பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/08/2021

ஒரு புரட்சியாளரின் கடைசிக் கடிதம்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்

சூர்யா சென்

சுதந்திரப் போராட்ட வீரரும், மாஸ்டர்தா என்று மற்ற போராளிகளால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான மாஸ்டர் சூர்யா சென் தான் தூக்கில் ஏற்றப் படுவதற்கு முதல் நாள் சக போராளிகளுக்கு எழுதிய கடிதம் இது...

உயர்ந்த லட்சியமும் ஒற்றுமையுமே நான் விடைபெறுமுன் அனுப்பும் கடைசி செய்தியாகும். தூக்குக் கயிறு என் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. மரணம் என் வாயிற்கதவைத் தட்டுகிறது. மனம் ஒரு நிரந்தரமான நிலையை எட்டுகிறது. இது ஒரு ஆத்ம சாதனைக்கான நேரம். இது மரணத்தை ஒரு நண்பனைப் போலத் தழுவிக் கொள்ளத் தயாராகும் நேரம். அதே வேளையில் கடந்த ஒளி மிகுந்த நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டிய தருணமுமாகும்.

என் ஆருயிர் சகோதர சகோதரிகளே! என் தனிமையை உடைத்து, மகிழ்ச்சி கொள்ள பழைய இனிய நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன். இந்த இருண்ட வேளையில் உங்களுக்காக என்னால் எதை விட்டுச் செல்ல முடியும்?

ஒன்றே ஒன்று உள்ளது. அதுதான் என்னுடைய கனவு. அது ஒரு பொன்னான கனவு. அதுவே சுதந்திர இந்தியா எனும் கனவு. அதை நான் முதன்முதலில் காணும்போது எவ்வளவு மங்களகரமாக இருந்தது? வாழ்நாள் முழுவதும் தீராத வேட்கையோடும், ஓய்வில்லாமலும் அதைக் காணும்போது, ஒரு பைத்தியம் போலவே அதை நான் தேடினேன். அதை அடைய நான் எவ்வளவு தூரம் சென்றுள்ளேன் என்பது தெரியவில்லை. இன்று அந்த மனதின் பயணத்தை எங்கு கட்டாயம் நிறுத்தப் போகிறோம் என்பதும் தெரியவில்லை.

உங்கள் லட்சியத்தை அடையுமுன், தன் பனிக்கட்டி போன்ற கரங்களால் மரணம் உங்களைத் தீண்டினால், நீங்கள் ஏற்ற பொறுப்பை, இன்று நான் செய்வது போல மற்றவரிடம் விட்டுவிடுங்கள்.

முன்னேறுங்கள், தோழர்களே முன்னேறுங்கள்! வீழ்ந்து விடாதீர்கள்! நம் அடிமைச் சங்கிலி அறுந்து கொண்டிருக்கிறது. சுதந்திர ஞாயிறு எழுகிறது. ஆகவே எழுந்து போராடுங்கள். ஏமாற்றம் கொள்ள வேண்டாம். வெற்றி நிச்சயம். கடவுள் உங்களுக்கு அருளுவார்.

சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் தினமான ஏப்ரல்18 ஐ (1930) மறந்து விடாதீர்கள்.

ஜலாலாபாத், ஜுக்லா, சந்திரா நகர், தல்காட் போராட்டங்களின் நினைவுகள் உங்களிடம் பசுமையாகவே இருக்கட்டும். உங்கள் அடிமனதில் தேசத்துக்காக உயிர் நீத்த தியாகிகளின் பெயர்களை சிவந்த எழுத்துக்களால் எழுதி வையுங்கள்.

என்னுடைய கனிவான வேண்டுகோள், நம் அமைப்பில் எந்தப் பிளவோ, பிரிவினையோ வந்துவிடக் கூடாது.

சிறையின் உள்ளேயும், வெளியிலும் உள்ள அனைவருக்கும் என் ஆசிகள். விடைபெறுகிறேன்.

புரட்சி ஓங்குக! வந்தே மாதரம்!

-சூர்யா சென்
சிட்டகாங் சிறை  11-01-1934



காண்க: சி.எம்.அமிர்தேஸ்வரன்


No comments:

Post a Comment