பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2020

விவசாயிகளைப் பாதுகாக்கும் ஐந்து அம்சத் திட்டம்!

-சு.சண்முகவேல்

 


நாட்டில் எது நடந்தாலும் சரி, ஏழையானாலும் பணக்காரரானாலும் உணவுத் தேவை என்பது அனைவருக்கும் பொதுவான, தள்ளிப்போட முடியாத ஒன்றாகும்.

அந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவரின் வாழ்க்கையோ சீரழிந்து கிடக்கிறது. நம் நாட்டில், பசுமைப் புரட்சிக்குப் பிறகு, விவசாயத் துறைக்கான புதிய திட்டங்கள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போதைய மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியதே. அதில் உள்ள நிறை- குறைகளைச் சரி செய்து, விவசாயிகளின் நல்வாழ்வுக்கான ஒரு புதிய விடியலை உருவாக்க வேண்டியது, அரசின் கடமை மட்டுமின்றி, பொதுமக்களாகிய நமக்கும் அதில் பங்குண்டு.

விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். இச்சூழ்நிலை மாறாவிட்டால், இனி விவசாயிகள், “அரசே உணவு விளைவிக்க நிலத்திற்கு வாடகை கொடு, உழைப்பிற்கு சம்பளம் கொடு, ஓய்வூதியம் கொடு’’ என்று கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. தரமறுத்தால், உற்பத்தியை நிறுத்துவோம் என்ற முழக்கங்களை விரைவில் கேட்கலாம்.

நம்முன் உள்ள உண்மையான பிரச்சினைகளை பட்டியலிடத் தெரிந்துவிட்டால், தீர்வு எளிதாகக் கிடைத்துவிடும். அந்த வகையில் நானறிந்த வழிகளில் பிரச்னைகளைப் பட்டியலிட்டு, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறேன்.

விவசாயிகள் விவசாயத்தை கைவிடக் காரணமாக உள்ள

5 முக்கிய காரணிகள்:

1 விவசாயி மீதான அழுத்தம்

உற்பத்தி செய்யும் விவசாயி, விற்பனை விலையை நிர்ணயம் செய்ய முடியாத நிலை இங்கு நிலவுகிறது. விற்பவர் சந்தையாக இருக்க வேண்டிய விவசாயம், இன்று வாங்குபவர் சந்தையாக உள்ளது.

தீர்வு:

அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலும் மாவட்டந்தோறும் அரசு விவசாய மையம் அமைத்து, வெளிச்சந்தையில் விலை குறையும்போது, விவசாய மையம் மூலம் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும். இதன்மூலம் முழு நஷ்டமும் விவசாயிகளின் தலையில் விழாமல் பாதுகாக்கமுடியும்.

2  முதலீடு செய்ய போதிய பணம் இல்லாமை: 

நம் நாட்டில் அதிகபட்சமாக உள்ள சிறு, குறு விவசாயிகள், பெரிய முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு விவசாயத்தில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு இரண்டு போகம் நஷ்டம் ஏற்பட்டால், அடுத்ததாக முதலீட்டுக்குப் பணம் இல்லாமல், நிலத்தின் மீதோ, வீடு மற்றும் நகையின் மீதோ கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். அவ்வாறு பெறப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், தற்கொலை செய்துகொள்வது அல்லது ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தீர்வு:

ஒவ்வொரு போகத்திற்கும் தேவையான முதலீட்டை, அரசே எந்தவிதப் பிணையுமின்றி கடனாக வழங்க வேண்டும். கடன் வழங்கும்போது கட்டாயமாக பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். இதன்மூலம் இயற்கையாக ஏற்படும் நஷ்டங்களுக்கு இழப்பீடு பெற முடியும். இந்த இழப்பீட்டின் மூலம் முதலீடு செய்த பணமும், தனது உழைப்பிற்கு குறைந்தபட்ச ஊதியமும் கிடைக்கும்.

3 நிரந்தர வருமானமில்லாமை / தொழிலாளர் பற்றாக்குறை:

விவசாயம் மற்றும் கால்நடைப் பராமரிப்புக்காக, ஒரு விவசாயி சராசரியாக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கிறார்.  அவ்வளவு கஷ்டப்பட்டாலும் நிரந்தர வருமானமுமில்லை; உயிர், உடமைகளுக்கு உரிய பாதுகாப்பும் இல்லை. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தனது சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ  என்ற பயம் ஏற்படுகிறது.

விவசாயத் தொழிலார்களுக்கு போதிய வருமானமுமில்லை, உயிர், உடமைகளுக்கு உரிய பாதுகாப்பும் இல்லை. ஆனால், நகரங்களுக்குச் சென்றால் நிரந்தர வருமானம் கிடைக்கும்; தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், மருத்துவம் கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி நகர்கிறார்கள்.

தீர்வு:

அரசு விவசாய மையத்தில் குறைந்தபட்ச ஆதார விலையும், சந்தையின் தேவைக்கேற்ப அதிகபட்ச விலையும் கிடைக்கும். நஷ்டம் ஏற்படும்போது காப்பீடு மூலமாக நிவாரணம் பெற முடியும் என்கிற உத்திரவாதம் கிடைத்தால், விவசாயிகள் விவசாயத்தைத் தொடரவே விரும்புவார்கள்.

விவசாயத் தொழிலார்களுக்கு நவீன உபகரணங்கள்,  உயிர் உடமைகளுக்கான பாதுகாப்பு மற்றும் நிவாரணம், தரமான கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கிராமங்களிலேயே உருவாக்கிக் கொடுத்தால், அவர்களை இந்தத் துறையிலேயே தக்கவைக்க முடியும்.

நகரங்களை நோக்கி வருபவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை கிராமங்களிலேயே தங்க வைப்பதன் மூலம், நகரங்களில் ஏற்படும் ஜன நெருக்கடியைத் தவிர்த்து, பசி, பட்டினியால் ஏற்படும் குற்றச் செயல்களையும் குறைக்கலாம்.

4 உற்பத்திக் குறைவு:

தண்ணீர்ப் பற்றாக்குறை அல்லது தண்ணீர் அதிகமாகத் தேங்கி பயிர்சேதம் ஏற்படுதல், புழு / பூச்சி / வண்டு தாக்குதல், அதிகப்படியான புல் / பூண்டு போன்ற களைகள் முளைத்தல், பருவநிலை மாறுபாடுகள், போலியான விதை / உரம் / பூச்சிமருந்து.

தீர்வு:

நிலங்களை வரைமுறைப்படுத்துவதன் மூலமாக தண்ணீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் வடிகால் அமைத்தல். பருவ நிலை மாறுபாடுகளால் ஏற்படும் நஷ்டத்திற்கு பயிர்க் காப்பீடு மூலம் இழப்பீடு பெறலாம். போலிகளை முற்றிலும் தடுப்பதற்கு, அரசு விவசாய மையம் மூலமாக மட்டுமே விதை / உரம் / பூச்சிமருந்து விற்பனை செய்யப்பட வேண்டும்.

விதை நேர்த்தி செய்வது / இயற்கையான உரம் / பூச்சிமருந்துகளை விவசாயிகளே உற்பத்தி செய்து கொள்ள பயிற்சி அளிப்பதன்மூலம், மூலப்பொருட்களின் விலை உயர்வை தடுத்து, சுயசார்பு விவசாயத்தை முன்னெடுக்கலாம்.

5 விலைச் சரிவு:

தேவையைவிட அதிகமான உற்பத்தி / பயன்பாடு குறைவு அல்லது தேவையான பகுதிக்கு அனுப்ப இயலாமை. உற்பத்தி பிரிவில் - ஒரு பக்கம் போதிய பாதுகாப்பின்றி உணவு தானியங்கள் வீணாகிறது. மறுபக்கம் பஞ்சம், பசியால், பட்டினிச்சாவுகள் நிகழ்கின்றன. விற்பனைப் பிரிவில் - ஒருபுறம் உணவுப் பொருட்கள் கடும் விலைஉயர்வு, மறுபுறம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் நஷ்டத்தால்  தற்கொலை செய்வது நடக்கிறது. வீணாவது தடுக்கப்பட வேண்டும், பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும்.

தீர்வு:

தேவை குறித்த தெளிவான திட்டமிடல் வேண்டும்.  தேவைபோக மீதமானவற்றைப் பாதுகாத்து வைக்க உலர் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அதிக அளவில் அமைக்கப்பட வேண்டும். விதைப் பொருட்கள் விவசாய மையத்தில் விற்பனை செய்யப்பட்டால், ஒரே பொருள் தேவைக்கு அதிகமாக பயிரிடுவதைத் தடுக்க முடியும். மேலும் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்க முடியாத காய்கறி / பழங்களை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம். இதன்மூலம் வருமானமும், வேலைவாய்ப்பும் பெருகும்.

விவசாயிகளின் பின்னடைவு, கிராமப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச்செய்யும்.  ஆகவே, அரசும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இணைந்து, ஒருமித்த கருத்தில் விவசாயிகளின் நலன்காக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

நமது மக்கள் தொகையானது ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி என்கிற அளவில் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் 2050-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகையானது 165 கோடியாக இருக்கும் என .நா.சபையின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் எதிர்வரும் 20 ஆண்டுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்பது பெரும் போராட்டமான காலகட்டமாகவே இருக்குமென பன்னாட்டு உணவுக் கோட்பாட்டு ஆராய்ச்சிக்கு கழகம் எச்சரிக்கிறது.

இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில், நமது விவசாயிகளைப் பாதுகாத்து, அந்த துறையிலேயே தக்கவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 

குறிப்பு: 

திரு. சு.சண்முகவேல், ஈரோடு, பாரதி வாசகர் வட்டத்தின் செயலாளர்.

 

No comments:

Post a Comment