பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2020

நீரின் தாகம் (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்



மலையில் பிறந்தால் கடல்தான் ...
கடலாயிருந்தால் மழைதான்...
மழையாய்ப் பொழிந்தால் மண்தான் ...
என -
சேர்தலுக்கும்
பிரிதலுக்கும்
இணைதலுக்குமாய்
தாகமெடுத்து அலைகிறது நீர்.


***
உதிரும் இரவு

விளக்கேற்றும் நேரத்தில் வந்துவிடுகிறது
குழந்தைகளுடன் பாடம் படிக்கிறது
கணவர்களின் வருகைநோக்கி
பெண்களுடன் காத்திருக்கிறது.
தொலைக்காட்சிதொடர் காண்கிறது
குடும்பம் உண்கையில் பசிதணிக்கிறது
ஒன்றுக்குப்போகையில் பயமளிக்கிறது
குடிபோதையில் சண்டையிடுகிறது
கொத்துப்பரோட்டோ சத்தத்தில் வதைபடுகிறது
காவலருடன் விசில் ஊதுகிறது
குழந்தை அழுகையில் தவிக்கிறது
கொலுசோசையையும் சிணுங்கலையும் ரசிக்கிறது
நிலவுடன் ரகசியத்தை உரையாடுகிறது
ரோகியுடன் சேர்ந்து இருமுகிறது
நாயுடன் விளையாடி வாலாட்டுகிறது
குப்பை பொறுக்குபவனுக்கு வாழ்வாகிறது
யாரோ ஒருவனுக்கு கவிதையாகிறது
மெல்ல வெளிச்சம் வரும் வேளையில்
கோலமிட்ட வாசலில் பரவி மணக்க
பவழமல்லிகளுடன் சேர்ந்து உதிரும் இரவு
அயர்ந்து உறங்கப்போகிறது.

***
வெளுத்த உறை

பழையதாகிறது மேனியென-
விநாடிதோறும் நினைவூட்டி
கடந்து சொல்கிறது கடிகாரம் .
விரலிடுக்கில் நாள்தோறும்
கிழிந்து சொல்கிறது காலண்டர் .
கருத்த கேசமோ
நரைத்தபடியும் ...
உதிர்ந்தபடியும் ...
இரட்டிப்பாய் சொல்கிறது .
ஆனாலும்
வரும் ஆண்டெல்லாம்
புத்தாண்டாகவே வருகிறது

வேறென்ன ...?
அழுக்குத்தலையணைக்கு
வெளுத்த உறைதான்.


No comments:

Post a Comment