பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/09/2021

காட்சி‬ (வசன கவிதை)

-மகாகவி பாரதி

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 13)


முதற்கிளை: இன்பம்

1

இவ்வுலகம் இனியது. 
இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது. 
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று. 
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. 
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது. மலை இனிது. காடுநன்று. 
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், 
மலரும், காயும், கனியும் இனியன.
பறவைகள் இனிய. 
ஊர்வனவும் நல்லன. 
விலங்குகளெல்லாம் இனியவை. 
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். 
இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.

2

உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. 
உயிர் சுவையுடையது.
மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். 
உணர்வே அமுதம். 
உணர்வு தெய்வம்.

3

மனம் தெய்வம். சித்தம் தெய்வம். உயிர் தெய்வம்.
காடு, மலை, அருவி, ஆறு,
கடல், நிலம், நீர், காற்று,
தீ, வான், 
ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் - எல்லாம் 
தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள், செடிகள், 
விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன,
மனிதர்- இவை அமுதங்கள்.

4

இவ்வுலகம் ஒன்று. 
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல், 
உயிர், இறப்பு- இவை யனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலை யருவி, குழல், 
கோமேதகம் - இவ் வனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம், பாட்டு, 
வண்ணான், குருவி, 
மின்னல், பருத்தி 
இஃதெல்லாம் ஒன்று.
மூடன், புலவன், 
இரும்பு, வெட்டுக்கிளி-
இவை ஒரு பொருள்.
வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்- 
இவை ஒரு பொருளின் பல தோற்றம்.
உள்ள தெல்லாம் ஒரே பொருள், ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.
‘தானே’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.

5

எல்லா உயிரும் இன்பமெய்துக.
எல்லா உடலும் நோய் தீர்க. 
எல்லா உணர்வும் ஒன்றாத லுணர்க.
‘தான்’ வாழ்க.
அமுதம் எப்போதும் இன்ப மாகுக.

6

தெய்வங்களை வாழ்த்துகின்றோம்.
தெய்வங்கள் இன்ப மெய்துக. 
அவை வாழ்க. 
அவை வெல்க.
தெய்வங்களே!
என்றும் விளங்குவீர்; என்றும் இன்ப மெய்துவீர்; 
என்றும் வாழ்வீர்; என்றும் அருள் புரிவீர்.
எவற்றையும் காப்பீர். 
உமக்கு நன்று.
தெய்வங்களே!
எம்மை உண்பீர், எமக்கு உண வாவீர், 
உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர்.
உமக்கு நன்று.
தெய்வங்களே!
காத்தல் இனிது, காக்கப் படுவதும் இனிது.
அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று. 
உண்பது நன்று, உண்ணப் படுதலும் நன்று. 
சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று.

7

உணர்வே நீ வாழ்க.
நீ ஒன்று, நீ ஒளி. நீ ஒன்று. 
நீ பல. நீ நட்பு,நீ பகை. 
உள்ளதும் , இல்லாததும் நீ. 
அறிவதும் அறியாததும் நீ. 
நன்றும்,தீதும் நீ.
நீ அமுதம், நீ சுவை.
நீ நன்று, நீ இன்பம்.

***
இரண்டாங் கிளை: புகழ்

ஞாயிறு



1

ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?
வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? 
மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது?
உயிர் எவன் தருகின்றான்? 
புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக்குரியது? 
அறிவு எதுபோல் சுடரும்? 
அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? 
ஞாயிறு. 
அது நன்று.

2

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி, 
மின்னல், இரத்தினம், கனல், தீக் கொழுந்து- 
இவையெல்லாம் நினது திகழ்ச்சி.
கண் நினது வீடு.
புகழ், வீரம்- இவை நினது லீலை.
அறிவு நின் குறி. அறிவின் குறி நீ.
நீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.
உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய், 
வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய், 
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.

3

வைகறையின் செம்மை இனிது. 
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க!
உஷையை நாங்கள் தொழுகின்றோம். 
அவள் திரு. 
அவள் விழிப்புத் தருகின்றாள், தெளிவு தருகின்றாள்,
உயிர் தருகின்றாள், ஊக்கந் தருகின்றாள்.
அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள்.
அவள் வாழ்க.
அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது.
அவள் அமுதம்.
அவள் இறப்பதில்லை. வலிமையுடன் கலக்கின்றாள். 
வலிமைதான் அழகுடன் கலக்கும், இனிமை மிகவும் பெரிது.
வட மேருவிலே பலவாகத் தொடர்ந்து தருவாள். 
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள். 
அவளுடைய நகைப்புக்கள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள், அன்பு மிகுதியால்.
ஒன்று பலவினும் இனி தன்றோ? 
வைகறை நன்று. அதனை வாழ்த்துகின்றோம்.

4

நீ சுடுகின்றாய். நீ வருத்தந் தருகின்றாய். 
நீ விடாய் தருகின்றாய். சோர்வு தருகின்றாய்.
பசி தருகின்றாய்.
இவை இனியன.
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய். இனிய மழை தருகின்றாய். 
வான வெளியிலே விளக்கேற்றுகிறாய். 
இருளைத் தின்று விடுகின்றாய்.
நீ வாழ்க.

5

ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? 
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? 
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா? 
இருள் நினக்குப் பகையா? 
இருள் நின் உணவுப் பொருளா? 
அது நின் காதலியா? 
இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? 
நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா? 
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி 
உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா? 
உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா? 
உங்களைப் புகழ்கின்றேன்,
ஞாயிறே, உன்னைப் புகழ்கின்றேன்.

6

ஒளியே, நீ யார்? 
ஞாயிற்றின் மகளா? 
அன்று, நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்.
ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம். 
ஞாயிற்றின் வடிவம் உடல். நீ உயிர்.
ஒளியே நீ எப்போது தோன்றினாய்? 
நின்னை யாவர் படைத்தனர்?
ஒளியே நீ யார்? 
உனதியல்பு யாது?
நீ அறிவின் மகள் போலும்.  அறிவுதான் தூங்கிக் கிடக்கும். 
தெளிவு நீ போலும். 
அறிவின் உடல் போலும். 
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாட் பழக்கம்? 
உனக்கு அதனிடத்தே இவ்வகைப் பட்ட அன்பு யாது பற்றியது?
அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்? 
உங்களையெல்லாம் படைத்வள் வித்தைக்காரி.
அவள் மோஹினி. மாயக்காரி.
அவளைத் தொழுகின்றோம். 
ஒளியே, வாழ்க!

7

ஞாயிறே! 
நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது? 
நீ அதனை உமிழ்கின்றாயா? 
அது நின்னைத் தின்னுகிறதா?
அன்றி, ஒளி தவிர நீ வேறோன்றுமில்லையா?
விளக்குத்திரி காற்றாகிச் சுடர் தருகின்றது. 
காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு? 
காற்றின் வடிவே திரியென்றறிவோம். 
ஒளியின் வடிவே காற்றுப் போலும்.
ஒளியே, நீ இனிமை.

8

ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? 
வெம்மை யேற ஒளி தோன்றும்.
வெம்மையைத் தொழுகின்றோம்.
வெம்மை ஒளியின் தாய். ஒளியின் முன்னுருவம்.
வெம்மையே, நீ தீ.
நீ தான் வீரத் தெய்வம். 
தீ தான் ஞாயிறு.
தீயின் இயல்பே ஒளி. 
தீ எரிக. 
அதனிடத்தே நெய் பொழிகின்றோம்.  
தீ எரிக.
அதனிடத்தே தசை பொழிகின்றோம். 
தீ எரிக.
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம்.
தீ எரிக. 
அதற்கு வேள்வி செய்கின்றோம்.
தீ எரிக.
அறத் தீ, அறிவுத் தீ, உயிர்த் தீ, 
விரதத் தீ, வேள்வித் தீ,
சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ-
இவை யனைத்தையும் தொழுகின்றோம். 
இவற்றைக் காக்கின்றோம்.
இவற்றை ஆளுகின்றோம்.
தீயே நீ எமது உயிரின் தோழன்.
உன்னை வாழ்த்துகின்றோம்.
நின்னைப்போல, எமதுயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும்
தருக.
தீயே நின்னைப்போல, எமதுள்ளம் சுடர்விடுக. 
தீயே, நின்னைப்போல எமதறிவு கனலுக.
ஞாயிற்றினிடத்தே, தீயே, நின்னைத்தான் போற்றுகிறோம். 
ஞாயிற்றுத் தெய்வமே, நின்னைப் புகழ்கின்றோம்.
நினதொளி நன்று. நின் செயல் நன்று. நீ நன்று.

9

வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும் தேவன்
மணந்திருக்கின்றான்.
அவர்களுடைய கூட்டம் இனிது.
இதனைக் காற்றுத்தேவன் கண்டான். 
காற்று வலிமையுடையவன்.
இவன் வாவெளியைக் கலக்க விரும்பினான். 
ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை.
இவள் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்.
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன.
காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்.
அவன் அமைதியின்றி உழலுகிறான்.
அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான்.
ஓலமிடுகின்றான், சுழலுகின்றான், துடிக்கின்றான். 
ஓடுகின்றான், எழுகின்றான், நிலையின்றிக் கலங்குகிறான்.
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகை செய்கின்றன. 
காற்றுத் தேவன் வலிமையுடையவன். 
அவன் புகழ் பெரிது அப் புகழ் நன்று. 
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன.
அவை வெற்றியுடையன. 
ஞாயிறே, நீதான் ஒளித்தெய்வம். 
நின்னையே வெளிப் பெண் நன்கு காதல் செய்கிறாள். 
உங்கள் கூட்டம் மிக இனிது. நீவிர் வாழ்க.

10

ஞாயிறே, நின் முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றது.
பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள்- 
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே
ஒளியுற நகை செய்கின்றன.
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல
இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்த வெளிப்பட்டன வென்பர்.
இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான்.
இவை ஒளி குன்றிப் போயின.
ஒளி யிழந்தன வல்ல; குறைந்த ஒளி யுடையன. 
ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை. 
இருளென்பது குறைந்த ஒளி. 
செவ்வாய், புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன. 
இவை தமது தந்தைமீது காதல் செலுத்துகின்றன.
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரைகடவாது சுழல்கின்றன.
அவனுடைய சக்தியெல்லையை என்றும் கடந்து செல்லமாட்டா.
அவன் எப்போதும் இவற்றை நோக்கி யிருக்கின்றான்.
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன. 
அவனொளியை இவை மலரிலும், நீரிலும், காற்றிலும் பிடித்து வைத்துக்கொள்ளும்.
ஞாயிறு மிகச் சிறந்த தேவன். 
அவன் கைப்பட்ட இடமெல்லாம் உயிருண்டாகும்.
அவனையே மலர் விரும்புகின்றது.
இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தி யிருக்கின்றன.
அவனை நீரும் நிலமும் காற்றும், உலந்து களியுறும்.
அவனை வான் கவ்விக்கொள்ளும். 
அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணி செய்வர். 
அவன் புகழைப் பாடுவோம். 
அவன்
புகழ் இனிது.

11

புலவர்களே, அறிவுப் பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சத்திகளே, எல்லோரும் வருவீர். 
ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள்.
அவன் நமக்கெல்லாம் துணை.
அவன் மழை தருகின்றான். 
மழை நன்று.
மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம்.
ஞாயிறு வித்தை காட்டுகின்றான். 
கடல் நீரைக் காற்றாக்கி மேலேகொண்டு போகிறான்.
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது. 
மழை பாடுகின்றது.
அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி.
வானத்திலிருந்து அமுத வயிரக்கோல்கள் விழுகின்றன.
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்.
வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன.
அனைத்தும் ஒன்றாதலால்,
வெப்பம் தவம், தண்மை யோகம்.
வெப்பம் ஆண், தண்மை பெண்.
வெப்பம் வலியது, தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ?
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்.
அது வாழ்க.

12

நாம் வெம்மையைப் புகழ்கின்றோம். 
வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, 
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளிமழையே, உயிர்க்கடலே,
சிவனென்னும் வேடன், சக்தியென்னும் குறத்தியை உலகமென்னும் புனங் காக்கச் சொல்லிவைத்து விட்டுப்போன விளக்கே!
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன்முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே,
ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்,
மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்; 
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்; 
வெளி நின் காதலி; 
இடியும் மின்னலும் நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன். 
நின்னைப் புகழ்கின்றோம்.
தேவர்களெல்லாம் ஒன்றே. 
காண்பன வெல்லாம் அவருடல்.
கருதுவன அவருயிர்.
அவர்களுடைய தாய் அமுதம். 
அமுதமே தெய்வம். அமுதமே மெய்யொளி.
அஃது ஆத்மா. 
அதனைப் புகழ்கின்றோம்.
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.

13

மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது; மின்னல் வெட்டுகின்றது.
புலவர்களே, மின்னலைப் பாடுவோம், வாருங்கள்.
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை- ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்.
அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர்.
மின்னலைத் தொழுகின்றோம்; 
அது நம்மறிவை ஒளியுறச் செய்க. 
மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன.
மின்சக்தி இல்லாத இடமில்லை. 
எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே.
கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே, 
செம்மலரிலே, நீல மேகத்திலே, 
காற்றிலே, வரையிலே- எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது.
அதனைப் போற்றுகின்றோம்.
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க.
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக. 
நமது பாட்டு, மின்னலுடைத்தாகுக.
நமது வாக்கு மின்போல் அடித்திடுக.
மின் மெலியதைக் கொல்லும்; 
வலியதிலே வலிமை சேர்க்கும்.
அது நம் வலிமையை வளர்த்திடுக.
ஒளியை, மின்னலை, சுடரை, மணியை,
ஞாயிற்றை, திங்களை, வானத்து வீடுகளை, மீன்களை-
ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.
அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்.

 

No comments:

Post a Comment