பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

அன்னிபெசண்ட் அம்மையாரும் மகாகவி பாரதியும்

-முத்துவிஜயன்


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 70)

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அயர்லாந்து மாதான அன்னிபெசன்ட் அம்மையார் (1857 அக். 1 - 1933 செப். 20), இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பெரும் பங்கு ஆற்றியவர். 

இந்து சமயம் மீது பற்று மிகுந்தவர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், பேச்சாளர், பெண் விடுதலைப் போராளி, பத்திரிகையாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர்; இந்தியாவில்  ‘ஹோம்ரூல்’ இயக்கத்தைத் துக்கியவர்;. தனது போராட்டப்பணிகளுக்காக  ‘காமன் வீல்’ (1913),  ‘நியூ இந்தியா’ (1914) ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர்; 1917 கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை ஏற்றவர்.

மகாகவி பாரதிக்கு, அன்னிபெசன்ட் அம்மையார் மீது ஆரம்பத்தில் மேலான  அபிப்பிராயம் இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆங்கில மாது என்ற எண்ணமே இருந்தது. தவிர அவரது தியாஸபிகல் ஸங்கம் மீதும் பாரதிக்கு நல்லெண்னம் இருக்கவில்லை. எனவே ஆரம்பக் காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

எனினும், அன்னிபெசன்ட் அம்மையாரின் பாரதம் மீதான அபிமானத்தை பாரதி மதித்திருக்கிறார். “மிஸஸ் பெசண்ட் அம்மையை தெய்வாவதாரம் என்று கருதும் ஜனங்கள் இந்தியாவில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என்றாலும், அநாவசியமான விஷயங்களில் அந்த அம்மை சொலவதை யெல்லாம் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்களே யல்லாமல், முக்கியமான காரியங்களில் அவர் சொல்வதை நம்மவர்கள் கேட்டு நடப்பதாகத் தோன்றவில்லை” என்று விசனிக்கிறார் ‘அன்னிபெசன்ட் அம்மையாரின் வேண்டுகோள்’ என்ற செய்தியில் (சக்கரவர்த்தினி- ஏப்ரல் 1906)

விஜயா (25 பிப்ரவரி 1910) பத்திரிகையில் வெளியான  ‘இந்திய குருவும் ஆங்கில குருவும்’ கட்டுரை, சுவாமி விவேகானந்தரையும் அன்னிபெசண்ட் அம்மையாரையும் (Mrs. ஆனி பீஜாண்ட்  என்று குறிப்பிடுகிறார்)  ஒப்பிடுகிறது. இந்தியர்களுக்கு சுயகௌரவம் ஏற்பட வேண்டுமானால், இந்திய குருவே தேவை என்பதே இக்கட்டுரையின் அடிநாதம். இது தொடர்பாக ‘சூர்யோதயம்’ இதழில் (20.02.1910)  ‘மிஸஸ் ஆனிபெஸாண்டின் விண்ணப்பம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறார் பாரதி. 

(கீழே காண்க: கட்டுரை: 1)

அதேபோல, தாய்மொழிக் கல்வி, பெண் விடுதலை ஆகிய விஷயங்களில் அன்னிபெசண்ட் அம்மையாரின் கருத்துகளை சில இடங்களில் செய்தியாகத் தருகிறார் பாரதி. இதில் ‘காம்வீல்’ பத்திரிகை நடத்தும் பண்டிதை என்று அன்னிபெசன்ட் அம்மையாரை பாரதி குறிப்பிட்டிருக்கிறார். 

 (காண்க: கட்டுரைகள் 2, 3) 

1914இல் பொன்வால் நரி என்ற (The Fox with the Golden Tail) தலைப்பிலான ஆங்கில நையாண்டிக் கதையை பாரதி எழுதி வெளியிட்டார். அக்கதை, அன்னிபெசண்ட் அம்மையாரின் தியாசபிக்கல் சங்கக் கொள்கைகளை நையாண்டி செய்வதாக அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுவர். அது தொடர்பான ஆங்கில விமர்சனங்கள் இரண்டின் சிறு பகுதிகள் இங்கே...

The Fox with the Golden Tail:  It is, so to speak forced on me by the importunity of some local friends whom the spirit of the age impels to do something towards knocking down what has been aptly described as the most colossal spiritual fraud of the ages.It is admitted on all hands that the ancient Hindus has scaled the extreme heights of spiritual realisation. But I think, however that the Hindus of the last generation especially the English educated men, have been the biggest guilt of any age or country. And we, of the present generation are resolved that the swindlers shall no longer pursue their trades peacefully in our country. And this is the esoteric meaning of the fable...

-- 

Annie Besant, who came to Madras attracted by the Theosophical Society in Madras, later joined the Indian National Congress and called upon Indians to rebel against British rule. In this instance, she called J Krishnamurthy a reincarnation of Krishna. This appalled Bharati and prodded him to write the satire about Besant, titled "The Fox with the Golden Tail," wherein he mocked her as a fox from the Land of the Bees and Ants (a pun on Besant) who introduced the Cult of FoxoBeesAntism. It was a huge hit and there was demand all over India and for a second edition. Ironically, this deeply saddened Bharati, because his Tamil epic poem Paanchali Sabatham (பாஞ்சாலி சபதம்) evoked no such popularity or acclaim. “I've been minting my hearts blood in Tamil poetry and no one to read it and here are these numskulls asking for a second edition of Fox essay,” lamented Bharati.
காண்க: The Fox with the Golden Tail 
அன்னிபெசண்ட் அம்மையாரின் ‘நியூ இந்தியா’ பத்திரிகையில் பல ஆங்கில கடிதங்களை பாரதி எழுதி இருக்கிறார்.  ‘நியூ இந்தியா’ (20.10.1914) பத்திரிகைக்கு எழுதிய வாசகர் கடிதத்தில் Rights and Duties என்ற தலைப்பில், அன்னிபெசண்ட் அம்மையாரின் கருத்தை நாகரிகமாக பாரதி மறுத்திருப்பதையும் காணலாம். 

(காண்க: 4. கடிதம்) 

சுதேசமித்திரன் இதழில் (10.05.1918) பாரதி எழுதியுள்ள ‘பெண் விடுதலை’ என்ற கட்டுரையில்,  “ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களில் பலர் மிகவும் மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள்.  ‘அவரைப் போல நமது ஸ்திரீகள் இருக்கலாமோ?’ என்றால் நம்மவர் கூடாதென்று தான் சொல்லுவார்கள். காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரீகளைக் காட்டிலும் நமது ஸ்திரீகள் நம்பத் தகாதவர்கள் என்று தாத்பரியமா?” என்று கேட்கிறார்.

புதுச்சேரியிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு மீள உதவிய ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காருக்கு எழுதிய நன்றிக் கடிதத்தில் (17.12.1918), அன்னிபெசன்ட் அம்மையாருக்கும் பாரதி நன்றி தெரிவித்திருப்பதைக் காணலாம்.

(காண்க: 5. கடிதம்) 

இவ்வாறாக, பாரதியின் தேசபக்தியும், நமது நாட்டுக்கு அன்னிபெசன்ட் அம்மையாரால் ஆகும் லாபமென்ன என்ற எண்ணமும் தான் அவர் மீதான கருத்துகளில் வெளிப்படுகின்றன.

***

1.
இந்திய குருவும் ஆங்கில குருவும்

-மகாகவி பாரதி

உலகத்தில் வாலிப பருவத்தில் ஒருவன் எவ்வாறு பழகினானோ அப்படியே வயோதிக பருவம் வரையில் நடக்கிறான் என்பது உண்மை. ஐந்தில் வராதது ஐம்பதில் வராது என்பது திண்ணம். ஆகையினால்தான் ‘இளமையிற் கல்’ என்பது ஆன்றோரின் மூதுரை.

நமது பாரத நாட்டில் ஜனங்களுக்கு மதந்தான் பிரதானமானது. பாரதனுக்கு எது எப்படி போனபோதிலும் ஸரி ; அவன் மதம் போய்விடுகிறதென்றால் பிராணனையும் துரும்பாக நினைப்பான். தற்காலம் பாரத ஜனங்களின் வெகுவாய் ஆங்கிலம் கற்றவர்களில் பலர் ஹிந்துக்களின் ஸனாதன தர்மத்தை அதிக ஸமீப காலத்தில் இரண்டு வழிகளால் நன்கறிந்து கொண்டிருக்கின்றனர்.

ஒன்று ஸ்ரீமத் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் இயக்கம். மற்றொன்று பிரமஞான இயக்கம். ஸ்ரீமத் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேச ஸித்தாந்தங்களை வெளியிட்டவர் ஸ்வாமி விவேகாநந்தர். இவருடைய உபந்நியாஸங்கள் இனி உலகம் உள்ளவரையில் கீர்த்திபெற்று விளங்கக் கூடியவைகள்.

மற்றொன்று பிரமஞான இயக்கம் எனும் தியாஸபிகல் ஸங்கம். இந்த இயக்கத்திற்கு இப்போது தானாகவே தலைமை வஹித்து நடத்துவது Mrs. ஆனி பீஜாண்ட் என்னும் ஆங்கில மாது. இவளையே தெய்வமாகவும் குருவாகவும் நமது பாரத நாட்டினர்களில் ஒரு சிறு பகுதி ஆங்கிலம் படித்த கற்றறி மேதைகள் கருதுகிறார்கள். அவர்கள் கருதட்டும். இவளுக்கு இந்திய ஜனக் கூட்டமான காங்கிரெஸ், ஜனத் தலைவர்களான ஸ்ரீ திலகர், ஸ்ரீ அரவிந்தர் முதலானவர்கள் ஆகிய இதெல்லாம் ஒன்றும் பிடிக்காது. இவள் தான் குருவென்று தன்னைச் சொல்லிக்கொள்கிறாள். விவேகானந்தரை ஜனங்கள் தாங்களாகவே குருவாகக் கொண்டனர். ஆங்கிலம் படியாத அநேகரும் அவரைக் குருவாகக் கருதுகின்றனர்.

இந்த இருவரும் இந்தியர்களுக்குக் கற்றுக்கொடுத்த படிப்பின் தாரதம்யத்தை இங்கு எடுத்துக்கூறுவோம்.

Mrs. பீஜாண்ட் காசியில் ஏற்படுத்தியிருக்கும் பிராதன ஹிந்து காலேஜின் வருஷோத்ஸவம் ஸமீபத்தில் நடைபெற்றது. அதற்கு அந்தப் பள்ளிக்கூடத்துப் பழைய மாணவ சிறுவரில் ஒருவன் தென்னாட்டின் தமிழ் ஜில்லாவிலிருந்து போயிருந்தான். அச்சிறுவர் அந்தக் காலேஜில் சிறப்புப் பெற்று விளங்கினவனாம்.

இவன் காசிக்குச் செல்லுகையில் ஏதோ ஒரு இடத்தில் இறங்கி மறுபடியும் ரயில் வண்டியில் ஏறப்போனான். அப்போது அதில் ஒரு ஆங்கிலன் உட்கார்ந்திருந்தான். அது ஒரு இரண்டாம் வகுப்பு வண்டி. இந்த ஹிந்து மாணவன் அதில் ஏறக் கால் வைத்தவுடன் அந்த ஆங்கிலன் வாயிலிருந்த சுருட்டைக் கையில் எடுத்துக்கொண்டு “ஓடிப்போ இந்திய நாயே” என்று பூட்ஸ்காலைத் தூக்கினான். இத்துடன் இந்தச் சிறுவன் பாடு வெலவெலத்துப் போய்விட்டது. இவனுடைய படிப்பு ஸரியான படிப்பானால் இவன் தைரியமாய் இருந்து நடந்துகொண்டிருப்பான் .

ஆங்கில பள்ளிக்கூடத்தில் இந்தியனுக்கு எங்கேயாகிலும் ஸ்வதந்திரம், ஸ்வஜனாபிமானம், ஸ்வகவுரம் இவற்றை கொடுப்பதுண்டா? கிடையவே கிடையாது. ஒருநாளும் கிடையாது. மேலும் பீஜாண்ட் பாய் வைத்திருக்கும் காலேஜில் - இந்தியன் தலைமை வஹித்தால் நான் அதைப் பிரிட்டிஷ் பகையானதென்று கருதுவேனென்று அந்தக் காலேஜுக்குப் பணம் கொடுக்கும் ஹிந்துக்களை மிரட்டிய பீஜாண்டின் காலேஜில் - ஒருநாளும் இந்தியர்களுடைய உண்மையான ஸ்வதந்திர மார்க்கத்தைப் படிப்பித்து கொடுக்க மாட்டார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்த இந்த இந்திய மாணவன் தனது படிப்பின் முறை தவறாமல் அந்த ஆங்கிலேயனின் மிரட்டுக்கு பயந்து வேறொரு வண்டியில் ஏறிக் கொண்டான்.

காசிக்கு போய்ச்சேர்ந்த பிறகு இவன் தனது துக்கத்தையெல்லாம் அந்த காலேஜ் தலைவர் மிஸ்டர் அரண்டலிடம் சொல்லி ஒரு குரல் அழுது தனது துக்கத்தை ஆற்றிக் கொண்டான். Mrs. பீஜாண்டும் தனது உபன்னியாசத்தில் இதைப் பற்றி பேசி தான் இந்தியர்களையும் ஐரோப்பியர்களையும் இப்போதிருக்கும் ஸ்நேக பாவத்திலேயே நடத்திவர போதித்துச் சிறுவர்களின் மனதை ஒரு வழியாய் நடத்தி வருவதை இந்த அவசரக்காரனான ஆங்கிலன் கொடுத்துவிட்டதாய் சொல்லி அவனைக் கண்டித்து அந்தச் சிறுவனைத் தட்டிக்கொடுத்துப் பேசினாள். எல்லாம் முடிந்துவிட்டது. வசவு கேட்ட சிறுவனுக்கு இதெல்லாம் என்ன ஆறுதல்? (இப்படிப்பட்ட வீரத்தனத்தில் இந்தியர்களைப் பழக்க இந்த தான்தோன்றி குருவான பீஜாண்ட் கல்கத்தாவில் அராஜகத்தை யடக்கவும் ஆங்கில இந்திய தேச பான்மையை விருத்தியாக்கும் பொருட்டும் ‘இந்தியன் கடெட் கோர்’ எனும் இந்திய வாலிப வீரர்களின் ஸங்கம் ஒன்று ஏற்படுத்தியிருக்கிறாள். இந்திய ஜாதியர்கள் பேடிகளென்பதற்கு இப்படிப்பட்ட அவமானகரமான ஸங்கங்களைவிட வேறு என்ன வேண்டும்?)

ஸ்வாமி விவேகாநந்தர் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குச் செல்ல ரயில் ஸ்டேஷனுக்கு போனார். அவரை வழிகொண்டு விட்டுவர அவருடைய ஆப்த நண்பர்களான சிலர் அவருடன் ரயில் ஸ்டேஷனுக்கு சென்றனர். ஸ்வாமிஜியினுடைய மூட்டைகள் ஒரு முதல் வகுப்பு வண்டியில் வைக்கப்பட்டிருந்தன. சென்னைவாஸிகளில் ஸ்வாமிக்கு அத்யந்தபிரிய ஸ்னேகிதரான ஸ்ரீயுத ‘ம - ச- அ’ என்பவரை அந்த ஸாமான்களுக்குக் காவலாக வைத்துவிட்டு மேடையில் மற்ற ஸினேகிதர்களுடன் உலாவிக்கொண்டிருந்தார்.

அப்போது ஆங்கில ராணுவ அதிகாரி ஒருவன் வெகு தடபுடலாய் வந்து இந்த முதல் வகுப்பு வண்டியைத் திறந்து “வை இதில் என் பெட்டி முதலியவற்றை” என்று வெகு முடுக்காய்த் தனது சேவகனுக்குக் கட்டளையிட்டான். ஸ்வாமிஜீயின் பரிஜனங்களுக்கும் மூட்டைகளுக்குமே அந்த வண்டி ஸரியாய் இருந்து விட்டது. ஸ்ரீ ‘அ _ ’, “இங்கு இடம் கிடையாது. வேறு வண்டியில் இடம் பார்த்துக் கொள்ளும்” என்று ஸாதாரணமாய் ஆங்கிலத்தில் சொன்னார்.

உடனே அந்த ராணுவ ஆங்கில னுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. அவன் ஸ்ரீ ‘அ __’வைக் கீழே இறங்கும்படி இறுமாப்புடன் கட்டளையிட்டான். அதற்கு ஸ்ரீ அ _ “அது நடவாத காரியம்” என்றனர். உடனே ஆங்கிலன் வண்டிக்குள் பாய்ந்து அவரைப் பிடரியைப் பிடித்துத் தள்ள பார்த்தான். இவர் அவனுடைய கையை நன்றாய் அடித்து விட்டனர்.

உடனே துரை தனது பிரம்பை எடுக்க வெளியே சென்றான். ஸ்ரீ அ _ தமது ஸினேகிதர்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். உடனே ஸ்வாமியும் மற்றவர்களும் ஓடோடியும் வந்தனர். இவர்களைக் கண்ட ராணுவ உத்தியோகஸ்தன் மூட்டை முடிச்சுகளுடன் ஒருவரோடு சொல்லாமல் வேறு வண்டி பார்த்து ஏறிக்கொண்டான்.

ஸ்வாமிஜீ வந்து பார்த்து “நீ செய்தது சரிதான். நீயோ அசக்தன். அவனோ பலிஷ்டன். அசக்தனான நீ இவ்வளவு துணிவாய் அவனை எதிர்த்தது ஆச்சரியமே. ஒருவனிடத்தில் உதைபட்டுக்கொண்டு வீட்டுக்குவரும் பிள்ளைகளைத் தாய் சீராட்டுவதில்லை; ஸஹோதரிகள் இழித்துப் பழித்து கூறுவார்கள்; பெண்சாதி முகங்கொடுத்து பேச மாட்டாள் ; குழந்தைகள் கைகொட்டி ஏளனம் செய்வார்கள். இது புராதன காலத்தில் பாரத நாட்டு வழக்கம். இப்போது அமெரிக்கா ஐரோப்பா முதலான ஸ்வதந்திர தேசங்களில் இது வழங்கிவருகிறது. ஆகையால் நீ செய்தது ஸரிதான். வண்டிச்சத்தம் நீயெப்படி கொடுத்திருக்கிறாயோ அப்படியே அவனும் கொடுத்திருக்கிறான் என்பதை இவனுக்கு உணர்த்தி வைத்தாய்; நல்லது செய்தாய் அ _” என்றார்.

இந்த ஸ்ரீ ‘அ_ ’ வயது சென்றவர். இவர் சென்னைக் கல்லூரிகள் ஒன்றில் உபாத்தியாயராய் இருந்தவர். நாலைந்து பிள்ளைகள் பெற்றவர். ஸ்வயம் பலவீனர். இவ்வளவு தைரியமாய் இருந்தார். இவர் ஸ்வாமி விவேகாந்தரின் அருள் பெற்றவர். ஆனால் இந்த மாணவர் Mrs. பீஜாண்டின் உபதேசம் பெற்றவர். வாலிபர் தேடிவரும் யானையைத் தடுத்தடிக்கும் வயது. ஓடும் பாம்பை மிதிக்கும் வயது. பெருகும் ஆற்றைக் தாண்டும் வயது. இவரே இத்தனை பயங்காளியாய் இருந்தால் இவர் வயிற்றில் பிறப்பவைகள் எப்படியிருக்குமென்பதை நேயர்களே ஊஹித்தறியவும். இதுதான் இந்திய குருவுக்கும் ஆங்கில குருவுக்கும் உள்ள வித்தியாசம்.

ஸ்வதந்திரம், ஸ்வஜனாபிமானம், ஸ்வஜாதி கவுரவம், ஸ்வதர்ம ஸ்தாபனம் ஆகிய இவைகளை இனாமாக பாரத ஆசிரியர்கள் பாரதர்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால் இந்தியர்களின் ஆங்கில குருக்களோ இந்தியர்களுக்கு, கோழைத்தனம், ஆங்கில தாஸத்துவம், ஜன்மாந்திர கணக்கான அடிமைத்தனம், ஸ்வஜாதியைப் பழித்தல் இவற்றைக் கூலி வாங்கிக்கொண்டு கற்பித்து வருகிறார்கள். ஏ பாரதா! இவ்விரண்டில் நீ எதை அங்கீகரிக்க வேண்டுமோ அதை அறிந்து கொள்.

- விஜயா (25 பிப்ரவரி 1910)

 ***
2
தமிழ் நாட்டில் கல்வி



தமிழ் நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால், சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோரெல்லோரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை அனுஸரனைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை. ஐரோப்பிய ஸ்திரீயாகிய மிஸ்ஸஸ் பெஸண்ட் கூடச் சில தினங்களின் முன்பு பெங்களூரில் செய்த பிரசங்க மொன்றிலே தமிழ் பாஷையை மிகவும் வியந்து கூறி, நாமெல்லோரும் தமிழ்ப் பயிற்சியில் தக்கபடி சிரத்தை செலுத்தாமல் இருப்பது பற்றி வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி நம்மைப் பார்த்துப் பிறர் இரக்கப் படும்படியான அவமான நிலை விரைவில் நீங்க வேண்டுமென்று தேவர்களை வணங்குகிறோம்.

 ***
3.
தென் ஆப்பரிக்காவில் பெண்கள் விடுதலை


தென் ஆப்பிரிக்காவிலே ‘பியேட்டர்மாரிட்ஸ் புர்க்’' என்ற பட்டணத்தில் 1910-வருடத்தில்  ‘பெண்கள் விடுதலைச் சங்கம்’ என்றொரு சபை ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதிலே பல வகுப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுகூடி  ‘பார்லிமெண்டு சபையிலே பிரதிநிதிகள் நியமிப்பதற்காக சீட்டுப் (ஓட்) போடும் சுதந்திரம் பெண்களுக்குக் கொடுத்தால் ஒழியவேறு விதமான சீர்திருத்தங்கள் பெண்களுடைய நிலைமையிலே உண்டாக்குவது சாத்தியமில்லை என்று முடிவு செய்துகொண்டு அந்நோக்கத்தை நிறைவேற்றும் படிபிரயத்தனம் செய்து வருகின்றார்கள். இந்தச் சங்கம் ஆரம்பித்த காலத்தில்  ‘நட்டா’ லிலே பெண்கள் நகர சபை(Municipality)க்குச் சீட்டுப் போடும் உரிமை கூட இல்லாதிருந்தனர். இச் சங்கத்தினரின் முயற்சியால் ஸ்திரீகளுக்குள்ளே ஜாதி, குலம், செல்வம், ஸ்தானம், பட்டம் முதலியவற்றால் ஏற்பட்டிருந்த அனாவசியமான தாரதம்யங்கள் குறைந்து வருகின்றன. 

கல்வி விஷயத்திலே (அதாவது பெண்கல்வி மாத்திரம் அன்று), பொதுவாக தேசத்து ஜனங்களின் படிப்பு விஷயத்தில் இவர்கள் மிகவும் சிரத்தை செலுத்திவருகிறார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இயற்கை விதிகள் நன்றாகக் கற்றுக் கொடுத்து மேற்படிவிதிகளைத்  தவறினால் இயற்கையே தண்டனை செய்யும் என்பதை அவர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி செய்து, பொதுஜன அறிவை இயற்கை நெறியில் ஓங்கும்படி செய்ய வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். 

நிலை தவறிப்போன ஸ்திரீகளைக் கொடூரமான அவமதிப்பாலும் அசிரத்தையாலும் மேன்மேலும் கெட்டழிந்து துன்பப் படாதபடி நல்வழி காட்டி நேர்மைப்படுத்தலே தகுதியென்று தீர்மானித்து அதற்குரிய முயற்சிசெய்து வருகிறார்கள். ‘ஜன சபை ராசி’ (ஜன சபை பார்லிமெண்டு) ரோசி கமிட்டியென்று தன் ராசி ஒன்று நியமித்து அந்த ராசி (கமிட்டி) யைச் சேர்ந்தவர்கள் அப்போதப்போது ஜன சபைக்கு முன்பு வரும் மசோதாக்களைப் படித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏதேனும் ஒரு மசோதா சட்டமாவதனாலே ஜனங்களுக்குப் பிரதிகூலம் ஏற்படும் என்று தோன்றினால், உடனே ஜனசபைக் காரரைத் தனித்தனியே போய்ப் பார்த்து ஆட்சேபங்கள் செய்தல், தந்திகளின் மூலம் ஆட்சேபித்தல் முதலிய காரியங்கள் செய்கிறார்கள். 

ஸ்திரீகளுக்குத் தொழிற்சாலைகளிலே கொடுக்கும் சம்பளம் இன்ன அளவுக்குக் கீழே போகக்கூடாதென்று நிர்ணயஞ் செய்தஜன சபையார் ஒரு  ‘சம்பளக் கீழெல்லை மசோதா’ கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, அதற்காகப் பல  ‘மெம்பர்’களைப் (நடுவிலே ஒரு ரசமான வார்த்தை. ‘மெம்பர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்பட வில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ‘அவயவி’ சரியான வார்த்தை யில்லை.  ‘அங்கத்தான்’ கட்டிவராது.  ‘சபிகன்’ சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டு பிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்;  ‘உறுப்பாளி?’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக  ‘மெம்பர்’ என்று எழுதி விட்டேன். இன்னும் ஆர, அமரயோசித்துச் சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்) போய்ச் சந்தித்து வாதாடி வருகிறார்கள்.

ஸ்திரீகளுக்கு நகர சபையிலே சீட்டுப்போடும் சுதந்திரம் மேற்படி சங்கத்தாரின் முயற்சியாலே தான் கைக்கூடிற்று. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் யாரேனும் அடித்து ஹிம்சை செய்ததாக நியாயஸ்தலங்களிலே வழக்குவரும்போது, மேற்படி சங்கத்தின் காரியஸ்தர்கள் போயிருந்து கவனித்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா முழுமைக்குமாக ஒரு பெரிய விடுதலைக்கோட்டம் (கோட்டம் என்பது பெருஞ் சபை) ஏற்பட்டிருக்கிறது. அதனுடன் இந்தச் சங்கமும் சேர்ந்திருக்கிறது.  ‘பிருத்தானியஸ்திரீ ஸாம்ராஜ்யம்’ என்ற பெரிய கோட்டத்துடன் இவையெல்லாம் ஐக்கியப்பட்டிருக்கின்றன. 

அந்நிய தேசங்களில் உள்ள விடுதலைக் கூட்டத்தாருடனே இவர்கள் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடத்துகிறார்கள். இவ்விஷயமெல்லாம் சென்னையில் மிஸஸ் அன்னி பெஸண்ட் என்ற பண்டிதை நடத்தும்  ‘காமன்வீல்’ (பொது நலம்) பத்திரிகையிலே சொல்லப்படுகிறது. மிஸஸ் அன்னி பெஸண்ட் பெண்கள் விடுதலை விஷயத்திலே தீவிரமான பக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். 

இப்படியே எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்றுமனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். தமிழ் நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும்செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்? என்ன காரணம்?

***
4
Rights and Duties

To the Editor of New India

In the course of a recent lecture at Madras, Mrs. Annie Besant is reported to have emphasised the upholding of one’s duties in preference to one’s rights. And the Chairman of the meeting, Justice Sadasiva Iyer, naively remarked (in effect): “ After listening to Mrs. Besant’s speech, I have come to see that man has no rights at all. He has only duties. God alone has rights, etc.”

Now, I have a right to submit that such teachings contain but a partial truth and may do injury to the cause of our national progress which, I am sure, is as dear to the hearts of Mrs. Besant and Justice Iyer to anyone else’s.

My duties are based on my rights. That is to say, may duties to others are defined by their duties to myself. It is my duty to respect my father, because I am his son and he has permitted me the right to the life and the culture that he has bequeathed to me.

In my view, they are of equal sacredness: my rights and my duties. My duties I must fulfil. My rights I must vindicate. Life is possible only on such a basis.

Meanwhile, it is the right and duty of the wise ones to purify the strong by teaching them their duties and to strengthen the weak by teaching them their rights.

Pondicherry
October 17
C. Subramania Bharati

NEW INDIA (20.10.1914)

***
5.
சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காருக்கு நன்றிக் கடிதம், 1918

ஓம் சக்தி

கடையம்,
டிசம்பர் 17

ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்காருக்கு நமஸ்காரம். ஞாயிற்றுக் கிழமை (15ந் தேதி) இரவு நான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன். என் விடுதலையின் பொருட்டாகத் தாங்களும் மற்ற நண்பர்களும் மிகவும் சிரத்தையுடன் பாடுபட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கிறேன்.

ஸ்ரீமதி அனி பெஸண்ட், ஸ்ரீ மணி அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர் முதலாக என் விடுதலை விஷயத்தில் சிரத்தையெடுத்துக் கொண்ட தங்களுடைய மித்திரர்களுக்கெல்லாம் எனது நன்றி தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி

***

No comments:

Post a Comment