பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/08/2021

நீ என் கார்காலம் (கவிதை)

-கவிஞர் நந்தலாலா



சாரல் மழையோடு சார்ந்துவரும் உன் நினைவு.
ஈர இரவை எரியூட்டும் உன் கனவு.

உனக்கும் மழைக்கும் உறவென்ன, ஒட்டென்ன?

மேகத்தின் ஏரிகளில் அன்றில் பறவைகளாய்
ஏதோ ஓர் ஜென்மத்தில் நீந்திக் கிடந்தோமோ?
மேகப் பொதியவிழ மின்னல் முறிந்துவிழ,
தேகத்தில் மண்வாசம் பொங்கக் கலந்தோமோ?
பூந்திவலைச் சாரலிலே
நான் நனைந்த வேளையிலே
கூந்தலிலே எந்தன்
தலை துவட்ட வந்தாயோ?

உனக்கும் மழைக்கும் உறவென்ன, ஒட்டென்ன?

நானோ, 
உனக்குமுன் நிற்கும் பொழுதுகளில்
நனைந்து நடுங்கிக் குரலொடுங்கும்
சேவலாய் நின்றிருந்தேன்; 
நீயோ,
உலைமூடி தாண்டாத உலைநீரைப்
போலிருந்தாய். 
என்றுமே
மெய்தீண்டும் காதல் நமக்குள் கிடையாது.
பொய்பேசும் கண்கள் உனக்கும் கிடையாது.

தாயில்லா முட்டைக்குள்
தானே அழிந்துவிடும்
பறவைப் பரிதாபம்
நம் காதல் கண்டதடீ.

கால மழையில் காதல் சுவடழியும்.
காற்றில் இலைபோல காதல் நினைவுதிரும்.
என்றே நான் எண்ணி பெருமூச்சு விட்டாலும்
மழையாகி வந்தென் 
மனதை நனைக்கின்றாய்!

மாசியிலே நீ பிறந்தாய்;  ஆவணியில் நான் பிறந்தேன்
ஆவணி வான்போல் நான் அன்பைப் பொழிந்தாலும்,
மாசிக்குளிரளவே மனங்குளிரச் செய்தவளே!
உன் அடையாளம்
மழையானதெப்படி சொல்.

இன்றோ,
வெளியே நல்லமழை.
வீதியெல்லாம் நீரோடை.
பச்சைத் துளசி படரவிடும் வாசனைபோல்
உட்சுவாசத்தில் இழைகிறது உன் நினைவு.

மூச்சின் நடைபாதை
உன் பாதையாகிறது.
நான் அமர்ந்த நாற்காலி
நீயமரத் தந்துவிட்டு
வெட்டவெளி பார்க்கும்
வேதாந்தியாகின்றேன்

வெளியே நல்லமழை
விண்ணதிரப் பெய்யு மழை.

இலையெல்லாம் நாவாகி
ஈர மழைசுவைத்து
மாமரம் ஒன்று மவுனமாய்
நிற்கிறது.

புல்லின் நுனியெல்லாம்
வெள்ளித் துளிபூத்து
மழைநாள் அழகை
மனதில் வரைகிறது.

நீ எந்தன் கார்காலம்-
நானுனக்கு எப்படியோ?
சொல்லாமல் வந்த மழை
சொன்ன கதை எக்கதையோ?


***

2. வனப்பேச்சியின் வார்த்தைகள் 


அறிவை, மறதி மூடும்
அந்த நொடி எந்த நொடி?
அது அறிவும் அறியாத ரகசியம்.

கனவுகளில் நுழையும்
வாசலைத்
திறந்து வைத்த கைகள் எவை?

தெரிந்து வைத்திருக்கிறோமா நாம்?

கனவுகளுக்குள் நுழைவதைப் போல்தான்
இந்த வனத்துக்குள்
நுழைந்து விட்டேன்.

இது மதிகெட்டான் சோலை.
செல்லும் வழி எல்லாம்
திகைப் பூண்டுகள் செழித்த வனம். 

இதன் பாதைகள்
பைத்தியத்தின் கிறுக்கலைப் போல்
வாக்கியத் தொடர்பற்று
வளர்கின்றன...
வளைகின்றன..
நெளிகின்னறன.

எப்படியோ இங்கு வந்து
மாட்டிக் கொண்டேன்.

கொடுங் கனவுக்கும்
நனவுக்கும்
இமை திறக்கும் தூரம்தான்.
இருப்பினும் 
கனவுகளில் சிக்கிக் கொண்டவர்களால் 
கண்ணைத் திறக்க முடிகிறதா ?

வெளியேற வழியின்றி
இவ் வனத்தில் அலைகிறேன்.

ஏங்கித் தவிக்கிறது இதயம்.
அழுது சிவக்கிறது விழி.

என்னைச் சுற்றிலும் மிருக உறுமல்.
என் பாதங்களுக்குள்
முட்களாய் தைத்திருக்கின்றன-
பாதை மறந்து செத்தவர்களின்
பழைய எலும்புத் துண்டுகள்.

எப்படியாவது
நான் வீடு திரும்ப வேண்டும்-
வீடு திரும்ப வேண்டும்.


No comments:

Post a Comment