பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

17/07/2021

பௌத்தமும் தமிழும்- ஒரு பார்வை

-பத்ரி சேஷாத்ரி



மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1940-ல் ‘பௌத்தமும் தமிழும்’ என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், பௌத்தம் பற்றித் தமிழில் வந்துள்ள புத்தகங்களிலேயே இன்றுவரையில் அதி உச்சம் இந்தப் புத்தகம்தான் என்கிறார்.

இப்புத்தகத்தில் மயிலையார், இவ்வாறு சொல்கிறார்: “பௌத்த மதம் தோல்வியுற்றது, ஆனால் அதன் கொள்கை வெற்றிபெற்றது”. 

எப்படி என்பதற்கு ஐந்து காரணங்களை முன்வைக்கிறார் மயிலையார்...

(1) புத்தரை வைணவர்கள் விஷ்ணுவின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டனர். சைவர்கள் புத்தரை சாஸ்தா/ ஐயனார் என்றாக்கித் தம் படையினரில் ஒருவராகவும், பின்னர் முருகர்/சுப்பிரமணியரோடு தொடர்புபடுத்தினர்.

(2) பிராமணர்கள் வேள்வியில் உயிர்ப்பலி கொடுத்துவந்தனர்; பின்னர் பௌத்தத் தாக்கத்தால் நிறுத்திவிட்டனர்.

(3) இன்றைய இந்துக்கள் அரச மரத்தை வழிபடுகின்றனர். இது பௌத்தத்திலிருந்து வந்தது.

(4) இன்று இந்துமதத்தில் சைவ/ வைணவ/ ஸ்மார்த்த மடங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. இவையெல்லாம் பௌத்தத்தின் சங்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.

(5) அத்வைதம் என்பதே மகாயான பௌத்தக் கொள்கை. எப்படியென்றால் இராமானுஜரும் மத்வரும் இக்கொள்கையை ‘பிரச்சன்ன பௌத்தம்’ [மறைமுக பௌத்தம்] என்றனர். எனவே அத்வைதம் பௌத்தமே.

ஆக, மேலே சொன்ன ஐந்து கருத்துகளின் அடிப்படையில் பௌத்தம் என்னும் மதம் தோல்வியடைந்து காணாமல் போயிருந்தாலும், அதன் கொள்கைகள்தான் இன்றும் இந்துமதத்தை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்த எனது கருத்துகள்...


***

மயிலை சீனி வேங்கடசாமி

1. புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக வைணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. முக்கியமாக ராமானுஜ வைணவர்கள் ஏற்பதே இல்லை. ஆழ்வார்கள் புத்தரின் கருத்துகளை, பௌத்த மதத்தைக் கடுமையாகச் சாடியுள்ளனர். அதேபோல, தேவார நால்வரும் புத்தரை ஏற்பதில்லை. எதிர்த்துத்தான் வந்துள்ளனர். மாத்வ வைணவத்தில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக ஏற்பதில்லை.

புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக சில வட இந்தியப் பாரம்பரியத்தில் ஏற்பதுண்டு. விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றில் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்று வருவதில்லை. வட இந்தியாவின் பல பகுதிகளில் புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டும் சிலைகள் உள்ளன என்பது உண்மையே. மாமல்லையில் ஆதிவராக குகைக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் புத்தர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று செதுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எந்தத் தமிழக வைணவ ஆலயத்திலும் புத்தர் சிலை ஆரம்பம் முதற்கொண்டே இருந்ததில்லை.

சிவனுடைய திரிபுரம் எரித்த கதையில் புத்தர் வருகிறார். அதுவும் ‘கெட்டவராக’. அழிக்கப்படவேண்டிய அரக்கர்கள் மூவரும் தீவிர சிவபக்தர்கள். அவர்கள் அப்படியே தொடரும்வரை சிவனால் அவர்களை அழிக்க முடியாது. அவர்களோ மூவுலகத்திலும் இல்லாத பொல்லாத செயல்களைச் செய்கின்றனர். அவர்களை சிவனிடமிருந்து மடைமாற்ற புத்தர் பயன்படுகிறார். அரக்கர்கள் சிந்தை மாறியதும், சிவன் அவர்களுடைய புரங்களை அழிக்கிறார். தஞ்சைப் பெரியகோயிலில் சிற்ப வடிவிலும் ஓவியமாகவும் இந்தக் காட்சியைக் காணலாம். அதில் புத்தர் அரக்கர்களுக்கு உபதேசம் செய்வதுபோல வரும். இந்தக் கதைக்குள் ஆழமாக இங்கே போக வேண்டாம்.

சாஸ்தா/ ஐயனாருக்கும் புத்தருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புத்தருக்கும் சுப்ரமணியருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மயிலையாரின் மொழியறிவில்தான் பிரச்னையே. சாஸ்தா என்பது குரு என்ற பொருளில் வரும். சுப்ரமணியர் பிரம்மாவிடம் பிரச்னை செய்து, அவரிடமிருந்து வேதத்தைப் பிடுங்கி வைத்துக்கொண்டு, தானே படைப்புத் தொழிலைச் சில காலம் செய்தார். அதன் காரணமாக, சுப்ரமணியருக்கு பிரம்மசாஸ்தா (பிரமனுக்குப் பாடம் சொன்னவர்) என்ற பெயர் வந்தது. இதற்கும் புத்தருக்கும் சம்பந்தமே இல்லை. பல இடங்களில் சிவ, விஷ்ணு, பிரம்மா கோயில்கள் சேர்ந்து இருக்கும். பல்லவர்களும் பாண்டியர்களும் இம்மாதிரியான கோயில்களைக் கட்டினர். மாமல்லையில் பிரம்மாவுக்கு பதில் பிரம்மசாஸ்தாவாக சுப்ரமணியரை வைத்து இந்தக் கூட்டுக் கோயில் கட்டப்பட்டிருக்கும். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக. இங்கே பிரம்மா படைப்பவர். குறைந்தகாலமாவது சுப்ரமணியரும் படைத்தல் தொழிலைச் செய்துள்ளார்.

மற்றபடி சைவத்தைப் பொருத்த வரை சாஸ்தா/ ஐயனார் என்பது சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர். ஜைனத்தில் ‘பிரமதேவ யட்சன்’ என்பவர் உண்டு. இவருடைய படிமவியல் (iconography) இந்து மதத்தின் சாஸ்தா/ ஐயனார் படிமவியலுடன் ஒத்துப்போகிறது. ஆனால் இருவரின் கதைகளும் வேறுவேறு.

ஐயனார்/ சாஸ்தாவை, பௌத்த, ஜைன, ஆஜீவிக மதங்களோடு தொடர்புபடுத்தப பல முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் அங்கிருந்து இங்கு என்று சொல்லப்படும் அளவுக்கு எந்தச் சான்றும் இல்லை.

2. வேள்வி என்பதே கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோனது. இதற்கு பௌத்தம் மட்டுமே காரணம் அல்ல. வேள்வி செய்து வழிபடுதல் பூர்வ மீமாம்சை. சங்கரருக்குப்பின் உத்தர மீமாம்சை எனப்படும் உபநிடத வழியே பிற இந்து தரிசங்களைவிட அதிகமாகப் பரவியது. பௌத்தத்துக்குப் பின்னும் உயிர்ப்பலி இடும் வேத வேள்விகள் நடந்தன. ஆனால் சங்கர அத்வைதத்துக்குப்பின், வேள்வி குறைந்து ப்ராஹ்மன் என்பதன் மீதான குவியம் ஏற்பட்டு, பலவிதமான தத்துவ முன்வைப்புகள் உருவாகின. பக்தி இயக்கம் இன்னொரு பக்கம், பக்தி யோகத்தை நோக்கி மக்களை ஈர்த்தது. இதன் காரணமாகவே வேள்வி செய்தல் குறைந்து, இன்று முற்றிலும் அருகி, அதன் ஒருசில சிறு வடிவங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் உயிர்ப்பலி கிடையாது என்பது உண்மையே.

வேதத்தில் செய்யப்படும் உயிர்ப்பலியைக் காட்டிலும் உணவு உண்பதற்குச் செய்யப்படும் உயிர்ப்பலி பல கோடி மடங்கு அதிகம். அது எந்தக் குறைபாடும் இல்லாமல் பௌத்த நாடுகளிலேயே நடந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

3. அரச மர வழிபாடு. இதுவும் இந்துக்கள் அனைவரிடமும் இல்லை. மேலும் இந்துக்கள் பல மரங்களை வழிபடுபவர்கள். வேம்பு, ஆல், அரசு தொடங்கி அவர்கள் வழிபடாத மரங்களே கிடையாது. இதில் பௌத்தம் காரணமாக மட்டுமே அரச மரம் இந்துக்களிடம் வழிபாட்டுக்கு வந்தது என்பதனை ஏற்க முடியுமா என்று தெரியவில்லை. கல்லால மரம் தட்சிணாமூர்த்திக்கு உகந்தது. அதன்கீழ்தான் அவர் அமர்ந்து போதிப்பார். கோவில்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட தலமரங்கள் உண்டு.

4. பௌத்தத்தைப் பார்த்து இந்துமதம் மடங்களை ஸ்தாபித்தது என்பதும் அதீதக் கருத்தே. புத்தருக்குப் பல நூற்றாண்டுகள் கழித்தே சங்கரர் தோன்றுகிறார். அவர்தான் இந்துமதத்தில் தெளிவாக மடங்களை நிர்மாணித்தவர். இடைப்பட்ட காலத்தில் மடங்கள் இருந்திருந்தால் அவை குறித்து நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை. சங்கரரைப் பின்பற்றியே இந்தியா முழுதும் பிற இந்து ஞானிகள் மடங்களை உருவாக்கினர். ராமானுஜர, மாத்வர், வல்லபர், சங்கரதேவர், சைதன்யர் என்று பலரைச் சொல்லலாம். இவர்கள் அனைவருமே உத்தர மீமாம்சைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். வேத/உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றை மூலமாகக் கொண்டு, தம் ஸ்தாபகர்களின் பாஷ்யங்களின் அடிப்படையை மக்களிடம் பிரசாரம் செய்ய உருவாக்கப்பட்டவை இந்த மடங்கள். தமிழக ஆதீனங்களும் சைவ சித்தாந்தம் என்ற அடிப்படையை மக்களிடம் கொண்டுசேர்க்க உருவாக்கப்பட்டவை.

இவற்றுக்கும் புத்த சங்கங்களுக்கும் பெருமளவு அடிப்படை வேறுபாடு உண்டு. முழுதாக அவற்றுக்குள் இங்கே செல்லப்போவதில்லை.

ஆனால், புத்தர் அல்ல, சங்கரரே இந்த மடங்களுக்கான முழு inspiration.

5. சங்கரரின் அத்வைதம் மகாயானமே- என்பதைவிட கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. சங்கரரைக் கண்டிக்க, அவருடைய கருத்துகளைக் கேலி செய்ய ராமானுஜர் பயன்படுத்திய ‘கெட்ட வார்த்தையே’ பிரச்சன்ன பௌத்தம். மாயாவாதம் என்பதை எதிர்க்க ராமானுஜர் அப்படிச் சொன்னார். அதனாலேயே சங்கர அத்வைதம் பௌத்தமாகிவிடுமா? 

ராமானுஜரின் சித்தாந்தத்தின் பெயர் விசிஷ்ட அத்வைதம், அதாவது அத்வைதத்தின் special case. அதனாலேயே அது அத்வைதம் ஆகிவிடுமா? இவற்றுக்கிடையில் மிக முக்கியமான doctrinal வேறுபாடுகள் உள்ளன. அதிலும் பௌத்தத்துக்கும் உத்தர மீமாம்சைப் பின்னணியில் உருவான வேதாந்த மதங்களுக்கும் இடையில் ஒரு பொருத்தமும் கிடையாது. இரண்டும் ஒன்று என்று சொல்பவர் ஆய்வாளராக இருக்க முடியாது; இரண்டையுமே படித்தறியாத தற்குறி என்றுதான் சொல்லமுடியும். அதுதான் மயிலையார்.

***

பௌத்தம் தன்னளவில் தனிப்பட்ட ஒரு மதம். சில மேலை அறிஞர்கள், உபநிடதங்களிலிருந்துதான் புத்தர் தன் கருத்துகளைப் பெற்றுக்கொண்டார் என்றும், எனவே பௌத்தமே, இந்துமதத்தின் உட்பிரிவுதான் என்றும் சொல்கிறார்கள். இதனை ஏற்கவே முடியாது. [உ.வே.சா இதனை முக்கியமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடுகிறார். அதுவும் தவறே].

இரண்டு மதங்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு, இயங்கி, சில இடங்களில் ஒத்துப்போய், மீண்டும் முரண்பட்டு மாறிமாறி வந்துள்ளன. இரண்டுக்கும் அடிப்படையில் இருக்கும் எந்த ஒற்றுமையும், புவியியல்ரீதியில் அருகருகே தோன்றிய இரு அறிவுப்பள்ளிகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை மட்டுமே. அதனாலேயே இரண்டும் ஒன்று, அல்லது, அதிலிருந்து இது என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

பௌத்தம் வேத, உபநிடதங்களை முற்றிலுமாக மறுப்பது. உபநிடதங்களின் ஆத்மன் குறித்த கருத்தை நிராகரிப்பது. உபநிடதங்களின் அடிப்படை இன்றி இந்து மதத்தின் எந்தப் பிரிவும் கிடையாது. இரண்டு மதங்களின் cosmogony-யும் வேறு வேறு. இரண்டிலும் முக்தி பெறுதல் என்பதற்கான அடிப்படைகள் வேறு வேறு.

1940-ல் எழுதப்பட்ட மயிலையாரின் பௌத்தம் குறித்த புத்தகம்தான் தமிழில் பௌத்தம் குறித்து இன்றளவில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறப்பான புத்தகம் என்றால், தமிழின் நிலை எவ்வளவு கீழாக உள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பௌத்தம் மிகச் சிறந்த தத்துவத்தை, புராணங்களை, கதைகளை, வரலாற்றை உடைய ஒரு மாபெரும் மதம். இந்தியாவில் தோன்றி உலகம் முழுதும் பரவி, இன்றும் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மதம். 

புத்தரின் வாழ்க்கை, புத்த ஜாதகக் கதைகள், அவதானங்கள், தேராவாத புத்தத்தின் முப்பிடகங்கள், மகாயானத்தின் பல்வேறு சூத்திரங்கள் எனப் பலவும் பாலி, சமஸ்கிருதம், திபெத்தியன், சீனம் ஆகியவற்றிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தமிழுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நவபுத்தம் என்ற அரசியல் கருத்தாக்கத்தினருக்கு இதில் அவ்வளவாக ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கான வேலையை மைய நீரோட்டத்தார்தான் செய்ய வேண்டும். அதற்கு முதலில் மயிலை சீனியார், அயோத்திதாசர் ஆகியோரிடமிருந்து விடுபட வேண்டும்.


குறிப்பு:

திரு.பத்ரி சேஷாத்ரி, எழுத்தாளர், தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர். அவரது முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது.

No comments:

Post a Comment