பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/06/2021

கவியரசர் நினைவுகள்- சில சிந்தனைகள்

-ஸ்டான்லி ராஜன்


1
தென்னாட்டுக் காளிதாசனுக்கு வணக்கம்!


காலத்தால் அழியாத வெகு சில கலைஞர்கள் தெய்வத்தால் அனுப்பபடுவார்கள்; முதலில் தாங்கள் யாரென தெரியாமல் தடுமாறுவார்கள், உலகின் நகைப்புக்கும் பழிப்புக்கும் ஆளாவார்கள், தடுமாறுவார்கள்.

எப்பொழுது தெய்வத்திடம் சரணடைவார்களோ அப்பொழுது அவர்களின் அறிவுக்கண் திறக்கப்படும்; காலத்தால் அழியா கலைகளை கொடுப்பார்கள்.

வடக்கே அப்படி காளிதேவியால் உருவானான் காளிதாசன்.

தெற்கே சரஸ்வதியினை வணங்கி உருவானான் கம்பன். 

அபிராமி அன்னையினை வணங்கி பெரும் உயரம் பெற்றான் அபிராமிபட்டன்.

அவன் வழியே அழியாப்புகழ் பெற்றான் ஒட்டக்கூத்தன்.

காளி என வணங்கி உயரம் பெற்றான் பாரதி.

அவ்வரிசையில் செட்டிநாட்டின் சிறுகூடற்பட்டியில் மலையரசி அம்மன் ஆலயத்தில் ஒருகாலத்தில் அழுது கொண்டிருந்த முத்தையா, பின்னாளில் கண்ணதாசனாக தமிழ் இலக்கிய உலகை பாடல் உலகை ஆண்டுகொண்டிருந்தான்.

தெய்வாம்சம் பெற்ற கவிஞர்களுக்கு தனித்தன்மை வாய்க்கும்.

அவர்களிடம் தமிழ் பொங்கும்; அருவியாய்க் கொட்டும்; வர்ணணைகளும் உவமையும் வார்த்தைகளும் காவிரி வெள்ளமாய்க் கொட்டும்; அதில் தத்துவமும் ஆன்மிகமும் வாழ்வியல் விஷயமும் இன்னும் ஏகப்பட்ட உணர்ச்சிகளும் அழகுத் தமிழில் குற்றால அருவியாய் வழிந்தோடும்.

எதையுமே அழகாகவும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் அவர்களால் பாட முடியும்.

அப்படி வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதிக்குப் பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞர் கண்ணதாசன்.

முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவருக்கே பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது. ஆம் அவன் வாழ்ந்த காலத்தில் அவரே முத்தமிழின் மொத்த அறிஞன்.

பாடல், எழுத்து, பேச்சு என எல்லாவற்றிலும் அவனது தமிழ் அப்படி இருந்தது, அதிலும் உண்மை மட்டும் பேசிய உத்தமக் கவிஞன் அவர்.

கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, நட்பு, தாய்மை , நன்றி, சோகம், பிரிவு, நேசம், மோசம், நம்பிக்கை என எல்லா வகை உணர்வுகளுக்கும் அற்புதமாக வரிகள் கொடுத்த அபூர்வக் கவிஞன்.

அவ்வளவு எளிமையாக, சந்தத்தோடு ஒட்டி, ராகத்தோடு இணைந்து உணர்ச்சிகளை மொழியாகக் கொட்டும் கலை அவருக்கு மிக மிக எளிதாக வந்தது.

எல்லா வகையிலும், எல்லா நிலையிலும், எச்சூழலுக்கும் அவரால் மிக மிக பொருத்தமான வரிகளை எழுத முடியும்.

குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர்.

இன்றும் மலேசிய, சிங்கப்பூர் நாடுகளைக் காணுங்கள், உங்கள் காதில் “அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும்.

அரசியல் நிலையினைப்  பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.

ஒட்டுமொத்த இந்தியப் பிரச்னைகளையும் ஒரே பாடலில் விளக்கிய பெருமை அவருக்கு உண்டு.

கோகுலாஷ்டமி என்றால் அவரது கிருஷ்ணகானம் பாடல்கள் நினைவில் வராமல் போகாது.

இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.

பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம், துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும், அவரே தேடிக்கொண்ட போதைப் பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்தத் திறமை எவ்வளவு இருந்திருக்கும்?

எல்லாம் வெறுத்து, ஆன்மிகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது, பாவம்,  உடல்நிலை இடம் கொடுக்கவில்லை, அந்தச் சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்குத் தெரிந்தன.

மதுப்பழக்கமும்,போதைப் பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.

அவரே சொன்னது போல “ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்”.

வனவாசமும் மனவாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்துக் காட்டும் வரலாற்றுக் கல்வெட்டுக்கள்.

தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை, அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே.

பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.

தமிழ்ச் சாதியில்  ‘நல்ல தமிழ்’ கவிஞர்களுக்கு மட்டும் ஆயுள் குறைவு.

பாரதி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கண்ணதாசனும் இடம்பிடித்ததுதான் கொடுமை.

கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமைய வேண்டும்;  விஷயத்தை மறைமுகமாக புரியவைக்க வேண்டும்; மொழியைக் கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம். அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு மனதால் ஒன்றி, கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்ல வேண்டும்.

வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம்; கண்ணதாசனும் அவர்களில் ஒருவர்.

இன்று தமிழகக் கவிதை உலகம்-  உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுப்போக்கு என என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.

ஆகச் சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளைச் சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை.

தமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.
தமிழக சாதிச் சங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.

இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார். இந்தக் கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் பிறந்திருந்தால் இன்று உலகக் கவிஞனாக அவரைக் கொண்டாடியிருப்பார்கள். பாவம், தமிழனாய்ப் பிறந்துவிட்டார்!

“இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌
இங்குவந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே?”

என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.

தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள்; நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லாப் பிரச்னைச் சூழலுக்கும் மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.

தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு; ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதைக் கல்வெட்டு அவர்.

அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள். அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை.

“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்

மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ” 


-எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ் தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனைக் கொண்டாடுவான்.

எப்படிப்பட்ட கவிஞன் அவர்? இனி அப்படி ஒரு கவிதை மேகம் இனி தமிழில் சாத்தியமில்லை.

‘ஆனந்தமானது அற்புதமானது’ என்பதெல்லாம் மானிடன் பாடக்கூடிய பாடல் அல்ல, சித்தர்களால் மட்டுமே சாத்தியம்.

சாகாவரம் பெற்ற கவிஞன் அவர். எல்லாவற்றிற்கும் மேல் அவரின் நாட்டுப்பற்று வாழ்த்துக்குரியது.திராவிடத்தின் சில பொய் முகங்களை அவர் உரித்துக்காட்டிய அளவு இன்னொரு நாட்டுப்பற்றாளன் செய்ய முடியாது.

திராவிட அழிச்சாட்டியம் அரசியல் உள்நோக்கம் கொண்டது; மாயமானைப் பிடிக்க ஓடுவது என முதலில் எச்சரித்தது அவரே.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அற்புதப் பாடல்களைக் கொடுத்து, செங்கோல் ஆட்சி செலுத்திய கவிஞன் அவர். திரையில் கவிஞர் பெயரினைக் கண்டவுடன் தமிழகம் கைதட்டிய காலமும் இருந்தது.

எமனுக்கும் தமிழ் தெரிந்திருக்கும், ஆனால் விதிக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால், இவ்வளவு விரைவில் அழகிய தமிழ்க் கவிதையை கொண்டு சென்றிருக்காது.

எம்மைப் பொருத்த வரை ஒரு விஷயம் உறுதியாகச் சொல்லமுடியும், அந்த சிறுகூடல்பட்டி செட்டி ஒரு தெய்வீகக் கவிஞன், அந்தக் கிராமத்தில் இருந்து சிகாகோ வரை ஒரு தேவதை அவரை நடத்தியது.

வாழ்வின் ஒவ்வொரு நிலைப்பாட்டையும் அவரை அனுபவிக்க வைத்தது. சூது, வஞ்சகம், மோசடி, ஏமாற்றம் , அவமானம் என எல்லாவற்றையும் அவர் தெரிந்து, புரிந்துகொள்ள வாய்ப்புகளை வழங்கியது.

அதில்தான் அவர் திமுகவில் இருக்க வேண்டிய காலமும் வந்தது. அம்மனிதன் அனுபவம் பெற்றபின் அவனை அந்த தெய்வம் ஆன்மிகப் பாதைக்கு இழுத்து வந்தது.

அவன் கவிஞனானதும், அரசியல்வாதியாக அனுபவம் பெற்றதும், எல்லா வகை நன்மை- தீமை, ரோகம்- போகம் என எல்லாவற்றிலும் விழுந்து எழுந்ததும் அனுபவம் பெறவே.

அந்த அனுபவத்தை கொட்டித்தான் அவர் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதினார். இந்துமதத்தின் பொக்கிஷம் அது. தெய்வம் அவர்மூலம் கொடுத்த வரம் அது.

பாரதிக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகளைக் காட்ட முடியும். ஆனால் பாரதி பெரும் வட்டம் - ஞானத் தீ.

கண்ணதாசன் ஆடிக் களைத்து, ஆன்மிகத்தில் இளைப்பாறிய பத்ருஹரி சித்தர் சாயல்.

இருவருமே கண்ணன் பக்தர்கள்.

இருவருமே தேசியவாதிகள்; பாரதிக்கு பிரிட்டானியர் எதிரி;  கண்ணதாசனுக்கு திமுகவினர் எதிரி.

கடைசிக் காலங்கள் இருவருக்கும் ஒன்றாய் இருந்தன. இருவரும் தங்கள் கடைசிக் காலத்தில் உடல்நலத்துக்காக ஏங்கினர். பாரதி நலம்பெற்று இன்னும் எழுத முடியும் என நம்பினார்; கண்ணதாசனும் ஆழ்வார்கள், அடியார்கள் வரலாறை எல்லாம் எழுதுவேன் என சொல்லிக்கொண்டிருந்தார்.

இன்னும் ஒரு ஒற்றுமை உண்டு. பொதுவாக கவிஞர்கள் என்பவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். சிரிப்பவனுடன் சிரிப்பார்கள், அழுபவனோடு அழுவார்கள்.

கொண்டாடும் இடத்தில் இருக்கும் குழந்தை மனம் அவர்களுடையது. ஆனால் எங்கிருந்தாலும் அங்கீகாரத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்குவார்கள்.

உண்மையே பேசும் அவர்கள் மனம் அப்படி ஏங்கும், அழும், ஒரு அரவணைப்பைத் தேடி ஓடும்.

இதைப் பக்குவமாக கையாளும் வஞ்சகக் கூட்டம் உண்டு. அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி வளைக்கப் பார்ப்பார்கள், அப்படித்தான் பாரதிக்கும் கடைசிக் காலத்தில் சோகங்கள் வந்தன; அவர் அகப்படவில்லை, அதனால் அவரது அஞ்சலிக்கும் கூட யாரும் வரவில்லை.

பாரதி தன் தேசத்து விடுதலையினைப் பார்க்கமாலே மறைந்தார்.  கண்ணதாசன் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்து எழுச்சியைக்  காணாமலே மறைந்தார். இருவருமே அவ்வகையில் பரிதாபத்துக்குரியவர்கள்.

ஆனால் தேசப்பற்றுக்கும் இந்துமத சிறப்பான வரிகளுக்கும் இவர்கள் ஆதார சக்திகள்; எக்காலமும் நினைவில் நிற்கும் தூண்கள்.

ஆனால் கண்ணதாசனை கடைசியில் கிறிஸ்தவ மிஷனரிகள் வளைத்தன. தன்னை யாரும் கண்டுகொள்ளா நிலையில், தனக்கான அங்கீகாரம் கிடைக்கா நிலையில்,  மனவேதனையில் இருந்த அவரை அந்த சக்திகள் வளைத்தன‌.

(இது திமுக, காங்கிரஸ், தமிழக அரசின் புலவர் என பல இடங்களில் இருந்தபொழுதும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்துக்கள் அவரைக் கொண்டாடினார்கள், ஆனால் இன்றுள்ள இந்து எழுச்சி அன்று இல்லை. அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை).

ஒருவனுக்கு விதி எவ்வழி பாதை போடுகின்றதோ அவ்வழியில் மட்டுமே செல்லல் வேண்டும். தெய்வத்துப் பணியினை ஒழுங்காகச் செய்யத் தேர்ந்தெடுக்கபட்டவன் அதை விடுத்து தன் சுயவிருப்பில் சென்றால் என்னவாகும் என்பதை கண்ணதாசன் வாழ்வு காட்டிற்று.

கண்ணதாசனின் பாடல்கள் ஒரு சுகம். அவரது எழுத்துகள் இன்னொரு சுகம். பின்னாளைய பாலகுமாரனின் எழுத்து வடிவில் அந்தச் சாயலை நீங்கள் காணலாம்; கட்டிபோடும் எழுத்து அது.

அந்த மகா கவிஞன் தமிழரின் முத்து, தமிழின் அழியாத சொத்து.

தன் அழியா வரிகள் மூலம் தமிழுக்கும் இந்துமதத்துக்கும் பெரும் தொண்டு செய்த அந்த தமிழ் ஞானிக்கு, காலம் கொடுத்த அற்புதக் கவிஞனுக்கு, சரஸ்வதியோ கண்ணனோ காளியோ ஞானம் ஊட்டி வளர்த்து கைப்பிடித்து வந்த ஞான கவிஞனுக்கு நமது வனக்கம்.

இந்த நேரத்தில், பாரதியும் நினைவுக்கு வருகின்றார். தன் கடைசிக் காலங்களில் இருவரின் வரிகளையும் கவனியுங்கள்...

“நல்லதோர் வீணை செய்தே அதை 
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? 
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்” 

-என அழுகின்றார்  பாரதி.

“விதியும் மதியும் வேறம்மா,
விளக்கம் நான் தான் பாரம்மா.
மயக்கம் எனது தாயகம்
மவுனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்”

-என தனிமையில் அழுது கொண்டார் கண்ணதாசன்.

எழுத்தும் பாடலும் தெய்வத்தின் வரம். அதைக் கொடுக்கும் தெய்வம் பலத்த சோதனையும் கொடுக்கும்;  அவர்களால் உலகோடு ஒட்ட முடியாது; வாழ முடியாது. தெய்வம் கோவிலில் தனித்திருப்பது போல தனித்திருந்தே அழுது புலம்பி முடியும் அவர்கள் வாழ்வு.

அதுவும் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டால் அதைப் போன்றதொரு துன்பம் வேறேதுமில்லை. அதை பாரதி, ஜெயகாந்தன் எனப் பலர் அனுபவித்தனர், கண்ணதாசன் எனும் மாபெரும் ஞானத்தமிழ் அவதாரத்துக்கும் அது நடந்தது.

இன்றிருக்கும் தேச எழுச்சியும் இந்து எழுச்சியும் கண்ணதாசன் காலத்தில் இருந்திருந்தால் அவர் மிகப்பெரும் பலமாக நாட்டுக்கு இருந்திருப்பார்.  காங்கிரஸ் அவரை கடலில் கரைத்த பெருங்காயமாக ஆக்கிற்று. 
ஆனாலும் அவர் பாடலும் எழுத்தும் எக்காலமும் தேசத்துக்கும் இந்து மதத்துக்கும் தமிழுக்கும் சேவை ஆற்றிக்கொண்டே இருக்கும்.

உண்மையில்  ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்பது அவர் தன் இயல்பினை மறைக்கச் சொன்ன பாடல்; திசைதிருப்பச் சொன்ன பாடல்.

கவிஞரின் மகா சிறந்த பாடல்கள் எல்லா படங்களிலும் உண்டென்றாலும் ஞானத்தில் ஓங்கி, தன் இயல்பில் பொருந்தி தன் நிலையில், அதாவது தனக்கான பாத்திரமாக உணர்ந்து அவர் எழுதிய பாடல்கள் அவருக்கானவை.

‘மகாகவி காளிதாஸ்’ படம் அதில் முக்கியமானது, மகாகவி காளிதாசன் தமிழில் தன்னைப் பற்றிப் பாடினால் அப்படித்தான் பாடியிருப்பானோ, அதை அந்த கம்பீர த்வணியோடும், அடக்கத்தோடும் பாடினார் கண்ணதாசன். ஆம் தென்னகத்துக் காளிதாசனாக தன்னைப் பொருத்தி பாடினார்...

“குழந்தையின் கோடுகள் ஓவியமாம்.
இந்தக் குருடன் வரைவது காவியமாம்.
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே,
குற்றம் நினைந்திருந்தாலும் அருளுங்களேன்.

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்.
சில காவியப் பொருட்களைப் பாட வைத்தாள்.
அலை எனும் எண்ணங்கள் ஓடவிட்டாள்.
அதை ஆயிரம் உவமையில் பாடவிட்டாள்”.

அவரது உண்மையான வாக்குமூலம், அடிமனதில் இருந்து வந்த வாக்குமூலம்,  அவரது மனதை மீறி மகாகவி காளிதாஸ் படப் பாடல்களிலேதான் வந்தது.

அவர் தென்னகக் காளிதாசன் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை; ஒரு தேவதையின் வரம் அவர்.

பட்டணத்து செட்டி வழியில் வந்த 
கெட்டிக்காரச் சித்தனவன்-
செந்தமிழ்ப் பித்தனவன்.

அந்த மகா கவிஞனுக்கு தென்னாட்டுக் காளிதாசனுக்கு நாம் கண்ட கம்பனுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!


***
2
நமது தர வீழ்ச்சிக்குச் சான்றாகும் கவிதை!

கவிதை என்பதும் தமிழ் என்பதும் யாதெனில், சொல்லவந்த விஷயத்தை அழகுத் தமிழில் சுவைபட இலக்கிய நயத்துடன் சொல்வது.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு’’ 

-என்கின்றார் கண்ணதாசன்.

இதே விஷயத்தை வைரமுத்து சொல்கின்றார்:

“எதுக்கு பொண்டாட்டி,  என்ன சுத்தி வப்பாட்டி.
எக்கச்சக்கம் ஆகிபோச்சி கணக்கு!
பள்ளிக்கூடம் போகையிலே, பள்ளபட்டி ஓடையிலே,
கோக்குமாக்கு ஆகிபோச்சி எனக்கு!”

முதலிரவில் மெல்லப் பதறும் ஆணின் மனநிலையினைச் சொல்கின்றார் கண்ணதாசன்:

“தேவி பூஜையிலே ஈஸ்வரனின்
பள்ளியைக் கண்டாராம்.
மரக்கிளையில் அணில் இரண்டு
ஆடிடக் கண்டாராம்.
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு
அனுபவம் கொண்டாராம்.

அவர் படித்த புத்தகத்தில்
சாந்தி இல்லையே!
இந்த அனுபவத்தைச் சொல்லித் தர
பள்ளி இல்லையே!
கவிதையிலும் கலைகளிலும்
பழக்கமில்லையே!
அவர் காதலிக்க நேற்று வரை
ஒருத்தி இல்லையே!”

-என இலைமறை காயாகச் சொல்கின்றார் கண்ணதாசன்.

அதையே வைரமுத்து உக்கிரமாக பாடுகின்றார்:

“நிலவைக் கொண்டு வா-
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா-
மெத்தை போட்டு வை.

இன்று முதல் இரவு...
நீ என் இளமைக்கு உணவு.

கிள்ளவா, உன்னை கிள்ளவா,
இல்லை அள்ளவா, நீ வா!
வரவா, வந்து தொடவா...
உன் ஆடைக்கு விடுதலை தரவா?”

இலைமறை காயாக காமத்தைப் பாடினார் கண்ணதாசன்:

“இளமை எனும் பூங்காற்று...
பாடியது ஓர் பாட்டு!
ஒரு பொழுதில் ஓர் ஆசை,
சுகம் சுகம் அதில் ஒரே சுகம்!
ஒரே வீணை... ஓரே நாதம்!”

அதையே வைரமுத்து பாடினார்:

“கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா, கண்டபடி கட்டிப்புடிடா!
கட்டில் வரி போட போறேண்டா,
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா!
கட்டில் வரை முத்தம்தானடா,
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா!

கட்டிப்புடி கட்டிப்புடிடா!
கண்ணாளா, கண்டபடி கட்டிப்புடிடா!
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்?
கண்டுபிடிப்பேன்...
கண்டுபிடிப்பேன்... கண்டுபிடிப்பேன்,
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்!”

ஏன் கண்ணதாசன் அப்படியும், வைரமுத்து இப்படியும் எழுதினார்கள்?

கம்பனில் கரைந்தவன் கண்ணதாசன்;  அண்ணாவின் ‘கம்பரசம்’  எனும் ஆபாச நூலில் கரைந்தவர் வைரமுத்து.

ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களிலும் நாயன்மார்களிலும் கரைந்தவர் கண்ணதாசன்; ஆண்டாள் கதையினையும் ஆபாசமாகக் கண்ட திராவிடவாதி வைரமுத்து.

கருணாநிதியின் தமிழை, கவிதையினைக் கண்டு தலைதெறிக்க ஓடியவர் கண்ணதாசன்;  ஆனால் கருணாநிதி எழுதியதையெல்லாம் ஒரு பாடமாக படித்துக் கொண்டாடியர் வைரமுத்து.


No comments:

Post a Comment