பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

15/05/2021

வழிகாட்டிக்கு அஞ்சலி!

-ஆசிரியர் குழு

தஞ்சை வெ.கோபாலன்
(1936 ஜூலை 15-  2021 மே 06)


பேச்சிலும் எழுத்திலும் தேசியமே சிந்தனையாகக் கொண்டு இலங்கியவர்; இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்; தஞ்சையின் அடையாளமாக இருந்த எழுத்தாளர்; தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா மண்ணுலகை விட்டு மறைந்தார்.

மகாகவி பாரதியின் மகா பக்தர்; பாரதி புகழ் பரப்புவதற்காகவே,  ‘திருவையாறு பாரதி இயக்கம்’, ‘பாரதி இலக்கியப் பயிலகம்’ என்ற அமைப்புகளை நடத்தியவர். தஞ்சையில் இருந்தபடியே, தனியொருவராக பாரதி இலக்கியப் பயிலகம் மூலமாக அஞ்சல்வழியில் பாரதி பாடங்களை 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்பித்து வந்தவர் கோபாலன் ஐயா.  

(தற்போதைய) நாகை மாவட்டம், தில்லையாடியில் 1936 ஆம் ஆண்டு பிறந்த இவர், தஞ்சாவூர்,  மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி. காலனி, 5ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வந்தார்.  

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, தனது மக்களுடன் செல்லாமல் தஞ்சையிலேயே தனியே தங்கி அந்த மண்ணில் தேசிய, தெய்வீகப் பணி வளர்த்தவர். அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சம்மேளனத்தின் தஞ்சைக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு பாரதி குறித்த பயிலரங்குகளையும், கருத்தரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். பாரதி கலை, இலக்கியம், குறித்து பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடந்து எழுதி வந்தார். எந்தப் பத்திரிகை என்றாலும், சுதந்திர தினச் சிறப்பிதழுக்காகக் கேட்டால், உடனடியாக கட்டுரை அளித்து விடுவார்.

கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்; ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தஞ்சை குபேர நாட்டியாஞ்சலி ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்தவர். ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலியை மிகச் சிறப்பாக நடத்தியவர்.  ‘திருக்கோயில்களில் நாட்டியாஞ்சலி’ என்ற நூலை எழுதியவர்.

திரு. துளசி ஐயா வாண்டையார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அவருக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்.

நாடு எதிர்கொண்டிருக்கும் பிரிவினைவாதப் போக்குகள் குறித்து எப்போதும் கவலையுடன் பேசுவார். தேசிய சிந்தனைக் கழகத்தின் தளங்களில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 

சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரைப் பற்றிக் கேட்டாலும், முழு வரலாறும் கூறத் தெரிந்திருந்த தேசிய அகராதி அவர். ‘சுதந்திர கர்ஜனை, தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?’ ஆகிய இரு நூல்கள் கொழுந்து விட்டெரியும் அவரது தேசியப் பற்றுக்கு அடையாளம்.

மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ’தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு, தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு, பாரதி போற்றிய பெரியோர்கள், திருவையாறு வரலாறு, வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்’ ஆகியவை இவரது வரலாற்று நூல்கள். ‘சுதந்திரச் சுவடுகளின் வழியே’ என்ற இவரது ஆய்வுப் பயணம் குறிப்பிட வேண்டிய முன்முயற்சி.

இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவர். வீடே புத்தகங்களால் நிறைந்திருக்கும். ‘பட்டினத்தடிகள் பாடல்கள், உரைநடையில் கம்ப ராமாயணம், இனியவை நாற்பது’ என்பவை இவர் அளித்துள்ள இலக்கியப் படையல்கள்.

திரு. ம.பொ.சி.அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்.  ‘சிலம்புச் செல்வரின் அறவழிப் போராட்டங்கள்’ என்ற நூல், இவரது குரு காணிக்கை.

பாரதி இலக்கியப் பயிலகம், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட தியாகிகள், கம்ப ராமாயணம்- ஆகிய வலைப்பூக்கள் வாயிலாக எழுதிக் குவித்தவர். இந்தத் தளங்களில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஆவணங்கள். அவற்றின் சுட்டிகள்:

http://ilakkiyapayilagam.blogspot.com

http://www.tamilnaduthyagigal.blogspot.com
 
 
http://kambaramayanam-thanjavooraan.blogspot.com

தேசியமும் தெய்வீகமும் தமிழகத்தில் தழைக்க வேண்டும் என்பதே முழு மூச்சாகக் கொண்டிருந்தவர்; தேசிய சிந்தனைக் கழகத்தின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவராக கடந்த 6 ஆண்டுகளாக வழிகாட்டி வந்தார்.

திருவையாறு நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவராகவும், தஞ்சை தியாக பிரம்ம சபாவின் துணைத் தலைவராகவும்,  திருவையாறு சாய்பாபா அறக்கட்டளை அறங்காவலராகவும், தஞ்சை காந்தி இயக்க அறக்கட்டளை அறங்காவலராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

 “தஞ்சையில் தனியே இருக்கிறீர்களே, மகன் அல்லது மகளுடன் இருக்கலாமே?’’ என்று அவரைக் கேட்டபோது, “பாரதி இயல் பணிகளை தஞ்சையில் இருந்தால் தானே தொடர்ந்து செய்ய முடியும்?’’ என்றார். அவரைச் சுற்றிலும் ஒரு குழு உடன் இயங்கும். அனைவரையும் ஒருங்கிணைத்துப் பணி புரிவதில் இவர் பண்பாளர்.

அன்னாரது மனைவி அகிலாண்டேஸ்வரி 25 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். இவருக்கு ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய இரு மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளனர்.

கோபாலன் ஐயா காலமானது, தேசிய சிந்தனையாளர்களுக்குப் பேரிழப்பு.  ஆனால், விதியின் அழைப்பை யாரும் தவிர்க்க இயலாது. 1936 ஜூலை 15-இல் இந்த உலகிற்கு வந்தார்; 2021 மே 06-இல் நம்மைப் பிரிந்திருக்கிறார்.

ஐயாவை இழந்து துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள். ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்!

அவரது உள விழைவுகள் அனைத்தும் இந்த மண்ணில் நல்ல மரமாகும்; நாட்டு மக்களுக்கு நிழலாகும். அவரது நூல்கள் என்றும் நமக்கு வழிகாட்டும்.

ஓம் சாந்தி!


காண்க: 








No comments:

Post a Comment