பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

தீண்டாமை என்னும் பாதகம்

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 56)

தேசபக்தி என்பது நம்மவருக்கு அந்நியரால் நேரும் தீண்டாமைகளை மாத்திரம் ஒழிக்கும் இயல்புடையதன்று. நமக்கு நாமே செய்து கொள்ளும் அநீதிகளையும் நீக்குமியல்புடையது. எனவே தேசபக்த சிகாமணியாகிய மஹாத்மா காந்தி நாம் இன்னும் ஒன்பது மாஸங்களுக்குள்ளே ஸ்வராஜ்யம் பெற்றுவிடுவோமென்று சொல்லிய போதிலும், அதற்கொரு முக்கியமான நிபந்தனை சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.

தம்முடைய யெளவன இந்தியா பத்திரிகையில் மஹாத்மா பின்வருமாறெழுதுகிறார்:- “சில வகுப்பினரைத் தீண்டாதவராகக் கருதும் பாவத்தை ஹிந்துக்கள் அகற்றினாலன்றி ஸ்வராஜ்யம் ஒருவருஷத்திலும் வராது; நூறு வருஷங்களிலும் வராது. ஹிந்து மதத்தின் மீது படிந்திருக்கும் இந்தக் களங்கத்தை நீக்குதல் ஸ்வராஜ்யம் பெறுதற் கவசியமாகுமென்ற தீர்மானத்தைக் காங்க்ரஸ் ஸபையார் நிறைவேற்றியது நன்றேயாம்... மேலும் இந்தத் தீண்டாமை என்பது மதக் கொள்கைகளால் அனுமதி செய்யப்பட்டதன்று. இது சாத்தானுடைய தந்திரங்களில் ஒன்று” என்கிறார்.

அடிக்கடி “காந்தி கீ ஜேய்” என்ற ஆரவாரம் செய்யும் நம்மவர்கள் இந்த அம்சத்தில் மஹாத்மா சொல்லியிருக்கும் வார்த்தையைக் கவனிப்பார்களென்று நம்புகிறேன். நம்முடைய ஸமூஹ வாழ்வில் அநீதிகள் இருக்கும்வரை நமக்கு ஸ்வராஜ்யம் ஸித்தியாகா தென்ற கொள்கையை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், “வினை விதைப்பவன் வினையறுப்பான்”. நம்மவருக்குள் பரஸ்பர அநீதியுள்ளவரை தேசத்தில் ஸமாதானமிராது. நாம் பலவகைகளிலே துன்பப்பட நேரும்.


No comments:

Post a Comment