பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

அரவிந்த அமுதம்

-மகரிஷி அரவிந்தர்


(அரவிந்தம் -150)


சாத்வீகப் போராட்டமே நமக்கான ஆயுதம்!

இன்று இந்தியாவில் நிலவுகின்ற சூழ்நிலையில் சாத்வீகப் போராட்டமே நமக்கு மிகவும் இயல்பான, பொருத்தமான ஆயுதமாகும்.

குறிப்பாக அந்நிய ஆட்சியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு தாமாகவே அதனுடன் ஒத்துழைக்க முன்வருவதையே முக்கியமாக நம்பி இருக்கின்ற நாடுகளுக்கு சாத்வீகப் போராட்ட முறை பொருத்தமானதாகும். சாத்வீகப் போராட்டத்தில் முதல் தத்துவம், பிரிட்டிஷ் வாணிபம் நமது நாட்டைச் சுரண்டுவதற்கும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் நாட்டை ஆள்வதற்கும் ஒத்துழைக்க மறுத்து அந்நிய நிர்வாகத்தை நடத்த முடியாமல் செய்வதாகும். ஒரே வார்த்தையில் அதற்குப் பெயர் பகிஷ்காரம்.

நமது சுதந்திரத்தை அடைவதற்கு மிக சக்தி வாய்ந்த முறை பலாத்காரம் அன்று என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆகவே நம்மால் முடிந்த மட்டும் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை மறுப்போம். அவ்வாறு நாம் நம்மை ஒத்துழையாமைக்கு - அரசாங்கத்திற்கு வரி கொடுக்க மறுப்பதும் இதில் அடங்கும் – ஆயத்தம் செய்வோம்.

ஆத்திரமூட்டும்படியாக அரசாங்கம் நடந்துகொள்ளும்போதும் பலாத்காரத்தில் இறங்காமல், நாமாக அரசாங்கத்திற்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டு வரி கொடுப்பதையும் நிறுத்திவிட்டால் மனிதத்தன்மையற்ற இந்த ஆட்சி முடிந்து போவது திண்ணம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

-‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் 
1907 ஏப்ரல் 9 முதல் 23 வரை எழுதிய கட்டுரைகளில் இருந்து…

(தொ.ஆ.குறிப்பு: மகாத்மா காந்தி 1920-21இல் இதே விஷயத்தை முதல்முறையாகப் பேசினார்.)

***

அன்னைக்காகவே உழையுங்கள்!

நீங்கள் படித்தால் அவளுக்காகவே (பாரதத் தாய்க்காகவே) படியுங்கள். உங்களுடைய உடலையும் மனதையும் ஆன்மாவையும் அவளுடைய தொண்டுக்காகவே பயிற்றுங்கள். உங்கள் வாழ்விற்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்கும்போது அவளுக்காக வாழ்வதற்காகவே சம்பாதியுங்கள். நீங்கள் அந்நிய நாடுகளுக்குப் போனால் அவளுடைய தொண்டுக்கு வேண்டிய அறிவைக் கொண்டு வருவதற்காகவே போங்கள். அவள் வாழவே உழையுங்கள். அவள் மகிழவே வருந்துங்கள்...

-அரவிந்தர் விடுதலைப் போரில் நேரடியாக ஈடுபட தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து… (1907 ஆகஸ்ட் 22)

 ***

உஷஸ் தேவி

'ஒளிமயமான அதிகாலையின் வடிவம் (உஷஸ்), நம்மை புற இருள், சடங்கு இருள், மற்றும் வேதங்களின் உண்மைப் பொருள் குறித்த அறியாமையின் இருள் ஆகியவற்றிலிருந்து நம்மைக் விடுவிக்கிறாள். இந்த இருள்களே, இரவில் ஒரு குழியிலிருந்து மறு குழியாக நம்மைக் கீழே விழ வைக்கின்றன. உஷஸ், மூடிய கதவைத் திறக்கச் செய்து நம்மை வேதத்தின் இதயத்துக்கே அழைத்துச் செல்கிறாள்' .
தொ.ஆ. குறிப்பு:

அதென்ன சடங்கின் இருள் ?

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கையில் ஒரு ஐதீக நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. பெரும்புலியூர் அடிகள் என்னும் தீக்ஷிதர், திருமழிசை ஆழ்வாரை வேத வேள்வியில் முதல் மரியாதை (அக்ர பூஜை) பெற அழைத்தார். அங்கு, வேள்விகளில் முதன்மைப் பூசகர்களாக இருந்தவர்களும் பிற சடங்காச்சாரவாதிகளும் அதை எதிர்த்தனர்.

‘பிரப்பங் கூடை முடைந்து விற்றுப் பிழைக்கும் இந்தத் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவனை, இங்கே வேள்வியின் முதல் மரியாதை தர அழைத்து வந்து விட்டீர்களே?’ என அவர்கள் கோபம் கொண்டனர். திருமழிசை ஆழ்வாரையும் அவமதிக்கச் செய்தனர்.

அப்போது திருமழிசை ஆழ்வார் பாடினார்:

‘அக்கரங்கள் அக்கரங்கள்
    என்றுமாவ தென்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை
    ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே!
    சடங்கர் வாய் அடங்கிட
உட்கிடந்த வண்ணமே
    புறம்பொசிந்து காட்டிடே!’

அந்த வேள்விச்சாலையில் வைதிகச் சடங்கரெல்லாம் அதிசயிக்கும் வகையில், அவருடைய நெஞ்சில் இருந்து அனற்பிழம்பின் ஒளி வீச ஆரம்பித்தது. பின்னர், ஆழ்வார் திருமேனியில் பெருமாள் காட்சி அளித்தார் என்பது ஐதீகம்.

முதல் தரிசனமாக, சடங்கர் வாய் அடங்கும்படி ஒளி வீசிய அந்த ஞானஒளி சக்கரத்தின் வேதப் பெண் உரு, உஷஸ் என்றே கொள்ளலாம்.
***
ஸோமரசம்

ஆனந்தத்தின் பிரதிநிதியான தேவதை ‘ஸோமன்’. பரவசமாக்கும் ஸோமரசம், பூமியினின்று முளைத்து வளரும் செடி கொடிகளிலும் ஸத்ஆம் 'அப்பி'னிலும் ஒளிந்திருக்கும். இங்கு நம் பூத உடல்களிலும் அமரத்துவம் அளிக்கும் ‘ஸோமன்’ தன் ரஸங்கள் உள்ளன. அவற்றைப் பிழிந்தெடுத்து அமரர்களுக்கு அளித்தல் வேண்டும். அதன் பலத்தால் அவர்கள் வளர்ந்து வெல்வோர் ஆவர்.

வேதத் தேவர்கள் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுவது, 

நம்முள் இருக்கும் தெய்வீக சக்திகளை. இந்த தெய்வீக சக்திகள், நம் தன்னுணர்வை விரிவடையவும், உள்ளுணர்வுகளை ஆழமாக்கவும் செய்கின்றன. இவற்றுக்கு ஆற்றல் அளிக்கும் ஆதாரமே, சோமன். சோமரசம் என்பது இப்பிரபஞ்சம் அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆனந்தம். இந்த ஆனந்தத்தை உட்கிரகித்தே நம் அக- தெய்வீக சக்திகள் வளர்ச்சி அடைகின்றன.

***
தீட்சை

தாய்நாட்டிற்குத் தொண்டு செய்வேன் என்று அச்சமின்றி சபதம் எடுத்துக் கொள்வதுதான் முடிவான வார்த்தை.

கடவுளைச் சரணடை. தேவியை மனதில் நினைத்துக்கொண்டு பாரத மாதாவின் தொண்டில் இறங்கு. இதுவே நான் உனக்கு அளிக்கும் தீட்சை.

(பிற்காலத்தில் பிரபல புரட்சித் தலைவராகப் பெயர்பெற்ற 
அமரேந்திரநாத் சட்டர்ஜிக்கு அரவிந்தர்  கூறியது...)

***
இறைவனது சக்தி

பல சமயங்களில் உலகில் ஒரு குருட்டு சக்தி வேலை செய்வதைப் பார்க்கிறோம். கடவுள் சர்வ ஞானம் உடையவன் என்பதை ஏற்க மறுத்து, இயற்கையில் வீண்விரயம் நிறைய இருக்கிறது என்று கற்பித்துக்கொண்டு அவனுடைய அறிவில் குறை காண்கிறோம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது.

இறைவனது சக்தி ஒருபோதும் குருட்டுத்தனமாக வேலை செய்வதில்லை. அவனுடைய வேலையில் ஒரு துளிகூட வீணாயிராது. பரமக் கட்டுப்பாடுடன் குறைந்த சக்தி செலவில் அவன் பெரும் விளைவுகளை நிகழ்த்துகிறான்.

***
பூரணத்துக்கு வழி

நம்பிக்கையும் பரிபூரண சரணாகதியும் தான் ஆன்மிக பூரணம் பெறுவதற்கான வழிகள்.

***
புனிதர்கள் நாம்

நாம் சாதாரணமான இனமன்று. நமது மலைகளையும் ஆறுகளையும் போல பழமையான மக்கள் நாம்; உலகில் எந்த இனமும் விஞ்சிவிட முடியாத வரலாற்றுப் பெருமை நமக்குண்டு.

தவப்பெருமை கொண்டவர்களும், ஆன்மிக நன்மைக்காக எங்கும் கேட்டிராத கடுமையான தவங்களை மேற்கொண்டவர்களும், தாங்களாகவே மனிதனால் படக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டவர்களுமாகிய முன்னோர்களின் வழித்தோன்றல்கள் நாம்.

தங்கள் கணவன்மார்களுடனேயே மறுஉலகம் போக வேண்டும் என்பதற்காக புன்முறுவலுடனே சிதை ஏறிய தாய்மார் பெற்ற பிள்ளைகள் நாம்; துன்பத்தை வரவேற்கக் கூடிய, எந்தத் தூல சக்தியையும் விட ஆற்றல் கொண்ட ஆன்மிக சக்தியைப் பெற்றுள்ள மக்கள் நாம்.

வேறு எந்த மக்களிடையேயும் இல்லாத அளவிற்கு நமது வரலாற்றின் முக்கிய கட்டங்களில் எல்லாம் இறைவன் தன்னை வெளிப்படுத்தி புனிதப்படுத்திய மக்கள் நாம்.

***
கற்பித்தலின் அடிப்படை

உண்மையான கற்பித்தலின் முதல் தத்துவம் என்னவென்றால் எதையும் கற்பிக்க முடியாது என்பதே.

***
இறுதி இலக்கு

நமது தேசபக்தி அன்பையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அது தேசிய ஒருமையோடு நின்றுவிடாமல் மனித இன ஒற்றுமையை இறுதி லட்சியமாகக் கொண்டுள்ளது.

***
நமது விருப்பம்

நமது ஆன்மிகம் துறவு அடிப்படையிலேயே அமைக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் துறவைப் போலவே தெய்வீக இன்பம் துய்க்கும் கலையையும் உலகிற்கு போதிக்கும் ஆசானாக ஞானபீடத்தில் இந்தியா அமர வேண்டும் என்றும் நாம் விரும்புகின்றோம்.

***
கர்ம யோகம்

‘யோகஸ்தா குரு கர்மாணி’ – என்னவென்றால் எல்லாக் கர்மங்களையும் யோக நிலையில், கடவுளுடன் ஐக்கியப்பட்ட நிலையில், மிக உயர்ந்த ஆத்மாவின் அடிப்படையில், நமது ஜீவபாகங்களையெல்லாம் ஆத்மாவின் சக்தியைக் கொண்டு ஆட்சி செய்வதன் மூலம் செய்ய வேண்டும் என்பது.

மனிதனால் இதைச் செய்ய முடியும் என்பது மட்டுமன்று, இதுவே அவனுடைய பிரச்னைகளுக்கு எல்லாம், அவனுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் உண்மையான தீர்வு.

***
சனாதனம்

சனாதன தர்மம் வெறுமனே நம்புவது அன்று; அது வாழ வேண்டிய உண்மை.


***
ஆன்மிக மாற்றம் தேவை

மேலை உலகு அறிவியல் மீதும் இயந்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்தது- இப்போது அறிவியலே அதை அழித்துக் கொண்டிருக்கிறது. இயந்திரங்களின் பளுவினால் அது நசுங்கிக் கொண்டிருக்கிறது.

தனது லட்சியங்களின் நிறைவேற்றத்திற்கு ஆன்மிக மாற்றம் தேவை என்பதை அது அறியவில்லை. அந்த ஆன்மிக மாற்றத்தின் ரகசியம் கீழை உலகிடம் உள்ளது.

***
உலகை வெல்லும் ஆன்மிகம்

நமது லட்சியம் உலகைத் துறந்து செல்லும் ஆன்மிகமன்று. அது ஆன்மாவின் பலத்தைக் கொண்டு உலகை வெற்றி கொள்ளும் ஆன்மிகம்.

***
கடவுளின் நாடு

கடவுள் தனக்கென ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கு எல்லா இடையூறுகள், ஆபத்துகளிடையிலும் சிலர் மூலமோ, பலர் மூலமோ உயர்ஞானத்தை வைத்துக் காக்கிறாள். இப்போதைக்கு- இந்த சதுர்யுகத்திற்காவது- அந்த நாடு இந்தியாவாகும்.

***
மோன உபதேசம்

இந்த நாளில் என்னிடமிருந்து ஒரு உபதேசத்தை எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது. நான் மோன உணர்வின் மூலம் தெரிவிப்பதையே விரும்புகிறேன். ஏனெனில், பேச்சு மனத்தை நோக்கிச் சொல்லப்படுவது. ஆனால் மோன உணர்வின் மூலம் அதைவிட ஆழமான ஒன்றைத் தொடலாம்.

(1924 ஆகஸ்ட் 15-இல் பேசியது)

***
அனைவரின் அன்னை

அண்ட சராசரங்களை எல்லாம் சுழன்றிடச் செய்யும் மகா சக்தியே பவானி. அவள் ஒருசமயம் அன்புருவாய் இருப்பாள். இன்னொரு சமயம் ஞானமாக இருப்பாள்; துறவாகவும் இரக்கமாகவும் உருவம் தாங்குவாள். அவளே துர்கை, அவளே காளி, அவளே பிரிய ராதை, அவளே லட்சுமி. அவளே நமது (பாரத) அன்னை. நம் எல்லோரையும் ஈன்றவள் அவளே.

(பவானி மந்திர்)
***
நமது பத்திரிகையின் பணி

இந்தியன் என்ற உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியத் தன்மை பற்றிய ஞானம் இன்னும் உண்டாகவில்லை. ஏதோ மங்கலான ஒரு கருத்து இருக்கிறது. திட்பநுட்பமான கருத்தோ ஆழ்ந்த உட்பார்வையோ இல்லை. நாம் நம்மைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. நாம் எப்படி இருந்தோம், எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கமுடியும்; முன்பு நாம் என்ன செய்தோம், வருங்காலத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்; நம்முடைய வரலாறு என்ன, நாம் இனிமேல் சாதிக்க வேண்டியது என்ன- என்று தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுவே, இந்த ஞானத்தைப் பரப்புவதே ‘கர்மயோகி’ எடுத்துக்கொண்டிருக்கும் முதல் வேலை.


(‘கர்மயோகி’ என்ற பத்திரிகையைத் துவங்கியபோது எழுதியது...)

***
எது ஒற்றுமை?

நம் உண்மையான ஒற்றுமையானது, நாட்டுக்கு தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளும் ஒற்றுமையில்தான் உள்ளது.


***
காத்திருக்கும் பணி

இன்று தோன்றினாள் என்று எவராலும் கூற முடியாத தொன்மை வாய்ந்த இந்தியத்தாய் மாய்ந்து விடவுமில்லை; அவளுடைய இறுதி வாக்கைச் சொல்லி ஓய்ந்து விடவுமில்லை. அவள் இன்னும் வாழ்கிறாள். அவள் தனக்காகவும் மனித இனங்களுக்காகவும் செய்ய வேண்டிய வேலை இன்னும் இருக்கிறது.

***


No comments:

Post a Comment