பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/09/2021

தமிழரசுக் கழகம் கண்ட தேசியவாதி

-வைஷ்ணவிப்பிரியன்



‘சிலம்புச்செல்வர்’ 
ம.பொ.சிவஞானம் கிராமணியார்
(1906 ஜூன் 26 – 1995 அக். 3)


மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் பல பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்துக்கு தாரை வார்க்கப்படாமல் காத்தவர், ம.பொ.சி. எனப்படும், மயிலை பொன்னுசாமி சிவஞானம் கிராமணியார்.

மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த ம.பொ.சி., பல முனைவர் பட்டங்களைப் பெறக் கூடிய அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொண்ட கல்வியாளர். அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை கவர்ந்திழுத்து வைத்திருந்த ம.பொ.சி.யின் மேடைப்பேச்சு கேட்போரைக் கவர்ந்திழுக்கும் காந்தசக்தி மிக்கது.

தமிழகத்தில், முதன்முதலில் ‘உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு’ என்றும், ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்றும், ‘தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். (இவரது இந்த முழக்கங்களைத் தான் திமுக தற்போது தனதாக்கிக்கொண்டு முழங்கி வருகிறது).

தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் காப்பியத்தை பட்டிதொட்டிகளில் எல்லாம் ம.பொ.சி. பிரசாரம் செய்த பலன், இன்று அந்தக் காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. இவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழும், ‘தமிழரசு’ இதழும் தேசியத் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றின.
1950-இல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி அழைத்து விழாவை நடத்தினார் ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது. தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சியின் தமிழ்க்கொடையை பாராட்டி, பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவருக்கு 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டத்தை வழங்கினார்.

கம்பனைச் சிலர் சிறுமைப்படுத்தியும், கம்ப ராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது ‘தமிழரசுக் கழக’ மாநில மாநாட்டின் போதெல்லாம், முதல் நாள் மாநாட்டுக்கு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களைப் பரவச் செய்தார்.

சங்க இலக்கியத்தில் ம.பொ.சி. தேர்ந்தவராக விளங்கக் களம் அமைத்துக் கொடுத்தது சிறைவாசம். தன் சிறைவாசத்தை சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களைப் படிக்கப் பயன்படுத்திக் கொண்டார். மகாகவி பாரதி மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி. , அவரைப்பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சிலம்புச்செல்வர். அன்றைய பிரபலமான தேசபக்தராகவும், வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறைவாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறி மாறி துன்பம் அனுபவித்தவர் ம.பொ.சி.

சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்து ‘விசால ஆந்திரா’ வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்து உயிரை விட்டார் பொட்டி ஸ்ரீராமுலு. உடனே கலவரம் நிகழ்ந்த்து. அன்றைய பிரதமர் நேரு மாநிலங்களைப் பிரிக்க ஒரு குழுவை அமைத்தார். அதன் சிபாரிசுப்படி தமிழ்நாடு தனியாகவும், ஆந்திரம் தனியாகவும் பிரிக்கப்பட்டன. அப்போதைய சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போயிற்று. அந்த மாவட்டத்தில்தான் புகழ்மிக்க க்ஷேத்திரங்களான திருப்பதி, திருத்தணி முதலியன இருந்தன.

இவர் திருப்பதியை மீட்க போராட்டம் தொடங்கினார். கட்சியில் இருந்து கொண்டு இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது தமிழ்நாடு காங்கிரசின் கொள்கை. ம.பொ.சி. எந்த காங்கிரசுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சியுடன் முரண்பட்டார்; அதனால் 1954-இல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் வெளியேறினார். ஆயினும், போர்க் குணம் இவருக்கு உடன்பிறந்தது ஆயிற்றே! விடுவாரா? முழுமூச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது.

தென்குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லையை மீட்க நேசமணி போன்றோருடன் இணைந்து போராடினார்; இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது.

பிரிட்டிஷ் காலத்தில் மெட்ராஸ் மாநகராட்சி மன்றக் கொடியில் ‘கடல், படகு, 3 சிங்கங்கள், 2 மீன்கள்’ ஆகியவை சின்னமாக இருந்தன. ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு கொடியை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்தது. அப்போது, கழகத்தின் கல்விப் பிரிவின் தலைவராக இருந்த ம.பொ.சிவஞானம், பாண்டியர், சோழர், சேரர்களின் சின்னமான ‘மீன், புலி, வில்’ ஆகியவற்றை இணைத்து தனிக்கொடி உருவாக்கினார். அதுதான் தற்போதும் சென்னை மாநகராட்சியின் சின்னமாக விளங்கி வருகிறது.

ம.பொ.சி.க்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்து சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி போன்றவர்கள் தமிழரசுக் கழகத்துக்கு வந்தனர். முன்பே கூறியபடி தெற்கெல்லைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப் பிரமுகர்கள் பலர் ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். அவர்களுள் பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.நாகராஜன், அவ்வை டி.கே.சண்முகம், பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

காங்கிரஸ் இயக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியபோதும், அங்கு இவருக்கு எந்தப் பெருமையும் கிடைக்கவில்லை. ஆயினும் மனம் தளராமல், இவர் ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு’களை அடிக்கடி நடத்தினார்.

ஆனால், அந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்தில்தான் இவருக்கு மேலவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், ம.பொ.சி.யோ ‘போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே’ என்றார்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972 முதல் 1978 வரையிலும் ம.பொ.சி பணியாற்றியுள்ளார். 1986 நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1966 இல் ம.பொ.சி.யின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டை பாராட்டி ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கௌரவித்தது. இதுதவிர சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தினரிடமிருந்து முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 1986 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை சிறப்பு பெற்று இயங்கியது.

சுதந்திரதினப் பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுதந்திரப் போரில் சிறப்பிடம் வகித்த சில இடங்களிலிருந்தெல்லாம் புனித மண் எடுத்து, அதையெல்லாம் தில்லியில் காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடாகியது. அந்த இயக்கத்தில் 1930இல் ராஜாஜி உப்பெடுத்து சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யத்தில் புனித மண் எடுக்கும் பொறுப்பினை எம்.ஜி.ஆர். ம.பொ.சி.க்குக் கொடுத்தார். தள்ளாத வயதிலும் அவர் அங்கு சென்று புனித மண் எடுத்துவந்து டில்லியில் சேர்த்தார்.

வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச் சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டுடன், ஆழ்ந்து ஊடுருவும் கரிய கண்கள். அபூர்வமான அடர்ந்த மீசை. படிய வாரப்பட்ட தலை, மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலிருக்கும்.

1968ஆம் ஆண்டு அதுவரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டவர் ம.பொ.சி.

அதிகாரம் தந்த கௌரவத்தினால், சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்தப் பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக ஒருவரின் கடந்தகாலப் போராட்டங்கள் இருந்தன. அதுதான் அண்ணாவின் வானளாவிய பாராட்டுக்குக் காரணம். அந்தப் பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய தலைவர், ம.பொ.சி.

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி யின் புகழ்பரப்பும் பணியை செய்தவர் ம.பொ.சி. அவரது வரலாற்றை பற்றி நுால் எழுதி, வ.உ.சியின் தியாகங்களை உலகறிய செய்தவரும் அவர்தான் . ம.பொ.சி எழுதிய  ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் நூல், வ.உ.சியின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்த நூலை தழுவித்தான் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் சிறந்த திரைப்படம் உருவானது என்பார்கள்.

ம.பொ.சி. எழுதிய ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவச் செய்தது. இந்நூலைத் தழுவி பி.ஆர். பந்துலு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தை இயக்கினார்.

“அரசியல்வாதி ஒவ்வொருவருக்கும் முக்கிய தேவை தத்துவ ஞானம். தத்துவ ஞானம் இல்லாத அரசியல்வாதி தவறுகள் செய்ய அஞ்ச மாட்டார். தத்துவ ஞானமானது அரசியல்வாதியின் ஆசைகளை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும். ஆசாபங்கம் ஏற்படுகின்றபோது அதனைத் தாங்கிக்கொண்டு தரும நெறியில் ஊன்றி நிற்கின்ற ஆற்றலைத் தரும். இதனை என் வாழ்க்கை அனுபவத்திலே நான் கண்டு வருகின்றேன்” 

-என்று ம.பொ.சி. தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மாமனிதர் 1995 அக். 3ஆம் தேதி தனது 89 -ஆம் வயதில் முதுமை காரணமாக மறைந்தார்.

வாழ்க ம.பொ.சி. புகழ்! வாழ்க தமிழ்!

***

ம.பொ.சி. படைத்த நூல்கள் 
தன் வரலாறு

1. எனது போராட்டம்  - 1974

சிறுகதை

வைகுந்தம் பிறந்தது (சிறுகதைத் தொகுப்பு) - 1980

பயண நூல்கள்

1. மலேசியாவில் ஒரு மாதம் - 1965

2. மாஸ்கோவிலிருந்து லண்டன் வரை - 1972

3. மொரிசியஸ் தீவில் ஒரு வாரம் - 1987

4. அமெரிக்காவில் மூன்று வாரம் - 1987

வாழ்க்கை வரலாறுகள்

1. கப்பலோட்டிய தமிழன் - 1944

2. வீரபாண்டிய கட்டபொம்மன் - 1949

3. கயத்தாற்றில் கட்டபொம்மன் - 1950

4. தளபதி சிதம்பரனார் 1950

5. சுதந்திர வீரன் கட்டபொம்மன் - 1950

6. கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவானபதிப்பு) - 1972

7. தோழர் சிங்காரவேலர் வீர வாழ்க்கை - 1985

8. நாடகப் பேராசிரியர் - சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர் வாழ்க்கை வரலாறு - 1988

9. முப்பெரும் ஞானியர் - 1989

வள்ளலார் பற்றிய நூல்கள்

1. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - 1963

2. வள்ளலாரும் பாரதியும் - 1965

3. வள்ளலார் வளர்த்த தமிழ் - 1966

4. வள்ளலார் வகுத்த வழி - 1970

5. வள்ளலார் கண்ட சாகாக் கலை - 1970

6. வானொலியில் வள்ளலார் - 1976

7. வள்ளலாரும் காந்தியடிகளும் - 1977

8. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) - 1978

பாரதியார் பற்றிய நூல்கள்

1. எங்கள் கவி பாரதி - 1953

2. பாரதியாரும் ஆங்கிலமும் - 1961

3. பாரதி கண்ட ஒருமைப்பாடு - 1962

4. உலக மகாகவி பாரதி - 1966

5. பாரதியார் பாதையிலே - 1974

6. பாரதியார் போர்க்குரல் - 1979

7. பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை - 1983

காந்தியடிகள் பற்றிய நூல்கள்

1. தமிழர் கண்ட காந்தி - 1949

2. காந்தியடிகளும் ஆங்கிலமும் - 1961

3. காந்தியடிகளும் சோசலிசமும் - 1971

4. மகாத்மாவும் மதுவிலக்கும் - 1979

5. காந்தியடிகளைச் சந்தித்தேன் - 1979

6. பயங்கரவாதமும் காந்திய சகாப்தமும் - 1994

திருவள்ளுவர் பற்றிய நூல்கள்


1. வள்ளுவர் வகுத்த வழி - 1952

2. திருவள்ளுவரும் கார்ல்மார்க்சும் - 1960

கம்பர் பற்றிய நூல்கள்

1. கம்பர் கவியின்பம் - 1966

2. கம்பரிடம் யான் கற்ற அரசியல் - 1979

3. கம்பரும் காந்தியடிகளும் - 1981

4. கம்பரின் சமயக் கொள்கை - 1983

சிலப்பதிகாரம் பற்றிய நூல்கள்

1. சிலப்பதிகாரமும் தமிழரும் - 1947

2. கண்ணகி வழிபாடு - 1950

3. இளங்கோவின் சிலம்பு - 1953

4. வீரக்கண்ணகி - 1958

5. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) - 1961

6. மாதவியின் மாண்பு - 1968

7. கோவலன் குற்றவாளியா? - 1971

8. சிலப்பதிகாரத் திறனாய்வு - 1973

9. சிலப்பதிகார யாத்திரை - 1977

10. சிலப்பதிகார ஆய்வுரை - 1979

11. சிலப்பதிகார உரையாசிரியர்கள் உரை - 1980

12. சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் - 1990

13. சிலம்பில் ஈடுபட்டதெப்படி? - 1994

மாநில சுயாட்சி பிரசார நூல்கள்

1. தமிழகத்தில் தமிழரசு - 1946

2. தமிழருக்குச் சுயநிர்ணயம் -1946

3. புதிய தமிழகம் - 1946

4. தமிழரும் பிரிட்டிஷ் திட்டமும் - 1946

5. தமிழரசுக் கழக முதலாவது மாநில மாநாட்டுத் தலைமையுரை - 1947

6. தமிழன் குரல் - 1947

7. சுயாட்சித் தமிழகம் - 1949

8. பிரிவினை வரலாறு - 1950

9. திராவிடத்தாரின் திருவிளையாடல்கள் - 1950

10. திராவிடர் கழகமே, வேங்கடத்திற்கு வெளியே போ - 1951

11. தமிழரசா, திராவிடஸ்தானா? - 1952

12. தமிழரசுக் கழக இரண்டாவது மாநில மாநாட்டுத் தலைமை உரை - 1952

13. வடக்கெல்லைப் போர் - 1953

14. முரசு முழங்குகிறது - 1955

15. தி.மு.க.வின் கொள்கை மாற்றம் - 1957

16. சுயாட்சியா, பிரிவினையா? - 1959

17. மொழிச் சிக்கலும் மாநில சுயாட்சியும் - 1968

18. மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு - 1973

19. சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் - 1974

20. புதிய தமிழகம் படைத்த வரலாறு - 1986

மொழிச் சிந்தனைகள் பற்றிய நூல்கள்

1. தமிழும் கலப்படமும் - 1960

2. தமிழா? ஆங்கிலமா? - 1961

3. இன்பத் தமிழா? இந்தி - ஆங்கிலமா? -1963

4. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு - 1964

5. தமிழை வளர்க்கக் கோரி ஆளுநர்க்கு விண்ணப்பம் - 1976

6. நாடகத் தமிழ் - 1976

7. கல்வி மொழி தமிழா? ஆங்கிலமா? (ம.இரா. இளங்கோவன் தொகுத்தது) - 1981

8. சென்னை பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை - 1981

9. ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கை - 1982

10. தமிழும் சமஸ்கிருதமும் - 1984

11. ஆங்கில ஆதிக்கம் அகல பத்துக் கட்டளைகள் –

விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்கள்

1. சுதந்திரப் போரில் தமிழகம் - 1948

2. முதல் முழக்கம் - 1968

3. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு - 1970

4. காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப் போர் - 1974

5. வந்தேமாதரம் வரலாறு - 1977

6. விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு - 1978

7. சுதந்திரப் போர்க்களம் - 1980

8. விடுதலைப் போரில் தமிழகம் (2 தொகுதிகள்) - 1982

9. இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது - 1986

10. வேதாரணியத்திலிருந்து டில்லி ராஜ்காட்வரை - 1988

இனவழி ஆராய்ச்சி நூல்கள்


1. கலிங்கத்துப் பரணி திறனாய்வு - 1975

2. தமிழகத்தில் பிறமொழியினர் - 1976

3. இலக்கியங்களில் இன வளர்ச்சி - 1978

4. வில்லிபாரதத்தில் தமிழுணர்ச்சி - 1981

5. இலக்கியங்களில் இனவுணர்ச்சி - 1985

பேச்சுக்கலை பற்றிய நூல்கள்

1. பேச்சுக்கலை - 1950

2. மேடைப் பேச்சும் பொதுக்கூட்டமும் - 1951

கட்டுரை நூல்கள்

1. ஏன் வேண்டும் எதிரணி - 1946

2. ஆத்திரப் பொங்கல் - 1947

3. கம்யூனிஸ்டுகள் முடிவை மாற்ற முயல்வார்களா? - 1947

4. வானொலியில் ம.பொ.சி. - 1947

5. மேதினப் புரட்சி - 1949

6. சீர்திருத்தப் போலிகள் - 1950

7. தமிழர் திருநாள் - 1951

8. இலக்கியத்தின் எதிரிகள் - 1953

9. இலக்கியச் செல்வம் - 1955

10. ம.பொ.சி. கூறுகிறார் - 1955

11. பொம்மன் புகழிலும் போட்டியா? - 1956

12. கட்டுரைக் களஞ்சியம் - 1956

13. இன்பத் தமிழகம் - 1956

14. ம.பொ.சி. பேசுகிறார் (பர்மா சொற்பொழிவு) - 1956

15. சிந்தனை அலைகள் - 1964

16. இலக்கியத்தில் சோசலிசம் - 1965

17. தமிழிசை வரலாறு - 1966

18. ஒளவை - யார்? - 1967

19. சான்றோரின் சாதனைகள் - 1970

20. ஆன்ம நேய ஒருமைப்பாடு - 1970

21. திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன்? - 1974

22. தமிழிசை வாழ்க - 1978

23. கல்வி நெறிக் காவலர் (திரு.நெ.து. சுந்தர வடிவேலு மணிவிழாச் சொற்பொழிவு) -1974

24. தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை - 1979

25. ஆன்மீகமும் அரசியலும் - 1980

26. நவபாரதத்தை நோக்கி - 1982

27. சிலம்புச் செல்வரின் பல்கலைப் பேருரை -1984

28. இலக்கியங்களில் புத்திர சோகம் - 1986

29. நானறிந்த ராஜாஜி - 1987

30. இராமன்- சீதாபிராட்டி வாக்குவாதம் - 1989

31. எனது பார்வையில் நாமக்கல் கவிஞர் - 1989

32. நேருஜி என் ஆசான் - 1989

33. தமிழர் திருமணம் - 1990

34. எனது பார்வையில் பாவேந்தர் - 1991

35. ஈழத் தமிழரும் நானும் - 1992

36. எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு - 1995

37. எழுத்துச் சீர்திருத்தம் - 1995

பதிப்பித்த நூல்

1. ஒளவையார் அருளிச்செய்த கல்வியொழுக்கம் மூலமும்
திரு.ஜே.எஸ். அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் - 1980

No comments:

Post a Comment