பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/09/2021

தேவி சூக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு




(ரிக்வேதம் 10.125)

ருத்திரர்களுடன், வசுக்களுடன் சஞ்சரிக்கிறேன் நான்.
ஆதித்யர்களுடன், உலகத் தேவர் அனைவருடனும் உலவுகிறேன்.
வருணனை மித்திரனை
இந்திரனை அக்னியை
இரட்டையர் அசுவினி தேவரை
நான் தாங்குகிறேன். (1)

பொங்கி எழும் சோமனை சுமப்பவள் நான்.
த்வஷ்டாவை, பூஷனை, பகனைத் தாங்குபவள்.
ஆகுதி சொரிந்து சோமரசம் பிழிந்து வேண்டுவோர்க்கு
செல்வமளிப்பவள். (2)

நான் தலைவி
உலகின் வளங்களைத் திரட்டுபவள்
அனைத்தும் அறிந்தவள்
தெய்வ முதல்வி.
பல உருவில் பல வழிகளில் பிரவேசிப்பவள்.
என்னையே தேவர்கள் எங்கணும் நிறுவினர். (3)

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும்
சொல் கேட்பதும் எல்லாம் என்னால்.
அதை அறியார் ஆயினும்
அவர்கள் என் உள் உறைபவரே.
சிரத்தையுடைய அன்பனே
சொல்கிறேன் கேள். (4)

இவை எல்லாம் நானே என்று சொல்கிறேன்.
என்னையே போற்றுவர் தேவரும் மனிதரும்.
நான் உக்கிரமாக விரும்புபவனை
பிரம்ம நிலையினன் ஆக்குகிறேன்.
ரிஷியாக, சிறந்த மேதையாக ஆக்குகிறேன். (5)

ருத்திரனின் வில்லை நானே வளைக்கிறேன்.
நன்மையை வெறுப்போரை அம்பெய்து அழிக்கிறேன்.
மக்களுக்காக நானே போர் புரிகிறேன்
மண்ணிலும் விண்ணிலும் நானே புகுந்து நிறைகிறேன். (6)

இதன் உச்சியில் தந்தையாகிய வானம் நான் செய்தது
ஆழ்கடலின் உள்ளே நீரில் எனது யோனி
அதனால் உலகில் உயிரெங்கிலும் நிறைந்து நிற்கிறேன்
அதுபோல வானையும் உடலால் தொடுகிறேன். (7)

அனைத்துலகும் உயிர்தரிக்கையில்
நானே மூச்சுக் காற்று.
மேலான பூமிக்கும் அப்பாலானது
வானத்திற்கும் அப்பாலானது
எனது மகா மகிமை. (8)
***

ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார்.

சக்தி வழிபாட்டில் இன்றளவும் எல்லா பூஜைகளிலும் முக்கியமாக ஓதப் படும் ஒரு சூக்தம் இது (இன்னொன்று ராத்ரி சூக்தம். அது பற்றி முன்பே இங்கு எழுதியிருக்கிறேன்).

முதல் பாடல் வேத இலக்கியம் கூறும் தேவ வர்க்கம் அனைத்திற்கும் இறைவியாக தேவியைக் காண்கிறது. பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், பன்னிரண்டு ஆதித்தியர்கள், இரட்டையர் அசுனிவி தேவர் ஆகிய முப்பத்து மூவர் அடங்கியது தேவ வர்க்கம். அனைத்து விதமான தெய்வீக இயற்கைச் சக்திகளின் குறியீடு இந்த தேவ வர்க்கம்.

இரண்டாம் பாடலில், சோமன் அல்லது சோம ரசம் அழிவில்லாத ஆனந்தத்தைக் குறிக்கிறது. த்வஷ்டா என்பவன் தேவ தச்சனாகிய விசுவகர்மா, உலகத் தொழில்களின் அதிபதி. பூஷன் (போஷித்து வளர்ப்பவன்), பகன் (ஒளி பொருந்தியவன்) ஆகியவர்கள் சூரிய தேவனின் அம்சமாக உள்ள தேவதைகள்.

தலைவி, அரசி என்பதற்கான சொல் ராக்ஞீ, ஸம்ராக்ஞீ என்பது. ஆனால் மூன்றாம் பாடல் முதல் அடியில் ‘அஹம் ராஷ்ட்ரீ” என்றே வருகிறது.  ‘ராஷ்ட்ரீ’ என்பது ராஷ்டிரம் (தேசம்) என்பதன் பெண்பால். தேசத்தை ஆளும் தலைவி என்பதோடு, தேசமே ஆனவள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.  ‘தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி’ என்ற பாரதி பாடலின் மூலவேர் இந்த உருவகத்தில் உள்ளது.

ஏழாவது பாடலில் ‘ஆழ்கடலின் உள்ளே நீரில் எனது யோனி’ (மம யோனீரப்ஸ்வா: அந்த ஸமுத்ரே:) என்ற வரி வருகிறது. யோனி என்பதற்கு இவ்விடத்தில் இரண்டு பொருள் கொள்ளலாம் – உயிர்களின் பிறப்பு/பிறப்பிடம் அல்லது உயிர்களைப் பிறப்பிக்கும் சக்தி, அதாவது படைப்பாற்றல். பிரபஞ்ச சிருஷ்டியின் படைப்பாற்றல் ஆழ்கடலின் நீரில் இருந்து வெளிப்பட்டது என்ற கருத்து அறிவியல் பூர்வமாகவும் பொருந்துவதாக உள்ளது.

எட்டாவது பாடலில் மகா சக்தியின் அப்பாலான தன்மை “பரா” என்ற மந்திரச் சொல்லால் குறிக்கப் படுகிறது.

***

இந்த சூக்தத்தை அருளிய ரிஷியான  ‘வாக்’ என்பவளை  ‘வாக்’ (வாக்கு) என்ற தெய்வத்துடன் இணைத்தே காணவேண்டும். சொற்களின், மொழியின் அதி தேவதையாக வாக்-தேவி ரிக்வேதத்தில் குறிப்பிடப் படுகிறாள். வேத ரிஷிகள் தங்கள் மெய்யுணர்வின் வெளிப்பாடுகளைக் ‘கேட்டு’ அவற்றையே தங்கள் வாக்காக, மந்திரங்களாக அருளினர். அதனால் வேதம் ‘சுருதி’ (கேட்கப் பட்டது) என்று அழைக்கப் படுகிறது.

தேவர்கள் வாக்தேவியைப் பிறப்பித்தனர்
உலகின் எல்லா உயிர்களும், விலங்குகள் உட்பட அவளையே பேசுகின்றன.
வளமும், வீரியமும் பொழியும் பசு அவள்
புகழ்ச்சிகளுடன் கூடி இன்பம் ததும்பும் வாக்தேவி நம்மிடம் வரட்டும்.

என்று ரிக்வேதத்தின் மற்றொரு சூக்தம் (8.100) கூறுகிறது.

பேச்சு மொழியின் உருவாக்கம் மனித மூளையின், அறிவின் பரிணாம வளர்ச்சியில் அடையப் பட்ட மிகப் பெரிய திருப்பு முனையாக பரிணாம அறிவியலில் கருதப்படுகிறது. மனித இனம் பேச்சு என்ற ஒன்றைக் கண்டு கொண்ட பிறகு தான் அதன் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் (quantum jump) ஏற்பட்டது. பரிணாமத்தின் எந்தப் புள்ளியில், எந்தக் காரணத்திற்காக, மனித மூளையின் நியூரான் வலைப்பின்னல்கள் சொல் என்ற, மொழி என்ற மிகச் சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட ஒரு குறியீட்டு சங்கேதத்தை (meta-representation) உருவாக்கின என்பது இன்றைய அதி நவீன நரம்பியல், உயிரியல் அறிஞர்களையே அயர வைக்கும் பெரும் புதிர். 

இது பற்றி உலகப் புகழ் பெற்ற நரம்பியலாளர் வில்லியனூர் ராமச்சந்திரன் சுவாரஸ்யமாக ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் (The Emerging Mind என்ற நூலில் Neuroscience – The New Philosophy என்ற கட்டுரை).

பண்டைய கிரேக்க தத்துவ அறிஞர் ஹீராக்ளிடஸ் பிரபஞ்ச அறிவை வழிநடத்தும் மூலவாக்காகக் குறிப்பிடும் லோகோஸ் (logos) என்ற தத்துவம் வேத இலக்கியத்தின்  ‘வாக்’ தத்துவத்துடன் நேரடியாகவே ஒப்பிடத் தக்கது. அரிஸ்டாட்டில், பிளேட்டோ ஆகிய கிரேக்க தத்துவ ஞானிகளின் சிந்தனைகளிலும் இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்தது. பின்னர் கிறிஸ்தவ இறையியலில் ‘ஆதி இறை வாக்காக’ (The Word) திரிந்து உருமாற்றம் பெற்று விட்டது!

‘சொல்’ என்று பாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்’ என்று தொடங்கும் கவிதை. மந்திரச் சொற்களின் தொகுதியான வேதங்களை தெய்வ வடிவாகவே வேத ரிஷிகள் போற்றினர் –

வரமருளும் தேவி, வேதங்களின் தாயே காயத்ரி
பிரம்மத்துடன் கூட்டி வைக்கும் அழிவற்ற இந்தத் துதியை ஏற்று
இங்கே எழுந்தருள்வாய்

(‘ஆயாஹி வரதே தேவி’ என்ற ரிக்வேத மந்திரம்)

இந்தக் கருத்தாக்கமே பின்னாளில் கல்வியின், கலைகளின் தேவியாக நாம் வணங்கும் சரஸ்வதி என்ற திருவுருவாகப் பரிணமித்தது. வாக்தேவியாகிய சரஸ்வதி அறிஞர்களின், கவிஞர்களின் நாவில் சொற்களாகவே உறைவதாக உருவகம் ஏற்பட்டது.

வாக்கு நான்கு வகைப்பட்டது
மேதைமை கொண்ட பிரம்மஞானிகள் அவற்றை அறிகின்றனர்
அதில் மூன்று மறைபொருளாக ஆழ் அமைதியில் உள்ளது.
மனிதர் நான்காவதையே பேசுகின்றனர்.

என்று ரிக்வேதம் (1.164.45) கூறுகிறது. சாக்த தாந்திரீக மரபில் (Tantra) இதனை மேலும் நுண்மையாக வளர்த்தெடுத்தனர். மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை. பஷ்யந்தீ, மத்யமா, வைகரீ என்பவை மற்ற நிலைகள்.

பரா என்பது வாக்கு சக்தியாக உறைந்திருக்கும் நிலை. பஷ்யந்தீ என்பதில் வாக்கு மொழியாக வெளிப்படுவதற்கான எண்ணமாக, இச்சையாக உள்ளது. மத்யமா என்ற நடுநிலையில் சிந்தனை வடிவமாக, சொற்களாக உள்ளது, ஆனால் வெளிப்படவில்லை. வைகரீ என்பது முழுவதுமாக வெளிப்படும் வாக்கு, அதாவது நாம் வாயால் பேசும் பேச்சு.

பரா என்பது மூல ஒலியின் வடிவம், மனதின் விதை. அது பிரபஞ்ச மகா சக்தியுடன் ஒன்றுபட்டது; அதனால்  ‘பரா சக்தி’ என்று அழைக்கப் படுகிறது.  ‘பரா’ என்ற சொல்லுக்கு “அப்பாலான” என்பது பொருள். ஆனால் அப்பால் உள்ள பொருள் என்பதால் வெளிப் புறத்தில் எவ்வளவு தேடினாலும் அதனைக் கண்டு கொள்ள முடியாது. உள்முகமாகத் தேடினால் மட்டுமே அறிய முடியும். அதனால் தான் ‘பரா ப்ரத்யக் சிதீ ரூபா’ என்று லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது. (ப்ரத்யக் = உள்முகமான பார்வை). இந்தச் சொல்லடுக்கில் காணும் முரணியக்கம் அபாரமான கவித்துவம் நிரம்பியது.

சங்கீத சாஸ்திரத்தில் இதே தத்துவத்தை ‘நாதம்’ என்ற ஒலியின் நிலைகளாகக் காண்கிறார்கள். நாதம் அடிவயிற்றில் பிறக்கிறது, இதயத்தில் வளர்கிறது, கழுத்துப் பகுதியில் தொண்டையில் உருக் கொள்கிறது, நாவில் இசையாக வெளிவருகிறது. நாபீ-ஹ்ருத்-கண்ட-ரஸனா என்று தியாகராஜர் பாடுவார். நாபிக் கமலத்தில் இருந்து எழாமல் வெறும் வாயசைப்பில் மட்டும் பாடப் படுவது சங்கீதமல்ல, ஓசை மட்டுமே என்று கூறப் படுகிறது.

இந்தக் கவிதை அத்வைத நிலையில், ‘நான்’ என்று தன்மையில் பாடப்பட்டுள்ளது சிறப்பானது.

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்கும் முதற்சோதி நான்

-என்ற பாரதியின் கவிதையும் இதே வகையிலானது. கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது. அது காலவெளியையும் கடந்து செல்கிறது.

இதைப் பற்றிச் சிந்திக்கையில் தோன்றும் இன்னொரு ஆச்சரியமூட்டும் விஷயம், மனித மனம் தன்னைத் தான் (self) என்று அறிவதற்கும், சொல்/மொழி என்ற உயர் அறிவுக் கருவியை உருவாக்கியதற்கும் பரிணாமவியல் ரீதியாக ஆழமான தொடர்பு உள்ளது என்பது. மேற்குறிப்பிட்ட கட்டுரையில் ஒரு இடத்தில் ராமச்சந்திரன் கூறுகிறார் –

.. the solution to the problem of the self is not straightforward, empirical one. It may instead require a radical shift in perspective, the sort of thing that Einstein did when he rejected the assumption that things can move arbitrarily high velocities. When we finally achieve such a shift in perspective, we maybe in for a big surprise and find that the answer was staring at us all along. I don’t want to sound like a New Age guru, but there are curious parallels between this idea and the Hindu philosophical (albeit somewhat nebulous) view that there is no essential difference between self and others, or that the self is an illusion.

இந்தக் கவிதையின் பெண்ணிய வெளிப்பாடும் கவனிக்கத் தக்கது. எழுதியவர் பெண் என்பதால் மட்டுமல்ல, சிருஷ்டியின் ஆதிகாரணமாக, அனைத்து தெய்வங்களையும் ஆளும் சக்தியாகப் பெண்மையைப் பாடுகிறது என்பதாலும் தான்.

No comments:

Post a Comment