பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

சித்திர விளக்கம் -2

-மகாகவி பாரதி

(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 51)

1.

    நமது சித்திரத்திலே யானை யிருப்பது இந்திய ஜனங்களைக் குறிப்பிடுகின்றது.

இந்திய தேசத்தை யானை யென்று சொல்வதற்குப் பல முகாந்தரங்களிருக்கின்றன. மிகுந்த சாந்தம், அளவற்ற பலம்; ஆனால் தன் பலத்தைத் தான் எளிதிலே அறிந்து கொள்ளாமை. மனதிலே ஓர் நிச்சயம் தோன்றும் பக்ஷத்தில் அதை அந்த க்ஷணமே நிறைவேற்றிக் கொள்ளும் திறமை முதலியன யானையின் குணங்கள். இவை இந்தியா தேசத்தாரிடமும் இருக்கின்றன.

இந்த யானையின் கழுத்து மேலே ஏறி ஸவாரி செய்திறவர் ஜான் புல் (John Bull) துரை; அதாவது ஆங்கிலேய ஸர்க்கார். இதன் முதுகிலே சுமத்தி யிருக்கும் மூட்டைகளெல்லாம் வரிச் சுமைகள் - சுங்க வரி, நில வரி, தொழில் வரி, வருமான வரி முதலிய சுமக்க முடியாத தீர்வைகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சுமைகளைப் பெரும்பாலும் துரை தன்னுடைய சொந்த அனுகூலத்தின் பொருட்டாகவே ஏற்றி யிருக்கிறார்.

இவ் வருஷத்திலே ஒரு சிறு உப்புவரிச் சுமையை மட்டும் கீழே எடுத்துப் போடுகிறார். உடனே அந்தத் தாராள செய்கையைப் பற்றி அவருக்கே அளவிறந்த சந்தோஷம்.

யானையைத் தட்டிக் கொடுத்து  “ஏ, மூட யானையே, பார்த்தாயா உன்னிடத்தில் நான் எத்தனை கருணை வைத்திருக்கிறேன்! உனக்கு முதுகு வலிக்குமே யென்றெண்ணி உப்புச் சுமையில் ஒரு பகுதியைக் கீழே தூக்கி யெறிந்துவிட்டேன். எனக்கு ஸலாம் போடு!” என்கிறார்.

அடடா! துரையின் கருணையை என்ன சொல்வோம்! துரை இப்படி சந்தோஷ மடைந்து கொண்டிருக்கிறார். யானை மனதிலே என்ன ஹடம் வைத்துக் கொண்டிருக்கிறதோ, யார் அறிவார்?

-இந்தியா (30.03.1907)
***
2.
The New Year
புது வருஷம்


வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க,
நன்மை வந்தெய்துக, தீதெலாம் நலிக!

அறம் வளர்ந்திடுக, மறமடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையொ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
நந்தேயத்தினர் நாடோறும் உயர்க.
வந்தே மாதரம் வந்தே மாதரம்!

சென்ற வாரம் சனிக்கிழமை யன்று தமிழர்களின் புது வருஷப் பிறப்பு நாள். ஆதலால் அன்று நாம் விடுமுறை பெற்றுக் கொண்டோம்.

புது வருஷம் நமக்கு ஸர்வ மங்களமாகவே பிறந்திருக்கின்றது. இது முதலேனும் நாம் இடையறாது விடாமுயற்சியுடன் ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் முயற்சி புரிய வேண்டுமென்பதாக நம்மவர்களிலே பலர் புதுவருஷப் பிறப்பன்று பிரதிக்கினை செய்து கொண்டார்கள்.

ஸ்வராஜ்யம் பெறும் வழிகளாகிய ஸ்வதேசியக் கல்வி, அன்னிய வஸ்து பஹிஷ்காரம், ஸர்க்கார் உத்தியோக வெறுப்பு, பஞ்சாயத்து தீர்ப்புகள் முதலிய ஏற்பாடுகள் நமது நாட்டிலே பரவுவதற்குரிய பிரயத்தனங்கள் எவ்விதத்திலேனும் செய்ய வேண்டுமென நம்மவர்கள் நிச்சயம் செயது கொண்டிருக்கிறார்கள்.

மேலும் நமக்கு அனேக நற்சகுனங்களும் தோன்றியிருக்கின்றன. தூத்துக்குடிக்குச் சுதேசீயக் கப்பல்கள் வந்துவிட்டன. ‘பஞ்சாபி’ பத்திரிகைக்காரரின் தண்டனை உறுதியாய் விட்டது. அதாவது தேசாபிமானம் என்று வாயால் பேசிக் கொண்டிருந்த நாட்கள் போய், கஷ்டத்தைப் பாராட்டாமல் தேசத்திற்குழைக்கும் நாட்கள் வந்து விட்டன.

தூக்கத்திலே விருப்பம் கொண்ட சென்னை மாகாணத்தின் முகத்திலே தேசாபிமான ஜலத்தை வாரிக்கொட்டி எழுப்பி விடும் பொருட்டாக பாபு விபின சந்திரபாலர் வந்துவிட்டார். இன்னும் பல நற்குறிகளும் காணப்படுகின்றன. இவை யனைத்தையும் பாழாக்கி விடாமல் காலத்தின் சின்னங்களை நமக்கனுகூலமான வழியிலே பயன்படுத்திக் கொள்வது நம்மவர்களின் கடமையாகும்.

-இந்தியா (20.04.1907)
***
3. 

    உலகத்தில் உள்ள பெரிய கட்டிடங்களுக்கெல்லாம்  “இடிவிழுங்கி” என்ற பாதுகாப்பு விசேஷம் வைப்பதுண்டு. அதாவது அந்தக் கட்டிடங்களின் சிகரங்களின் மேல் ஒரு முழ நீளம் கூர்மையாயுள்ல தாமிர (செம்பு)க் கம்பியொன்று வைத்து, அதை அங்கிருந்து கொண்டுபோய்த் தரையிலாவது, கிணற்றிலாவது அதன் ஒரு நுனியை விட்டு வைப்பது வழக்கம். 

உன்னதக் கட்டிடங்கள் மேக மண்டலத்துக்கு சமீபமாயிருப்பதால் அவற்றின் மேல் மின்னல் (இடி) பாய்ந்து கட்டிடங்களை சேதப்படுத்தி விடும். அதற்கு இந்த இடிவிழுங்கி வைத்துவிட்டால், கட்டிட சிகரத்தைக்காட்டிலும் உன்னதத்தி லிருப்பதால்  முதலில் அதன்பேரில் எவ்வளவு பலமாக மின்னல் (இடி) பாய்ந்த போதிலும் இந்த (இடிவிழுங்கி) செப்புக்கம்பி வழியாய் பூமியில் ஓடி விடுகிறது. கட்டிடத்திற் கொன்றும் அபாயமே யில்லை.

இந்தச் சித்திரத்தில் அபிநவ பாரத ஸ்வராஜ்யக் கட்சி எனும் கட்டிடத்தின் நுனியில் ஸ்ரீமான் அரவிந்த கோஷ் “ஓர் இடிவிழுங்கி”யாய் விளங்குகிறார். இந்தியாவில் பிரிடிஷ் தன்னரசின் பட்சம் எனும் மேகத்திலிருந்து பற்பல விதமாய் அந்தக் கட்டிடத்தின் பேரில்  ராஜ விச்வாஸ மிதவாதிகள், போலீஸ் புலிகள், பிரிடிஷ் அதிகாரிகள், ஆனி பீஜாண்ட்பாய் (பெஸாண்ட்), ஆங்கிலோ-இந்திய பத்ரிகைகள் முதலான இடிகள் வீழ்ந்து அந்த ஸ்வராஜ்யக் கட்சியை நாசமாக்கப் பார்க்கின்றன.

தெய்வீகத் தலைவரான ஸ்ரீமான் அரவிந்த கோஷ் அவற்றை யெல்லாம் விழுங்கி ஜாதீய முயற்சியைக் கைக்கொண்டிருக்கும் பாரத ஸ்வராஜ்யக் கட்சியாரைக் காத்து மஹா தேஜஸ்வியாய் விளங்கி வருகிறார். மற்றவை வெளிப்படை.

-இந்தியா (04.12.1909)

***



No comments:

Post a Comment