம் வளர்த்த பாண்டியனை “தொல்ஆணை நல்லாசிரியர் புணர்கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன்... ”(763) என்றும் பெருமைப்படுத்துகிறார்.

பாண்டிய நாட்டின் ஐவகை நிலங்களின் வளமையை “ஐம்பால் திணையும் கவினி அமைவர” (326) என்று தனித்தனியாகப் பாடியுள்ளார்.

மதுரை நகர்வளத்தைப் பாடும்போது இரவுநேர அல்லங்காடிகள் (544), பகல்நேர நாளங்காடிகள், பூவிற்கும் பெண்மணிகள் 'பண்ணியம்' என்னும் பட்சண பலகாரக்கடைகள்இருந்ததை, “பல்வேறு பண்ணியம் தழீஇத்திரி விலைஞர்” (405) என்றும்,

வயல்வெளிகளில் கரும்புபிழியும் ஓசை இடையறாது ஒலிப்பதை “வேழப்பழனத் துநூழிலாட்ட கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை” (257) என தொழில்வளர்ச்சி குறித்தும் பாடியுள்ளார்.

துறைமுகத்தில் ஏற்றுமதி- இறக்குமதி பொருட்கள் கங்கைக் கடல்போல் (699) காட்சியளித்தது என்று குறிப்பிடுகிறார்.

பற்பலவினைவலர்கள்உள்ள (511-522) நால்வேறு கடைத்தெருக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கலையும் அழகும் செல்வமும் மிகுந்த மதுரை மொத்தத்தில் ஒளிமிகுந்த தேவேந்திர லோகமாகக் காட்சிஅளித்தது (699).

பாண்டியனின் மதுரைநகரில் “பல்வேறு பூத்திரள் தண்தலை சுற்றிஅழுந்து பட்டிருந்த பெரும்பாண்இருக்கை” (341) என்று பாணர் குடியிருப்பைக் கூறியுள்ளார். ‘காழியர்’ என்று சலவைத் தொழிலாளரை (89) குறிப்பிட்டுள்ளார்.

“பூவும் புகையும் சாவகர் பழிச்ச
...சான்ற கொள்கை சாயா யாக்கையர்”
- என (480) சமணப்பள்ளிகளையும்‌,

“சிறந்து புறங்காக்கும் கடவுட்பள்ளி” (461) என புத்த விகாரங்களையும்,

“சிறந்த வேதம் விளக்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலம் அமர்வைய த்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோய் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்”


-என வேதபாடசாலைகள் இருந்தமை குறித்தும் பாடியுள்ளார். 

மதுரையில் தினசரி ஆலயங்களில் பூஜை புனஸ்கார ஆகம வழிபாடுகள் (615) நடந்துள்ளன. இல்லுறைத் தெய்வ வழிபாடு, மங்கையர் மாலையில் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர். நடுநிசியில் பேய்அணங்கு வழிபாடு நடந்துள்ளது. ஆண்டுதோறும் திருவோணம் “மாயோன்மேய ஓண‍‌ நன்னாள்” (591 ) போன்ற விரதங்கள், திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.

“ஓதல் அந்தணர் வேதம்பாட
சீர்இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ண பொழுது புலர்ந்தது”
(666-668)

அறம்கூறு அவையும் செம்மை சான்ற
காவிதி மாக்களும்
(492-499) என மந்திரப் பிரதானிகள் சூழ்ந்தவனாக பாண்டிய கோலோச்சி வந்தான்.

பாண்டிய மன்னா உன்னைப்போல் ஒருகுடைக்கீழ் ஒருமொழி வைத்து உலகு ஆண்டோர்,

“திரைஇடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே" 

என்று (236) அறிவுரைபகர்கிறார். எனவே அறத்தை நினைந்து, சூரியன்போல ஆற்றலில் தனித்தும் விண்மீன்கள் சூழஉள்ள நிறைமதிபோல சுற்றம் சூழ வாழ்வாயாக என்று (753-782) வாழ்த்தி முடிக்கின்றார்.

உண்மையில் ‘மதுரைக்காஞ்சி’யைப் படிக்கும்போது அந்த வரலாற்றுக் காலத்துக்கே சென்றுவிடலாம். அது அத்தகையதொரு ஈர்ப்புமிக்க சொற்பொருள் நயம் கொண்டது ஆகும்.

மாங்குடிமருதனார், அகநானூறில் -1, நற்றிணையில் -2, குறுந்தொகையில் -3, புறநானூற்றில் -6 பாடல்களையும், ‘மதுரைக்காஞ்சி’ என்னும் தனி நூலையும், தமிழ்த்தாய் மனம் மகிழப் படைத்துள்ளார் எனில் அது மிகையாகாது.



No comments:

Post a Comment