-பொன்.பாண்டியன்
பகுதி-2தொல்காப்பியர் |
9. தொல்காப்பியர்
ஒருமுறை தென்மதுரையை ஆண்ட பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்கும் தேவர்கள் தலைவன் தேவேந்திரனுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. தேவேந்திரன் வருணனைப் பாண்டியன்மீது போர் கொடுக்க ஏவி விட்டான்.
உக்கிரப் பெருவழுதியானவர் சிவகுமாரரான முருகன் ஆவார். அவர் தனது வேலை கடலுக்கு அதிபதியான வருணன் மீது ஏவினார். வருணனால் வேற்படையை எதிர்க்க இயலவில்லை. அதனால் கடல் முழுதும் வற்றிப் போனது.
இந்தச் செய்தியை அருணகிரிநாதர் தமது திருப்புகழில்
‘பாதிமதிநதி..............
..............வாரிசுவறிட
வேலைவிடபல
பெருமாளே’
-என்று சுவாமிமலை முருகனைப் பாடுகின்றார்.
இதனால் சினம்கொண்ட இந்திரன் வருணனுக்கு அதிக பலம் கொடுத்து கடல்சீற்றம் உண்டாக்கி ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்களோடு பஃறுளி ஆற்றையும் தென்மதுரையையும் கடலுக்குள் மூழ்கடித்தார்.
இச்செய்தியை சிலப்பதிகாரம் காடுகாண்காதை 18-22 இல் மாங்காட்டு மறையவன் பாண்டிய மன்னனை வாழ்த்தும்போது,
“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி காற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்வாழி”
-என்று குறிப்பிடுவது உறுதியாகிறது.
அதனால் புலம்பெயர்ந்து வடக்கிலிருந்த கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் நிலைபெற்றது. இந்த இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில்தான் தொல்காப்பியர் தமது தொல்காப்பியத்தை அரங்கேற்றினார்.
கௌமாரம், ஐந்திரம், அகத்தியத்திற்கு அடுத்தபடியாகதொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தின் அரியணை ஏறியது. காப்பியர் வரிசையில் பழந்தமிழ்ப் புலவோர்களில் வெள்ளூர்க் காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் எனவும் சிலர் உண்டு.
சீர்காழிக்குத் தென்கிழக்கில் காப்பியக்குடி என்று ஓர் ஊரும் உண்டு. தமிழில் கவி எனப்படுவது வடமொழியில் கபி என ஆகும். இதற்கு முப்பொருள் உண்டு. அவை சூரியன், குரங்கு, ரிஷி (அறிஞர் - புலவர் - அந்தணர் ) என்பனவாம். இவற்றில் சூரியன், குரங்கினமாகிய ஹனுமன், ரிஷியாகிய தொல்காப்பியர் மூவரும் ஐந்திர இலக்கணம் முழுமையாகக் கற்றவர் ஆவர்.
தொல்காப்பியர் எனப்படுவது பண்டைய காப்பியக்குடியைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பதாகும். தமிழறிஞர் ஆடுதுறை அம்பலவாணர் தமது ‘சான்றோர் தமிழ்’ நூலில் ( ஜூலை 2006 - பக். 32 - 39 ) காவியக்குலம் பற்றிக்கூறுவது நம் கவனத்திற்கு உரியது:
காவியர் எனப்படுவர் கவியின் வழிவந்தவர் ஆவர். ரிக் (151 - 11, 83:5 ) சுக்கிரனுக்குக் காவ்யேந்த்ரன் என்றும் அவர் மனைவியாருக்குக் காவ்ய மாதா என்றும் பெயர். காவ்யகுலம், பார்க்கவகுலம், ஸ்ரீவத்ஸகோத்திரம் எல்லாம் ஒன்றே. இவ்வழிவந்தவர் ஜமதக்னி முனிவர்ஆவார். இவரின்புதல்வர் தொல்காப்பியர். இவரது இயற்பெயர் திரணதூமாக்னி என உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார்.
வடமொழியில் தொல்காப்பியக்குடி 'வ்ருத்தக் காவ்யக்குலம்' என்று அழைக்கப்படுகிறது. அம்மரபின் வழிவந்த தொல்காப்பியரின் தொல்காப்பியம் நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்" தலைமையில் அரங்கேற்றப்பட்டதாக தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் ஆகிய புலவர் பனம்பாரனார் தொல்காப்பிய பாயிரஉரையில் தெரிவிக்கிறார்.
பாரத தேசத்தின் தொன்மை, கல்வி, கலாச்சாரம்; தமிழக மக்களின் வாழ்வியல், பண்பாடு, ஹிந்து ஸநாதன தர்மம் ஆகியவற்றுக்கெல்லாம் கலங்கரை விளக்கமாகத் தொல்காப்பியம் திகழ்கிறது.
இயல் ஏடாகவும், இசை யாழாகவும், நாடகம் நூபுரச் சிலம்பாகவும் திகழ்கின்ற அன்னைத் தமிழ்வாணியின் மணிமகுடம் தொல்காப்பியம் ஆகும். அதைத் தந்த தொல்காப்பியர் நாம் செய்த நற்றவப்பயன் ஆவார் என்பதில் மிகுந்த பெருமிதம் உண்டாகிறது.
***
அதங்கோட்டாசான் |
10. அதங்கோட்டாசான்
பொதுஆண்டுக்கு 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் கபாடபுரத்தில் இயங்கிய இடைச்சங்கத்திற்கு அகத்தியர் தலைவராக இருந்தார். அவருடைய சீடர்கள் பன்னிருவர் ஆவார். அவர்களுக்கு தொல்காப்பியர் தலைமாணாக்கராக இருந்தார். அவருடன் பயின்றவர்தாம் அதங்கோட்டாசான்.
ஆசான் என்னுஞ்சொல் ஆசிரியர்- குரு- ஐயர் என்றெல்லாம் குறிக்கும். காப்பியக்குடி நாட்டைச் சேர்ந்த தொல்காப்பியர கவியாகிய சுக்கிரன் சுக்கிரன் வழிவந்தவர் எனில், இவர் குருவாகிய பிரகஸ்பதி வழிவந்தவர் எனலாம். அறம் சார்ந்த கருத்துக்களைப் பேசும் நாவினை உடையவரும் ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என நான்கு வேதங்களையும் ஓதி அவற்றைக் கற்றுத் துறைபோகியவர் ஆவார். அதனால் "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்" என்று போற்றப்படுகின்றார்.
தற்கால குமரி மாவட்டத்திற்கு மேற்கே அமைந்துள்ள அதங்கோடு என்னும் ஊரில் வாழ்ந்தவர். அது பின்னர் வள்ளுவன்கோடு என்றாகி இப்போது விளவங்கோடு என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள சூரியமுக்கில் தமிழ்ச் சங்கம் நடத்தி வந்தார். அதம் என்றால் பள்ளம், கோடு என்றால் மலைத்தொடர் எனப் பொருள்படும். பள்ளத்தாக்கில் அமைந்த மலைத்தொடர் பெருநீர்ப்பெருக்கால் மூழ்கியதால் கபாடபுரத்துத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து தமிழாய்ந்தார்.
அகத்தியரின் அருளோடும் அனுமதியோடும் தொல்காப்பியர் புதிய இலக்கணம் படைத்தார். அதை நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றினார். அதற்கு அதங்கோட்டாசான் தலைமை ஏற்று உதவினார்.
அகத்தியரின் மாணாக்கர்கள் பன்னிரண்டு பேரும் புறத்திணைகள் குறித்துபன்னிருபடலம் என்ற நூலை இயற்றியதாக புறப்பொருள்வெண்பாமாலை பின்வருமாறு உரைக்கிறது:
“மன்னியசிறப்பின் வானோர்வேண்டத்
தென்மலைஇருந்த சீர்சால்முனிவரின்
தன்பால்தண்டமிழ் தாவின்றுஉணர்ந்த
துன்னருஞ்சீர்த்தித் தொல்காப்பியன்முதல்
பன்னிருபுலவரும் பாங்குறப்பகர்ந்த
பன்னிருபடலம்........”
பன்னிரு புறத்திணைகளாவன:
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணைகளில் சீடருக்கொரு படலம் இயற்றியுள்ளனர். யார் எதை இயற்றினார் என்பது வெளிப்படவில்லை.
இவ்வாறு அதங்கோட்டாசான் அருந்தமிழுக்கும் ஆன்ற நான்மறைகளுக்கும் அறத்தின் நெறிமுறைகளுக்கும் அரிய புலவராகவும், புரவலராகவும் விளங்கியுள்ளார் என்பது இதன்மூலம் புலனாகிறது.
தொல்காப்பியம்- நூன்மரபு |
11. பனம்பாரனார்
பனம் என்றால் பனைமரம். பாரம் என்றால் அரண்- கவசம்- அதிகம் எனவும் பொருள்படும். அவர்தம் ஊர் பனைமரங்களால் சூழப்பட்டதாக இருந்திருக்கலாம். அதனால் பனம்பாரம் என அந்த ஊருக்குப் பெயர் ஏற்பட்டதால் அந்த ஊரைச் சேர்ந்த அவர் பனம்பாரனார் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இவர் அகத்தியரின் குருகுலத்தில் தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கராகத் திகழ்ந்தவர் ஆவார்.
இவருடன் பயின்ற பன்னிருவரும் இணைந்து பன்னிருபடலம் என்னும் நூலை இயற்றியதில் இவருக்கும் பங்குண்டு.
அந்நூல் புறத்திணைகள் பன்னிரண்டையும் குறித்தநூலாகும். சீடர்க்கொரு திணைவீதம் இயற்றப்பட்டது அந்த நூல். அவர்கள் இயற்றிய அந்நூல் ‘புறப்பொருள் வெண்பாமாலை’ என்ற நூல் உருவாக உதவியாக இருந்தது.
மேலும் இவர் தொல்காப்பியத்திற்கு பாயிரம் இயற்றியுள்ளார். பாயிரம் என்பது ஒரு நூலில் பொதிந்துள்ள ஒட்டுமொத்தக் கருத்தையும் பெருமையையும் குறிக்கும் பகுதியாகும். இதை 'சாங்க்யம்' என்றும் கூறுவர்.
இவர் தாம் இயற்றிய பாயிரத்தில், தொல்காப்பியரின் பெருமை, அவைத்தலைவரின் சிறப்பு, மன்னரின் புகழ், அது அரங்கேறிய அவைக்களம், நூலின்மகத்துவம், உட்பொருள் என அனைத்தையும் சுருங்கச்சொல்லி விரித்துரைத்துள்ளார். அந்தப் பாடல் பின்வருமாறு:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
-இப்பாடலின் மூலம் தமிழ்கூறு நல்லுலகமானது அறத்திற்கும் அருமறை வேதத்திற்கும் நிலைக்களனாகத் திகழ்கிறது என்று பனம்பாரனார் கூறுவதாக நமக்குத் தெரியவருகிறது.
(தொடர்கிறது)
காண்க:பொன்.பாண்டியன்
No comments:
Post a Comment