பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

13/01/2021

திருச்சந்த விருத்தம் –பகுதி-2 (கவிதை)

-திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார்

(காண்க: முந்தைய பகுதி-1)

(சந்தக் கலி விருத்தம்)

812:

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்,
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்,
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.   (61)

813:
கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்,
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்,
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்,
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்ப துன்னையே (2) (62)

814:
நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்,
சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே,
குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்,
நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே? (63)

815:
நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து,
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்,
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்,
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே. (64)

816:
நிற்பதும்மொர் வெற்பகத்தி ருப்பும்விண்கி டப்பதும்,
நற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்,
அற்புதன னந்தசயன னாதிபூதன் மாதவன்,
நிற்பதும்மி ருப்பதும்கி டப்பதும்என் நெஞ்சுளே. (65)



817:
இன்றுசாதல் நின்றுசாத லன்றியாரும் வையகத்து,
ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ,
அன்றுபார ளந்தபாத போதையுன்னி வானின்மேல்,
சென்றுசென்று தேவராயி ருக்கிலாத வண்ணமே? (66)

818:
சண்டமண்ட லத்தினூடு சென்றுவீடு பெற்றுமேல்
கண்டுவீடி லாதகாத லின்பம்நாளு மெய்துவீர்,
புண்டரீக பாதபுண்ய கீர்த்திநுஞ்செ விமடுத்து
உண்டு,_ம்மு றுவினைத்து யருள்நீங்கி யுய்ம்மினோ. (67)

819:
முத்திறத்து வாணியத்தி ரண்டிலொன்று நீசர்கள்,
மத்தராய்ம யங்குகின்ற திட்டதிலி றந்தபோந்து,
எத்திறத்து முய்வதோரு பாயமில்லை யுய்குறில்,
தொத்துறத்த தண்டுழாய்நன் மாலைவாழ்த்தி வாழ்மினோ. (68)

820:
காணிலும்மு ருப்பொலார்செ விக்கினாத கீர்த்தியார்,
பேணிலும்வ ரந்தரமி டுக்கிலாத தேவரை,
ஆணமென்ற டைந்துவாழும் ஆதர்காள்.எம் மாதிபால்,
பேணிநும்பி றப்பெனும்பி ணக்கறுக்க கிற்றிரே. (69)

821:
குந்தமோடு சூலம்வேல்கள் தோமரங்கள் தண்டுவாள்,
பந்தமான தேவர்கள்ப ரந்துவான கம்முற,
வந்தவாண னீரைஞ்நூறு தோள்களைத்து ணித்தநாள்,
அந்தவந்த வாகுலம மரரேய றிவரே. (70)

822:
வண்டுலாவு கோதைமாதர் காரணத்தி னால்வெகுண்டு
இண்டவாண னீரைஞ்சேறு தோள்களைத்து ணித்தநாள்,
முண்டனீறன் மக்கள்வெப்பு மோடியங்கி யோடிடக்,
கண்டு,நாணி வாணனுக்கி ரங்கினானெம் மாயனே. (71)

823:
போதில்மங்கை பூதலக்கி ழத்திதேவி யன்றியும்,
போதுதங்கு நான்முகன்ம கனவன்ம கஞ்சொலில்
மாதுதங்கு கூறன்ஏற தூர்தியென்று வேதநூல்,
ஓதுகின்ற துண்மையல்ல தில்லைமற்று ரைக்கிலே (72)

824:
மரம்பொதச் ரந்துரந்து வாலிவீழ முன்னொர்நாள்,
உரம்பொதச்ச ரந்துரந்த வும்பராளி யெம்பிரான்,
வரம்குறிப்பில் வைத்தவர்க்க லாதுவான மாளிலும்,
நிரம்புநீடு போகமெத்தி றத்ததும்யார்க்கு மில்லையே. (73)

825:
அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்,
செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும்சி றந்திடும்,
மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னுமாலை வாழ்த்தினால்,
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே. (74)

826:
ஒன்றிநின்று நல்தவம்செய், தூழியூழி தோறெலாம்,
நின்றுநின்ற வன்குணங்க ளுள்ளியுள்ளம் தூயராய்,
சென்றுசென்று தேவதேவ ரும்பரும்ப ரும்பராய்,
அன்றியெங்கள் செங்கண்மாலை யாவர்காண வல்லரே? (75)

827:
புன்புலவ ழியடைத்த ரக்கிலச்சி னைசெய்து,
நன்புலவ ழிதிறந்து ஞானநற்சு டர்கொளீஇ,
என்பிலெள்கி நெஞ்சுருகி யுள்கனிந்தெ ழுந்ததோர்,
அன்பிலன்றி யாழியானை யாவர்காண வல்லரே? (76)

828:
எட்டுமெட்டு மெட்டுமாயொ ரேழுமேழு மேழுமாய்,
எட்டுமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனை,
எட்டினாய பேதமோடி றைஞ்சிநின்ற வன்பெயர்,
எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர்வான மாளவே. (77)

829:
சோர்விலாத காதலால்தொ டக்கறாம னத்தராய்,
நீரராவ ணைக்கிடந்த நின்மலன்ந லங்கழல்,
ஆர்வமோடி றைஞ்சிநின்ற வன்பெயரெட் டெழுத்தும்,
வாரமாக வோதுவார்கள் வல்லர்வான மாளவே. (78)

830:
பத்தினோடு பத்துமாயொ ரேழினோடொ ரொன்பதாய்,
பத்தினால்தி சைக்கணின்ற நாடுபெற்ற நன்மையாய்,
பத்தினாய தோற்றமோடொ ராற்றல்மிக்க வாதிபால்,
பத்தராம வர்க்கலாது முத்திமுற்ற லாகுமே? (79)

831:
வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன்,
நாசமாகி நாளுலப்ப நன்மைசேர்ப னங்கனிக்கு,
வீசமேல்நி மிர்ந்ததோளி லில்லையாக்கி னாய்,கழற்கு
ஆசையாம வர்க்கலால மரராக லாகுமே? (80)

832:
கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து,
உடைந்தவாலி தன்பினுக்கு தவவந்தி ராமனாய்,
மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து,வேங்கடம்
அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ (81)

833:
எத்திறத்து மொத்துநின்று யர்ந்துயர்ந்த பெற்றியோய்,
முத்திறத்து மூரிநீர ராவணைத்து யின்ற,நின்
பத்துறுத்த சிந்தையோடு நின்றுபாசம் விட்டவர்க்கு,
எத்திறத்து மின்பமிங்கு மங்குமெங்கு மாகுமே. (82)

834:
மட்டுலாவு தண்டுழாய லங்கலாய்.பொ லன்கழல்,
விட்டுவீள்வி லாதபோகம் விண்ணில்நண்ணி யேறினும்,
எட்டினோடி ரண்டெனும்க யிற்றினால்ம னந்தனைக்
கட்டி,வீடி லாதுவைத்த காதலின்ப மாகுமே. (83)

835:
பின்பிறக்க வைத்தனன்கொ லன்றிநின்று தன்கழற்கு,
அன்புறைக்க வைத்தநாள றிந்தனன்கொ லாழியான்,
தந்திறத்தொ ரன்பிலாவ றிவிலாத நாயினேன்,
எந்திறத்தி லென்கொலெம்பி ரான்குறிப்பில் வைத்ததே? (84)

836:
நச்சராவ ணைக்கிடந்த நாத.பாத போதினில்,
வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்,
மெய்த்தன்வல்லை யாதலால றிந்தனன்நின் மாயமே,
உய்த்துநின்ம யக்கினில்ம யக்கலென்னை மாயனே. (85)

837:
சாடுசாடு பாதனே.ச லங்கலந்த பொய்கைவாய்,
ஆடராவின் வன்பிடர்ந டம்பயின்ற நாதனே,
கோடுநீடு கைய.செய்ய பாதநாளு முன்னினால்,
வீடனாக மெய்செயாத வண்ணமென்கொல்? கண்ணனே. (86)

838:
நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி னாதனோடு போதின்மேல்,
நற்றவத்து நாதனோடு மற்றுமுள்ள வானவர்,
கற்றபெற்றி யால்வணங்கு பாத.நாத. வேத,நின்
பற்றலாலொர் பற்றுமற்ற துற்றிலேனு ரைக்கிலே. (87)

839:
வெள்ளைவேலை வெற்புநாட்டி வெள்ளெயிற்ற ராவளாய்,
அள்ளலாக்க டைந்தவன்ற ருவரைக்கொ ராமையாய்,
உள்ளநோய்கள் தீர்மருந்து வானவர்க்க ளித்த,எம்
வள்ளலாரை யன்றிமற்றொர், தெய்வம்நான்ம திப்பனே? (88)

840:
பார்மிகுத்த பாரமுன்னொ ழிச்சுவான ருச்சனன்,
தேர்மிகுத்து மாயமாக்கி நின்றுகொன்று வென்றிசேர்,
மாரதர்க்கு வான்கொடுத்து வையமைவர் பாலதாம்,
சீர்மிகுத்த நின்னலாலொர் தெய்வம்நான்ம திப்பனே? (89)

841:
குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன்,
நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன்,
புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னித,நின்
இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே. (90)

842:
பண்ணுலாவு மென்மொழிப்ப டைத்தடங்க ணாள்பொருட்டு
எண்ணிலாவ ரக்கரைநெ ருப்பினால்நெ ருக்கினாய்,
கண்ணலாலொர் கண்ணிலேன்க லந்தசுற்றம் மற்றிலேன்,
எண்ணிலாத மாய.நின்னை யென்னுள்நீக்க லென்றுமே. (91)

843:
விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார்,
கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாய. வேலைநீர்,
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு,
அடைக்கலம்பு குந்தவென்னை யஞ்சலென்ன வேண்டுமே. (92)

844:
சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே,
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே,
கரும்பிருந்த கட்டியே.க டல்கிடந்த கண்ணனே,
இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே. (93)

845:
ஊனின்மேய ஆவிநீஉ றக்கமோடு ணர்ச்சிநீ,
ஆனில்மேய ஐந்தும்நீஅ வற்றுள்நின்ற தூய்மைநீ,
வானினோடு மண்ணும்நீவ ளங்கடற்ப யனும்நீ,
யானும்நீய தன்றியெம்பி ரானும்நீயி ராமனே. (94)

846:
அடக்கரும்பு லன்கள்ஐந்த டக்கியாசை யாமவை,
தொடக்கறுத்து வந்துநின்தொ ழிற்கணின்ற வென்னைநீ,

விடக்கருதி மெய்செயாது மிக்கொராசை யாக்கிலும்,

கடற்கிடந்த நின்னலாலொர் கண்ணிலேனெம் மண்ணலே. (95)

847:
வரம்பிலாத மாயைமாய. வையமேழும் மெய்ம்மையே,
வரம்பிலூழி யேத்திலும்வ ரம்பிலாத கீர்த்தியாய்,
வரம்பிலாத பல்பிறப்ப றுத்துவந்து நின்கழல்,
பொருந்துமாதி ருந்தநீவ ரஞ்செய்புண்ட ரீகனே. (96)

848:
வெய்யவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்துசீர்க்
கைய,செய்ய போதில்மாது சேருமார்ப நாதனே,
ஐயிலாய வாக்கைநோய றுத்துவந்து நின்னடைந்து,
உய்வதோரு பாயம்நீயெ னக்குநல்க வேண்டுமே. (97)

849:
மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்து,நின்க ணாசையேதொ டர்ந்துநின்ற நாயினேன்,
பிறந்திறந்து பேரிடர்ச்சு ழிக்கணின்று நீங்குமா,
மறந்திடாது மற்றெனெக்கு மாய.நல்க வெண்டுமே. (98)

850:
காட்டினான்செய் வல்வினைப்ப யன்றனால்ம னந்தனை,
நாட்டிவைத்து நல்லவல்ல செய்யவெண்ணி னாரென,
கேட்டதன்றி யென்னதாவி பின்னைகேள்வ. நின்னொடும்,
பூட்டிவைத்த வென்னைநின்னுள் நீக்கல்பூவை வண்ணனே. (99)

851:
பிறப்பினோடு பேரிடர்ச் சுழிக்கண்நின்றும் நீங்குமஃது,
இறப்பவைத்த ஞானநீச ரைக்கரைக்கொ டேற்றுமா,
பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம்,
பெறற்கரிய மாயனே. எனக்குநல்க வேண்டுமே. (100)

852:
இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர்தி றத்தமா,
வரர்தரும்தி ருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்,
பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம்,
நிரந்தரம்நி னைப்பதாக நீநினைக்க வேண்டுமே. (101)

853:
விள்விலாத காதலால் விளங்குபாத போதில்வைத்து,
உள்ளுவேன தூனநோயொ ழிக்குமாதெ ழிக்குநீர்,
பள்ளிமாய பன்றியாய வென்றிவீர, குன்றினால்
துள்ளுநீர்வ ரம்புசெய்த தோன்றலொன்று சொல்லிடே. (102)

854:
திருக்கலந்து சேருமார்ப. தேவதேவ தேவனே,
இருக்கலந்த வேதநீதி யாகிநின்ற நின்மலா,
கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்,
உருக்கலந்தொ ழிவிலாது ரைக்குமாறு ரைசெயே. (103)

855:
கடுங்கவந்தன் வக்கரன்க ரன்முரன்சி ரம்மவை,
இடந்துகூறு செய்தபல்ப டைத்தடக்கை மாயனே,
கிடந்திருந்து நின்றியங்கு போதும்நின்ன பொற்கழல்,
தொடர்ந்துவிள்வி லாததோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே. (104)

856:
மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி ரந்துகொண்ட ளந்து,மண்
கண்ணுளல்ல தில்லையென்று வென்றகால மாயினாய்,
பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை கொங்கைதங்கு பங்கயக்
கண்ண,நின்ன வண்ணமல்ல தில்லையெண்ணும் வண்ணமே. (105)

857:
கறுத்தெதிர்ந்த காலநேமி காலனோடு கூட,அன்
றறுத்தவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்,
தொறுக்கலந்த வூனமஃதொ ழிக்கவன்று குன்றம்முன்,
பொறுத்தநின்பு கழ்க்கலாலொர் நேசமில்லை நெஞ்சமே. (106)

858:
காய்சினத்த காசிமன்னன் வக்கரன்ப வுண்டிரன்,
மாசினத்த மாலிமாஞ்சு மாலிகேசி தேனுகன்,
நாசமுற்று வீழநாள்க வர்ந்தநின்க ழற்கலால்,
நேசபாச மெத்திறத்தும் வைத்திடேனெம் மீசனே. (107)

859:
கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ டும்வரத்த யனரன்,
நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும்,
வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும்,
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோகு றிப்பிலே? (108)

860:
சுருக்குவாரை யின்றியேசு ருங்கினாய்சு ருங்கியும்,
பெருக்குவாரை யின்றியேபெ ருக்கமெய்து பெற்றியோய்,
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்ததேவ தேவனென்று,
இருக்குவாய்மு னிக்கணங்க ளேத்தயானு மேத்தினேன். (109)

861:
தூயனாயு மன்றியும்சு ரும்புலாவு தண்டுழாய்,
மாய.நின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம்,
நீயுநின்கு றிப்பினிற்பொ றுத்துநல்கு வேலைநீர்ப்,
பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை வண்ணனே. (110)

862:
வைதுநின்னை வல்லவாப ழித்தவர்க்கும் மாறில்போர்
செய்துநின்னை செற்றதீயில் வெந்தவர்க்கும் வந்துன்னை
எய்தலாகு மென்பராத லாலெம்மாய. நாயினேன்,
செய்தகுற்றம் நற்றமாக வேகொள்ஞால நாதனே. (111)

863:
வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி,
மாளுநாள தாதலால்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,
ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும்,
மீள்விலாத போகம்நல்க வேண்டும்மால பாதமே. (112)

864:
சலங்கலந்த செஞ்சடைக்க றுத்தகண்டன் வெண்டலைப்
புலன்கலங்க வுண்டபாத கத்தன்வன்து யர்கெட,
அலங்கல்மார்வில் வாசநீர்கொ டுத்தவன்ன டுத்தசீர்,
நலங்கொள்மாலை நண்ணும்வண்ண மெண்ணுவாழி நெஞ்சமே. (113)

865:
ஈனமாய வெட்டுநீக்கி யேதமின்றி மீதுபோய்,
வானமாள வல்லையேல்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே,
ஞானமாகி ஞாயிறாகி ஞாலமுற்று மோரெயிற்று,
ஏனமாயி டந்தமூர்த்தி யெந்தைபாத மெண்ணியே. (114)

866:
அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்,
ஒத்தொவ்வாத பல்பிறப்பொ ழித்துநம்மை யாட்கொள்வான்,
முத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்,
எத்தினாலி டர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே. (115)

867:
மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப, அன்றிலங்கை
நீறுசெய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனார்,
வேறுசெய்து தம்முளென்னை வைத்திடாமை யால்,நமன்
கூறுசெய்து கொண்டிறந்த குற்றமெண்ண வல்லனே. (116)

868:
அச்சம்நோயொ டல்லல்பல்பி றப்புவாய மூப்பிவை,
வைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றிவானி லேற்றுவான்,
அச்சுதன நந்தகீர்த்தி யாதியந்த மில்லவன்,
நச்சுநாக ணைக்கிடந்த நாதன்வேத கீதனே. (117)

869:
சொல்லினும்தொ ழிற்கணும்தொ டக்கறாத வன்பினும்,
அல்லுநன்ப கலினோடு மானமாலை காலையும்,
அல்லிநாண்ம லர்க்கிழத்தி நாத.பாத போதினை,
புல்லியுள்ளம் விள்விலாது பூண்டுமீண்ட தில்லையே. (118)

870:
பொன்னிசூழ ரங்கமேய பூவைவண்ண. மாய.கேள்,
என்னதாவி யென்னும்வல்வி னையினுள்கொ ழுந்தெழுந்து,
உன்னபாத மென்னிநின்ற வொண்சுடர்க்கொ ழுமலர்,
மன்னவந்து பூண்டுவாட்ட மின்றுயெங்கும் நின்றதே. (2) (119)

871:
இயக்கறாத பல்பிறப்பி லென்னைமாற்றி யின்றுவந்து,
உயக்கொள்மேக வண்ணன்நண்ணி யென்னிலாய தன்னுளே,
மயக்கினான்றன் மன்னுசோதி யாதலாலென் னாவிதான்,
இயக்கெலாம றுத்தறாத வின்பவீடு பெற்றதே. (120) 



திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்! 



No comments:

Post a Comment