பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

18/10/2021

தேசியத் தலைவன்… தெய்வீகத் திருமகன்!

-ம.கொ.சி.இராஜேந்திரன்


அது ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். ஆண்டு 1937. இடம் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான். 

கூடியிருந்த மக்கள் 50 ஆயிரத்திற்கு மேல். மேடையிலுள்ள குட்டித் தலைவர்களின் முழக்கங்கள் முடிந்தன. இரவு 10 மணிக்கு சிங்கத்தின் வீர கர்ஜனை ஒலிக்கத் தொடங்கியது.

“நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை ரிவால்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே, உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவால்வரிலே மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக, பாரத மாதா விலங்கொடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலே சாவதற்குத் தயார். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா?” 

-இவ்வாறு சவால் விட்டு அழைத்த அந்த வீர கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரர் – தேசியத் தலைவர் முத்துராமலிங்க தேவர்.
 
“தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார்.

“வீரமற்ற விவேகம் கோழைத்தனம்; விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்று, வீரத்துடன் விவேகத்தையும் வளர்த்த இரண்டாம் விவேகானந்தர்.

தனது வீரப்பேச்சால் பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கும், தனது விவேக சிந்தனைகளால் பல்லாயிரக் கணக்கான அறிவாளிகளுக்கும் வழிகாட்டியாய் விளங்கியவர்.

1952 தேர்தலில் ஒரே மேடையில் பல பிரசாரக் கூட்டங்களில் தேவரும், ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் பேசினார்கள். ஈ.வெ.ரா., தேவரை “தேவகுமாரன் இப்பொழுது பேசுவார்” என்று அறிவிப்பு செய்தது அன்றைய அரசியலில் ஓர் புதுமையான புரட்சி தான்.

1954-இல் காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் சர். சி.பி.ராமசாமி தலைமையில் ‘ஹிந்து மதம்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதுவும் ஆங்கிலத்தில். பேச்சில் இந்து மதத்தின் பெருமை, நாட்டின் வரலாறு, காசியின் சிறப்பு, பாரதியாரின் பாடல்களை எல்லாம் குறிப்பிட்ட முத்துராமலிங்கத் தேவர், மாணவர்களுக்கான குறிப்பேட்டில் எழுதினார்:

“அரசியலில் நேதாஜியையும், ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்.” என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை! தேவரின் பெருமைதான் என்னே!

1955-ஆம் ஆண்டு பர்மா வாழ் தமிழர்களும், பர்மிய அறிஞர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இரண்டாம் முறையாக பர்மா செல்கிறார் தேவர். தொண்டர்களும், தமிழர்களும், பர்மியர்களும், புத்த பிட்சுக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு அவரை வரவேற்கின்றனர்.

வரவேற்பில் புதுமையாகவும் – அதே சமயத்தில் புத்தமதத் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த வரவேற்பும் அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. புத்தமதப் பெண்கள் வரிசையாக இரண்டு புறத்திலும் தரையில் படுத்துத் தங்கள் கூந்தலைத் தரையில் விரித்துக் கொள்வார்கள். தங்களால் வரவேற்கப்படும் தலைவர் அந்தக் கூந்தல் மீது நடந்து விழா மேடைக்கு வருவார்.

வரவேற்பை ஏற்க மறுத்து தேவர் கூறினார்: “எங்கள் ஹிந்து மதத்தின் படி, பராசக்தியின் திருவுருவில் தாய்க்குலத்தைப் பார்க்கிறவன் நான். அந்த இந்து மதத்தின் சாமான்யப் பிரதிநிதி என்கிற வகையில் அடியேனால் இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்” என்றார்.

பர்மா ஜனாதிபதியை சந்தித்த போது திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்து பெருமிதம் கொண்டார் தேவர் பெருமகன்.

பொதுக்கூட்டங்கள் நடத்தவில்லை; தனக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ள தொகுதிக்குள் செல்லவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத்திற்கு அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டமன்றத்திற்கு முதுகுளத்தூர் தொகுதியிலும் ஒரே சமயத்தில் வெற்றி பெற்று நாடே அதிசயித்த அரும் பெரும் தலைவர்.

வீரமும் விவேகமும் என்றும் இம்மண்ணில் தழைத்திட வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்த ஆன்மிக புருஷர்,

தேசியமும், தெய்வீகமும் இம்மண்ணின் அடையாளங்களாகக் காட்டிய கர்ம வீரர்.

தன்னை ஒரு சாதித் தலைவராகக் காட்டாது, தாய்நாட்டின் பெருமைகளை சாதித்தத் தலைவராகக் காட்டிய கொள்கை மறவர்.

“வில்லுக்கு விஜயன், வீறுநடை தேசியக் சொல்லுக்கு முத்துராமலிங்கம்” என்ற கூற்றுக்குப் பொருத்தமான தேசியத் தலைவனாய், தெய்வீகத் திருமகனாய் விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நினைவில் போற்றுவோமாக! வாழ்வில் பின்பற்றுவோம்!




No comments:

Post a Comment