பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/08/2021

தென்முகக் கடவுள் துதி (தமிழாக்கம்)

-பத்மன்


(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
- தமிழ் மொழிபெயர்ப்பு)


காப்புச் செய்யுள்கள்

ஆதியில் பதுமனைப் படைத்தவர் எவரோ
அவருக்கு மறைபொருள் உரைத்தவர் எவரோ
ஆத்ம ஒளியாய் என்னுள் உறைபவர் எவரோ
அவர் பாதம் பணிந்தேன் விடுதலை வேண்டி.

மௌனத்தின் விளக்கத்தால் பரம்பொருள்
    தத்துவத்தைப் பறைசாற்றும் இளைஞன்
முதுபெரும் ஞானிகள் யோகிகள்
    சீடராய் சூழப்படும் முனிவன்
ஆசான்களின் தலைவன் அறிவொளி
    முத்திரையன் ஆனந்த வடிவோன்
ஆத்மாவின் ரசிகன் புன்சிரிப்பு
    வதனன் தென்முகத்தான் போற்றி.


ஸ்தோத்திரங்கள்


ஆடியில் நோக்கிடும் சூழல்போல் உள்ளே வெளியுறும் உலகம்
தன்னுள் கண்டிடும் கனவில் வெளியோ உலகோடு தோற்றம்
உண்மை ஒன்றுதான் பிரும்மம் ஆத்மா அதனுடை பிம்பம்
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி!

விதையுள் இருக்கும் மரம்போல் அவனுள் கிடந்த உலகம்
அவனது மாயா சக்தியால் எடுத்தது பலப்பலத் தோற்றம்
தன்னிச்சை யாலனைத்தும் படைத்த அவனோ மாபெரும் யோகி
அன்புடன் போதித்த குருவே, தென்முகக் கடவுளே போற்றி!

அவனது ஒளியால் பொய்யுலகு கொடுக்கிறது
    உண்மைபோல் தோற்றம்
அவனே போதித்தான் உண்மையை நீயே
    அதுவெனும் மறைபொருளை
அதனை உணர்ந்தால் மட்டுமே அறுந்திடும்
    பிறவிச் சுழற்சி
அன்புடன் போதித்த குருவே தென்முகக்
    கடவுளே போற்றி!

பல்துளைப் பாண்டத்து உள்ளிட்ட விளக்கு பல்லொளி பெருக்கும்
அவனுடை ஒளியே அனைத்திலும் ஒளிர்ந்து பார்வை யுமாகும்
அறிவேன் என்ற விழிப்புங்கூட அவனது அறிவே கொடுக்கும்
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி!

உடல்மூச்சு ஐம்புலன் செய்கைச்சினை மாறுபடு
    புத்தியோடு வெறுமைநான்
பேதைபால ரந்தகர் மூடர்போல கலக்கமுடை
    அறிவரிது மொழிவர்
மாயசக்தி காட்டிடும் மயக்கமிந்த அறியாமை
    அழிப்பது டனதனை
அன்புடன் போதித்த குருவே தென்முகக்
    கடவுளே போற்றி!

கிரகணம் பிடித்தாலும் சூரியசந்திரர் உண்மையில்
    ஒளியிழப் பதில்லை
உறக்கத்தில் உணர்வு மனதுதொடர் பறுந்தாலும்
    அறிவாற்றல் மறைவதில்லை
உறக்கத்தை விழித்தவன் அறிவதுபோல முன்மாயை
    அறிவான் ஆத்மஞானி
அன்புடன் போதித்த குருவே தென்முகக்
    கடவுளே போற்றி!

உடலுக்கு உண்டாம் குழந்தை முதலாம் பல்நிலை தனிலும்
மனதுக்கு உண்டாம் விழிப்பு முதலாம் பல்நிலை தனிலும்
ஒருபோல் எப்போதும் வீற்றிருந்து ஞானமுத்திரை காட்டிடும் இறையே
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி!

கனவு விழிப்பு இருநிலையில் காரண காரிய உறவுகளால்
தலைவன் தொண்டன் ஆசான் சீடன் தந்தை மகனாம்
உலகின் அனுபவம் பல்பேதம் அவனுடை மாயை ஆற்றலே
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி!.

புவிநீர் தீவளி ஆகாயம் சூரியன் சந்திரன் ஜீவாத்மா
அசையும் அசையா பிரபஞ்சத் தினெட்டும் அவனுடை வெளிப்பாடாம்
பிரும்மன் அவனே சத்தியம் அறிந்தால் ஒடுங்கும் ஆணவம்
அன்புடன் போதித்த குருவே தென்முகக் கடவுளே போற்றி!

ஆத்மனின் பரந்த தன்மை இங்கே பகரப்பட்டது.
இதனைக் கேட்போர் படித்தோர் உட்பொருள் இருத்துவோர் அடைவர்
எங்கும் வியாபிக்கும் பேற்றையும் எல்லாம் வல்ல இறைநிலையும்
எட்டின் சாரமும் அவராவர் முழுமதியும் மகிழ்வும் எட்டுவர்!

நிறைவுச் செய்யுள்கள்

ஆலமரத் தின்கீழ் அதிசயம் காணீர்
அருங்கிழவோர் சீடராம் ஆசான் இளைஞராம்
மௌனமே ஆசான் மொழியாகும் சீடருக்கோ
முற்றிலும் தீர்ந்தது ஐயம்.

ஆலமரத்து அடிவீற்று தியானிப்பார் நம்மீது
அளித்தருள்வார் ஞானத்தை அண்டிடும் அடியோர்க்கு
மூவுலகின் குருவீசன் தென்முகத் தேவன்
மூள்பிறவித் துயரறுக்கும் கோவே போற்றி!

காண்க: பத்மன் 

No comments:

Post a Comment