பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

02/11/2021

பச்சையப்பன் கல்லூரியில் பட்டியலினத்தோர் சேர்க்கப்பட்டது எப்படி?

-ம.வெங்கடேசன்


இந்து சமய அறநிலையத் துறையால் கொளத்தூரில் தொடங்கப்பட்டிருக்கும் கல்லூரி தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 16.10.2021 அன்று வெளியிட்ட அறிக்கையில், “1928-க்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர், முஸ்லிம் மாணவர்கள்கூட சேர முடியாது தடுக்கப்பட்ட நிலை இருந்தது. அதைத் திராவிடர் ஆதரவு ஆட்சிதான் மாற்றியது. காரணம், பச்சையப்பர் ஒரு ஹிந்து. அவரது அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. நால் வருணத்தைத் தாண்டிய அவர்ணஸ்தர்கள் ஆதிதிராவிடர்கள்; ஆகவே, அவர்களையும் சேர்க்க முடியாது என்று பல ஆண்டு காலம் இருந்ததை தந்தை பெரியார் - சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி தீர்மானம் போட்டுத்தான் மாற்றியது" என்று கூறியிருக்கிறார்.

இதனை என்னால் எளிதில் கடந்துபோக முடியவில்லை. காரணம், அந்நிகழ்வு - பட்டியல் சமூகத் தலைவர்களின் போராட்ட வெற்றியின் குறியீடு. அதை மறைத்து பெரியார் ஈ.வெ.ராமசாமியின் கணக்கில் அந்தப் புகழைச் சேர்க்கப் பார்ப்பது நியாயமும் இல்லை!
 
சுயேச்சையாக வெற்றிபெற்ற பி.சுப்பராயன், சுயராஜ்ஜியக் கட்சியினரான ஏ.அரங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைத்து, ஆட்சிப்பொறுப்பை 4.12.1926-ல் ஏற்றுக்கொண்டார். நீதிக்கட்சியினர் இந்த ஆட்சியைக் கடுமையாக எதிர்த்து வந்தனர். இருமுறை இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது நீதிக்கட்சி. சுயராஜ்ஜியக் கட்சியின் மறைமுக ஆதரவால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் காந்தி தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். 7.9.1927 அன்று பச்சையப்பன் கல்லூரியில் பேசிய காந்தி, ‘பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் பஞ்சமர்கள் மற்றும் முஸ்லிம்களை அனுமதிக்க வேண்டும்’ என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தச் செய்தி காந்தியின் ‘யங் இந்தியா’ இதழில் 15.9.1927-ல் வெளியானது.

காந்தி பேசிய பிறகு, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தனது நன்றியுரையில், ‘கல்லூரியை அனைத்துத் தரப்பு இந்தியர்களும் சேர்ந்து பயிலத்தக்கதாக மாற்ற முயற்சிப்பதாக’ கூறினார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1927-ல் இக்கல்லூரியின் பழைய மாணவர்களான எஸ்.துரைசாமி ஐயர், கே.வெங்கடாஸ்வாமி நாயுடு, என்.கிருஷ்ணமாச்சாரி ஆகிய மூவரும் ‘ஆதிதிராவிடர்களும் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாகையால், பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவர்களை அனுமதிப்பதற்கு ஏற்ப அறக்கட்டளை விதிகளை மாற்றியமைக்குமாறு’ சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள். மனுவில் இருந்த சில பிழைகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் சொல்வதுபோல ஆதிதிராவிடர்களை ஏன் சேர்க்கக் கூடாது எனக் கேட்டது உயர் நீதிமன்றம்.

பிறகு, அறங்காவலர்கள் ஆதிதிராவிடர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதன்படி, 1927-ல்தான் ஆதிதிராவிட மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

காந்தி இப்பிரச்னையைப் பற்றிப் பேசிய பிறகுதான் ‘பச்சையப்பன் கலாசாலையும் பார்ப்பனர்களும்' என்ற தலைப்பில் ஈ.வெ.ரா., 27.11.1927-ல் கட்டுரை எழுதினார். அதாவது, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதன் பலனாக, அக்கல்லூரி அறங்காவலர்கள் பெரும்பாலோர் ஒப்புக்கொண்ட பிறகு, ஈ.வெ.ரா., இந்தக் கட்டுரையை எழுதினார். தீர்ப்பு வருவதற்கு முன் பச்சையப்பன் கல்லூரியைக் கண்டித்து எழுதியிருக்கிறாரா என்றால், இல்லை!

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 28-வது தீர்மானத்தில், ‘சென்னை பச்சையப்பன் கலாசாலை டிரஸ்டிகள் ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று ஒப்புக்கொண்டதோடு, அவர்களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டதற்கு இம்மாநாடு மகிழ்கின்றது’ என்று கூறப்பட்டுள்ளது (குடிஅரசு -11.12.1927).

அதாவது, இப்பிரச்னை 1927-லேயே முடிவுற்றது. பின்னர் சைமன் குழு வரவால், பி.சுப்பராயன் அமைச்சரவையில் பிளவு ஏற்பட்டது. நீதிக்கட்சியிடம் ஆதரவு கோரப்பட்டது. நீதிக்கட்சி ஆதரவுடன் புதிய அமைச்சரவை 16.3.1928-ல் பதவி ஏற்றுக்கொண்டது.1928-ல்தான் நீதிக்கட்சியின் ஆதரவே வந்து சேருகிறது. அப்படியிருக்க, திராவிடர் ஆதரவு ஆட்சிதான் மாற்றியதற்குக் காரணம் என்று கி.வீரமணி கூறுவது எந்த வகையில் சேரும்?

1925-ல் காங்கிரஸை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். டிசம்பர் 1927 வரை, அதாவது கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அல்லது மூன்று வருடங்களில் எங்கு, எப்போது, எந்த மாநாட்டில், எந்தக் கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்? அப்படி ஒரு பதிவைக் காட்ட முடியுமா?

ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்க்கலாம் என்று நீதிமன்றம் சொன்ன பிறகு எழுதப்பட்ட கட்டுரையைத் தவிர, 1925 முதல் 1927 அக்டோபர் வரை ‘குடிஅரசு’ இதழில் பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்காவது ஈ.வெ.ரா. எழுதியிருக்கிறாரா? அல்லது கண்டனப் போராட்டம் ஏதாவது நடத்தியிருக்கிறாரா? இதுவே, பச்சையப்பன் கல்லூரியை நடத்தியது ஒரு பிராமண அறக்கட்டளையாக இருந்திருந்தால், ஈ.வெ.ரா., போர் முழக்கம் செய்திருப்பாரோ என்னவோ?!

நீதிக்கட்சி ஆரம்பித்த சர்.பிட்டி தியாகராயர் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்தில் அறங்காவலராக இருந்தார். அவர் கடைசி வரையில் இதைக் கண்டிக்கவேயில்லை. 1919 முதல் 1926 ஆரம்பம் வரை நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போதுகூட இதுபற்றி எந்த ஒரு தீர்மானமும் இயற்றப்படவில்லை. அரசின் சார்பாகக்கூட எந்தவிதமான முயற்சியையும் நீதிக்கட்சி எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

1928 ஜனவரியில் சென்னை மாகாணப் பட்டியல் சமூக இயக்கங்களின் முதல் மாநாடு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. அனைத்துப் பட்டியல் சமூக மக்களும் கலந்துகொண்ட இம்மாநாட்டின் தலைவராக இரட்டைமலை சீனிவாசனை முன்மொழிந்த திராவிட மகாஜன சபையின் தலைவர் வாசுதேவப்பிள்ளை, இதுவரை நுழைய முடியாத இடமாக இருந்த பச்சையப்பன் கல்லூரியில் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி, ‘நீண்ட காலம் முற்றுகையிட்டு, குண்டுகளால் தகர்த்து, சாதி இந்துக்களின் பலம் வாய்ந்த இந்தக் கோட்டையைப் பிடித்திருக்கிறோம். இது பெரிய சாதனை. இதுபோன்று பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் போராடினால் நமது பிறப்புரிமையை மற்ற சமூகங்கள் மத்தியில் நிலைநாட்டலாம்’ என்று பேசினார்.

வாசுதேவப்பிள்ளையின் கூற்றிலிருந்து பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்களைச் சேர்த்ததற்குப் பட்டியல் சமூகத் தலைவர்கள் எந்த அளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்று நாம் அவதானிக்கலாம். இந்தப் போராட்டங்களுக்கும் பெருமுயற்சிகளுக்கும் உரிய அங்கீகாரம் தருவதற்குப் பதிலாக, சுயமரியாதை இயக்கத்தால்தான் - நீதிக்கட்சியால்தான் ஆதிதிராவிடர்கள் பச்சையப்பன் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர் என்று கி.வீரமணி கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

குறிப்பு:

 திரு. ம.வெங்கடேசன், தேசியத் தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தேசிய ஆணையர். ‘ஈ.வெ.ராமாசமி நாயக்கரின் மறுபக்கம்’, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ மறுபக்கம்’, ‘தலித்களுக்காக பாடுபட்டதா நீதிக்கட்சி?’  உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.


இக்கட்டுரை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் (22.10.2021) வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment