பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/08/2020

மனம் போல வாழ்வு

-வ.உ.சிதம்பரம் பிள்ளை



1. நினைப்பும் ஒழுக்கமும்

'மனம்' என்பதும் 'நினைப்பு' என்பதும் ஒரே பொருளைக் கொடுக்கும் சொற்கள், ''மனம் போல வாழ்வு'' என்பது, ''மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகின்றனது' என்பதே. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே ஆகிறான். மனிதன் எவ்வாறு நினைக்கின்றானா அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிலைமையும் அமைகின்றன. மனிதன் எதை நினைக்கிறானோ அதே ஆகிறான். அவனது நினைப்புகளின் தொகுதியே அவனுடைய ஒழுக்கம்.

பூமியில் மண்ணுள் மறைந்து கிடக்கும் வித்தினின்றே மரம் உண்டாகிறது. அதுபோல, மனிதனுடைய அகத்துள் மறைந்து கிடக்கும் நினைப்பினின்றே அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகின்றது. வித்து இல்லாமல் மரம் உண்டாதல் இல்லை. அதுபோல நினைப்பு இல்லாமல் செயல் உண்டாதல் இல்லை. மனதாரச் செய்கின்ற செயல்களைப் போலவே, தாமேயாகவும் சுபாவமாகவும் நிகழ்கின்ற செயல்களும் நினைப்பினின்றே உண்டாகின்றன.

செயல்கள் நினைப்பின் மலர்கள்; இன்பமும் துன்பமும் அதன் கனிகள். இவ்வாறாக மனிதன் தனது சொந்த வேளாண்மையின் தித்திப்பும் கசப்புமுள்ள கனிகளை உண்டு பண்ணிக் கொள்கிறான்.
மனமெனும் நினைப்பே நமையாகக்கியது;
நினைப்பால் நாம் நம் நிலைமையை உற்றனம்,
ஒருவன் நினைப்புக்குக் கருமறம் பற்றிடின்
எருதுபின் உருளைப்போல் வரும் நனி துன்பமே;
ஒருவன் நினைப்புத் திருஅறம் பற்றிடின்,
தன்னிழல் போல மன்னும் இன்பமே.
மனிதன் நியதிக்கிரமத்தில் உண்டானவனேயன்றித் தந்திரத்தால் அல்லது மந்திரத்தால் ஆக்கப்பட்டவன் அல்லன். பிரத்தியக்ஷமான ஸ்தூலப் பொருள்கள் அடங்கிய இவ்வுலகத்தின்கண் காரணகாரியங்கள் கிரமமாகவும் நிச்சயமாகவும் நிகழ்தல்போல, பிரத்தியக்ஷமல்லாத நினைப்புலகத்தின் கண்ணும் காரணகாரியங்கள் கிரமமாகவும், நிச்சயமாகவும் நிகழ்கின்றன. 

மேம்பாடும் தெய்வத்தன்மையும் வாய்ந்த ஒழுக்கம், கடவுளின் கிருபையாலாவது தற்செயலாலாவது உண்டானதன்று; அது நேர்மையான நினைப்புகளை இடைவிடாது நினைத்து வந்ததன் நேரான பயனாகவும், தெய்வத்தன்மை வாய்ந்த நினைப்புகளோடு நெடுங்காலம் விரும்பிப் பழகிவந்த பழக்கத்தின் நேரான காரியமாகவும் உண்டானது. அங்ஙனமே, கீழ்ப்பாடும் மிருகத்தன்மையும் பொருந்திய ஒழுக்கம், கீழ்ப்பாடான நினைப்புகளையும், மிருகத்தன்மை வாய்ந்த நினைப்புகளையும், மனத்தில் இடைவிடாது ஒளித்து வைத்துக்கொண்டிருந்தன் நேரான பயனாக உண்டானதே.

மனிதன் ஆவதும் அழிவதும் தன்னாலேதான். நினைப்பாகிய உலைக்களத்தில் சில படைக்கலன்களைச் செய்து அவற்றால், தன்னை அழித்துக் கொள்கிறான்; அவ்வவுலைக்களத்திற்றானே சில கருவிகளைச் செய்து, அவற்றால் வலிமை, மகிழ்ச்சி, அமைதி என்னும் திவ்வியமான அரண்களைத் தனக்குக் கட்டிக் கொள்கிறான். 

நல்ல நினைப்புகளை கைக்கொண்டு நல்ல வழிகளில் செலுத்துவதனால் தெய்த்தன்மை அடைகிறான். கெட்ட நினைப்புகளைக் கைக்கொண்டு கெட்ட வழிகளில் செலுத்துவதனால் மிருகத்தன்மை அடைகிறான். அதி உயர்வும் அதி தாழ்வுமான இந்த இரண்டுக்கும் இடையிலே உள்ளன மற்றைய ஒழுக்க வேறுபாடுகளெல்லாம் அவைகளை இயற்றும் கருத்தாவும் மனிதனே; ஏவும் கருத்தாவும் மனிதனே.

இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அழகிய ஆன்ம தத்துவங்களுள்-மனிதன் நினைப்பின் கர்த்தா; ஒழுக்கத்தைக் கருக்கட்டுகிறவன்; நிலையையும், சுற்றுச்சார்பையும், விதியையும் உண்டாக்கி உருப்படுத்துகிறவன் -என்ற தத்துவத்தைப் போல் சந்தோஷத்தை அளிக்கத் தக்கதும், தெய்வத்தன்மையையும் நம்பிக்கையையும் விளக்கத் தக்கதும் வேறொன்றில்லை.

அறிவும் வலியும் அன்புமான ஓர் உயிராகவும், தனது நினைப்புகளுக்குத் தானே கர்த்தனாகவும் இருத்தலால், மனிதன் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் உரிய திறவுகோலை உடையவனாகவும், விரும்பினபடியே தன்னைச் செய்து கொள்ளத்தக்க கர்த்திருத்துவத்தை உடையவனாகவும் இருக்கிறான்.

மனிதன் எப்போதும் தலைவனே; அவன் மிகமிகப் பலஹீனமாய்க் கைவிடப்பட்டிருக்கும் நிலைமையிலும் தலைவனே; ஆனால் அப் பலஹீன நிலைமையில் அவன் தனது காரியங்களை ஒழுங்காக நிர்வகிக்காத ஒரு மூடத்தலைவனாகயிருக்கிறான். 

அவன் எப்பொழுது தன் நிலைமையைப் பற்றிச் சிந்திக்கவும் தன் உயிருக்கு ஆதாரமான ஒழுக்கத்தைப்பற்றி ஆவலுடன் விசாரிக்கவும் தொடங்குகிறானோ, அப்பொழுதே அவன் தனது முயற்சிகளை விவேகத்துடன் செலுத்தி நற்பயன் அடையும் விதத்தில் தனது நினைப்புகளைத் திருத்தும் அறிவுடைய தலைவன் ஆகிறான். அவன் தன் தலைமையை அறிந்துள்ள தலைவன். அங்ஙனம் ஆவதற்கு அவன் தன்னுள் நினைப்பின் நியதிகளைக் கண்டுபிடித்தல் வேண்டும். அவற்றைக் கண்டுபிடித்தற்குரிய சாதனங்கள் தன்முயற்சியும், தன்னைப் பகுத்துப் பார்த்தலும், தன் அநுபவமுமேயாம்.

சுரங்கத்தின்கண் மிக ஆழமாக அறுத்தலாலும், மிகக் கவனத்தோடு தேடுதலாலும் தங்கமும் வைரமும் கிடைக்கின்றன. மனிதன் தனது ஆன்மாவாகிய சுரங்கத்தின் கண் ஆழ்ந்து தேடுவானாயின், தனது ஆன்மாவைப் பற்றிய ஒவ்வோர் உண்மையினையும் காணல் கூடும். 

மனிதன் தனது நினைப்புகள் தன்னிடத்தும், பிறரிடத்தும், தனது வாழ்க்கையிடத்தும், நிலைமைகளிடத்தும் உண்டுபண்ணும் காரியங்களைக் கண்டு, பொறுமையான அப்பியாசத்தாலும், விசாரணையாலும், காரண காரியங்களைப் பொருத்திப் பார்த்தும், அறிவும் வலியும் ஞானமுமான தன்னைப்பற்றிய அறிவை அடைவதற்கு மார்க்கமாகப் பிரதிதினமும் நிகழும் ஒவ்வொரு சிறிய சம்பவத்தும் தான் கொள்ளும் அநுபவம் முழுவதையும் உபயோகித்துத் தனது நினைப்புகளை எச்சரிக்கையாகக் காத்துத் தன்வசப்படுத்தித் தக்கவழியில் திருப்புவானாயின், தானே தனது ஒழுக்கத்தை ஆக்குபவன், தானே தனது விதையை விதிப்பவன் என்னும் உண்மைகளை நன்றாக அறிவான். 

''தேடுகிறவன் காண்பான்'', ''தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும்' என்னும் உண்மைகள் இவ்விஷயத்திற்கு மிகப் பொருத்தமானவை. ஏனெனில் பொறுமை, பயிற்சி, விடாமுயற்சி இவற்றால் மாத்திரம் மனிதன் ஞானாலயத்தின் வாயிலுள் பிரவேசித்தல் கூடும்.
''நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்-நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்''


குறிப்பு:

 


ஜேம்ஸ் ஆலனின்  ‘As a man Thinketh’ என்ற நூலை வ.உ.சி. ‘மனம்போல வாழ்வு’ என்று 1909-ல் மொழிபெயர்த்தார். அதன் முதல் அத்தியாயம் இது.
    .

No comments:

Post a Comment