பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

நம்முடன் வாழும் தலித் சாதனையாளர்கள்

-திருநின்றவூர் இரவிக்குமார்

 


1

ராம்நாத் கோவிந்த்

 ‘ஒரு வேளை சோற்றுக்காக இன்றும் மழையில் நனைந்தபடி, வெய்யிலில் காய்ந்தபடி வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் ராம்நாத் கோவிந்துகள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களின் பிரதிநிதியாக செயல்படுவேன்’ என்று ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது திரு. ராம்நாத் கோவிந்த் சொன்னார். பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டாவது இந்திய ஜனாதிபதி அவர்.

 ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று கருதப்பட்ட மிகவும் பின்தங்கிய தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்துள்ளார் - என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியது.

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்நாத் கோவிந்த். வறுமையான சூழ்நிலையில் சிரமப்பட்டு படித்து வக்கீலானார். தில்லி, உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி உள்ளார். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது அவருடைய செயலாளராகப் பணியாற்றியவர். பிறகு பாஜக சார்பில் ராஜ்ய சபா உறுப்பினரானார். பின்னர் பிகார் மாநில ஆளுநர் ஆனார். அதன் பின்பு 2017இல் பாஜக சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதியானார்.
 
2001இல் அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தபோது தனது சொந்தக் கிராமமான பருக்-கிற்கு வந்தபோது பிராமண, தாக்குர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை வரவேற்று மகுடம் சூட்ட முனைந்தனர். மொத்தம் பன்னிரண்டு, அதில் ஒன்று தங்க கிரீடம், மற்றவை வெள்ளி மகுடங்கள். ஆனால் கோவிந்த் அவற்றை ஏற்க பணிவுடன் மறுத்துவிட்டார். அவற்றையும் அப்போது கொடுக்கப்பட்ட இதர பணமுடிப்புகளையும் கிராமத்தில் உள்ள ஏழைப் பெண்களின் திருமணத்துக்குப் பயன்படுத்துமாறு கொடுத்துவிட்டார். அவரைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிசயம் அல்ல. அவர் எப்பொழுதும் எளிமையானவர். சுயநலமற்றவர். மற்றவர்களை மதிக்கும் பண்பு உள்ளவர் - என்கிறார் அவரது இளம் பிராய நண்பரான ஜஸ்வந்த் சிங்.

2021 இல் பத்ம விருதுகளை ஜனாதிபதியான கோவிந்த் வழங்கினார். ஜனாதிபதி ஒரு படி மேலே நின்று விருதை கொடுப்பது மரபு. ஆனால் கே.ஒய்.வெங்கடேஷ் என்ற குள்ளமான மனிதர் - பாரா ஒலிம்பிக் உலக சாதனை படைத்தவர் - பத்ம விருதைப் பெற வந்தபோது கோவிந்த் மேல் படியிலிருந்து இறங்கி இருவரும் சம தளத்தில் நிறுத்தி விருது வழங்கினார். மரபை மீறி மனிதர்களை மதிக்கும் பண்பை வெளிப்படுத்திய பண்பாளர்.

***

2.

கல்பனா சரோஜ்

இந்தியாவில் இன்று பட்டியலினத்தைச் சேர்ந்த மிகவும் பணக்காரப் பெண்மணி என்று இவரைச் சொல்லலாம்.

12 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு மும்பை சேரி ஒன்றில் வாழத் தொடங்கினார். மாமியார் வீட்டுக் கொடுமை அதிகமாக இருந்தது. இவரது தங்கை மருத்துவச் செலவுக்கு ரூ. 2,000 இல்லாதபடியால் மரணமடைய நேர்ந்தது. தந்தையால் மாமியார் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். படிக்கச் சென்ற இடத்திலும் ஜாதிப் பாகுபாட்டால் கஷ்டப்பட்டார். மீட்புக்கு ஒரே வழி உழைப்புத்தான் என்பது அவரது தாரக மந்திரமானது.

இன்று நலிவடைந்து மூடப்பட்ட கமானி டியூப்ஸ் கம்பெனியை மீட்டெடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். இவர்,  ‘கடும் உழைப்பு என்பது மிகைச்சொல் அல்ல. தவறாத வழி அது. நீங்கள் விரும்பியதை - அது எதுவாக இருந்தாலும் - நீங்கள் முழு மனதுடன், ஒற்றை குறிக்கோளுடன் பணிபுரிந்தால் அதை நீங்கள் அடையலாம்’ என்று கூறுகிறார் இந்த வெற்றிப் பெண்மணி.
 
***

3.

பேராசிரியர் சஞ்சய் பாஸ்வான்

அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அறிவுஜீவியாக அறியப்படுபவர். அடிப்படையில் ஆன்மிகவாதி. பல நூல்களை எழுதியுள்ளார். 

மறந்துபோன பட்டியலினத் தலைவரான போலா பாஸ்வான் சாஸ்திரி பற்றி நூல் எழுதி, அவரை மக்கள் நினைவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. (போலா பாஸ்வான் சாஸ்திரி பிகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர்) பல கட்சிகள் மாறியுள்ள இவர் இப்பொழுது பாஜகவில் பிகார் மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
***

4.

ராதிகா கில்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை.  ‘வால்மீகி’ என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். காஷ்மீரத்துவம் என்று உயர்வாகப் பேசியவர்களின் முகத்திரை கிழியும்படி அம்மாநிலத்தில் பட்டியலினத்தவருக்கு குடியுரிமை கூட இல்லாமல் இருந்த நிலையை வெளிப்படுத்தியவர்.

இவரது சமூகத்தினரை தூய்மைப் பணியாளர்கள் - மலம் அள்ளும் பணி செய்பவர்கள் என்று காஷ்மீர் அரசு வகைப்படுத்தியது. ஆனால் அதற்கான ஜாதிச் சான்றிதழைத் தரவில்லை. அதுமட்டுமன்றி அவர்களுக்கு நிரந்தர (வசிப்பிடம் உரிமையும்) குடியுரிமை வழங்க மறுத்தது. காரணம் அரசியல் சாசன பிரிவு 370 ம் அதனுள்ளீடாக இருந்த 35 A. அதை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்தார். அப்படித்தான் இந்த அநியாயம் வெளிப்பட்டது.

இன்று 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கும் 35 A சட்டப்பிரிவு அகற்றப்பட்டதற்கும் இவர் தொடுத்த வழக்கும் ஒரு காரணம்.

***

5.

டினா டாபி

2015இல் ஐ.ஏ.எஸ். தேர்வில் முதல் முயற்சியிலேயே, முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை. ராஜஸ்தான் மாநிலப் பிரிவை இவர் குடிமைப்பணியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக சொன்னது: இங்கு பெண்களின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. இதை மாற்ற வேண்டும் என்பதே என் தேர்வுக்குக் காரணம்.

இவர் கல்லூரி மாணவர் சங்கத்தின் பேசியபோதும்,  ‘நீங்கள் இப்போது உள்ள அமைப்பை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அமைப்புக்குள் வர வேண்டும். பிறகு மாற்ற வேண்டும். இது ஆண்களின் உலகம். எனவே நாம் போராடியாக வேண்டும். அதற்கு கொஞ்சம் தடித்த தோல் வேண்டும். விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அதேசமயத்தில், போராடி உங்கள் இடத்தை தக்க வைக்க வேண்டும்’  என்று பேசியது அவரது ஐ.ஏ.எஸ். கனவு மற்றும் நோக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அவரது தங்கை ரியா டாபியும் கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் 15 இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

***

6.

மிலிந்த் காம்பிளி

இந்திய தொழிலதிபர்கள் சங்கம் (ICCI - Indian Chamber of Commerce and Industry) போல தலித் இந்திய தொழிலதிபர்கள் சங்கம் ( Dalit Indian Chamber of Commerce and Industry ) உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பட்டியலினத்தவர்.

இன்று மோடி அரசின் ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற பல தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்களை முனைப்புடன் முன்னெடுப்பவர். முதலீடுகள் மூலம் ஜாதியை முறியடிக்க வேண்டும் ( defeat caste with capital) என்று கூறும் இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என்றால் அது மிகையன்று.

***

7.

நரேந்திர ஜாதவ்

டாக்டர் அம்பேத்கரின் கருத்து இதுதான் என்று பலரும் பேசுகிறார்கள். ஆனால் அம்பேத்கரின் கருத்தியலில் நிபுணர் என்று அறியப்படுபவர் நரேந்திர ஜாதவ்.

இவர் பொருளாதார மேதை, கல்வியாளர், எழுத்தாளர், பன்மொழி வல்லுநர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்; தற்போது பாஜக ராஜ்யசபா உறுப்பினர்; சுமார் 70 தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றவர்; சர்வதேச நிதி அமைப்பில் (ஐஎம்எஃப்) பணியாற்றியவர்; சுமார் 40 நூல்களை எழுதியுள்ளார்; பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் என்று இவரைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் மஹர் என்ற பட்டியல் இனத்தில் பிறந்தவர். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பிரெஞ்சு அரசால் மிக உயரிய விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டவர்.

‘முதலில் எனக்கு இந்தியாதான். முதலும் கடைசியுமாக நான் ஒரு இந்தியன். இந்தியாவில் உள்ள எல்லா சமூகத்தினரையும் சேர்த்த, ஒருங்கிணைந்த வளர்ச்சி, இந்தியாவின் எல்லாப் பகுதிகளும் சேர்ந்த ஒருங்கிணைந்த மேம்பாடு, வளர்ச்சி என்பதே என்னுடைய வாழ்வின் நோக்கம்’ என்கிறார் இவர்.

***

8.

அர்ஜூன் ராம் மெக்வால்

இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். வழக்கறிஞர். ஐ.ஏ.எஸ். அதிகாரி. இன்று மத்திய அமைச்சர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு நெசவாளர். தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழிலில் ஈடுபட்ட இவர் பின்னர்  படித்து, உயர்ந்தவர். பதவி ஏற்பு விழாவுக்கு ராஷ்ட்ரபதி பவனுக்கு சைக்கிளில் வந்த எளிய மனிதர். தொலைபேசித் துறையில் கீழ்நிலை பணியாளராக துவங்கி இன்று உயர்ந்த நிலையை எட்டியுள்ளார்.

***

No comments:

Post a Comment