பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/08/2021

மகாகவி பாரதியின் புனித நினைவில்…

-தஞ்சை வெ.கோபாலன்



(மகாகவி பாரதி மறைந்து 
இந்த ஆண்டுடன் 100 ஆண்டுகள் நிறைகின்றன)

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 1)

மகாகவி பாரதி அமரர் ஆகி 100 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த மகா புருஷனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். 

ஒரு முறை அவரே தன் சீடனான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார்: “கிருஷ்ணா நான் இருநூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் புரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியருடைய புகழ்கூட அவர் காலமான பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவத் தொடங்கியது”. அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு. இப்போது பாரதியைப் பேசாத, புகழாத, அவன் பாடல்களைப் பாடாத வாய்களே இல்லை எனலாம்.

அவர் வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் எழுதும்போது, அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்து இறந்து போனார் என்றே எழுதி இளம் உள்ளங்களில் தவறான செய்தியைப் பதித்து வருகின்றனர். அது உண்மையல்ல. 

திருவல்லிக்கேணி கோயில் யானையின் பெயர் அர்ஜுனன், 40 வயது யானை அது. பாரதியை ஒதுக்கிக் தள்ளியபின் சோர்ந்திருந்த அந்த யானை 1923 ஆகஸ்டில் இறந்து போய்விட்டது. அந்த யானையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு சிலகாலம் படுத்திருந்த பாரதி பின்பு உடல்நலம் தேறி பணிக்குச் சென்றார். அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவில் அவ்வூர் வக்கீல் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா?  ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார்.

அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் அப்போதைய காங்கிரஸ்காரர். வழக்கறிஞர் எம்.கே.தங்கபெருமாள் பிள்ளை. பாரதி சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு புகைவண்டி மூலம் பயணம் செய்து வந்தார். அவரை ரயில் நிலையத்திற்குச் சென்று வரவேற்க அந்த வக்கீல் ஒரு இளைஞரை அனுப்பி வைத்தார். அந்த இளைஞர்தான் பின்னாளில் ச.து.சு.யோகி என்று பெயர் பெற்ற அறிஞர். பாரதியாரை எதிர்பார்த்து ரயில் நிலையம் சென்ற அவர் பாரதியைப் பார்க்க முடியவில்லை. நெடுநேரம் காத்திருந்து வந்தவர்களையெல்லாம் உற்றுப்பார்த்துவிட்டு ஊர் திரும்பி வக்கீலிடம் சென்று வண்டியில் பாரதி வரவில்லை என்று சொன்னார்.

அவர் சிரித்துக் கொண்டே, அப்படியா, இதோ பாருங்கள் இவர்தான் சுப்பிரமணிய பாரதி என்று அருகில் உட்கார்ந்திருந்தவரைச் சுட்டிக் காட்டினார். தன்னை வரவேற்க ஒரு இளைஞர் வந்திருக்கிறார் என்பதை அறியாமல் ரயிலை விட்டு இறங்கி பாரதியார் ஒரு வண்டி பிடித்துக்கொண்டு கருங்கல்பாளையம் வந்து சேர்ந்து விட்டார். அந்த இளைஞர், தான் ஏமாந்ததற்காக வெட்கினார். அவர் ஏமாறவும் ஒரு காரணம் இருந்தது. தலையில் முண்டாசும், மேலே கருப்புக் கோட்டுமாக பாரதியை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார் இவர் ஆனால் பாரதி வந்தபோது தலையில் அவருடைய வழக்கமான முண்டாசு இல்லை. இளைஞரும் ஏமாந்து போனார். அவ்வளவே!

சரி! இனி பாரதியாரை முதன்முதலாகப் பார்த்த ச.து.சு.யோகியின் வாக்கால் பாரதியாரை நாமும் பார்க்கலாம். அவர் சொல்கிறார்: “நிமிர்ந்த நடை; நேரான பார்வை; நெட்டு நிலைத்த நெருப்பு விழிகள் கனல்வது போன்ற கம்பீரமான முகம்; மொட்டைத் தலை, முறுக்கு மீசை; விறைப்பான மேனி; வெட்வெடுப்பான வீர்யம்; எலுமிச்சம்பழ நிறம்; எடுப்பான பெருமிதம்; இடிபோன்ற குரல்; துடிப்பான செயல்; கையில் ஓர் ஃபிரெஞ்சு நாவல் - இதுதான் நான் முதன்முதல் கண்ட பாரதி” இப்படிச் சொல்கிறார் ச.து.சு.யோகி.

சமீபத்தில் சென்னையிலிருந்து வெளியாகும் ‘பிரம்ம ஞான தீபம்’ எனும் பத்திரிகையிலிருந்து தஞ்சையில் என்னைக் காண ஒரு பெண்மணி வந்திருந்தார். உங்களுடைய பாரதி இலக்கியப் பயிலகத்தில், மகாகவி பாரதியார் ஈரோடு கருங்கல்பாளையம் நூலக ஆண்டு விழாவில் பேசிய கடைசி உரை கிடைக்குமா என்றார். எதற்கு என்ற என் வினாவிற்கு அவர்கள் நடத்தும் ஒரு யோகா அமைப்பின் தலைவர் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர், அவர் வீட்டில்தான் அந்த சொற்பொழிவு நடந்தது என்றார். நானும் அந்தச் சொற்பொழிவை அவர்களுக்குக் கொடுத்தேன். அவர்களுடைய பிரம்ம ஞான தீபம் இதழில் அது பிரசுரமாகியது.

மகாகவி பாரதியின் அந்தக் கடைசி சொற்பொழிவு நடந்த இடம் கருங்கல்பாளையம் என்று சொன்னேன் அல்லவா. அங்கு நடந்த அந்த வாசகசாலை ஆண்டுவிழா பற்றி ச.து.சு.யோகி சொல்வதையும் இப்போது பார்க்கலாம்.

“அன்று எங்கள் ஊர் வாசகசாலையில் ஆண்டு விழா. தலைவர் பாரதி. மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சு முட்டும் முழக்கடித் தமிழ். அது வரையில் மேடையில் அமர்ந்திருந்த பாரதி ஆடவில்லை, அசையவில்லை. சுவாசம் விட்டாரோ என்னவோ, அதுகூட சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. மீசையை முறுக்கும் போது அன்றி, வேறு யாதொரு சலனமும் கிடையாது. பேசுவதற்கு அவருடைய முறை வந்தது. எழுந்தார் – எழுந்தார் என்பது தப்பு; குதித்தெழுந்தார், அவர் அமர்ந்திருந்த நாற்காலி உருண்டது. மேஜை முன்னே தாவித் தயங்கியது. அவருடைய பேச்சு? அதில் வாசக சாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்களுக்கு மூன்று நிமிஷங்கள் முடிவுரைகூட இல்லை.

எடுத்த எடுப்பிலேயே உரத்த குரலில் அவர் பிரகடனம் செய்தார், “நான் மனிதருக்கு மரணமில்லை என்கிறேன்” என்று. தொடர்ந்து பாட ஆரம்பித்தார். அடடா! அவர் பாடியதைக் கேட்க வேண்டுமே! அது என்ன மனிதனுடைய குரலா? இல்லை, இடியின் குரல்; வெடியின் குரல். “ஓஹோஹோ” என்று அலையும் ஊழிக்காற்றின் உக்கிர கர்ஜனை. ஆனால், அவைகளைப் போல வெறும் அர்த்தமில்லாத வெற்று ஓசையல்ல. அர்த்த புஷ்டியுள்ள அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக் குரல்.

“ஜயமுண்டு பயமில்லை மனமே – இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு”

ஆம்! இந்தப் பாடலைத்தான் நான் முதன்முதலாக அவர் வாய்மூலம் பாடக்கேட்டேன். அதன் முத்தாய்ப்புக்கு மேல் முத்தாய்ப்பான, ஜாஜ்வல்ய ஜங்காரத்வனி, மூர்ச்சனாக்ரமம் தவறாது மூர்க்காவேச முழக்கமான மூர்த்தண்யம், அண்டாண்டங்களை எல்லாம் துண்டு துண்டாய் உடைத்திடுவது போன்ற உத்தண்ட சண்டமாருத வீர்யம். அன்று போலவே இன்றும் என் நெஞ்சில் கனல் மூட்டுகிறது.

பாட்டு முடிந்தவுடன் ‘பாரறியோம், விண்ணறியோம்’ என்றபடி அவர் பாடக்கேட்ட நாங்கள் இவ்வுலகத்தை விட்டு ‘ஜயமுண்டு பயமில்லை’ எனும் ஜீவன் முக்தி உலகத்திலே முருகன் துணையுடன், தேவ தேவியின் சந்நிதானத்திலே சஞ்சரித்தோம் என்றால் அது மிகையாகாது”.

அன்றைய அவருடைய சொற்பொழிவின் சாரத்தைத்தான்  ‘பாரதி அறுபத்தாறு’எனும் பாடலில் பிழிந்து கொடுத்திருக்கிறார். “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” என்று தொடங்கும் பாடலில் பின்னர் வரும் வரிகள்தான் கருங்கல்பாளையம் சொற்பொழிவின் சாரம். அதில் சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை,

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;
துச்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர் மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.

மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பது நம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தால் எமக்கென் னென்றே

வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!

-இந்தச் சொற்பொழிவைப் பற்றியும் தனது கருங்கல்பாளையம் விஜயம் பற்றியும் யோகி  ‘சுதேசமித்திரன்’  பத்திரிகையில் தாமே எழுதி வெளியிட்டார்.

1921 செப்டம்பர் முதல் தேதி, இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. மெலிந்த பலஹீனமான உடல், நோயின் உக்கிரம் தாங்கவில்லை. விரைவில் அது ரத்தக் கடுப்பு நோயாக மாறியது.  ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் செப்டம்பர் 12ஆம் தேதி வேலைக்கு வந்துவிடுவதாகத் தெரிவித்தார். கொடுமை என்னவென்றால் அன்றுதான் அவர் உடலுக்கு எரியூட்டப்பட்டது.

அவருடைய இறுதி நாள்! 1921 செப்டம்பர் 11. அன்றைய இரவு அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். சில நண்பர்கள் உடன் இருக்கிறார்கள். அவர்களில் நீலகண்ட பிரம்மச்சாரியும் ஒருவர். அவர் சொல்லும் செய்திகள் இதோ....
“ஸ்ரீ டி.பிரகாசத்தின் சகோதரரான ஹோமியோபதி டாக்டர் டி.ஜானகிராமன், பாரதியைப் பார்க்க அழைத்து வரப்பட்டார். டாக்டர் பாரதியாரிடம் வந்து “உடம்புக்கு என்ன செய்கிறது?” என்றார். அவ்வளவுதான் வந்ததே கோபம் பாரதியாருக்கு. “யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கு ஒன்றும் உடம்பு அசெளக்கியம் இல்லை. உங்களை யார் இங்கே கூப்பிட்டது? என்னை சும்மா விட்டுவிட்டுப் போய்விடுங்கள்” என்று உரக்கக் கத்தினார். வேறு வழியின்றி டாக்டர் போய்விட்டார்.

பாரதியாரின் வீட்டுக்கருகில் வசித்து வந்த ஒரு வயதான அம்மாள் பாரதியிடம் வந்து “என்னப்பா பாரதி, உனக்கு உடம்பு சரியில்லையாமே…” என்று கேட்கத் தொடங்கியதுதான் தாமதம், வந்ததே கோபம் பாரதிக்கு. “யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கு எல்லாம் சரியாகவே இருக்கிறது. என்னை இப்படி வதைப்பதைத் தவிர உங்களுக்கெல்லாம் வெறு வேலையே இல்லையா?” என்று கூச்சலிட்டார்.
அன்றிரவு, பாரதி நண்பர்களிடம் அமானுல்லா கானைப் பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த அமானுல்லாகான் ஆஃப்கானிஸ்தானில் அரசராக இருந்தவர். அதன்பின் முன்னிரவு முழுவதும் பெரும்பாலும் மயக்கத்தில் இருந்தார். இரவு சுமார் 1.30 மணிக்கு அந்த மகாகவியின் உயிர் பிரிந்தது. ஒரு மகாகவியின் வரலாறு இவ்வாறு முடிந்தது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பாரதி போன்ற ஒரு மகாகவியின் நினைவு மக்கள் மனங்களில் நீங்காமல் நிற்கும். வாழ்க பாரதி புகழ்!



குறிப்பு: 

அமரர் திரு. தஞ்சை. வெ.கோபாலன் 9 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இது.


No comments:

Post a Comment