பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

ஜாதி தொடர்பான சமூக சிந்தனைகள்

-மகாகவி பாரதி


    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 82)


ஆசாரத் திருத்த மஹாசபை

    இப்போது நடைபெறும் 1920-ம் வருஷம் ஜூன் மாஸம் 22-ம் தேதியன்று தொடங்கி, அன்றைக்கும், அடுத்த இரண்டு மூன்று தினங்களும், திருநெல்வேலியில் “மாகாண ஆசாரத் திருத்த மஹாஸபை” நடைபெறும் என்று தெரிகிறது. 21-ந் தேதியன்று மாகாணத்து ராஜரீக மஹா ஸபை திருநெல்வேலியில் கூடுகிறது. அதை அனுசரித்து, அதே பந்தரில் ஆசார ஸபையும் நடக்கும்.

22-ந் தேதி முதல், இரண்டு மூன்று நாள் கூடி, அங்கு, நம் மாகாணத்து ஆசாரத் திருத்தக்காரர் வழக்கப்படி விவாதங்கள் நடத்தி மாமூலைத் தழுவிச் சில தீர்மானங்கள் செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.

எனக்குக் கிடைத்திருக்கும் அழைப்புக் கடிதத்தைப் பார்க்குமிடத்தே இந்த வருஷம் நடப்பது இருப்பத்திரண்டாவது வருஷக் கூட்டமென்று விளங்குகிறது. சென்ற இருபத்திரண்டு வருடங்களாக இம்மாகாணத்திலுள்ள ஆசாரத் திருத்தக் கூட்டத்தார் வெறுமே ஸபைகள் கூடித் தீர்மானங்கள் செய்திருப்பதே யன்றி உறுதியான வேலை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிய வழியில்லை.

ராஜரீக மஹா ஸபையில் செய்யப்படும் தீர்மானங்கள் கார்யத்துகுக் வராவிட்டால், “அதற்கு நாம் என்ன செய்யலாம்? அதிகாரிகள் பார்த்து வரங்கொடுத்தால் தானே யுண்டு. நாம் கேட்க மாத்திரமே தகுதியுடையோர். நம்முடைய விருப்பங்கள் நிறைவேற வேண்டுமாயின், அதற்கு அதிகாரிகள் தயவு வேண்டும்; அல்லது, இங்கிலீஷ் பார்லிமெண்டின் தயவு வேண்டும். அவை நிறை வேறாமலிருப்பது பற்றி நம்மீது குறை கூறுதல் பொருந்தாது” என்று சாக்குப் போக்குச் சொல்ல இடமிருக்கிறது.

ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயமோ அப்படியில்லை. இதில் நம்மவர்கள் செய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியவர்களும் நம்மவரே யன்றி பிறரில்லை. அதிகாரிகளின் தயவு வேண்டியதில்லை. இங்கிலீஷ் பார்லிமெண்டின் கருணையும் அவசியமில்லை. இதில் நாமே வரங்கேட்டு, நாமே வரங் கொடுக்க வேண்டும். இப்படியிருந்தும் இந்த ஆசாரத் திருத்தக் கூட்டத்தாரின் முயற்சிகள் ராஜ்யத் திருத்தக் கூட்டத்தாரின் பிரயத்தனங்களைக் காட்டிலுங்க் கூடக் குறைவான பயன் எய்திருப்பதை நோக்கும்போது மிகவும் வருத்தமுண்டாகிறது.

இந்த தேசத்து ஜனத்தலைவர்கள் மனிதர்களா? அல்லது வெறும் தோல் பொம்மைகள் தானா? இவர்கள் மனித ஹருதயத்தின் ஆவலையும், மனித அறிவின் நிச்சயத்தையும், அவற்றின் பெருமைக்குத் தக்கபடி மதிப்பிடுகிறார்களா? அல்லது வெறும் புகையொத்த பதார்த்தங்களாகக் கணிக்கிறார்களா?

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள். அப்பால், அத் தீர்மானங்கள் தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவை பிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமான கால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக்காணோமென்றால், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம். இவ்வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன். முதலாவது விஷயம், ஆசாரத்திருத்த மஹா சபையில் பேசுவோராவது, ‘உண்மையிலேயே தாம் பேசும் கொள்கையின்படி நடப்பவரா’ என்பதை நிச்சயித்து அறிந்துகொள்ள வேண்டும். மஹா சபைக்குப் பிரதிநிதிகளாக வந்திருப்போர் அத்தனைபேரிலும் பெரும் பகுதியார் ‘இப்போது உடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள்’ என்பதைக் கண்டு பிடித்துப் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.

நமது மாகாண முழுமையிலும் ஆசாரத் திருத்த விஷயத்தில் சிரத்தை யுடையோர் எல்லோரும் இந்த மாதம் திருநெல்வேலிக் கூட்டத்துக்கு அவசியம் வந்து சேர முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தை யொட்டி, மாதர்களின் சபையொன்று நடக்கப்போகிற தாகையால், கல்வி கற்ற மாதர்களெல்லோரும் அவசியம் வந்திருந்து, தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.’ அவரவருக்கு வேண்டிய விஷயங்களைக் குறித்து அவரவர் பாடு பட்டாலொழியக் காரியம் நடக்காது. மேலும், நம் நாட்டு ஆண்மக்கள் தமது நிலைமையை உயர்த்திக் கொள்ளக்கூடிய சுலபமான உபாயங்களைக் கூடக் கையாளத் திறமை யற்றோராகக் காணப்படுகிறார்களாதலால், நம்முடைய ஸ்த்ரீகளை மேன்மைப் படுத்துவதற்குரிய காரியங்களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்த்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக்காக உழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண்மக்களின் உதவியை அதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்து வருவதை நம் தேசத்து ஸ்திரீகள் நன்கு கவனிக்க வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் ஆசாரத் திருத்தத் தலைவர்கள் பெரும்பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், ஆர்ய நாகரீகத்தில் அனுதாபம், இம்மூன்றும் இல்லாதவர்களாக இருந்து வந்தபடியால், பொதுஜனங்கள் இவர்களுடைய வார்த்ஹ்தையைக் கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனினும், அவர்களுடைய கொள்ளைகளிற் பல மிகவும் உத்தமமான கொள்கைகள் என்பதில் ஐயமில்லை.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பதறிவு.”

தேசாபிமானம் முதலிய உத்தம குணங்கள் இல்லாவிடினும், இந்த முயற்சி தொடங்கியவர்கள் உலகப்பொது நீதிகளை நன்குணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்டதாயினும், இப்போது இம்முயற்சி தேச ஜனங்களின் பொதுக் கார்யமாக பரிணமித்து விட்டது. எனவே, இவ்வருஷத்து மஹா ஸபையில் தமிழ் மக்கள் பெருந்திரளாக எய்தி நின்று, ஸபையின் விவகாரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே நடக்கும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் வண்ணமாகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யக்கடவர். எதற்கும் பிரதிநிதிகள் நல்ல பெருங்கூட்டமாக வந்தால் தான் நல்ல பயன் ஏற்படும். ஜெர்மன் பாஷையில் “கூட்டம்” என்பதற்கும் “உத்ஸாஹம்” என்பதற்கும் ஒரே பதம் வழங்கப்படுகிறது. பெருங்கூட்டம் சேர்ந்தால் அங்கு உத்ஸாஹம் இயல்பாகவே பெருகும் என்பது குறிப்பு.

பொது ஜன உத்ஸாஹமே ஸகல கார்யங்களுக்கும் உறுதியான பலமாகும். எனவே, நமது தேச முன்னேற்றத்தின் பரம ஸாதனங்களில் ஒன்றாகிய இந்த ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயத்தில் நம்மவர், ஆண் பெண் அனைவரும், தம்மால் இயன்ற வகைகளிலெல்லாம் உதவி புரிந்து மிகவும் அதிகமாக உத்ஸாகம் காட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.
-சுதேசமித்திரன் (17.06.1920)
 ***
வெறும் வேடிக்கை


திராவிடக் கக்ஷி

    நான், ஸமீபகாலம் வரை, திருநெல்வேலி ஜில்லாவின் மேற்கோரத்தில் ஒரு நாகரிகமடைந்த கிராமத்தில் குடியிருந்தேன். பொதுப்படையாக நல்ல நாகரிகமடைந்த அந்த கிராமத்துக்கு ஜாதி பேத விரோதங்கள் ஒரு களங்கமாக ஏற்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவப் பாதிரிகளின் செல்வாக்கு இந்தியாவில் மற்றெந்தப் பகுதியைக் காட்டிலும் அதிகமாகச் சென்னை மாகாணத்திலும், இந்த மாகாணத்தில் மற்றப் பிரதேசங்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருநெல்வேலி ஜில்லாவிலும் ஏற்பட்டிருக்கிறதென்ற செய்தி நம்மவரில் பெரும்பான்மையோருக்கும் தெரிந்திருக்கக்கூடும். ஆதலால், இங்கிலிஷ் படித்த பிள்ளைகளுக்குள் அந்த ஜில்லாவில் அநேகர் கிறிஸ்தவப் பாதிரிகள் உபதேசத்துக்கு அதிகமாகச் செவி கொடுத்துவிட நேர்ந்ததென்று நான் தெரிவிப்பது பலருக்கோர் வியப்பாகத் தோன்றாது. ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதே முக்ய நோக்கமாகக் கொண்டு வேலை செய்துவரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு, அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படி செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம், மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாக பிராமணத் துவேஷம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்ற கருத்துடையோர் சென்னை நகரத்து முக்யமான கல்வி ஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள். காமம், குரோதம் முதலிய தீய குணங்களை வேதம் அஸுரரென்று சொல்லி, அவற்றைப் பரமாத்மாவின் அருள் வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப்பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸுரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவிலிருந்தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியாவின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு, அதன் பூர்வக் குடிகளைத் தாழ்த்திவிட்டன ரென்றும் அபாண்டமான கதை கட்டிவிட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்தவப் பாதிரிகள் மிகவும் ஆவலுடன் மனனம் செய்து வைத்துக்கொண்டு தம்மிடம் இங்கிலிஷ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமணரைத் தவிர மற்ற வகுப்பினர்-தென் இந்தியாவில் மாத்திரம்- அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்திலே (வேதமொழுகிய காலத்தில்!) விரோதிகளாக இருந்தனரென்றும் ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸுரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்க வேண்டுமென்றும் போதிக்கத் தொடங்கினார்கள். இந்தியாவிலுள்ள ஜாதி பேதங்களைத் தீர்த்துவிட்டு இங்கு ஸமத்வ தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அந்தப் பாதிரிகள் இந்த வேலை செய்யவில்லை. ஹிந்து மதத்துக்குக்கேடு சூழவேண்டுமென்ற நோக்கத்துடன் செய்தார்கள். ஆனால், இதில் மற்றொரு விநோதமுண்டு. அஃதியாதென்றால் இந்தியாவில் பிராமணர்களிலேயே முக்காற் பங்குக்குமேல் பழைய சுத்தமான ஆர்யர்களல்லரென்றும் விசேஷமாகத் தென் இந்தியாவில் இவர்கள் பெரும்பகுதி அஸுர வம்சத்தாருடன் கலந்துபோனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பிய பண்டிதரும் தெரிவிக்கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப்போது உங்களைப்போல் அஸுர ராக்ஷஸராய்விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்கவேண்டுமென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகிறதன்றோ? மேலும் இந்த “திராவிடர்” என்போர் அஸுர, ராக்ஷசர்களின் ஸந்ததியாரென்பதும் அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக்கைக்காக ஒரு க்ஷணம் பாவனை செய்து கொள்வோம். அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தில் பிராமணரின் மந்திரத்தால் அஸுரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ் முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரியவில்லை. பிராமணர்களையடுத்து, க்ஷத்திரியர்களே ராஜ்யமாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. தவிரவும் அந்த ஸம்பவம் நடந்து இப்போது புராணங்களின் கணக்குப்படி பார்த்தால் பல லக்ஷங்களோ கோடிகளே வருஷங்கள் கடந்து போயின. ஐரோப்பியப் பண்டிதரின் கணக்குப்படி பார்த்தாலும் எண்ணாயிர வருஷங்களுக்குக் குறைவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டையை மறுபடி மூட்டுவது என்ன பயனைக் கருதி? யதார்த்தமாகவே, இந்தியா தேச சரித்திரத்தில் ஹிந்துக்களுக்குள்ளேயே தமிழருக்க்கும் தெலுங்கருக்கும், தெலுங்கருக்கும் ஒட்டருக்கும், ஒட்டருக்கும் வங்காளிகளுக்கும், வங்காளிகளுக்கும் ஹிந்துஸ்தானிகளுக்கும், பஞ்சாபிகளுக்கு, பஞ்சாபிகளுடன் ராஜபுத்திரருக்கும், இவர்களுடன் மஹாராஷ்ட்ரருக்கும், மகாராஷ்ட்ரருடன் ஏறக்குறைய மற்றெல்லாப் பிரிவினருக்கும், இவற்றைத் தவிர, ஹிந்துக்களுக்கும் மஹமதியருக்கும் இடையே கணக்கற்ற யுத்தங்களும், அரசு புரிந்தலும் அடக்கியாளுதலும் நடந்து வந்திருக்கின்றன. இதுபோல், ஒரு நாட்டின் உட்பகுதிகளுக்குள் யுத்தங்கள் இந்தியாவில் மாத்திரமன்றி, ஆஸ்திரேலியா முதல் இங்கிலாந்துவரையுள்ள ஸகல தேசங்களிலும் ஓயாமல் நடந்து வந்திருப்பதாகச் சரித்திரம் தெரிவிக்கிறது. இங்ஙனம் நம் நாட்டில், சமீபகால சரித்திரத்திலேயே நிகழ்ந்த எண்ணற்ற போராட்டங்களை மறந்து இன்று தெலுங்கர், தமிழர் முதலிய ஹிந்துக்களும் மஹமதியரும் ஸஹோதரரைப்போல் வாழ வேண்டுமென்ற உணர்ச்சி பரவியிருக்க, எண்ணாயிர வருஷங்களுக்கு முன் “மந்திரங்களாலும், யாகங்களாலும், அஸுர, ராக்ஷஸர்களை ஜயித்த பிராமணர்களை மாத்திரம் நமம்வர் எக்காலத்திலும் க்ஷமிக்காமல் உலக முடிவு வரை விநோதம் செலுத்திவர வேண்டுமென்று சொல்லுதல் பெரும் பேதமையன்றோ? தவிரவும், இந்த நவீன “அல்லாதார்” தாங்கள் அஸுர வம்சத்தாரென்று செல்வதே முற்றிலும் தவறென்பதை ஏற்கெனவே நன்கு நிரூபணம் செய்திருக்கிறேன். ஜாதி பேதங்களின் கொடுமைகளை உடனே அழித்துவிட வேண்டுமென்பதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.

ஜப்பான் தேசத்து திருஷ்டாந்தம்

ஜப்பானில் தீண்டாத வகுப்பினருட்படப் பலவித ஜாதி பேதங்களிருந்தன. எனினும் காலஞ்சென்ற மிகாடோ சக்ரவர்த்தி நவீன உலகத்தின் அவஸரங்களைக் கருதி அங்கு ராஜாங்க விஷயங்களில் ஜாதி பேதங்களைக் கருதக்கூடாதென்று சட்டஞ்செய்தார். எத்தனையோ, நூற்றாண்டுகளாக இயல்பெற்ற வந்த பேதக் கொடுமைகள் அங்கு ராஜரீகத் துறையில் மட்டுமேயன்றி, ஸமூஹ வாழ்விலும் புலப்படாதபடி அதிசீக்கிரத்தில் மறைந்து போய் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் இதுதான் வழி. நாம் ஏற்கெனவே தெரிவித்தபடி ஸ்வராஜ்யம் கிடைத்தால் இந்த ஜாதி பேதத் தொல்லைகளையெல்லாம் சட்டம் போட்டு நீக்கிவிடலாம். இப்போதுள்ள அதிகாரிகள் இவ்விதமான சட்டம் ஏற்படுத்துவார்களென்று எதிர்பார்ப்பதே தவறு. ஆதலால் இந்தியாவின் ஸமூஹ வாழ்க்கையில் ஸமத்வமேற்படுத்த விரும்புவோர் முதலாவது ராஜரீகத் துறையில் ஸமத்வமேற்படுத்த முயலும் “காங்கிரஸ்” கக்ஷியாருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

(காளிதாசன் என்ற புணைப்பெயரில் எழுதியது)
-சுதேசமித்திரன் 1 டிசம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 17

***
ஜாதி 1


    ஜாதி என்ற சொல் இரண்டர்த்த முடையது. முதலாவது ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்பத்திவைத்துக் கொள்ளும் பிரிவு. வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோள ஜாதி என்பது போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பார்ஸீ ஜாதி, பாரத ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பது போல. இவ்விரண்டும் அதிக அனுகூலம் இல்லையென்பது ஸ்ரீமான் ரவீந்திரநாத டாகுருடைய கக்ஷி.

அமெரிக்காவிலேயே பிறந்தவன் தன்னை அமெரிக்க ஜாதியென்றும், இங்கிலிஷ் ஜாதி இல்லையென்றும் நினைத்துக் கொள்ளுகிறான். இங்கிலாந்திலுள்ள ஆஙிலேயனுக்கும், குடியரசுத் தலைவன் வில்ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம், பாக்ஷை எதிலும் வேற்றுமை கிடையாது. ஆனால் தேசத்தையொட்டி வேறு ஜாதி, நேஷன். இந்த தேச ஜாதிப்பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம் போலே ஆதரிக்கப்படுகிறது. அங்கு யுத்தங்களுக்கு இக்கொள்கை முக்கிய காரணம். எல்லா தேசத்தாரும் ஸகோதரரென்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றேயென்றும், ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரையொருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழைகளென்றும் ஸ்ரீடாகுர் சொல்லுகிறார்.

அமெரிக்காவிலே ஒரு சபையிலே இவர் மேற்படி கொள்கையை எடுத்துக் காட்டுகளையில், அந்த தேசத்தானொருவன் இவரை நோக்கி, “இவ்விதமான கொள்கையிலிருந்து பற்றியே உங்கள் தேசத்தை அந்நியர் வென்று கைப்பற்றிக் கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்” என்றான்.

“நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி. உங்களுடைய செல்வத்தில் மேலே தெய்வசாபமிருக்கிறது” என்று ரவீந்திரநாத டாகுர் அவருக்கு மறுமொழி சொன்னாராம். அதாவது இந்த நிமிஷத்தில் செல்வத்திலும், பெருமையிலும் நம்மைக் காட்டிலும் அமெரிக்கா தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும் இந்த நிலைமை எப்போதும் மாறாமலிருக்கு மென்று அமெரிக்கர் நினைபப்து பிழை. நாங்கள் தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பியிருக்கிறோம். கீழே விழுந்தாலும் மறுபடி எழுந்துவிடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோ கதி. ஆதலால் இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து உலக முழுவதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் சமானமென்றும் தெரிந்து கொண்டு, பரஸ்பரம் அன்பு செலுத்தினால் பிழைக்கலாமென்று ரவீஇந்திரர் அவர்களுக்குத் தர்மோபதேசம் செய்கிறார்.

வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே அநாவசியமான ஜாதி விரோதங்களும் (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமையன்றோ?

-சுதேசமித்திரன் (26 டிசம்பர் 1916)
***
பிராமணன் யார்?

ஓர் உபநிஷத்தின் கருத்து


    அஷ்டாதச உபநிஷத்துக்களிலே வஜ்ரஸூசிகை என்பதொன்று. "வஜ்ர ஸூசி" என்றால் வயிர ஊசி என்பது பொருள். இவ்வுபநிஷதம் ''பிராமணன் யார்?'' என்பதைக் குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது.

"நான் பிராமணன், நீ சூத்திரன்" என்று சண்டைபோடும் குணமுடையவர்களுக்கெல்லாம் இவ் வேத நூல் தக்க மருந்தாகும். அன்னிய ராஜாங்கத்தாரிடம் ஒருவன் போலீஸ் வேவு தொழில் பார்க்கிறான். அவன் ஒரு பூணூலைப் போட்டுக்கொண்டு, ஏதேனும் ஒரு நேரத்தில், கிராம போன் பெட்டி தியாகைய கீர்த்தனைகள் சொல்வதுபோல, பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு, ஐயர் ஐயங்கார் அல்லது ராயர் என்று பெயர் வைத்துக்கொண்டு, "நான் பிராமணன், நான் தண்ணீர் குடிப்பதைக்கூட மற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது" என்று கதை பேசுகிறான். மற்றொருவன் தாசில்தார் வேலை பார்க்கிறான். பஞ்சத்தினால் ஜனங்கள் சோறின்றி மடியும்போது, அந்தத் தாசில்தார் தனது சம்பளம் அதிகப்படும் பொருட்டுப் "பஞ்சமே கிடையாது, சரியானபடி தீர்வை வசூல் செய்யலாம்" என்று ''ரிப்போர்ட்டு''எழுதி விடுகிறான். ஆறிலோரு கடமைக்கு மேல் ராஜாங்கத்தார்தீர்வை கேட்பதே குற்றம். பஞ்ச நாளில் அதுகூடக் கேட்பது பெருங் குற்றம். அங்ஙனம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலிலே இருப்பவன் ஹிந்து தர்மத்துக்கு விரோதி. அதற்குமப்பால், உள்ள பஞ்சத்தை இல்லை யென்றெழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு என்ன பெயர் சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு ''சாஸ்திரி யார்'' என்று பெயர் வைத்துக்கொண்டு "நான் கௌதமரிஷியின் சந்ததியிலே பிறந்தேன்" என்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளுகிறான். இப்படியே, வைசியத்தொழில், சூத்திரத்தொழில் என்ற கௌரவத் தொழில்கள் செய்வோரும் இவற்றிற்குப் புறம்பான புலைத் தொழிலகள் செய்வோருமாகிய பல போலிப் பார்ப்பார் தங்களுக்கு இயற்கையாகவுள்ள பெருமையை மறந்துவிட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்.

நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொடுக்கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும். வஜ்ரஸூசீ உபநிஷத்து பின்வருமாறு:-

ஞானமற்றவர்களுக்குத் தூஷணமாகவும், ஞானக்கண்ணுடையவருக்குப் பூஷணமாகவும் விளங்குவதும் அஞ்ஞானத்தைஉடைப்பதுமாகிய "வஜ்ரஸூசீ" என்ற சாஸ்திரத்தைக் கூறுகிறேன்:

'பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத வசனத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்பது பரிசோதிக்கத்தக்கதாகும். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். அங்ஙனம் பிராமணன் என்பது அவனுடைய ஜீவனையா? தேகத்தையா? பிறப்பையா? அறிவையா? செய்கையையா? தர்ம குணத்தையா? அவனுடைய ஜீவனே பிராமணனென்றால் அஃதன்று. முன் இறந்தனவும், இனிவருவனவும் இப்போதுள்ளனவும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரே ரூபமுடையதாயிருக்கின்றது. ஒருவனுக்கே செய்கை வசத்தால் பலவித உடல்கள் உண்டாகும்போது, எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத்தான் இருக்கின்றது. ஆகையால், (அவனுடைய) ஜீவன் பிராமணனாக மாட்டாது. ஆயின், (அவனது) தேஹம் பிராமணனெனில் அதுவுமன்று. சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே அமைப்புடையதாகத் தானிருக்கிறது. மூப்பு, மரணம், இயல்புகள், இயலின்மைகள் - இவையனைத்தும் எல்லா உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும், பிராமணன் வெள்ளை நிறமுடையவன், க்ஷத்திரியன் செந்நிறமுடையவன், வைசியன் மஞ்சள்நிறமுடையவன், சூத்திரன் கருமை நிறமுடையன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும், உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்த பின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால், (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின், பிறப்புப் பற்றி பிராமணன் என்று கொள்வோமென்றால், அதுவுமன்று. மனிதப்பிறவியற்ற ஐந்துக்களிடமிருந்துகூடப் பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு. ரிஷ்யசிருங்கர் மானிலிருந்தும், ஜாம்பூகர் நரியிலிருந்தும், வால்மீகர் புற்றிலிருந்தும், கௌதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்டிருக்கிறோம். அது போக, வஸிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர்; வியாஸர் மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர்; அகஸ்தியர் கலசத்திலே பிறந்ததாகச் சொல்லுவார்கள். முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவி வகை தெரியாமலேயே இருக்கிறது. ஆகையால், பிராமணன் எனக் கொள்வோமென்றால், அதுவுமன்று. க்ஷத்திரியர் முதலிய மற்ற வர்ணத்தவர்களிற்கூட அநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளா யிருக்கிறார்கள். ஆதலால், அறிவு பற்றி ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். ஆயின், செய்கைபற்றி ஒருவனைப் பிராமணனாகக் கொள்வோமெனில் அதுவுமன்று. பிராப்தம், சஞ்சிதம், ஆகாமி என்ற மூவகைச் செயல்களும்,ஒரேவிதமான இயற்கையுடையனவாகவே காணப்படுகின்றன. முன்செயல்களால் தூண்டப்பட்டு, ஜனங்களெல்லோரும் பின் "செயல்கள் செய்கிறார்கள். ஆதலால், செய்கை பற்றி ஒருவன் பிராமணனாய் விடமாட்டான். பின் தர்மஞ் செய்வோனைப் பிராமணனாகக் கொள்வோமென்றால், க்ஷத்திரியன் முதலிய நான்கு வருணத்தவரும் தர்மஞ்செய்கிறார்கள். ஆதலால், ஒருவன் தருமச் செய்கையைப்பற்றியே பிராமணனாகி விடமாட்டான். அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும், அளவிடக்கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்து காமம், ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனாய், இடம்பம் அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ, இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும். மற்றப்படி, ஒருவனுக்கு பிராமணத்துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து.

பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக்கடவர். க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் முதலிய மற்ற லௌகிக வர்ணங்களுக்கும் இதுபோலவே தக்கவாறு லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க. அவ்வவ்விலக்கணங்கள் பொருந்தியவர்களே அவ்வவ் வருணத்தின்ரென்று மதிக்கத்தக்கவர்கள், அந்த. இலக்கணங்கள் இல்லாதவர்கள் அவற்றையடைய முயற்சி செய்யவேண்டும். போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான்.குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்துவிட்டுப்போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களையெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார்கள். இவர்களெல்லாம் மேம்பாடுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார். நமது தேசம் முன்போலக்கீர்த்திக்கு வரவேண்டுமானால், உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய்வகுப்புகளும் போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும். இதுநம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து.

***
நம்பூரிகளும் தீயரும்

    "நம்பூதிரிகள் மிகவும் வைதீகமாயிற்றே? அவர்களிடத்தில் தற்காலத்துப் புதிய தீயர் எவ்விதமான எண்ணம் வைத்து நடக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

"பகை" என்று ராகவசாஸ்திரி சொன்னார்.

"காரணமென்ன?" என்றேன்.

"புதிய தீயர் இப்போது நம்பூரிகளைப் பகைப்பது மாத்திரமே யல்லாது, எப்போதுமே நம்பூரிகளைத் தீயர் பகைத்து வந்ததாகச் சொல்லி வருகிறார்கள். ஆலுவாயில் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஒரு ஸமஸ்கிருத பள்ளிக்கூடம் ஏற்படுத்தியிருக்கிறார். பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார். நிறையப் பணம் சேர்ந்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்கும் ஸமஸ்கிருதம் கற்பிக்கப் படுகிறது. ஒரு மகம்மதியப் பிள்ளைகூட அந்தப்பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசித்து வருகிறான். இங்ஙனம் பல வகைகளிலே தீயர் மேன்மை பெற முயல்வதில் நம்பூரிகளுக்குச் சம்மதமில்லை. அதனால் நம்பூரிகளிடம் தீயருக்குப் பகை உண்டாகிறது. இயற்கை தானே? செய்வாருக்குச் செய்வார் செத்துக் கிடப்பாரா?

"பிராமணராக நம்பூரிகள் பரசுராமனால் செய்யப்பட்டனர் என்றும், அதற்கு முன்பு மீன் பிடிக்கும் செம்படவராக இருந்தனரென்றும் தீயர்கள் நம்பி வருகிறார்கள். மலையாள பூமி செழித்துப்போய் காடு பட்டுக் கிடந்ததை பரசுராமன் நாடாகத் திருத்திய போது, அங்கு வந்து குடிபோகும்படி கர்நாடகத்திலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பிராமணர் களைக் கூப்பிட்டார். இந்தப் பார்ப்பார் அங்கே போய் குடியேறச் சம்மதப்படவில்லை. எனவே பரசுராமன் கோபம் கொண்டு தென் கன்னடக் கரையிலிருந்த "செம்படவரைப் பிராமணராகச் செய்து குடியேற்றினார். நம்பூரிகள் விவாக சமயங்களில் குளம், நதி, ஏதேனும் நீர் நிலைக்குப் போய் வலை போடுவது போலே அபி நயிக்கும் பொய்ச் சடங்கொன்று நடத்தி வந்தார்கள். இப்போது, நம்பூரிகளும் நாகரீகப்பட்டு வருகிறபடியால் வீட்டிலேயே ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை வைத்து, அதில் வாழை இலையைத் துண்டு துண்டாக மீன் ஸ்தானத்தில் போட்டு வைத்து, அதன் மேலே வலைபோடுவது போல் துணி போட்டு அபிநயித்து வருகிறார்கள். மேற்படி பரசுராமன் கதை பொய்க் கதை என்பதே என்னுடைய அபிப்பிராயம். இக்காலத்து நம்பூரிகள் விவாக சமயங்களில் மீன் பிடிக்கும் சடங்கு நடத்துவதற்கு வேறேதேனும் மூலமிருந்தாலும் இருக்கலாம். ''நான் அக்கதையை ஏன் சொன்னேன்'' என்றால், இக்காலத்துத் தீயர்களுக்கு நம்பூரிகளிடத்தில் எத்தனை பெரும்பகை இருக்கிறதென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேனே யொழிய வேறொன்று மில்லை.

"ஆதிமுதல் தீயருக்கும் பிராமணருக்கும் சண்டை உண்டு. தீயர் மற்ற ஹிந்துக்களைப்போலே மக்கள் - தாயத்தை அனுசரிக்கிறார்கள். மருமக்கள் - தாயம் நாயருக்குள்ளே இருப்பதுபோல் தீயருக்குள் இல்லை பிராமணர் நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் செய்வது போலே தீயருடன் செய்து கொள்ள இடமில்லை. தீயர் அதனை விரும்பவில்லை. இதுவே நம்பூரிகளுடன் பகைமைக்கு மூலம்.

"நம்பூரிகளிலே பலர், பரசுராமன் மலையாளத்து பூமியைத் தங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள். அவர்கள் பெரிய ஜமீன்தார்களாகவும் மிராசுதாரர்களாகவும் இருக்கிறார்கள். 'ஜன்மி'கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். 'ஜன்மி' என்றால் ஜன்மபாத்யதை உடையவர்களென்று அர்த்தம்.

"நம்பூரிகளெல்லாம் நல்ல சிவப்பு நிறம்; மிகவும் அழகாக இருக்கிறார்கள். பொதுவாகவே மலையாளத்தார் தமிழரைக் காட்டிலும், தெலுங்கரைக் காட்டிலும் அதிக சிவப்பு நிறமுடையவர்கள். குஜராத்தியரை மாத்திரமே, நிறவிஷயத்தில், தக்ஷிணத்தில் மலையாளிக்குச் சமமாகச் சொல்லலாம். அதிலும், நம்பூரிகள் நல்ல சிவப்பு. ஆனால் நாகரீக ஜனங்களில்லை. நம்பூரிக்கும் நாகரீகத்துக்கும் வெகுதூரம்.

"நம்பூரிக்குள்ளே ஜாதிப்பிரிவுகள் உண்டு. இந்தியாவில் ஜாதி வித்யாஸத்திலே ஒரு விநோதம் என்ன வென்றால், எந்த மூலையிலே போய் எந்த ஜாதியை எடுத்துப் பார்த்தாலும் அதற்குள் நாலு உட்கிளை யில்லாமல் இருப்பதில்லை. நம்பூரிகளுக்குள்ளே ஸம்ஸ்கிருதப் படிப்பும் வேதபாடமும் இப்போதும் அழிந்து போகவில்லை. திருஷ்டாந்தமாக தாழைக் காட்டுமனை என்ற இல்லத்து நம்பூரிகள் வேதப்படிப்பில் கீர்த்தி பெற்றவர்கள்; அவர்களிடம் பணமும் அதிகம். பிராயச்சித்தம் முதலிய வைதீக கிரியைகளிலே முடிவான தீர்மானங்கள் கேட்கவேண்டுமானால், ஜனங்கள் அந்த இல்லத்தாரிடத்திலே கேட்கிறார்கள்."

இங்ஙனம் மேற்படி ராகவசாஸ்திரி சொல்லி வருகையில், நான் "ஜன்மி"களாகி ஜமீன்தார்களாகவும் வித்வான்களாகவும் ஒரே குடும்பத்தார் இருப்பது விசேஷந்தான்? என்று சொன்னேன்.

அதற்கு ராகவசாஸ்திரி - வேதத்துக்குப் பொருள் தெரிந்து படிக்கும் நம்பூரிகளை நான் பார்த்தது கிடையாது. பிறரை மயக்கும் பொருட்டு ஓர் இரண்டு வேதசாம்ஹிதைகளைப் பாராமல் குருட்டு உருப்போட்டு வைக்கிறர்கள். இதில் அதிக விசேஷமில்லை" என்றார்.

அதற்கு நான்:- "சாஸ்திரியாரே, ஜமீன்தார்களாய் பணச்செருக்கிலே இருப்போர் பிறரை மயக்க விரும்பினால் கல்விக் கஷ்டம் இல்லாமலே மயக்குவதற்கு வேறு நூற்றுத் தொண்ணூறு சுலபமான வழிகள் உண்டு" என்றேன்.

பிறகு சாஸ்திரியார் நம்பூரிகளின் அறிவுக் குறையைக் குறித்துப் பல கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை மிகவும் பெரிய கதைகள். இந்த வியாஸம் ஏற்கனவே மிகவும் நீண்டுபோய் விட்டது. ஆதலால், அவர் சொல்லியதின் தொடர்ச்சியை மற்றொரு வியாஸத்தில் எழுதுகிறேன். ராகவ சாஸ்திரி நான் மௌன விரதம் பூண்ட நாளில் துஞ்சத்து எழுத்தச்சன் விஷயமாகச் சொல்லிய விஷயத்தைக் குறித்து மறுபடி இன்று காலை சம்பாஷித்தோம். அதையும் பின்புதான் தெரிவிக்கவேண்டும்.

***
மலையாளம் (1)

    மலையாளத்து ராகவ சாஸ்திரி என்பவர் நேற்று சாயங்காலம் மறுபடி என்னைப்பார்க்க வந்தார். நான் மௌன விரதம் பூண்டிருந்தேன். பிரமராய அய்யரும் 'பெண்-விடுதலை' வேதவல்லியம்மையும் ஏற்கனவே வந்திருந்தார்கள். மேனிலை முற்றத்தில் நல்ல தென்றல் காற்று வந்தது. அங்கு போய் உட்கார்ந்து கொண்டோம். அவர்கள் பேசினார்கள். நான் வாயைத் திறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பிரமராய அய்யர் ராகவ சாஸ்திரியை நோக்கி "மலையாளத்தி லிருப்போர் இந்தப்பக்கத்தாரைக் காட்டிலும் நல்ல சிகப்பு நிறமாக இருக்கிறார்களே. காரணமென்ன?" என்று கேட்டார். "குளிர்ச்சியான பூமி" என்று வேதவல்லியம்மை "

இதற்கொரு காலேஜ் மாணாக்கன், "நாங்கள்இந்தக் கதையை எல்லாம் நம்புவது கிடையாது. வைசூரிக்குப்பால் குத்திக் கொள்ளுகிறோம். பேதிக்கு உப்புக் கொடுக்கிறோமவிஷ ஜ்வரம், கொசு வாயில் சுமந்து வரும் கண்ணுக்குத் தெரியாத பூச்சியால் உண்டாவதை அறிவோம். இவற்றை எல்லாம் தெய்வங்களின் கூட்டத்திற் சேர்க்கவில்லை" என்றுசொல்லக்கூடும். கொள்கை மாறக்கூடும். ஆனால் நாம் நமக்குநாயகராகாமல், புறத்தே ஓரதிகாரத்தை எப்போதும் குருட்டுத்தனமாக நம்பித் தொங்கும் குணம் நம்முடைய ஊக்கத்தை வேரறுக்கிறது. இப்படி எங்கும் சூழ்ந்த பயமானது நம் அறிவையும் உள்ளத்தையும் வசப்படுத்தி யிருப்பதால், நமதுமனம் கோழைப்பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால்,உலக முழுதும் தழுவிய மாற்றொணாத ஸ்ர்வவிதியை நாம் நம்புவதில்லை. ஐயப்படுதலும், 'எது வந்துவிடுமோ, நாம் எப்படிஒன்றைத் துணிவாகச் செய்யலாம்' என்று திகைப்பதும் பயத்தின்குணங்களாகும். நமது ராஜாங்கத்தாரிடத்திலே கூட இந்தக் குணம் சில சமயங்களில் காணப்படுகிறது. ராஜாங்க யந்திரத்திலேஎப்போதேனும் ஓட்டை யுண்டாகி. அதன் வழியே பயம் நுழைந்து அதனால் அவர்கள் தமக்கினியவாகிய ஸ்வதர்மங்களைமறந்து தம் ஆட்சியை உறுதியாகத் தாங்கும் வேர்க் கொள்கையைக் கோடரியால் வெட்டுகிறார்கள். அப்போது தர்மமும் நீதியும் ஒதுங்கிப் போய், கௌரவத்தைக் காப்பாற்றவேண்டுமென்கிற எண்ணம் முன்னே நிற்கிறது. தெய்வ விதியைமீறி அழுகைக் கண்ணீரை அந்தமான் தீவில் மறைத்துவிட்டால்கசப்பு இனிப்பாய்விடும் என்று நினைக்கிறார்கள். 'ஸகல ரோகாநிவாரணி' என்று தான் ஒரு மருந்தைப் பாவனை செய்துகொண்டு, உலகப் பொது விதியைச் சிலர் உல்லங்கனம் செய்வதற்கு இஃதொரு திருஷ்டாந்தம். இதற்கெல்லாம். உட்காரணம் அற்பத்தனமான "பயமும் தன்னலம் வேண்டலும்;அல்லது, அற்பத்தனமான சூதினால் நேர் வழியை விட்டு விலகமுயலுதல். இங்ஙனம் நாம் எண்ணத் தொலையாத அதிகாரிகளுக்கு, பூஜை நைவேத்தியம் பண்ணி குருட்டு அச்சத்தால், மானுஷீக உரிமைகளைப் புறக்கணிக்கிறோம். பௌதிகசாஸ்திரத்திலும் ராஜ்ய சாஸ்திரத்திலும் நாம் எத்தனை உயர்வாகப் பரீக்ஷை தேறிய போதிலும், பிறர் உத்திரவுக்குக் காத்திருப்பதாகிய ஊறின வழக்கத்தை நம்மால் விட முடியவில்லை.தற்கால வழியை அனுசரித்து நாம் ஜனாதிகார சபைகள் ஏற்படுத்தினால் அவற்றிலும் எவனாவது ஒருவன் நாயகனாகி மற்றவர்களை மேய்க்கும் தன்மை உண்டாகிறது. இதன் காரணம்யாதெனில், பொது ஜனங்கள் தன்னை மறந்திருத்தல், தூங்குதல்,உண்ணுதல், குடித்தல், கலியாணம் பண்ணுதல், பாடையேறுதலமுதலிய ஸகல காரியங்களையும் பிறருடைய ஆணைப்படியேசெய்து வழக்கப்பட்டிருக்கிறார்கள்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-

ஸ்ரீ நாராயணஸ்வாமி என்பவர் தீயர் ஜாதியில் பிறந்து பெரிய யோகியாய் மலையிலே தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது பல தீயர் அவரிடம் போய், 'ஸ்வாமி, தங்களை மலையாளத்து மஹாராஜாகூட மிகவும் கௌரவப் படுத்தும்படி அத்தனை மேன்மையான நிலைமையிலே இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை இதர ஜாதியார் மிகவும் தாழ்ந்த நிலைமையிலே வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குப் போனால் மற்ற ஜாதியார் எங்களை வெளிப்புறத்திலே நிறுத்துகிறார்கள். நேரே ஸ்வாமி தர்சனம் பண்ண வழியில்லை. எங்களுக்கு ஒரு புகல் சொல்லக்கூடாதா? என்று கேட்டார்கள். அப்போது நாராயணஸ்வாமி சொல்லுகிறார்:

''கேளீர், ஸகோதரர்களே! கோயில் கட்டுவதற்கு நம்பூரிப் பிராமணர் தயவு வேண்டியதில்லை. கல் வேலை தெரிந்த கல்தச்சர் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் கோயில் கட்டிக் கொடுப்பார்கள். ஆதலால், நீங்கள் இந்த விஷயத்தில் வருத்தப்பட வேண்டாம். பணம் சேர்த்துக்கொண்டு வாருங்கள். எத்தனை கோயில் வேண்டுமானாலும் கட்டலாம். நான் ப்ரதிஷ்டை பண்ணிக்கொடுக்கிறேன்" என்றார். இதைக் கேட்டவுடனே தீயர்கள் தமக்குள்ளிருந்த பணக்காரரிடம் தொகை சேர்க்கத் தொடங்கினார்கள். காலக்கிரமத்தில் பெரிய தொகை சேர்ந்தது. இப்போது பல இடங்களில் மேற்படி நாராயண ஸ்வாமி ஆலயப்ரதிஷ்டை செய்திருக்கிறார். என்று சாஸ்திரி சொன்னார்.

"இவர் கோயில்கள் கட்டினதைப்பற்றி இதர ஜாதியார் வருத்தப்படவில்லையா?" என்று வேதவல்லியம்மை கேட்டாள்.

"ஆம். அவர்களுக்குக் கோபம் தான். ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு,"பெயரென்ன?" "என்று கேட்டார்.

"என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்" என்று நாராயணஸ்வாமி சொன்னார்.

"தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?" என்று நம்பூரி கேட்டார்.

''ஆம்'' என்று ஸ்வாமி சொன்னார். "பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்கவேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?" என்று நம்பூரி கேட்டார்.

அதற்கு நாராயணஸ்வாமி:- 'பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப் படவேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை' என்றார்.

இவ்வாறு ராகவ சாஸ்திரி மேற்படி நாராயணஸ்வாமியைக் குறித்துப் பல கதைகள் சொன்னார். பிறகு மலையாள பாஷையின் ஆதிகவியாகிய துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரைப்பற்றி கொஞ்சம் வார்த்தை நடந்தது. எழுத்தச்சன் என்றால் எழுத்தின் அச்சன் (தந்தை) என்று பொருள். அந்த எழுத்தச்சன் எத்தனாவது நூற்றாண்டிலிருந்தான் என்ற கால நிர்ணயம் ராகவ சாஸ்திரிக்குத் தெரியவில்லை. இவர் பிறந்த கிராமத்தின் பெயர் ஏதோ சொன்னார்; அது எனக்கு மறந்து விட்டது. இக் காலத்திலே கூட அந்தக் கிராமத்துக்குப் பக்கத்து நாட்டுப்புறங்களிலே எங்கேனும் ஓரிடத்தில் பிள்ளைக்கு அக்ஷராப்யாஸம் பண்ணிவைத்தால் அதற்கு அந்தக்கிராமத்திலிருந்து மண்ணெடுத்துக்"கொண்டு வந்து அக்ஷரம் படிக்கும் சிறுவனுக்குக் கொஞ்சம் கரைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு என்று மேற்படி சாஸ்திரியார் சொன்னார். துஞ்சத்து எழுத்தச்சன் செய்த ராமாயணத்திலிருந்தும் சில புராணத்திலிருந்தும், மேற்படி ராகவ சாஸ்திரி, சில சுலோகங்களை எடுத்துச்சொல்லிப் பொருள் விளக்கினார். அதன் நடை பழைய தமிழ்; கொச்சையில்லாத சுத்தமான சம்ஸ்கிருதச் சொற்களையும் தொடர்களையும் யதேஷ்டமாகச் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழ் காதுக்கு மிகவும் ஹிதமாகத் தானிருக்கிறது. துஞ்சத்து எழுத்தச்சன் வாணிய ஜாதியைச் சேர்ந்தவராம். இவர் தமிழ் நாட்டிலே போய் கல்வி பயின்றவராம். இவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷயமாகப் பக்திப் பாட்டுகள் பல பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பாட்டுக்களை மலையாள ஸ்திரீகள் பாடும் போது கேட்டால் மிகவும் இன்பமாக இருக்குமென்று ராகவ சாஸ்திரி சொன்னார்.அவரே மாதிரி கொஞ்சம் பாடிக் காட்டினார்:

"கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்கேணும் விண்ணோர் புகழ்ந்த நாயிகே, மாயிகே, நீ"

என்று அந்தப் பாட்டின் முதற்கண்ணி சொன்னார். அதாவது:-

'கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்க வேணும், விண்ணோர் புகழும் நாயிகே' என்றவாறு.

''நாயிகே'' என்பது வடசொல். ''நாயகியே என்பது பொருள். ''மாயிகே'' என்றால் ஹே மாயாதேவி என்று அர்த்தம். இது பராசக்தியை நோக்கி கோபிகள் தமக்கு கண்ணனைத்தரும்படி வேண்டிய பாட்டு.

இங்ஙனம் அவர்கள் நெடுநேரம் ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தார்கள். பிரமராய அய்யர் கடைசியாக "ஹிந்து தேசமாகிய ரத்ன மலையில் மலையாளம் ஸாமான்ய ரத்னமன்று" என்றார்.

பிறகு வேதவல்லியம்மை அச்சிகளைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். ஏற்கனவே, ஐரோப்பிய ஸ்திரீகளுக்கு உள்ள விடுதலை (நாயர் ஸ்திரீகளாகிய) அச்சிகளுக்கு உண்டென்று வெளிப்பட்டது. வேதல்லியம்மைக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. பிரமாயர் பெருமூச்சு விட்டார். உடனே பிரமராய அய்யருக்கும் வேதவல்லிக்கும் சண்டை உண்டாயிற்று. இந்த வியாஸம் ஏற்கனவே நீண்டுபோய்விட்ட படியால், மேற்படி பிரமராயர் வேதவல்லி யுத்தக் கதையை ஸௌகரியப்பட்டால் மற்றொரு முறை எழுதுகிறேன்.

***
மலையாளத்துக் கதை

    மலையாளத்துக் கதை போகப்போக ரஸப்படுகிறது. ராகவசாஸ்திரி மலையாளத்தைப் புகழுகிற புகழ்ச்சியைக் கேட்டால் யாருக்கும் அந் நாட்டிலே போய் சில மாதங்கள் கழித்து வரவேண்டுமென்ற இச்சை யுண்டாகும்.

நம்பூரிப் பிராமணர்களும், பலாப்பழமும், மாம்பழமும், வாழைப்பழமும், இனிய ரூபங்களும் மலிந்து கிடக்கும் அந்த நாட்டை நினைக்கும்பொழுது எனக்குப் பெரிய விருப்பமுண்டாகிறது. இயற்கைத் தெய்வம் அங்கே அழகு முழுவதையும் சிந்தியிருப்பதாக ராகவசாஸ்திரி சொல்லுகிறார். "மலையாள மென்பது ஸௌந்தரியத்தின் பெயர் என்று குழந்தைப் பருவம் முதலாகவே என்மனதிற்பட்டிருந்தது. நான் மலையாளத்திற்குப் போனதே கிடையாது. சும்மா வடக்கம் மலையாளத்தைப் பற்றியும் தெற்கம் மலையாளத்தைப் பற்றியும் கதை கேட்டிருக்கிறேன். மலையாள பகவதிக்கும் சாஸ்தாவுக்கும் அந்த நாட்டில் நடக்கும் மகிமையைக் கேட்டுப் பலமுறை ஆச்சர்யப்பட்ட துண்டு. மலையாளத்து மந்திரவாதிகளின் கதைகளைக் கேட்டு நகைத்ததுண்டு. மலையாளம் சக்தி நாடென்றும் அங்கே பெண்களுக்குப்படிப்பும் அறிவும் மிகுதியென்றும் அதனாலேதான் அந்த நாட்டிற்குப் பெண் மலையாளம் என்னும் பெயருண்டாயிற்று என்றும் கேள்விப்பட்டேன். அங்கே புலயரைத் தீயரும், தீயரை நாயரும், நாயரை நம்பூரியும் மிகவும் இழிவாக நினைக்கிறார்களென்பது மூன்று லோகப் பிரஸித்தம். இந்த ராகவசாஸ்திரி வந்ததிலிருந்து எனக்கு அந்த நாட்டிலே ஜாதிப்பகைமை ஏற்படுவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகத் தெரிவதுடன் இங்கிலீஷ் படித்த தீயர், நாயர், இரு பகுதிகளிலும் ஒரு பகுதியார் மேற்படி பகையை நெருப்புக்கு நெய்விட்டு வளர்க்கக்கூடிய நிலைமையிலே இருக்கிறார்களென்பதையும் காண்கிறேன்.

"தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக" என்று சாஸ்திரி சொன்னார்.

"மலையாளத்துக் கதை மேலே நடத்தும்" என்றேன். ராகவசாஸ்திரி சொல்லுகிறார்:-

"நம்பூரி இல்லத்தில் (வீட்டில்) வெளித்தோட்டமிருக்கும் வேலிக்குள் யாரும் நுழையக்கூடாது. நம்பூரிப் பெண்கள் ஜமுனா (அந்தபுரம்) தோட்டத்திலே குளப்புரை அந்தப் பெண்களில் பலருக்கு விவாஹமே கிடையாது சாவு மட்டும். புருஷரில்லாமல் வாழ்ந்து, செத்த பிறகு பிணத்துக்கு மணச்சடங்கு செய்வதுமுண்டு. நம்பூரிகளில் மூத்த பிள்ளைக்கு சொத்து எல்லாம். மூத்த பிள்ளை ஒருவன் மாத்திரமே விவாஹஞ் செய்யலாம். மற்ற இளைய பிள்ளைகள் நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தஞ் செய்து கொள்ளுவார்கள். ஒரு நம்பூரி பல பெண்கள் மணந்து கொள்ளுவான். அப்படி யிருந்தும் அவர்களில் பெண் தொகை மிச்சப்பட்டு பலர் மணமறியாமல், வெளியிலறியாமல், காற்றறியாமல் வாழ்ந்து குளப்புரையருகே தோட்டத்தில் புதைக்கப்படுகின்றனர்.

'மனோரமா' என்று அங்கே (மலையாளத்தில்) ஒரு பத்திரிகை இருக்கிறது. அதில் போன வருஷம் ஒரு நம்பூரி தனது ஜாதி ஸ்திரீகளின் அறியாமையைப்பற்றி ஒரு வேடிக்கையான கதை எழுதினார். அந்த நம்பூரி வீட்டில் அவருடைய பந்துக்களில் ஒரு ஸ்திரீ இந்து தேச சரித்திர விஷயமாகப் பேசுகையிலே கும்பினி (ஈஸ்டு இந்தியா கம்பெனி) என்றொரு ராணி யிருந்ததாகவும் மேற்படி கும்பினியின் தங்கை பெயர் இந்தியா என்றும் சொன்னாளாம்.

"நம்பூரிகளுக்குள்ளே இப்போதுதான் ஸபை கூடி ''இங்கிலீஷ் படித்தால் ஜாதிபிரஷ்டம் பண்ண வேண்டுமா வேண்டாமா'' என்று ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த ஆலோசனை இன்னும் முடிவு பெறவில்லை. ''ஜன்மி''கள் (நம்பூரி ஜமீன்தார்கள்) இப்போது ஏழைகளாய் வருகிறார்கள். அவர்களுடைய செல்வம் குறைகிறது. அவர்களுக்கு நோயும் மரணமும் மிகுதிப்படுகின்றன" என்றார்.

அப்போது நான் சொன்னேன்:- "உண்மையாகவே இந்த நம்பூரி உயர்ந்த குலம். காலத்தின் குறிப்பையறியாமல் தாழ்ச்சியடைகிறான் போலும்? என்றேன்.

ராகவசாஸ்திரி சொல்லுகிறார்:- "நம்பூரிகளுக்குள்ளே எழுதப் படிக்கத் தெரியாத சிலர் கவிதை செய்கிறார்கள். திருஷ்டாந்தமாக காஞ்ஞோனி இல்லம் என்ற குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. கவிதை, ராஜாக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கும்படி செய்கிறார்கள். மலையாளத்தில் கவிதைக் காற்று வீசுகிறது.

"நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் என்பது ஒரு வகை மணம். முண்டு (வேஷ்டி) கொடுப்பதே சடங்கு. நாயர்களுடனும் பிராமணருடனும் நாயகர்களில் ராஜகுடும்பத்தார் முதல் ஏழைகள்வரை எல்லாரும் இஷ்டப்படி ஸம்பந்தஞ் செய்து கொள்ளலாம். ஒரு ஸ்திரீ தன் இஷ்டப்படி ஸம்பந்தங்களை நீக்கலாம், மாற்றலாம், சட்டம் தடுக்காது. பிள்ளைக்குத் தகப்பன் பெயர் கிடையாது. தாயின் பெயரை மாத்திரந்தான் நியாயஸ்தர் விசாரணையிலே கூடக் கேட்பார்கள்" என்றார்.

"நல்லது, புதிய தீயருக்கும், நாயருக்கும், நம்பூரிகளுக்கும் ஒற்றுமையும், அன்பும், அறிவும் பகவதி சேர்த்திடுக" என்றேன்.

இந்த சமயத்தில் "பாப்பா" (பாப்பா - ஸ்ரீ பாரதியாரின் இளைய குமாரி.) வந்து "பகவதிப் பாட்டு பாடட்டுமா?" என்றுகேட்டது. "பாடு பாடு" என்று ராகவ சாஸ்திரி தலையை ஆட்டினார். பாப்பா பாடுகிறது.

ஆ ஆ ஆ !
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை 
    நேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -  இன்னும்
    மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி 
என்னைப் புதிய உயிராக்கி -எனக் 
    கேதும் கவலை யறச்செய்து - என்றும் 
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!
    ஹே! காளீ, வலிய சாமுண்டீ!
ஓங் காரத் தலைவி யென் னிராணீ!

***
வன்னியர்கள் விரதம்

    தென்னிந்தியாவில் வன்னியர்கள் பெருந் தொகையான ஜனங்கள். இவர்களுக்குள் கட்டுப்பாடு மெத்த அதிகம். இப்போது ஆங்காங்கு ஸபை கூடித் தங்கள் குலத்தவர்களின் நன்மையைக் கருதி பல நற்காரியங்கள் செய்து சீர்திருத்தி வருகின்றனர்.

தென்னாப்பரிக்காவில் வெள்ளையர்களால் பலவிதமாகய் இடர்ப் படுத்தப்படும் இந்தியர்களில் பெரும்பாலர் சென்னைவாசிகளே. சென்னைவாசிகளிலும் பலர் இந்த வன்னிய குலத்தவர்களே.

இந்தத் தென்னாப்பரிக்காவிலுள்ள இந்தியர்களின் மீட்சிக்காக இந்த வன்னிய மஹாஜனங்கள் ஒரு விரதம் கைக்கொண்டிருக்கின்றனர். அதாவது, வருஷத்தில் ஒரு நாள் எல்லாரும் இந்தத் தென்னாப்பரிக்கா இந்தியர்களின் கஷ்டங்களுக்காக உபவாச விரமிருக்கப் போவதாய்ச் செய்தி எட்டுகிறது.

இது உண்மையாய் இருக்கும் பக்ஷத்தில் இவர்களும் வடநாட்டு ஆரிய ஸமாஜிகள் போலவே பிரதி மாசமும் ஒரு நாள் உபவாஸமிருந்து அன்றைய தினம் தங்கள் வீட்டு ஆகாரச் செலவை ரொக்கமாகச் சேர்த்துத் தென்னாப்பரிக்கா இந்தியர்களுக்கு ஒரு ஸஹாய நிதியாக ஏற்படுத்தியனுப்பினால் மெத்த நலமென்று தோன்றுகிறது.

இதை மேற்படி வன்னிய மஹாஜனங்கள் அங்கீகரித்தல் நலம். உண்மையில் இவர்கள் சேரமான் பெருமாள் நாயனார், குலசேகரப் பெருமாள் இவர்களின் வம்சத்தவர்களானால் இந்த ஜீவகாருண்ய விரதத்தைக் கைக்கொண்டு பரோபகாரம் செய்வார்கள்.

-விஜயா
(2.2.1910)

*** 

No comments:

Post a Comment