பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/06/2021

கி.ரா.வுக்கு அஞ்சலி (கவிதை)

 -நல்லதே விரும்பும் முருகானந்தம்


கி.ராஜநாராயணன்
 (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021)


கி.ரா.

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் திரு. கி.ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாதெமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 

2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.


***

கரிசக்காட்டு கிழவனுக்கு
கடேசி வணக்கங்கள்!

கோபல்லபுரத்து தாத்தா..
கோபித்துக்கொண்டு
கிளம்பினாயோ..?
அம்மை விட்டுச்சென்று
ஆண்டொன்றுகூட
ஆகவில்லை...
பேடையின்றித் தனித்திருக்க...
ஏலாதென்றா
றெக்கை விரித்தாய் நீயும்...
ஏ.... கிழவா?

கி.ரா.
உன்நினைவுகள்
கடலலை போல.
தாலாட்டிக்கொண்டே இருக்குமே..
பட்டிக்காட்டானை மட்டுமல்ல..
படித்த காட்டானான என்னையும்..
உயிருள்ளவரை.

மூதேய்.. மூதேய்..
ஆக்கங்கெட்ட மூதேய்..
வெறுவாலங்கெட்டமூதேய்..
ஆசை ஆசையாய்..
ரெண்டு வார்த்தை
திட்டிவிட்டுச்
செத்திருக்கக் கூடதா
கரிசக்காட்டுப் பெருசே.
திட்டித் திட்டியே
மானுட முரண்களுக்கு
குட்டுவைத்த
ஆசிரியன் நீ...
மூதேவி கூட
சீதேவியாய்
தெரிகிறாள்...
நீ வஞ்சனையின்றி
திட்டுகிறபொழுது..

பிரம்மாவுக்கு
பக்கத்துவீட்டுக்காரனாக
இருந்தாயா என்ன?
பிறகு?
உன் கதாபாத்திரங்கள் மட்டும்
வாசிக்கும்பொழுதெல்லாம்
உயிர்பெற்று எழுகின்றனவே...
எப்படிக் கிழவா ?

அந்த  ‘அங்கணத்தில்’
வழுக்கி விழுந்தது
நானும்தான்..
சிரித்தபடியே
வழுக்கி வழுக்கி
விழுந்து கொண்டே இருக்கிறேன்
வாசிக்கிற பொழுதெல்லாம்....

எப்பொழுது
‘வேட்டி’யைக் கட்டினாலும்
கிழிந்துவிடுமோ என்று
நிமிடத்துக்கொரு கணம்
திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன்
நானும்...
‘தூங்காநாயக்கரின்
குண்டிவேட்டி’யாய்..
ஆகிவிடுமோவென்று
பயம்தான்.

செத்துச் செத்து
விளையாடும் விளையாட்டை
உன் ‘அண்ணாரப்ப கவுண்டர்’ தான்
அழகாகக் காட்டிவிட்டுப்
போயிருக்கிறாரே..?

மலத்தில்கூட
இறைவனைக் கண்டவன்
பாரதி.
பவிசல்லாத
அந்தப் பக்குவத்தை
மானுடத்தின்
அறங்களோடு
அருவருப்புகளையும்
சேர்த்தியே...
அட்டவணைப்பட்டியல் போல
அணிவகுக்கச்செய்துவிடும் பேராற்றல்...
பெருசு
உன்னிடமும் கண்டேன்.

ஏலேய்.... கிழவா
எம்பூட்டுச் சனவெள்ளத்திலும்
குழந்தையைக் கண்டுபிடித்துவிடும்
தாயைப் போல...
எத்தனை கோடி எழுத்துக்களுக்கு
நடுவேயும் உன்னை
கண்டுபிடித்து விடுகிறேன் நான்.
உயிரின் தாகமது..
உன் எழுத்துக் கங்கையின்றி
ஒருநாளும் அடங்காதே
இந்த தவுதாயம்...?

ஆடுகளையும் மாடுகளையும்
கோழிகளையும் நாய்களையும்...
கூடவே என்னையும்
கரிசக்காடு முச்சூடும்
அலைய விட்டவனல்லவா நீ?
எங்கூட்டளிகளாட்டம்..
எல்லாவற்றையும்
சமமாகவே பாவிக்க
கற்றுத் தந்தாயே
இடைச்செவல்காரா..
சமதர்மவாதியிங்கு யாரப்பா
உன்னைப் போல?

தூக்குப்போசியில்..
ஆத்தாவோட மீந்துபோன
நீச்சத்தண்ணியிருந்தாலும்
போதுமே...
உன் கதைகளை
கடித்துக்கொண்டே
அதைக்குடித்து..
ஒரு யுகமேனும்
வாழ்ந்துவிட மாட்டேனே
நான்?

நீயிருக்கும் காலத்திலேயே..
பாண்டிச்சேரிக்கு
பறந்து வந்துவிட
எத்தனைமுறை
எத்தனித்திருக்கிறேன் தெரியுமா?
மப்புத்தான்..
எழுத்து மப்பு.
எழமுடியாமல்
இழுத்துப் போடும்
கிழவனின்
எழுத்துக்களால்
கிளர்ந்தெழும்
புளகாங்கித மப்பு...
அப்பு..
அது
புனிதமப்பு.

எழுத்துக்கூட்டி
வாசிக்கப் பழகுவது போல..
உன் கதைகளைக்
வாசித்தல்லவோ..
உயிர்ப்பை
பழகிக் கொண்டிருந்தேன்..?

கரிசல்காட்டுகதைகளை மட்டும்
நீ தராது போயிருந்தால்...
தரிசக்காட்டு
மனமாய் அல்லவோ
வறண்டு போயிருப்போம்..
நாங்கள்?

நாலாப்புதான் படித்திருந்தாலும்..
நாலந்தாவின் அறிவுமல்லவா
உன்னிடம் வந்து
பாடம் படித்துக்கொண்டது
சிலேட்டுப் பிடித்து..?

எங்கள் பேனாக்களில்
நாங்கள் 
‘மை’தான் நிரப்புவோம்..
நீ மட்டும்-
எளி‘மை’யை
வள‘மை’யை
உயிர்‘மை’யை
நிரப்பினாயோ..?
எப்பொழுது வாசித்தாலும்..
என் தோள்பற்றிக்கொண்டு
தூரியாடுகிறதே
உன் படைப்புக்கள்?

பிறப்புக்கு சிறப்புச்செய்த...
பெருங்கலைஞனுக்கு..
தன்னிச்சையாய்
என் தலைசாய்கிறது...
கைகுவிகிறது...
வணக்கங்களய்யா!

கி.ரா...
மண்ணின் மணமே..
போய்வாருமய்யா
போய்வாரும்.
அவ்வுலகத்திலும்
நகைச்சுவைக்கு
பற்றாக்குறையானது
போலும்.

No comments:

Post a Comment