பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/11/2021

ஆகாய விமானமும் சென்னையும்

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 66)

`    காலத்தை மீறிச் சிந்தித்து சமுதாயத்துக்கு வழிக்காட்டுபவரே முன்னோடி. அந்த வகையில் தமிழின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதி விமான உற்பத்தி குறித்து 110 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதிய கட்டுரை இது...

    வார இதழன ‘இந்தியா’விலும், மாலைப் பத்திரிகையான ‘விஜய’விலும் வெளிவந்துள்ல கட்டுரை இது. ஒரே கட்டுரையை இருவேறு இதழ்களில் வெளியிடுவது, தனது எண்னத்தை மக்களுக்கு பரவலாக்கும் அவரது வேகத்தை வெளிப்படுத்துகிறது.

    விமானம் குறித்த தொழில்நுட்பக் குறிப்புகளையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. இதில் தெரியவேண்டிய மிக முக்கியமான தகவல், சென்னையில், ஸிம்ஸன் கம்பெனியில் விமானம் தயாரிக்கும் பணிகள் நடந்திருப்பது தான்.
-ஆசிரியர் குழு

***
    இப்பொழுது உலகமெல்லாம் ஆகாய மார்க்கமாய் யாத்திரை செய்ய ஆவல் கொண்டிருக்கிறார்கள். நிலத்திலும் நீரிலும் அதிவேகமாய் செல்ல வழியேற்பட்டிருக்கிறது போரவில்லை. புகை வண்டியும் புகைக்கப்பலும் என்ன வேகமாகச் சென்றாலும் அதுகளுக்குண்டான ஸ்தலங்களில்தான் செல்லும். மலை, பள்ளத்தாக்கு, கடல் இவைகளை கவனிக்காமல் எங்கும் விரிந்த ஆகாய மார்க்கமாய் செல்வதென்றால் எல்லோருக்கும் வினோதமாகத் தானிருக்கும்.

நித்தியம் வயிற்றுப் பாடே பெரிதாயில்லாத சுதந்திர நாடுகளில் கணக்கில்லா ஜனங்கள் ஆகாய சலனத்தில் வெகு ஊக்கம் எடுத்துக்கொள்கிறார்கள். ஐரோப்பாவில் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான விமானம் கட்டாதவர்களில்லை. அநேக உயிர்ச்சேதம் நடந்தாலும் பெருத்த முயற்சியோடு மேலும் மேலும் விமானங்கள் பத்திரமாகக் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வளவு ஆவலோடு ஜன ஸமூகம் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அது கைக்கெட்டாமல் போகவே போகாது.

ஆனால் ஜனங்களுக்கு இம்மாதிரியான ஆவலுண்டாவதற்கு சில வெளி விஷயங்களும் ஒத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் சோறு சோறுயென்று கூச்சலிடும்படி ஒரு ஜன ஸமூகத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு விமானங்களைக் குறித்து யோசிக்க மனம் வருமா ? சென்ற ஐம்பது வருஷ காலமாக க்ஷாமம் க்ஷாமம் என்னுங்கவலை பரவிவரும் ராஜ்யத்தில் ஆகாய சலனத்தை குறித்து செலவு செய்ய துணிவார்கள்.

ஆகையால்தான் நமது தேசத்தாரால் இதை குறித்து ஒரு முயற்சியும் செய்ய முடியவில்லை. கொஞ்சம் வயிற்றுப் பாடுக்கு கஷ்டமில்லாத நம் சிற்றரசர்களுக்குக்கூட இதில் மனம் செல்லவில்லை. அவர்களும் இந்தியர்கள்தானே ? நம் ஜாதிக்கு நேர்ந்த விபத்து இவர்களையும் விடவில்லை.

இந்திய புத்திரர்களாகிய அரசர்களும் ஜமீன்தார்களும் மிறாசுதார்களும் இதர ஜனங்களும் மனம் ஏக்கம் பிடித்து நாள் கழித்து வரும் இக்காலத்தில் இந்தியாவில் மற்றொரு வகுப்பார் வெகுவாக குஸாலாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கும் பொது ஜனத்தின் தாழ்ந்த நிலைமைக்கும் சம்பந்தமேயில்லை போல் தோன்றுகிறது. தாம் செய்யும் வேலைகளுக்கு நல்ல சம்பளமும் அதிகாரமும் கிடைத்து ஏதேச்சையாக யிருக்கும் தன்மையுடையவர்களாகயிருக்கிறார்கள்.

அவர்கள்தான் புதுப்புது விஷயங்களில் கவனித்து அவைகளை விருத்தி செய்வதற்கு வேண்டிய முயற்சி எடுத்துக்கொள்ள போதுமான சக்தியுடையவர்களாயிருக்கிறார்கள். இப்போது உலகமெல்லாம் மனத்தைச் செலுத்தும் ஆகாய விமானத்தை குறித்து வேண்டிய யேற்பாடுகள் செய்ய இவர்களால்தான் முடியும். அதினிமித்தம்தான் இந்தியாவில் விமானங்களைச் செய்ய நடந்த சிறு முயற்சிகள்கூட ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டது.

சில நாளைக்கு முன் கல்கத்தாவில் ஒன்று செய்யப்பட்டு ஆகாயத்தில் பறந்ததாக தெரிவித்திருந்தோம். இப்பொழுது மற்றொன்று சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஆங்கில வண்டி பட்டரையாகிய ஸிம்சன் கம்பெனியால் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மௌண்ட் ரோட்டில் பெயர்போன ஓட்டல் வைத்திருக்கும் டாஞ்சலிஸ் (டி - ஆஞ்சலிஸ் என்றும் சொல்வதுண்டு ) என்னும் பிரெஞ்சுக்காரரால் கண்டு பிடிக்கப்பட்டு, தமிழ் வேலைக்காரர்களால் செய்யப்படுகிறது.  ஸிம்சன் கம்பெனியின் மானேஜர் மேற்பார்வையின் கீழ் நடந்துவருகிறது.

இப்போது 12 குதிரை சக்தியுள்ள என்ஜினினால் நடத்திப் பார்த்தார்கள். சென்னைக்கு அருகில் நடத்தினபொழுது திருப்திகரமாகவேயிருந்ததாம். மறுபடியும் 25 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்ஜினை சேர்த்துவிடும்பொழுது எல்லா ஜனங்களுக்கும் காட்டப்படும். இந்த விமானத்தின் மொத்த பளுவு என்ஜின் ஆளோடு சேர்த்து 700 ராத்தால்தான். இந்த சமயத்திற்கு 20 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்ஜினை இந்த விமானத்திற்கு முடிக்கிவிட்டு பறக்கவைக்க எத்தனித்து வருகிறார்கள்.

இம்மாதிரியான விஷயங்களில் கூடிய சீக்கிரத்தில் நம்மிந்தியர்களும் அக்கரை எடுத்துக்கொள்வார்களென்று நம்புகிறோம்.

- விஜயா  (15 பிப்ரவரி 1910).
- இந்தியா (19 பிப்ரவரி 1910)

No comments:

Post a Comment