பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

18/10/2021

ஞானக்கூத்தன் கவிதைகள் (கவிதை)

-ஞானக்கூத்தன்


1
அன்று வேறு கிழமை

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்.


2
அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்.

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்.

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்.

ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்.

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா.

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்.

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

***
ஞானக்கூத்தன்:  சிறு அறிமுகம்

ஞானக்கூத்தன்
திரு. ஞானக்கூத்தன் (1938 அக். 7  - 2016 ஜூலை 27) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவர்.

இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர். ‘திருமந்திரம்’ நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றவர். 

இவர் 1968இல்  கவிதைகள் எழுத ஆரம்பித்தார்;  ‘பிரச்சினை’ என்ற கவிதையின் மூலம் அறிமுகமானார். 1998இல் இவரது கவிதைகள்  ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.

ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் ‘கசடதபற’. ‘கவனம்’ என்ற சிற்றிதழையும் நடத்தியுள்ளார்.  ‘ழ’ இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம், ராஜகோபாலனுடன் இவரும் ஒருவர். 

இவர் ‘மையம்’,  ‘விருட்சம்’ (தற்போது நவீன விருட்சம்),  ‘கணையாழி’ பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார். க.நா.சுப்பிரமணியத்தின் ‘இலக்கிய வட்டம்’, சி. மணியின்  ‘நடை’ போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தைச் சித்தரிப்பதாக உள்ளன.

அறுபதுகள், எழுபதுகளில் புதுக் கவிதை எழுதிக்கொண்டிருந்த கவிஞர் களின் உணர்ச் சிகளை அடையா ளப்படுத்தும் ‘ஐகானிக்’ வரிகளைப் பெரும்பாலும் ஞானக்கூத்தன்தான் எழுதினார். ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு/ ஆனால்/ பிறர்மேல் அதை விட மாட்டேன்’ போன்ற கவிதைகள் அந்தக் காலத்தில் பெரிய எதிர்ப்புக் குரல். கவிதை என்றால் யாப்பு சார்ந்ததாகத்தான் அப்போதும் இருந்தது. பொதுமக்களிடையே புதுக்கவிதை என்பது இன்னும் தன்னை நிறுவிக்கொள்ளாத காலம் அது. அந்த நேரத்தில் ஞானக்கூத்தன் குரல் மிகவும் அசலானது, நுட்பமானது. ரொம்பவும் நுணுக்கமான சில அவதானங்களைச் சொல்வதில் மிகவும் தேர்ந்தவர் அவர்.

(நன்றி:  இந்து தமிழ் திசை - திரு. ராமகிருஷ்ணன் கட்டுரை

 
2010இல் கவிதைக்காக சாரல் விருதினைப் பெற்றார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும், இலக்கிய பங்களிப்பிற்கான விஷ்ணுபுரம் விருதினை (2014)இல் பெற்றார். சென்னையில் 2016 இல் காலமானார்.

இவரது கவிதை நூல்கள்:

அன்று வேறு கிழமை
சூரியனுக்குப் பின்பக்கம்
கடற்கரையில் சில மரங்கள்
மீண்டும் அவர்கள்
பென்சில் படங்கள்
ஞானக்கூத்தன் கவிதைகள்
என் உளம் நிற்றி நீ
இம்பர் உலகம்

கட்டுரை நூல்கள்: 

கவிதைக்காக
கவிதைகளுடன் ஒரு சம்வாதம்

பிற நூல்கள்:

ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
கனவு பல காட்டல்
நம்மை அது தப்பாதோ?
சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
அலைகள் இழுத்த பூமாலை.


.




No comments:

Post a Comment