பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

உடம்பு

 -மகாகவி பாரதி

    (மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 79)

உடம்பை வலிமை செய்வதற்கு மன வலிமை வேண்டும். 

கஸரத் முதலிய பழக்கங்களில் உடம்பு பலமேறுவதற்கு மனவுறுதியும் ஆசையுமே முக்கிய காரணங்களாக வேலை செய்கின்றன.  

ராமமூர்த்தி முதலிய நமது நாட்டு பலவான்களும் ஸாண்டோ முதலிய அன்னிய நாட்டு பலவான்களும் இவ்விஷயத்தை மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள். கையிலே தண்டு முதலியவற்றை எடுத்துச் சுழற்றும்போது, வீமசேனனை நினைத்துக் கொள்ள வேண்டுமென்று எங்களூரிலே ஒரு பஹல்வான் சொல்லுவார். பிராணாயாமத்தை மாத்திரமேயன்றி தியானம்முதலிய யோகமுறைகளையும் ராமமூர்த்தி பெருந்துணை யென்று சொல்லுகிறார்.  

ஸாண்டோ தமது டம்பெல்ஸ்என்று சொல்லப்படும் இரும்புக்குண்டுகளை வைத்துப் பழகுவோர் வெறுமே கைகளில் குண்டுகளைத் தூக்கி அசைத்தால் பிரயோஜனமில்லை என்பதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிறார்.  

குண்டைப் பிடித்து உறுதியுடன் முன்னே நீட்டிய கையை மடக்கும்போது, உமது மனோபலம் முழுதையும் கைத்தசைகளிலே செலுத்தி மெதுவாக மடக்க வேண்டும். கவனத்தை மற்றொரு பொருளிலே செலுத்தினால் தசைகளுக்கு சரியான வலிமை யேறாதென்று சொல்லுகிறார்.

உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும். ஆகையால், உடம்பிலுள்ள நோய்களைத் தீர்த்து வலிமை யேற்றுவதற்கு, மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத்தகும். 

உணவு 

இந்திரப்ரஸ்த நகரத்தின் கடைசி க்ஷத்திரிய அரசனான ப்ருதிவிராஜனுடைய ஸேனாதிபதிகளிலே சாமிண்டராய் என்று ஒருவன் இருந்தான். வடபக்கத்து முஹம்மதிய அரசர்க்கெல்லாம் அவன் பெயரைக் கேட்டமாத்திரத்தில் நடுக்கமுண்டாகும்படி அவன் அத்தனை வீரமும் யுத்தத் திறமையும் கொண்டு விளங்கினான். அவனுடைய சரீர வலிமையை அக்காலத்தில் பாரததேச முழுதிலும் நிகரற்றதாகக் கொண்டாடினார்கள். அவனுக்குச் சாமுண்டி உபாஸனையுண்டு. விரதங்கள், கண்விழிப்புக்கள், தியானங்கள்வயாயாமங்கள் இவற்றிலேயே தனது காலமுழுதும் கழித்தான். அவன் உணவு கொள்ளும்போது, வீமனைப்போல் அளவில்லாத பசியுடன் உண்பான் என்று சந்தகவி பருதிவிராஜ் ராஸோஎன்னும் தமது காவியத்திலே எழுதியிருக்கிறார். வீமனுடைய பெயர்களில் வ்ருகோதரன்என்பதொன்று. அதாவது, ஓநாய் வயிறுடையவன் என்றர்த்தம். இது அவனுக்கிருந்த நேர்த்தியான பசியைக் கருதிச் சொல்லியது. இக்காலத்திலே குறைவாக உண்ணுதல் நாகரீகமென்று நம்மவர்களிலே சிலர் நினைக்கிறார்கள்.  

பெருந்தீனிக்காரன் என்றால் அவமதிப்புண்டாகிறது. சிரார்த்தத்திலே சோறு தின்று முடிந்தவுடன் எழுந்திருக்க முடியாமல் .கஷ்டப்படும் சில பிராமணார்த்தக்காரர்களைப் போல், சரியான பலமில்லாமல் உடம்பைக் கொழகொழவென்று வைத்துக்கொண்டு, நாக்கு ருசியை மாத்திரம் கருதிப் பெருந்தீனி தின்பவனைக் கண்டால் அவமதிப்புண்டாவது இயற்கையேயாம். சிங்கம் புலிகளைப் போல உடல் வலிமையும் அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கண்டால் யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது; சாதாரணமாகப் பயம் உண்டாகும். நானாவிதமான விலையுயர்ந்த உணவுப்பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. காரஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப்படுத்தும் வஸ்துக்கள் தேகபலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவதுபோல், பதிர்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.  

பசி 

சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல பசியாயிருக்கும்போது கேப்பைக்களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும். விரைவிலே பலம் சேர்ந்துவிடும். பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாதபடி தடுக்கும் பெற்றோர் தாமறியாமலே மக்களுக்குத் தீங்கு செய்கிறார்கள்.  

வயது 

மேலும் சரீர வுழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலே யிருக்கும் பிள்ளைகளுக்கு மாத்திரந்தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. மனிதனுக்கு இயற்கை வயது நூறு ஆகையால் ஐம்பது வயதாகும்வரை ஒருவன் இளமை தீர்ந்தவனாகமாட்டான். பிஞ்சிலேயே உடம்பை நாசப்படுத்தினால் சீர்கெட்டுக் குலைந்துபோய் இருபது வயதாகும்முன் கிழத்தன்மை வந்துவிடும். எனிலும், இயற்கை விதிப்படி ஐம்பது வயதுவரை இளமை நிற்குமாகையால், அதற்குள்ளே செயற்கைக் கிழத்தன்மைபெற்றோர் தமதுடம்பைத் திருத்தி நல்லநிலைமைக்குக் கொண்டுவர முயற்சி செய்யலாம். ஐரோப்பாவில் ஐம்பது வயதுக்காரர் ஆடியோடி விளையாடுவதும், பந்தடிப்பதும், கூட்டங் கூடிக் குதிப்பதும் சாதாரணமாகப் பார்க்கலாம். நமது நாட்டுக் கல்வியாளர் சிலர் முப்பது வயதிற்கு முன்னமே தம்மைக் கிழவர்களாக பாவனை செய்து கொண்டு, ஜீவகளையில்லாமல் ஸஞ்சரிக்கிறார்கள்.  

பெரியமனுஷத் தன்மை 

இன்னு மொரு தொல்லை. பெரியமனுஷத் தன்மைக்கும் சரீரவுழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில் சிலரின் மனதில் எந்தப் பிசாசோ எழுதி வைத்துவிட்டது. ஆகையால், சொற்பப் பணமுடையவன்கூட, தனக்கு ஜலம் கொண்டுகொடுக்க ஓராளும், குளிப்பாட்ட ஓராளும், தலை துவட்ட ஒராளும் வைத்துக்கொண்டு, பாயோடே கிடக்கும் கிழவியைப்போல் நடந்து கொள்ளுகிறான். மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வந்தால் போதும். வீட்டிலே அவன் பெரிய நவாப்; கைகாலை அசைக்கமாட்டான். மேல் மாடத்திலே போய் ஒரு புஸ்தகம் அல்லது மேல் வேஷ்டி எடுத்துக்கொண்டு வரவேண்டுமானால் அவன் போக மாட்டான்; பந்துக்களை ஏவுவான். வயதிலே சிறியவராக யிருந்தால் அவர்களை விலையடிமை போலே நடத்துவான். அற்பக்காரியங்களுக்கெல்லாம் ஒருவரை யொருவர் வேலையேவி வதைக்கும் தொல்லை நமக்குள்ளே மிகவும் அதிகம். 

முடிவுரை 

எவனும் உடம்பை உழைப்பினாலும், அசைவினாலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை உத்ஸாக நிலையில் வைத்துக்கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்துகொண்டால் மனது உத்ஸாகத்துடனிருக்கும். மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக் கொன்றுவிடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான். 

இயன்றவரை இந்திரிய இன்பங்கள் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவை பரமாத்மாவினால் நியமிக்கப்பட்டன. ராமன், கிருஷ்ணன் முதலிய அவதார புருஷர்கள் உலக இன்பங்களை நீக்கித் துறவு கொள்ளவில்லை. ஆனால், இந்திரிய சுகங்களுக்கு வசப்பட்டுப் போகலாகாது. அதனால் தேகபலம் அழிந்து மேற்படி இந்திரிய சுகங்களை நீடித்து அனுபவிக்க வழியில்லாமற் போய்விடும். அறிவுதான் ராஜா; மனமும், இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கடங்கி வாழவேண்டும்; இல்லாவிட்டால் அவற்றுக்கே கெடுதியுண்டாகும். 

எனவே, மனவுறுதி, ஸந்தோஷம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நன்மை செய்யுமென்ற நம்பிக்கை, சரீரவுழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப்படுத்த வேண்டும். 

உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூற்றாண்டு வாழலாம்.

-சுதேசமித்திரன் (22 ஜூன் 1916 /   நள ஆனி 9)



No comments:

Post a Comment