பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

நா, வாயால் தேசியம் வளர்த்த பாரதியும், நாவாயால் தேசம் காத்த வ.உ.சி.யும்

-கே.அண்ணாமலை ஐபிஎஸ்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 42)



நம் இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு மிகவும் தீவிரமாக பங்களித்த அரும்பெரும் தேசியவாதிகளை உருவாக்கிய வரலாறு தமிழகத்திற்கு உண்டு. அவர்களில் பலர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஆணிவேரை அசைத்துப் போராடுவதில் முன்னணியில் இருந்தனர். ஆனால், அழையா விருந்தினராக வந்து ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயரின் அநாகரிக வலிமையை, நியாயங்கள் அற்ற நடைமுறையை எதிர்த்து நிராயுதபாணியாகப் போராடினர்.

எண்ணிப் பார்த்தால், ஏறக்குறைய அனைவருமே வளமான தங்கள் தொழிலையும், வசதி வாய்ப்புகளையும் தாய் நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தனர். ஆங்கிலேயரின் அடக்குமுறையை தாங்கள் சேமித்த நிதியாலும் செயல் திறன் மிக்க மதியாலும் திறமையாக எதிர்கொண்டனர். ஆனால், காலப்போக்கிலே தங்கள் வாழ்வையே நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைக் கொடுத்தனர் நாட்டிற்காக... அதுவும் மகிழ்ச்சியுடன்! அவர்கள் தங்கள் தாய் மொழியின் மீதும், நம் நாட்டின் மீதும் தணியாத பெருமை கொண்டிருந்தனர்.

சுதந்திர இந்தியாவை வடிவமைக்கும் சூட்சமத்தையும், அதற்கான மனவுறுதியையும் இறையருளால் அவர்கள் பெற்றிருந்ததால் அந்தக் கடினமான காலங்களை அவர்களால் கடக்க முடிந்தது.  அந்தப் போராட்டத்தில் சொல்லொணாத் துயரங்களை ஏராளமானோர் அனுபவித்த போதும், ஒரு சிலர் மட்டுமே உயர்வாகக் கொண்டாடப்பட்டனர் என்பதைப் புரிந்துகொள்ள வரலாற்றை நாம் வரி பிறழாது படிக்க வேண்டும்.

பெயர்கள், நவநாகரிகமாக மாறிய இந்த நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான பெயரைத் தாங்கிய பள்ளிக்குச் சென்று பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  ‘மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலைப் பள்ளி’ என்று அழைக்கப்படும் அந்தப் பள்ளி 1,300 மாணவர்களுடன் திருநெல்வேலி நகரத்தின் ஒரு பகுதியில் நிற்கிறது. இந்தப் பள்ளி 1757ல் தொடங்கப்பட்டு, இப்போது 264வது ஆண்டை நிறைவு செய்கிறது.

மிகவும் சுவாரசியமான செய்தி என்னவென்றால், இங்கு படித்த இரண்டு மாணவர்கள் மிகவும் தீவிரமான தேசியவாதிகளாக மாறினர்; அவர்கள் நம் நாட்டை சுதந்திர பூமியைக் காண, எந்த எல்லைக்கும் சென்று போராட சித்தமாக இருந்தனர்.

மகிழ்ச்சி சிறகடிப்பு

மகாகவி சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகிய இருவரும் தான், இந்தப் பள்ளியின் புனிதமான தடங்களில் நடந்து சென்று படித்த இரண்டு குறிப்பிடத்தக்க மாணவர்கள். எனக்கு அந்தத் தடங்களையும், தளங்களையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது, வானப் பரப்பில் பறப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது போன்ற மகிழ்ச்சி சிறகடிப்பு!

பள்ளி ஆவணங்களை நான் பரவசமாகப் பார்த்தபோது, 1888 - 93க்கு இடையில் இங்கே பாரதி படித்தார் என்றும், அவர் தன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றும் அறிந்து கொண்டேன். ஆகச் சிறந்த அறிஞர்களையும், சிந்தனைவாதிகளையும் அளவிடும் கருவியாக கல்வி என்றைக்கும் இருந்ததில்லை. கல்விக் கணக்குகளுக்குள் கட்டுக்கடங்காத கனலை அந்த கனகசூரியன் அங்கே கக்கிக்கொண்டிருந்தது என்பதை எண்ணும்போதே எனக்குள் மின்மினிகள்.

நான் இப்போது அமர்ந்திருந்த அதே வகுப்பறைக்குள் தானே தன் வகுப்பு தோழர்களுடன் அந்தப் பிஞ்சு மகாகவி பேசியிருப்பான்... அப்படி அந்த மகாகவி அன்று நடத்திய உரையாடலின் வர்ணம் பூசப்பட்ட வடிவங்கள் அங்கே படங்களாக உள்ளன.

இந்தப் பள்ளியின் மாணவச் சிறுவனாக இருந்தபோது தான், எட்டயபுரத்து அரசவைக் கவிஞர் காந்திமதிநாதன், சின்னப் பையனை சீண்டிப் பார்க்கலாம் என்று எண்ணத்தில், ‘பாரதி சின்னப்பயல்’ என்று ஈறறடி தந்து உடனே ஒரு பாடல் இயற்றச் சவால் விட,  ‘கார் இருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்’ என்று முதலில் தாக்கியும் பின் அவர் மனந்திருந்திய உடனே அதே பாடலை மாற்றி,  ‘காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப் பாரதி சின்னப் பயல்’என்று சொல்லில் சிலம்பம் விளையாடிய அந்த பருவத்தில், இந்தப் பள்ளியில் தான் படித்து இருப்பாரோ எண்ணிய போது எனக்கு புல்லரித்தது.

மற்ற ஒரு சிறந்த மாணவர்  ‘கப்பல் ஒட்டிய தமிழன்’ என்று அன்போடு அழைக்கப்படுகிற வ.உ.சிதம்பரம் பிள்ளை. ஆங்கிலேய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கிந்திய நீராவி கப்பல் நிறுவனத்திற்கு எதிராக தன்  ‘சுதேசி’ என்ற பெயரில் சொந்த கப்பல் நிறுவனத்தைத் துவங்கி நடத்திய சுதந்திரத்தின் சூத்திரதாரி. அவரும் அந்தக்கால கட்டத்தில் அங்கு தான் படித்ததாக தன் சுய சரிதையில் கூறியிருக்கிறார்.

ஆனால், நீண்ட ஆண்டுகள் கடந்து விட்டதால், அந்தப் பள்ளியில் அவரது படிப்பு பற்றிய ஆவண விபரங்கள் அரிதாகிவிட்டன. அங்கு போடப்பட்டிருந்த மர பெஞ்சை தடவிக் கொண்டே யோசித்தேன்...

கடந்த 1908, மார்ச் 8ம் தேதி விபின் சந்திரபால் விடுதலை ஆன போது, அதை தேச விடுதலை நாளாகக் கொண்டாடத் திட்டமிட்டு, தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த தைப்பூச மண்டபத்தின் மீது ஏறி 12 ஆயிரம் பேர் மத்தியில் வேங்கையாய் முழங்கினாரே வ.உ.சி., அவர் அமர்ந்த மர பெஞ்ச் இதுவாக இருக்குமோ? உள்ளம் சிலிர்த்தது. அந்தக் கூட்ட நிகழ்ச்சியை இந்த பள்ளி மாணவன் பாரதி  ‘இந்தியா’ பத்திரிகைக்காக கட்டுரையாக எழுத வந்திருந்தார். வெளிப்படையாகப் பெயர் தெரியாத ஒரு பள்ளியிலிருந்து எப்பேர்பட்ட தலைவர்கள் தோன்றியிருக்கின்றனர் என்று எண்ணிப் பார்த்த போது பரவசமானேன்.

செப்டம்பர் 2021 தமிழ் மண்ணில், இரண்டு புகழ் பெற்ற மகான்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாக உள்ளது. மகாகவியின் 100வது நினைவு தினம் செப்டம்பர் 11ம், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த தினம் செப்டம்பர் 5ம் வருகிறது. மரணம் இல்லாத பெருவாழ்வு வாழும் மகத்துவம் மிக்கவர்களாக நம் தேசிய தலைவர்கள் இன்றும் பேசப்பட காரணம், அவர்கள் செய்த தியாகம்.

ஆனால், அவர்கள் எதை தியாகம் செய்தனர்? பணத்தையும், சொத்தையும், ஆபரணங்களையும், தொழில், வணிகத்தையும் அவர்கள் தியாகம் செய்து இருந்தால், அது அப்போதைய பேசுபொருளாக மட்டும் மறைந்திருக்கும். பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்ற பல தலைவர்கள், தங்கள் இளமையை தியாகம் செய்தனர்; தங்கள் குடும்பத்தை தியாகம் செய்தனர்; தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்; தங்கள் உடல் நலத்தை தியாகம் செய்தனர்; அவ்வளவு ஏன் தங்கள் உயிரையே நாட்டுக்காக பலர் தியாகம் செய்தனர்.

தங்கள் எண்ணம், சிந்தனை, சொல், செயல் என்ற நால்வகை வெளிப்பாட்டில் எந்த இடத்திலும் தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ, சொந்த லாபங்களைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்கள் சிந்தித்தது எல்லாம் தேசம், தேசம், தேசம் மற்றும் தேசம் மட்டுமே!

என்னுடைய இந்தக் கூற்றுக்கு வலு சேர்க்கிறது சுப்ரமணிய பாரதியாருக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் இடையே மலர்ந்த நட்பு.  ‘விஓசி கண்ட பாரதி’ என்ற குறுநுால் அந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பை தெளிவாக விளக்குகிறது.

இனி, கொஞ்ச நேரம் செக்கிழுத்த செம்மல், பாரதி பற்றி சொல்வதைக் கேட்போம்...ஒருநாள் மாலை 4:00 மணிக்கு  ‘இந்தியா’ அதிபர் வீட்டில் பாரதியாரைச் சந்தித்தேன். பாரதியார் ஊரையும், பெயரையும் பற்றி உசாவினார்.  ‘பிள்ளைவாளின் பிள்ளையாண்டானா நீங்கள்...’ என்று கூறி, அருகிலிருந்த நாற்காலியில் அமரச் செய்தார். நானும், அவரும் பேசிக் கொண்டிருந்தோம். தேச காரியங்கள் பற்றிய பேச்சுக்களே எங்கள் அளவளாவுதலில் தலைமை வகித்தன.

அந்த முதல் சந்திப்பும், பேச்சுமே என்னை சோழனாகவும், அவரைக் கம்பனாகவும் நான் நினைக்கும்படி செய்தது. பின், பலமுறை என்னை கடற்கரைக்கு அழைத்தார் பாரதியார். நாங்கள் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்கு சென்று, வெகுநேரம் அரசியல் விஷயங்களை பற்றி, பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்போம். வங்க மாகாணத்தின் சிங்கச் செயல்கள் பற்றியும், விபின் சந்திர பாலரின் தேச பக்தி, பிரசங்கங்கள் முதலியவை பற்றியும் ஆவேசத்துடன் பேசினார் பாரதியார். சுப்பிரமணிய பாரதியும், நானும் சோழனும் கம்பனுமாயிருந்தது கடைசியில் மாமனும், மருமகனும் ஆயினோம்.

பாரதியை நான் இறுதியாக சந்தித்த போது, நான் தோற்றுவித்த  ‘சுதேசி கப்பல் கம்பெனி’ நசிந்து போன பின், சுதேசிக் கப்பலை ஆங்கிலேயரிடமே அதிகாரிகள் விற்று விட்டனர். அச்சம்பவம் என் உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது.

ஓட்டைக் காசுகள்

இது தெரிந்ததும் பாரதி மாமா ஆவேசம் கொண்டு,  ‘சிதம்பரம், மானம் பெரிது, மானம் பெரிது! ஒரு சில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே அக்கப்பலை விற்று விட்டனரே பாவிகள்! அதைவிட அதைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கி, வங்காள விரிகுடா கடலில் மிதக்க விட்டாலாவது என் மனம் ஆறுமே... இந்த சில காசுகள் போய் விட்டாலா தமிழகம் அழிந்து விடும் பேடிகள்’ என்று எவ்வளவோ கடுஞ்சொற்கள் கூறினார்.

‘என் செய்வது... நாடு உயரவில்லை’ என்றார். மாமாவின் இந்த மணிவாசகம் தான் கடைசியாக கண்டது!- இப்படியாகச் செல்கிறது சிதம்பரனாரின் வாக்கியங்கள்.

இக்கால இளைஞர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் அவர்கள் பேசுகிற விஷயம் தேசம், தெய்வீகம், நாடு, மக்கள், மொழி இவை சார்ந்து இருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றே எனக்கு என்ன தோன்றுகிறது. ஆனால், அதைத்தான் அக்கால இளைஞர்களான பாரதியும், வ.உ.சி.யும் பேசிக் கொண்டிருந்தனர்.

எத்தனை உயர்ந்த மனிதர்கள்... எத்தனை உயர்ந்த சிந்தனை...இன்று 150வது பிறந்தநாள் காணும் வ.உ.சி., அவர்கள் தென்னகத்தின் திலகர், உடல், பொருள் ஆவி அனைத்தையும் சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் பெயரில், வெள்ளையர்களுக்கு எதிராக நாவாய் செலுத்த முற்பட்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்தார்; ஆனால், தியாகத்தில் தலைமை கொண்டார்.

செந்தமிழ்ச் சுடர்

உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும், சுட்டெரிக்கும் நெருப்பாக சுதந்திரம் பேசியவர் சுப்பிரமணிய பாரதியார். அவரின் நா, வாய் தமிழை தணல் தொட்டுத் தந்தது. அந்த செந்தமிழ்ச் சுடரின் 100ம் நினைவு ஆண்டு  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இவ்வேளையில் நா, வாயால் தேசியம் வளர்த்தவரையும், (சுதேசி) நாவாயால் தேசியம் காத்தவரையும், கண்ணில் நீர் மல்க கனத்த மனதுடன், இவர்களெல்லாம் மீண்டும் பிறந்து வரமாட்டார்களா என்று நினைத்துப் பார்த்தேன்.

நான் உட்கார்ந்திருந்த மர பெஞ்சில், ஓர் ஓரத்தில்,  ‘தமிழ்’ என்று அழகாக கீறப்பட்டிருந்தது. விரலால் தடவினேன். புரிந்தது எனக்கு. தமிழ் மொழி இருக்கும் வரை, கடைசி தமிழ் மகன் இருக்கும் வரை, பாரதிக்கும் வ.உ.சி.க்கும் மரணமில்லை என்று நினைத்தேன். எழுந்து நின்றேன்!

குறிப்பு:


திரு. கே.அண்ணாமலை ஐபிஎஸ், விருப்ப ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி; பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்.

இக்கட்டுரை தினமலர் நாளிதழில் (05.09.2021) வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

No comments:

Post a Comment