பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/08/2021

இந்தியா மாநிலங்களின் ஒன்றியமா?

-முரளி சீதாராமன்


‘India, that is Bharath, a Union of States’ என்று அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டு இருப்பதை வைத்துத்தான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளும், இடதுசாரிகளும், 'லிபரல்'களும் சொற்சிலம்பம் ஆடுகிறார்கள்!

அதாவது பாரதம் என்பது ‘மாநிலங்களின்’ ஒன்றியமாம்! மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து இந்தியாவை உருவாக்குகிறதாம்! மத்திய அர்சை ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதில் சிலர் புளகாங்கிதம் அடைகிறார்கள்!

முதலில் - 'States'- என்றால் என்ன என்று பார்ப்போம்! அரசியல் சட்டம் என்பது சட்டமேதை  டாக்டர் அம்பேத்கர் தலைமையில், சட்ட மேதைகளைக் கொண்ட குழுவால் வடிவமைக்கப்பட்ட போது - அதாவது பாரத தேசம் சுதந்திரம் அடைந்த புதிதில் - STATES - என்பவை அதன் இப்போதைய பொருளில் இல்லை!

அதாவது மொழிவாரி மாகாணங்களாக இல்லை! மொழிவாரி மாநிலப் பிரிவினை பிற்காலத்தில் (1953) வந்தது - சுதந்திரம் வந்த புதிதில் அல்ல!

அப்படியானால் சுதந்திரம் அடைந்த சமயத்தில், இந்த STATES  என்பது எந்த அர்த்தத்தில் இருந்தது?


சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன - 500க்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பிரதேசங்கள் - அவர்களால் ஆளப்பட்ட ‘அரசு’கள்!

நமது தமிழ்நாடு கூட இப்போதைய வடிவில் இல்லை - இப்போதைய கேரளத்தின் மலபார் பகுதிகள், ஆந்திரத்தின் சில பகுதிகள், இப்போதைய கர்நாடகாவில் உள்ள சில பகுதிகள் எல்லாம் சேர்ந்து... சென்னை ராஜதானியாக- மாகாணமாக இருந்தது.

 ‘சென்னை ராஜதானி’ - MADRAS PRESIDENCY! கவனிக்கவும், மாநிலம் அல்ல! அதற்கு தலைமை அமைச்சர் ‘முதல்வர்’அல்ல - ப்ரீமியர் என அழைக்கப்பட்டார்! இது பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட - குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளுடன் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு  ‘அரசு’!

இதுபோல North Western and Punjab Province, இப்போதைய ஒரிசாவையும், பிகாரின் சில பகுதிகளும், இப்போது  ‘வங்க தேசம்’ என அழைக்கப்படும் ஒன்றுபட்ட வங்காளப் பகுதிகளும் இணைந்த BENGAL PROVINCE... இப்படிப் பல வகையான 'அரசு' கள் இருந்தன.

சுதேசி சமஸ்தான அரசுகளில் ஹைதராபாத் நிஜாம், ஜூனாகாத் - இப்போது குஜராத்தில் உள்ள பகுதி- ஆகியவை பாரதத்துடன் இணைய முரண்டு பிடித்தன என்பதும், சர்தார் வல்லபபாய் படேல் என்ற இரும்பு மனிதர் எப்படி அந்த சுதேசி சமஸ்தான  ‘அரசு’களை எல்லாம் பாரதத்தோடு இணைத்தார் என்பதும் வரலாறு!

ஆக இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில்... பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட சென்னை ராஜதானி, பஞ்சாப் ப்ராவின்ஸ், பெங்கால் ப்ராவின்ஸ் போன்ற பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - ஆனால் குறுகிய அதிகார வரம்புகள் கொண்ட - ‘அரசு’கள் இருந்தன!

பிரிட்டிஷ் ஆளுகையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குக் கட்டுப்பட்டு சுதேசி மன்னர்களால் ஆளப்பட்ட சமஸ்தான ‘அரசு’கள் இருந்தன!

இதுபோக ஃபிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட பாண்டிச்சேரி ‘அரசு’- போர்த்துகீசிய ஆளுமைக்கு உட்பட்ட கோவா ‘அரசு’- இப்படி சிறு சிறு  ‘அரசு’கள் பிற்காலத்தில் விடுதலை பெற்று பாரதத்துடன் இணைந்தன.

எனவே அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்ட காலத்தில் - "INDIA, THAT IS BHARATH, A UNION OF STATES"- என்பதன் பொருள்...

பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட ராஜதானி ‘அரசு’கள் மற்றும் மன்னர்களால் ஆளப்பட்ட சுதேசி சமஸ்தான ‘அரசு’கள் ஆகியவற்றின் இணைப்பு என்றுதான் பொருளாகுமே தவிர ‘மாநிலங்களின் இணைப்பு’ என்று பொருளாகாது!

STATE - என்றால் அரசு என்பதுதான் முதல் பொருள்!

நாம் கம்யூனிஸ்டுகளைக் கேட்கிறோம்,   ‘STATE AND REVOLUTION’ என்று லெனின் எழுதிய புத்தகத்தை  ‘அரசும் புரட்சியும்’ என்று சொல்வீர்களா?  ‘மாநிலமும் புரட்சியும்’ என்று சொல்வீர்களா?

எங்கெல்ஸ் எழுதிய  ‘ORIGIN OF FAMILY, PRIVATE PROPERTY AND STATE’ என்பதன் பொருள்  ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’  என்பதுதானே?

எனவே இந்தியா - அதாவது பாரதம் - என்பது அரசுகளின் இணைப்பு என்றுதான் அரசியல் சாஸனம் சொல்வதாகப் பொருள் கொள்ள வேண்டுமே தவிர -  ‘மாநிலங்களின் பிணைப்பால் உண்டான இந்தியா’ என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது!

இப்போது  ‘STATE’ என்பதன் அதன் மற்றொரு பொருளான ‘மாநிலம்’ என்ற விஷயத்துக்கு வருவோம்!

1953க்குப் பிறகுதான் மொழிவாரி மாகாணங்கள் உருவாகின!

கொச்சி சமஸ்தானப் பகுதிகளையும், திருவாங்கூர் சமஸ்தானப் பகுதிகளையும், ‘சென்னை ராஜதானி’யில் இருந்த மலபார் பகுதியையும் இணைத்து  ‘ஐக்கிய கேரளா’ உருவாயிற்று!

அதேபோல மைசூர் சமஸ்தானப் பகுதிகளோடு, அன்றைய சென்னை ராஜதானியின் கன்னடம் பேசிய பகுதிகளை இணைத்து  ‘சம்யுக்த கர்நாடகா’ உருவாயிற்று!

கடப்பா, கர்நூல், சித்தூர் போன்ற தெலுங்கு பேசும் சென்னை ராஜதானிப் பகுதிகளை, ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம், விஜயநகரம் சமஸ்தானம் போன்றவற்றின் பகுதிகளோடு இணைந்து ‘விசால ஆந்திரா’ உருவாயிற்று!

இவற்றுக்கெல்லாம் பிரித்துக் கொடுத்தது போக மீதமிருந்த தமிழ் பேசும்  ‘சென்னை ராஜதானி’ சென்னை மாநிலம் ஆயிற்று; பிற்காலத்தில் அண்ணா துரை முதல்வர் ஆனதும் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறியது!

இப்போதுதான் State என்பதை மாநிலம் என்ற பொருளில் பார்க்கப் போகிறோம்! 

எனவே இந்தியா என்ற இறையாண்மை பெற்ற மத்திய அரசியல் சட்டப்படிதான்,  அதன் வலிமையால்தான், மொழிவாரி மாநிலங்கள் உருவாகினவே தவிர, மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து இந்தியாவை ‘பிரசவிக்க’வில்லை!

சரி, இப்படி மாநிலங்களை எதிர்காலத்தில் உருவாக்கிய பின்னர் - அப்படி எதிர்காலத்தில் அமையப்போகும் ‘மாநிலங்களுக்கும்’ மத்திய அரசுக்கும் உள்ள உறவு முறை எப்படி இருக்கும்?

சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் கூறுவதைக் கேட்போம்:

அதாவது அரசியல் நிர்ணய சபையில் பலமுறை விவாதித்து இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட அரசியல் சாஸனத்தை சமர்ப்பித்து டாக்டர் அம்பேத்கார் பேசுகிறார்...

வருங்காலத்தில் அமைய இருக்கும் மாநிலங்களை (STATES) பற்றிப் பேசுகிறார். மத்திய அரசு (CENTRE) என்றே கூறுகிறார்...

1)  ‘The second charge is that the Centre has been given the power to override the States.

These overriding powers do not form the normal feature of the Constitution.

Their use and operation are expressly confined to emergencies only!

Could we avoid over riding powers to the CENTRE when an emergency has arisen?’

(Dr.Ambedkar' Speech in the Constituent Assembly for 
ADOPTION OF CONSTITUTION OF INDIA ON 25.11.1949).  

அதாவது மாநிலங்களின் மீது மத்திய அரசு மேலதிகாரம் செலுத்துவதற்கு வழி உள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லப்படுகிறது!

இவ்வாறு மத்திய அரசானது மாநிலங்களின் மீது மேலதிகாரம் செலுத்துவது அவசார கால நேரங்களில் மட்டும்தான் - என்பதைத் தெளிவுபடுத்தும் அம்பேத்கர், “அப்படி ஒரு அவசர நிலை ஏற்பட்டால் கூட நாம் மத்திய அரசு மேலதிகாரம் செலுத்துவதைத் தவிர்க்க முடியுமா என்ன?” என்று கேட்டு... ‘மாநில சுயாட்சி’ ஆசாமிகளுக்கு அன்றே பதில் கொடுத்திருக்கிறார்.

சரி ஒரு பிளவு - CONFLICT - வருகிறது என்று வைத்துக் கொள்வோம், ஒரு குடிமகனின் விசுவாசம் - LOYALTY- யாரிடம் இருக்க வேண்டும்? மத்திய அரசிடமா, மாநில அரசிடமா?

மிகவும் தீர்க்கதரிசனத்தோடு அம்பேத்கர் இந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலும் அளிக்கிறார்!
‘Political systems are a complex of rights and duties resting ultimately on the question to whom or to what authority does the citizen owe allegiance?’
-இந்தப் பகுதியை ‘The Round Table’  என்ற சட்டப் பத்திரிகையின் 1935ம் வருட இதழில் இருந்து அம்பேத்கார் மேற்கோள் காட்டுகிறார்!

 “சாதாரண நாள்களில் சட்டம் சிக்கலின்றி இயங்கும்போது மனிதன் சில சமயம் மாநில அரசின் விதிகளுக்கும் சில சமயம் மத்திய அரசின் விதிகளுக்கும் கட்டுப்படுகிறான்! ஆனால் ஒரு பிளவு வரும் போது?
IT IS THEN APPARENT THAT ULTIMATE ALLEGIANCE CAN NOT BE DIVIDED!
அதாவது அவன் என் மாநிலத்துக்குக் கொஞ்சம், மத்திய அரசுக்குக் கொஞ்சம் என்று விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது!

அப்படியானால் அந்தப் பிரஜை எதற்குக் கட்டுப் பட்டவன்?
WHEN ALL FORMALISM IS STRIPPED AWAY - THE BARE QUESTION IS - WHAT AUTHORITY COMMANDS THE RESIDUAL LOYALTY OF THE CITIZEN? IS IT THE CENTRE OR THE CONSTITUENT STATE?
எல்லா சம்பிரதாயமான கேள்விகளையும் நீக்கிவிடுவோம். கடைசியில் எஞ்சியிருக்கும் இறுதியான விசுவாசம் - அதை ஒரு குடிமகன் எதன் மீது வைக்க வேண்டும்?

மத்திய அரசுக்கா? அதன் உறுப்பான மாநிலத்துக்கா? நன்கு கவனிக்க வேண்டும் அம்பேத்கர் காட்டும் மேற்கோளை...
WHAT AUTHORITY COMMANDS THE RESIDUAL LOYALTY OF THE CITIZEN? IS IT THE  ‘CENTRE’ OR THE ‘CONSTITUENT’ STATE? 
- என்கிறார்! வெறும் STATE - மாநிலம் அல்ல - CENTRE உடைய CONSTITUENT STATE!

பிறகு அம்பேத்கார் தொடர்ந்து தனது கருத்தைக் கூறுகிறார்:
1) There can be no doubt that in the opinion of vast majority of people THE RESIDUAL LOYALTY OF THE CITIZEN, IN AN EMERGENCY, MUST BE TO THE CENTRE AND NOT TO THE CONSTITUENT STATES!
அதாவது ஒரு அவசரச் சூழல் - கொரோனா பெருந்தொற்று, அந்நியப் படையெடுப்பு போன்றவை நேரிட்டால் - ஒரு குடிமகனின் இறுதிக்கட்ட விசுவாசம் மத்திய அரசின் மீதுதான் இருக்க வேண்டுமே தவிர, மாநிலத்தின் மீது அல்ல!

மேலும் அம்பேத்கார் தொடர்கிறார்:
FOR IT IS ONLY THE CENTRE WHICH CAN WORK FOR A COMMON END AND FOR THE GENERAL INTERESTS OF THE COUNTRY AS A WHOLE!
ஏனென்றால் ‘மத்திய அரசு’தான் ஒரு பொதுவான நோக்கத்துக்காகவும், பொதுவான அனைவரின் நலனுக்காகவும் ஒட்டுமொத்த தேசத்துக்காக வேலை செய்ய முடியும்’.

இவ்வாறு கூறிவிட்டு-  “ஒரு அவசரமான சூழலில் மத்திய அரசு தனது அதிகாரத்தை செலுத்தும்போது மாநில அரசுகளின் கடமை என்ன?’’எனக் கேட்டு அதற்கு பதிலும் அளிக்கிறார்!
NO MORE THAN THIS THAT, IN AN EMERGENCY, THEY SHOULD TAKE INTO CONSIDERATION ALONGSIDE THEIR OWN LOCAL INTETSTS, THE OPINIONS AND INTETESTS OF THE NATION AS A WHOLE.
அதாவது “மாநில அரசுகள் ஒரு அவசரமான சூழலில் தங்கள் சொந்த நலன்களோடு தேசம் முழுவதன் நலன்களையும் அதைப் பற்றிய கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடப்பதைத் தவிர வேறொன்றுமில்லை   என்கிறார் டாக்டர் அம்பேத்கர்!

அதாவது மத்திய அரசா, மாநிலமா? என்ற கேள்வி வந்தால், ஒரு குடிமகனின் ULTIMATE ALLEGIANCE, RESIDUAL LOYALTY - கடைசிக் கட்டப் பிணைப்பு, எல்லாவற்றையும் கழித்த பின்பு இறுதிக்கட்ட விசுவாசம், பாரத நாட்டின் மத்திய அரசை நோக்கிதான் இருக்க வேண்டுமே தவிர - அந்த இறையாண்மை பெற்ற மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாநில அரசுகளை நோக்கி அல்ல!

இதைச் சொன்னது வீரசாவர்க்கரோ, தீனதயாள் உபாத்யாயாவோ, வாஜ்பாயோ, மோடியோ அல்ல; சாட்சாத் சட்ட மேதை - இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை - பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறியது!

அதனால் திராவிடத் தம்பிகள், முற்போக்கு ‘லிபரல்’கள் எல்லாரும்  “இந்திய ஒன்றியம் - ஒன்றிய அரசு - மாநிலங்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்தியா உருவாயிற்று” என்றெல்லாம் பிதற்றாமல், மத்திய அரசு கொண்டுவரும் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கப் பாருங்கள்!

Dr.அம்பேத்கார் அவர்களின் பேச்சின் ஆதாரங்கள்: 
Dr.B.R.Ambedkar SPEECH IN THE CONSTITUENT ASSEMBLY FOR ADOPTION OF THE CONSTITUTION OF INDIA ON 25 11 1949).





No comments:

Post a Comment