பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

02/11/2021

காற்று (வசன கவிதை) பகுதி -2

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 33)


2

நடுக் கடல். தனிக் கப்பல்.
வானமே சினந்து வருவது போன்ற புயற்காற்று.
அலைகள் சாரி வீசுகின்றன, நிர்த்தூளிப் படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன;சூறையாடுகின்றன.
கப்பல் நிர்த்தனஞ்செய்கிறது;
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது;
பாறையில் மோதிவிட்டது.
ஹதம்!
இருநூறு உயிர்கள் அழிந்தன.
அழியுமுன், அவை, யுகமுடிவின் அனுபவம் எங்ஙனமிருக்கு மென்பதை அறிந்துகொண்டு போயின.
ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும்.
உலகம் ஓடுநீராகிவிடும்; தீ நீர்.
சக்தி காற்றாகிவிடுவாள்.
சிவன் வெறியிலே யிருப்பான்.
இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும்.
அஃது சக்தியென்பது தோன்றும்.
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும்.
காற்றே பந்தல்கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெய்கிறான்.
காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி,
நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கித்
தூளை நீராக்கிச் சண்டமாருதம் செய்கின்றான்.
காற்றே யுகமுடிவு செய்கின்றான்.
காற்றே காக்கின்றான்.
அவன் நம்மைக் காத்திடுக.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”


3

காற்றுக்குக் காது நிலை.
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்.
காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது.
காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்ச லிடுவானா?
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு,
இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?
காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகின்றோம்.


4

பாலைவனம்.
மணல், மணல், மணல், பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம்.
அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்துவிட்டான்.
பாலைவனத்து மணல்களெல்லாம் இடைவானத்திலே சுழல் கின்றன.
ஒரு க்ஷணம், யம வாதனை. வியாபாரக்கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது.
வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது.
அவனுடைய செயல்கள் கொடியன.
காற்றை வாழ்த்துகின்றோம்.


5

வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.
உயிர்தான் காற்று.
உயிர் பொருள், காற்று அதன் செய்கை.
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள்.
அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று.
காற்றே உயிர். அவன் உயிர்களை அழிப்பவன்.
காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை.
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.
மரண மில்லை.
அகில வுலகமும் உயிர் நிலையே.
தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் - எல்லாம்
உயிர்ச் செயல்.
உயிரை வாழ்த்துகின்றோம்.


6

காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா.
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டுகொடு.
காற்றே, வா.
எமது உயிர்-நெருப்பை நீடித்துநின்று நல்லொளிதருமாறு நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.


7

சிற்றெறும்பைப் பார்.
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது, உறங்குகின்றது, மணம்செய்து கொள்கின்றது, குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு விளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்.
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்,
நாம் அறிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.


8

மழைக் காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான்.
பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது.
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ?
காற்று நம்மீது வீசுக.
அது நம்மை நோயின்றிக் காத்திடுக.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர்.
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான்.
காற்றுத் தேவனை வணங்குவோம்.
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது, நாற்றம் இருக்க லாகாது, அழுகின பண்டங்கள் போடலாகாது, புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது.
காற்று வருகின்றான்.
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம்.
அவன்வரும் வழியிலே சோலைகளும், பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.
அவன்வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம்.
அவன் நல்ல மருந்தாக வருக.
அவன் நமக்கு உயிராகி வருக;
அமுதமாகி வருக.
காற்றை வழிபடுகின்றோம்.
அவன் சக்தி குமாரன். மஹாராணியின் மைந்தன்.
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்.
அவன் வாழ்க.


9

காற்றே, வா. மெதுவாக வா.
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே.
காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தங்களைக் கீழே தள்ளிவிடாதே.
பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய்.
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலி யிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம் -- இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து
நொறுக்கிவிடுவான்.
சொன்னாலும் கேட்க மாட்டான்.
ஆதலால், மானிடரே வாருங்கள்.
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதி செய்வோம்.
இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகிவிடுவான்.
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்;
வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.


10

மழை பெய்கிறது,
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல்,
ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்.
ஓயாமல் குளிந்த காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள்.
ஆமடா, விதிவசந்தான்.
‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய விதி.
சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள்.
குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?
அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால்.
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.


11

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்.
எற்றுகிற சக்தி, புடைக்கிற சக்தி, மோதுகிற சக்தி, சுழற்றுவது, ஊதுவது.
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.
எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்.
சக்தியின் கலைகளையே தெய்வங்க ளென்கின்றோம்.
காற்று சக்தி குமாரன்.
அவனை வழிபடுகின்றோம்.


12

காக்கை பறந்து செல்லுகிறது;
காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது.
அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச்செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று.
அன்று, அஃதன்று காற்று;
அது காற்றின் இடம். வாயு நிலயம்.
கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத் தூள்களே (காற்றடிக்கும் போது) நம்மீது வந்து மோதுகின்றன.
அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு.
அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர்.
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது.
நீரிலே குடேற்றினால் ‘வாயு’வாகிவிடுகிறது.
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது.
அத் திரவத்திலே சூடேற்றினால், ‘வாயு’ வாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் ‘வாயு’ நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம்.
இந்த ‘வாயு’ பௌதிகத் தூள்.
இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத்தேவனென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்துசெல்லும் வழி காற்று.
அந்த வழியை இயக்குபவன் காற்று.
அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று.
அவனை வணங்குகின்றோம்.
உயிரைச் சரணடைகின்றோம்.


13

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்.
இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்.
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது.
அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால்.
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில்.
ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே!
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.
வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது.
காற்றாடி! உயிருள்ளது.
நீராவி-வண்டி உயிருள்ளது! பெரிய உயிர்.
யந்திரங்களெல்லாம் உயிருடையன.
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது.
அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய்.
எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம்.
அகில முழுதும் சுழலுகிறது.
சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது.
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும் சிதறிக்கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது
சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன.
எனவே, இவ் வையகம் உயிருடையது.
வையகத்தின் ‘உயிரை’யே காற்றென்கிறோம்.
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம்.


14

காற்றைப் புகழ நம்மால் முடியாது.
அவன் புகழ் தீராது.
அவனை ரிஷிகள் “ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம” என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக.
அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
ஸமாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க.
காற்றின் செய்ல்களையெல்லாம் பரவுகின்றோம்.
உயிரை வணங்குகின்றோம்.
உயிர் வாழ்க.


15

உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்?
நீ கண்கண்ட தெய்வம்.
எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
எல்லா விதிகளும் நின்னால் அழிவன.
உயிரே,
நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ.
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்.
பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு,
இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள்- இவையெல்லாம் நினது விளக்கம்.
மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும்
உயிர்களைக் கருதுகின்றோம்.
காற்றிலே ஒரு சதுர அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.
ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை - இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.
மஹத் -அதனிலும் பெரிய மஹத் - அதனிலும் பெரிது -
அதனிலும் பெரிது -
அணு - அதனிலும் சிறிய அணு - அதனிலும் சிறிது -
அதனிலும் சிறிது -
இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம்.
புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம்.
“நமஸ்தே, வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”


.

No comments:

Post a Comment