உடல் விறைத்திருக்க, கால்கள் நடுநடுங்க “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு” என்று நகைச்சுவை நடிகர் சொல்வதைக் கேட்டு நாம் பலமுறை சிரித்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் அந்தத் துணுக்கு இடம் பெறும் போதும் சிரித்திருக்கிறோம். ஆனால் நம் கல்வி முறை அப்படித்தான் இருக்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
நமது அரசாங்கங்கள் நம் நாட்டின் கல்விக் கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்து எத்தனை காலம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தல்ல, இருபது அல்ல, 34 நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாகக் கல்விக் கொள்கை என்ற ஒன்று அறிவிக்கப்பட்டது 1986ஆம் ஆண்டு. இந்த 34 ஆண்டுகளில் உலகம், வாழ்க்கை முறை, தேவைகள் எப்படி மாறி வந்திருக்கிறது, அதற்கேற்ப இளைஞர்களைத் தயார் செய்வதைப் பற்றி அரசாங்கங்கள் யோசிக்கவே இல்லை என்பதற்கு இது ஒரு சாட்சி.
இப்போது வெளியாகியிருக்கும் புதிய கல்விக் கொள்கை, பலவீனமான அடித்தளத்தின் மேல் அடுக்கிக் கொண்டே போகாமல் அடித்தளத்தை வலுப்படுத்தி அதன் மேல் காலத்திற்கேற்ற திறன்களை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
# அடித்தளம் வலுப்பெறும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
இப்போதிருப்பது ஆறு வயதிலிருந்து தொடங்கும் 10+2 முறை. ஆனால் நடைமுறையில் மூன்று வயது முடிந்ததுமே குழந்தைகளை கிண்டர்கார்டன் என்ற முன்பருவப் பள்ளிக்குக் (pre-school) குழந்தைகளை அனுப்புகிறார்கள். அவை அங்கே ஆங்கிலம் படிக்கின்றன. மழையே மழையே விலகிப்போ எனப் படிக்கின்றன. விவசாயத்தை அடித்தளமாகக் கொண்ட நாட்டில், கடவுளை வாழ்த்திவிட்டு வான் சிறப்பு என்று மழையை வாழ்த்துகிற, மாமழை போற்றுதும் என்ற கலாசாரத்தில் வந்த சந்ததியினர் மழையே மழையே போ என்று மூன்று வயதில் கற்கின்றனர்.
அதுவும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த முன்பருவக் கல்வி கிடைக்கிறதா?ரூ. 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை முன்பருவ வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிகிறேன். அது உண்மையானால் எளிய மக்கள் இந்த முன்பருவப் பள்ளிகளை நெருங்க முடியாது அல்லது கடனாளிகளாக மாறுவர்.
புதிய கல்விக் கொள்கை 10+2 என்பதை 5+3+3+4 என்று மாற்றுகிறது. அதாவது மூன்று வயதில் தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு அடித்தளக் (foundational) கல்வி.மூன்று முதல் ஆறு வயது வரை முன்பருவப் பள்ளி அங்கன்வாடியில் நடக்கும். அதாவது எளிய குடும்பத்துக் குழந்தைகளும் வசதி படைத்த வீட்டுக் குழந்தைகளைப் போல இளம் வயதிலே கல்வியைத் தொடங்க முடியும் (head start).
6 முதல் 8 வயது வரை ஒன்றாம் இரண்டாம் வகுப்புகள் பள்ளியில் நடக்கும். இதன் பின் வரும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தயார்ப்படுத்தும் வகுப்புகள் (preparatory class) எனப்படும் வகுப்புகள் தொடங்கும். இந்த ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் பயிற்று மொழி தமிழாக இருக்கும். நம் கலாசாரத்தை ஒட்டியதாகவும் இருக்கும். அதாவது மழையே மழையே போய்த் தொலை என்பதற்கு பதிலாக அறம் செய்ய விரும்பு என்பதாக இருக்கும்
# ஐயய்யோ, அப்படியானால் 11 வயது வரை குழந்தைகளுக்கு இங்கிலீஷ் தெரியாமல் போய்விடுமா?
# ஐயய்யோ, அப்படியானால் 11 வயது வரை குழந்தைகளுக்கு இங்கிலீஷ் தெரியாமல் போய்விடுமா?
பயிற்று மொழியாக (Medium of instruction) இல்லாவிட்டாலும் ஆங்கிலம் ஒரு பாட மொழியாக ஒன்றாம் வகுப்பிலிருந்து இருக்கும்.
# மும்மொழித் திட்டம் என்கிறார்களே? அப்படியானால் இந்தியும் படிக்க வேண்டியிருக்குமோ?
எந்த மொழியையும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கும் எண்ணமில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தமிழில் ட்வீட் மூலம் தெரிவித்திருக்கிறார்.
"குழந்தைகள் கற்கும் மூன்று மொழிகள் மாநிலங்கள், பிராந்தியங்கள், மாணவர்கள் இவர்களது தேர்வாக இருக்கும். மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மொழிகளாக இருக்க வேண்டும்." [பத்தி 4.13 NEP]
இரு இந்திய மொழிகள், அவை மாநிலத்தின் தேர்வு என்னும் போது தமிழ் நிச்சயம் இருக்கும். மற்ற ஒரு மொழி எதுவாக இருக்க வேண்டும் என்பதை அரசு பெற்றோர்களைக் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம். அவை மூன்று தென்னிந்திய மொழிகளில் ஒன்றாக இருக்கலாம். உருது, சமஸ்கிருதம் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்லலாம். இந்திதான் அந்த இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.
# தமிழும் ஆங்கிலமும் போதாதா, மூன்றாவதாக இன்னொரு மொழி ஏன் படிக்க வேண்டும்?
இளம் வயதில் பல மொழிகள் கற்றால் தொடர்பு படித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் (cognitive ability) பிரச்சினைகளைத் தீர்த்தல் (Problem solving) குவிந்த கவனம் (Focusing) கேள்விகள் எழுப்பி விடைதேடும் சிந்தனை (Critical Thinking) பலவேலைகள் செய்யும் திறன் (Multitasking) இவை அதிகரிக்கின்றன என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன
# இதற்கு ஆதாரம் உண்டா?
எடின்பர்க் ஸ்கூல் ஆஃப் சைகாலஜி அண்ட் லாங்குவேஜ் சயின்சஸ் என்ற ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் தாமஸ் எச் பாக், ஜாக் ஜே நிஸன், மிஷல் ஆலன்ஹேண்ட் இயன் ஜே டெயரி, ஆகியோர் இதை ஆராய்ந்திருகிறார்கள். அவர்கள் ஆய்வறிக்கையை ஆனல்ஸ் ஆஃப் நியூராலஜி (Annals of neurology Jun 2014) என்ற இதழில் காணலாம். மேலும் பல அறிவியல் ஆய்வுகளின் அறிக்கைகளை சயிண்டிஃபிக் அமெரிக்கன் என்ற இதழிலும் பார்க்கலாம்
# குழந்தைகளுக்கு சுமை அதிகமாகிவிடாதா? சற்று வளர்ந்த பின் இவற்றை வைத்துக் கொள்ளக் கூடாதா?
வயது ஆக ஆக மொழி கற்கும் ஆற்றல் குறைகிறது என்கிறது அறிவியல், மூன்று வயதில் நமக்கு இருக்கும் மொழிகற்கும் ஆற்றல் 17 வயதில் இருப்பதில்லை. இளமையில் கல்.
# இன்னொரு மொழி கற்பது தமிழுக்கு ஆபத்தாகி விடாதா?
“ஏறத்தாழ கடந்த பத்து ஆண்டுகளாக, சிங்களமொழி தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் மொழி சிங்கள மாணவர்களுக்கும் பாலர் வகுப்பிலிருந்து உரையாடல்/வாய்மொழித் தொடர்பாடல் என்றவகையில் கற்பிக்கப்படுகின்றது. பின்னர் 6 ஆம் ஆண்டிலிருந்து 9 ஆம் ஆண்டுவரை இரண்டாவது மொழி கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படுகிறது” என்று இலங்கையில் கல்வித் துறையில் பணியாற்றும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.
அதே போல மலேசியாவில் மாணவர்கள் குறைந்தபட்சம் மூன்று மொழிப்பாடங்களைக் கட்டாயமாகப் படிக்கின்றனர். அங்கெல்லாம் தமிழுக்கு ஏதும் ஆகிவிடவில்லையே? 2000 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு மொழி இன்னொரு மொழி கற்பதால் அழிந்து விடும் என்ற கருத்து வேடிக்கையாக இல்லையா?
# தமிழக அரசியல் கட்சிகள் ஏன் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றன?
"மும்மொழித் திட்டத்தை நாங்கள் ஏற்கத் தயார்தான். ஆனால் மற்ற ராஜ்யங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் (கணையாழி மே 1967 பக்கம் 10) என்று சொன்னவர் அண்ணா. மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் இந்திரா காந்தி. இவர்களைத் தலைவராக ஏற்றவர்கள் இதை எதிர்ப்பதுதான் வேடிக்கை! இப்போதும் தமிழ்நாட்டில் மூன்று மொழிகள் கற்பிக்கும் பள்ளிகள் (உருது, தெலுங்கு மலையாளம், குஜராத்தி) இருக்கின்றன. தமிழக அரசுப் பள்ளிகளாகவே கூட இயங்குகின்றன.
2015-இல் நமக்கு நாமே நடைப்பயணம் மேற்கொண்டபோது ஸ்டாலின் நவம்பர் மூன்றாம் தேதி ஜோலார் பேட்டையில் பேசும் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் உருது மொழியைக் கட்டாயப்பாடமாக்கச் சட்டம் கொண்டு வரும் எனப் பேசியுள்ளார். எனவே இவர்களது எதிர்ப்பு முன்று மொழி கற்பிப்பதற்கு அல்ல. அது வாக்கு வங்கி அரசியல் நோக்கம் கொண்டது.
# புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரசிலும் ஆதரவு எழுந்திருக்கிறதே?
காங்கிரஸ் அமைச்சில் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த சசி தரூர் வரவேற்றும் பாராட்டியும் ட்வீட் போட்டுள்ளார். கல்வியாளர்கள்டம் கருத்துக் கேட்காமல் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிற போது “ எங்களது பல யோசனைகள் ஏற்கப்பட்டிருக்கின்றன” என்கிறார் சசிதரூர். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், இணைய இணைப்பு பரவலாக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தேசியச் செய்தித் தொடர்பாளரான குஷ்பூ வரவேற்றிருக்கிறார். “மன்னிக்க வேண்டும் என் கருத்து கட்சியின் நிலையிலிருந்து வேறுபடுகிறது.ஆனால் நான் தலையாட்டும் பொம்மையாக அல்லது ரோபாவாக இருக்க மாட்டேன். துணிச்சலாக ஒரு குடிமகளாகப் பேசுவேன்” என்று சொல்லியிருக்கிறார்
அரசியல் ஆதாய நோக்கில்லாமல் நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கை 2020ஐ வரவேற்கவே செய்வார்கள்.
குறிப்பு:
‘துக்ளக்’ வார இதழில் மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் எழுதிய கட்டுரை, இங்கு நன்றியுடன் மறுபதிவாகிறது.
No comments:
Post a Comment