பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

17/07/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 13

-பொன்.பாண்டியன்

காண்க: முந்தைய பகுதிகள்




22. அள்ளூர்நன்முல்லையார்

நமது ஹிந்து ஸநாதன தர்மத்தில் இல்லற தர்மத்தில் வாழ்பவருக்கு தினசரி ஆற்ற வேண்டிய இன்றியமையாத பஞ்ச மஹா வேள்விகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

1. பித்ரு யக்ஞம் 
(இறந்தாரை நினைந்து வழிபடல்)

2. தேவ யக்ஞம் 
(தெய்வ வழிபாடு)

3. அதிதி யக்ஞம் 
(விருந்தோம்பல்)

4. ரிஷியக்ஞம் 
(அறிஞர்; முனிவர்கள்; சான்றோர்; பெரியோர் முதலானவர்களை வழிபடுதல்; அவர்கள் தந்த நூல்களை ஓதுதல்)

5. பூத யக்ஞம் 
(அனைத்து வகையான ஜீவராசிகளையும் போற்றுதல். பச்சரிசிக் கோலமிட்டு எறும்பு முதலானவற்றையும் காக்கைக்கு அன்னமிட்டு பறவைகளையும் உணவிட்டு வணங்குதல்).

இவற்றுள் தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையும் அதிதிகள் எனப்படும் விருந்தினரையும் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து போற்ற வேண்டும் என்பது கடப்பாடு.

அசோகவனத்தில் அன்னை சீதா, திரிசடையிடம் விருந்தினரைப் போற்ற இயலவில்லையே எனக் கூறி வருந்துகிறார். அதேபோல அன்னை கண்ணகி தன் கணவன் கோவலனிடம் உங்கள்பிரிவால்,

"அறவோர்க்கு அளித்தலும்
அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு
எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

-என்று கூறி வருந்துகிறார்.

இவ்வாறு பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் வரிசையில் பெண்பாற்புலவர் அள்ளூர் நன்முல்லையார் வேண்டுவன என்னென்ன தெரியுமா?

"தானும் தன் கணவனும் விருந்தினரைப் போற்ற வேண்டும். தன் கணவன் வேந்தரோடு இணைந்து தனது நாட்டைப் பகைவரிடமிருந்து பாதுகாக்க வேண்டும்"

என்று, நடுகல் - முன்னோர் வழிபாட்டில் தலைவியின் கூற்றைப் பாடலாகத் தெரிவிக்கின்றார். இதோஅந்தப்பாடல்:

"களிறு பொரக்கலங்கு கழல் முள்வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்தெதிர் பெறுகதில் யானே என்ஐயும்
.................வேந்தனொடு நாடுதரு விழுப்பகை
எய்துக எனவே."

(புறநானூறு - 306)

பெண்கள் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கண்கள் என்று உணர்த்துகிறது இந்தப் பாடல்.

அள்ளூர் நன்முல்லையார், பாண்டிய நாட்டுச் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த அள்ளூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர் ஆவார். முல்லை என்பது இவர்தம் இயற்பெயர் ஆகும்.

அள்ளூர் நன்முல்லையார் அன்புத் தமிழுக்கும், அருமை பாரதத்திற்கும் அர்ப்பணித்த படைப்புகள்:

குறுந்தொகையில் - 9
அகநானூற்றில் - 1
புறநானூற்றில் – 1 பாடல்கள் ஆகும்.

நாம் பெருமிதப்படத்தக்க மகளார் புலவர் பெருமாட்டி அள்ளூர் நன்முல்லையார் ஆவார். அவரின் படைப்புகளைப் படித்து இன்புறுவோம்; பயனுறுவோம்.

***  


23. ஆர்க்காடு கிழார் மகனார்
வெள்ளைக் கண்ணத்தனார்


“உலகத்தையே கடந்து செல்வதைப் போன்று நீண்டு அடர்ந்த பிடரிகளைச் சிலிர்த்துக்கொண்டு வலிய பெரும் பறவையின் வேகத்தோடு பறக்கின்றனவா, ஓடுகின்றனவா என ஊகிக்க இயலாத அளவு வேகமுடன் செல்லும் குதிரைகளின் கடிவாளத்தினைத் தேர்ப்பாகனே! நீ கவனத்துடன் கையாளுவாயாக.

கார்க்காலமும் வந்தது. மாலையும் நெருங்கிற்று. நாம் பயணிக்கும் கானகப்பாதையின் இருமருங்கிலும் செழுமையான இதழ்த் தளங்களை விரித்து முல்லை மலர்களும் மலரத் தொடங்கிவிட்டன.

மிகக் கூரிய நுனியுடன் கூடிய அழகிய அகன்ற இலை வடிவத்தையும் நீண்ட வலிய தண்டில் நெய் பூசப்பட்டு எய்துதற்கு எளிதாக விளங்கும் வெற்றிவேல் படைகளை உடைய நமது வீரர்களும் தத்தமது குதிரைகளை நம்முடன் சேர்ந்துவர முடுக்கிவிடுவர்.

மழைநீர் பெருகிவந்து செம்மண்பாதையை வரிவரியாக அரித்துவிட, காட்டுக்கோழிகள் இரைக்காகப் பாதையைக் கிளறிவிட பாம்புகள் உறைகின்ற உயர்ந்து எழுந்த ஈரமான புற்றுக்களை மதர்த்த மிடுக்கான காளை தனது கொம்புகளால் குத்திச் சிதறடித்து தனது கன்றினை வாஞ்சையோடு அழைக்கும் தனது இணையான தாய்ப்பசுவோடு இழைந்து மந்தையுள் கம்பீரமாக வீடு திரும்பும்.

கறவைகள் யாவும் தொழுவங்களிலே தமது கன்றுகளை அழைத்தவாறு தாம் பூண்டுள்ள அணிகலன்களில் உள்ள மணிகளும் சலங்கைகளும் இன்னிசை ஒலிக்கும்.

இவற்றைக் காணும்போதும், கேட்கும்போதும், பலமாதங்களாக என் பிரிவால் வாடும் என் மனைவி மேலும் வருந்துவாள். அவளின் வருத்தத்தைத் தணிக்க நான் உடனே அங்கு அவளுடன் இருக்க வேண்டும். தேரை இன்னும் விரைவாகச் செலுத்துவாயாக"

-என்று பாடியுள்ளார் வெள்ளைக்கண்ணத்தனார்.

பழந்தமிழர்கள் கல்வி கற்பதற்காக; வணிகத்திற்காக; அரசுப்பணிக்காக தமது குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வர்.

எது எப்படி ஆயினும் மழைக்காலத்தில் ஸந்யாஸிகள் சாதுர்மாஸ்ய நோன்பு இருப்பதைப் போல மற்றைய இல்லறத்தினருக்கு இல்லுறைகாலம் இதுவாகும்.

'வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது' என்னும் துறையை முல்லைத் திணையில் எத்தனை அழகான பின்னணிக் காட்சிகள் அமைத்துப் பாடியுள்ளார் வெள்ளைக்கண்ணத்தனார்!

ஹிந்துப் பெருங்குடி மக்களுக்குப் புனித நேரமான - கறவைகள் வீடு திரும்பும் நேரமான 'கோதூளி லக்னம்' மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக்கண்ணத்தனார் ஆர்க்காடு கிழார் மகனார் ஆவார். 'கிழான்' என்றால் உழவன்; ஹிந்தியில் கிஸான் என்று சொல்லப்படுகிறது.

ஆர்க்காடு எனப்படுவது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு ஆகும். இங்கு ‘வெள்ளைக்கண்ணன்’ என்னும் பெயர் பிரசித்தம். ‘கருப்புக்கண்ணன்’ கிருஷ்ணன் என்றால் ’வெள்ளைக்கண்ணன்’ பலராமன் ஆவார்.

அகநானூறு-  களிற்றியானை நிரைத்தொகுதியில் இவர்பாடிய இந்த ஒரே பாடலில் (அகம்- 64), பலவிதமான செய்திகள், அருமையான சொல்லாடல்கள்!

இப்பாடலில் உள்ள, வாசிப்பவர் மனதில் நிற்கும்படியான கற்பனை, குடும்பத் தலைவனுக்குரிய பொறுப்புணர்வு உள்ளிட்ட அனைத்தும் அற்புதமானவை. பாடி இன்புறலாம்; உணர்ந்து பயனுறலாம்.



No comments:

Post a Comment